உன் உயிரென நான் இருப்பேன்-20
2508
0
விக்ரம் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. புதுமணத் தம்பதிகள் ஹனிமூனுக்காக சுவிட்சர்லாந்து சென்று இன்றோடு பத்து நாட்கள் நிறைவடைந்து விட்டன. திருமணத்தன்று வருவதாக கூறிய ரமேஷ் இன்று வரவேயில்லை.
அன்று ரமேஷ் சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானமேறி விட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ராபர்ட் மற்றும் அவனது ஆட்கள் சகிதம் அவன் வரும் வரை இலங்கை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் ரமேஷோ அந்த விமானத்தில் வரவேயில்லை.
அதன் பிறகு வந்த எந்த விமானத்திலும் வராமல் போகவே தனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் உதவியை நாடிய ராபர்ட்டிற்கு ரமேஷ் செனவிரட்ன என்றொருவர் வரவில்லை என்ற செய்தி கிடைக்கவே அபிநவ்விற்கு விடயம் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் விமானம் ஏறியவன் இலங்கையில் தரையிறங்கவில்லை. இது எப்படி சாத்தியமாகும்? அவன் விமானமேறிவிட்டான் என்று உறுதியான தகவல் கிடைத்த பின்பு தானே ராபர்ட்டின் குழு விமான நிலையம் சென்றது. அப்படியாயின் இடைப்பட்ட நேரத்தில் தான் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று ஊகித்தவன் மீண்டும் ராபர்ட்டை அழைத்து மேற் கொண்டு செய்ய வேண்டியவைகளை கட்டளையிட்டான்.
அவன் அறியாமலே பழ குழப்பங்கள் அவனை சூழ்ந்து கொண்டன. ப்ரீத்தியின் மரணம், திடீரென காணாமல் போன ரமேஷ் என யோசனைகளில் உழன்று கொண்டிருந்தவனுக்கு ரமேஷ் இதையெல்லாம் செய்யக் காரணம் என்னவென்றே புலப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்திருந்தது ஒரு கொலையை செய்யுமளவு ரமேசுக்கு தைரியமில்லை என்பது. அவனுக்கு அந்தளவு பின்புலமும் கிடையாது.
ரமேஷை பற்றிய சிந்தனைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்தவன் அந்த வீடியோ பற்றிய சிந்தனையில் இறங்கினான் . இது வரை அந்த வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் என்னவாக இருக்கக் கூடும் என முதன் முறையாக சிந்திக்கத் துவங்கினான்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானால் என்ன நேரும் என்பதை சரியாக ஊகித்துக் கொண்டவன் உடனடியாக விக்ரமை தொடர்பு கொண்டான்.
“மம்மீமா… மம்மீமாஆஆஆஆ…” எனக் கூச்சலிட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த இனியாவை கோபமாக எதிர்க் கொண்டார் லலிதா.
“உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் மம்மினு கூப்பிடாதேனு சொல்லி இருக்கேன்” என கையில் இருந்த கரண்டியை கொண்டு அவளை அடிக்கக் கையை ஓங்க சட்டென கையை பற்றி அம்மாவை கட்டிக் கொண்டு,
“அம்மா… பசிக்குதுமா.. சாப்பாட்டை ரெடி பண்ணுங்க..என் செல்ல அம்மால்ல” என்று செல்லம் கொஞ்ச அப்போது தான் குளித்து உடை மாற்றி வந்த வருண் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான்.
“அம்மா… உங்க சாப்பாட்டு ராமி வந்துட்டாளா? எனக்கு இப்போ பசிக்குது முதல்ல எனக்கு சாப்பிட போடுமா.. அந்த சாப்பாட்டு ராமியை அப்புறம் கொஞ்சிக்கலாம்..” என்று தன் அக்காவை சீண்டலானான்.
வருண் தன்னை சீண்டுவதை உணர்ந்தவள் அவனருகில் சென்று, “அம்மா அபி கூட வெளியே போகனும்.. நான் சீக்கிரமா குளிச்சிட்டு வரேன்.. அது வரை இந்த எருமை தம்பிக்கு சாப்பாடு போடுங்க.. போடா குட்டா.. “ என அவனது முடியை பிடித்து இழுத்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“ஆஆஆ” என தலையை தடவிக் கொண்டே “போடீஈஈஈ…” என்று இழுவையாக கத்தத் துவங்க லலிதாவிடமிருந்து வலிக்கும்படியாக ஒரு குட்டு கிடைத்தது. அதன் பின் வாய்க்குள் முணுமுணுத்த வண்ணம் உண்டான்.
குளித்து முடித்து அழகிய சுடிதார் ஒன்றை அணிந்து கண்ணாடி முன்னின்று தன்னை சரிபார்த்துக் கொண்டவளுக்கு திருப்தியாக இருக்கவே தன்னவனை காண ஆவலாக சென்றாள்.
அபிநவ் வரச் சொன்ன இடத்திற்கு வெகு நேரம் காத்திருந்தும் அவன் வராமல் போகவே அவனுக்கு அழைப்பெடுக்க மறுமுனையில் கணினி பெண்ணின் குரலே கேட்டது. பொறுமை இழந்து வாய்க்குள்ளேயே தன்னவனை திட்டலானாள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததால் வருவோர் போவோர் அனைவரும் அவளையே குறு குறு என பார்ப்பது போல் உணர்வு வேறு அவன் மேல் கோபத்தை தூண்டியது.
வர முடியாவிட்டால் ஒரு அழைப்பெடுத்து கூற வேண்டியது தானே. அதை விடுத்து இப்படி வருவோர் போவோருக்கெல்லாம் தான் ஒரு காட்சிப் பொருளாய் நிற்பதை அவள் விரும்பவில்லை. அடிக்கொரு தரம் தன் மொபைலில் நேரத்தை பார்த்த வண்ணமே நின்றவளை தூரத்தில் இரு கண்கள் ரசித்து நோக்கிக் கொண்டிருந்தன. அது வேறு யாருமல்ல சாட்சாத் அபிநவ் ஆதித்யனே தான்.
அவள் வந்த சில நிமிடங்களிலேயே அவன் வந்து விட்டான். இருந்தாலும் தான் வர தாமதமானால் அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டவன் அவளுக்கு மறைவாக தூரத்திலேயே நின்று இரசிக்க ஆசை கொண்டான்.
இதற்கு மேலும் தன்னவளை தவிக்க விடக்கூடாது என எண்ணி அவளருகில் சென்று நின்று அவளது கைச்சந்தை லேசாக இடிக்க அவன் முகம் பாராமலே வேறு யாரோ என நினைத்து தள்ளி நிற்க எத்தனித்தவளது கரத்தினை பற்றியது ஓர் வலிய கரம். அந்தப் பிடியே அவளுக்கு உணர்த்தியது இது அவளது செல்லக் கிறுக்கன் தான் என்று.
அவள் கோபமாக அவனிலிருந்தும் கையை எடுக்க முயல அழுந்தப் பற்றி,
“ஹேய் ஸ்வீட்டி ரொம்ப நேரம் வெயிட் பண்ணவச்சிட்டேன்னு கோவமா?” என அவள் காதருகே குனிந்து வினவ அது அவளுக்கு பேரவஸ்தையாய் போயிற்று.
“அபி இது பப்ளிக் ப்ளேஸ்.. சோ என் கையை விடுங்க.” என மெல்லிய குரலில் கூற பற்றியிருந்த கையை விட்டவன் வேகமான எட்டுக்களுடன் காரில் போய் அமர்ந்தான். அவன் எதுவும் பேசாமல் கோபமாக செல்வதை உணரந்தவள் தானும் ஓடிப் போய் காரில் அமர்ந்து கொண்டாள். அவள் ஏறியதும் அபிநவ் கைகளில் கார் வேகமெடுத்தது.
“அபி.. அபி..” என அழைக்க அவனிடமிருந்து மௌனமே பதிலாய் கிடைத்து. அவனது கோபம் உணர்ந்தவள் அமைதியாகவே இருந்தாள். மெல்ல தன் வண்டியின் வேகத்தை குறைக்க ஒரு கட்டத்தில் கார் நின்றது.
அவள் முகம் பாராமலே அவளை இறங்குமாறு கூற மனதில் சிறு கலக்கத்துடனேயே இறங்கி தன் தலையை திருப்பி வண்டி நின்ற இடத்தை ஆராய்ந்தாள்.
அது அவனுடைய ஆடை காட்சியகம், பல நாட்களாக ஆசையுடன் அவனது கையைணைப்பில் அழைத்து வர எண்ணியிருந்தவனுக்கு சிறிது ஏமாற்றமே.
அங்கிருப்பவர்களின் கண்கள் எல்லாம் தம் முதலாளியையும் அவளையும் மொய்க்க அவளுக்கு வெட்கமாய் போயிற்று. அவனோ எந்தவித மாற்றமுமின்றி காவலாளி பாரிய கண்ணாடிக் கதவுகளை திறந்து விட அவளுடன் இணைந்து நடந்தான்.
அங்கே அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காட்டியவன் அவளை தன்னறைக்கு அழைத்து செல்ல நாடி லிஃப்ட்டினுள் அவளை அழைத்துச் சென்றான் அப்போதும் அவன் முகம் ‘உர்’ ரென்று இருக்கவே கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொள்ள, அவளது பார்வை மீண்டும் அவனிலேயே நிலைத்திருந்தது.
அந்நேரம் உரிய தளம் வந்ததும் அதன் கதவுகள் தாமாக திறந்து கொள்ள அவனோ அவளை விட்டும் முன்னேறி வேகமாக அடியெடுத்து நடந்தான். தன்னுடைய அறை வந்ததும் அவ்வறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்து அவள் வரும் வரை கதவை பிடித்துக் கொண்டிருக்க அவள் உள் நுழைந்ததும் தானாய் அக்கதவு மூடிக் கொண்டது.
அவளுக்கு புற முதுகிட்டு நின்றவனை முதுகோடு ஆரத் தழுவிக் கொண்டாள் இனியா. அவளுடைய கைகள் அவனது வயிற்றை தழுவியிருக்க அவளது முகம் அவனுடைய பரந்த முதுகில் பதிந்திருந்தது.
“அபி… என் மேல இன்னும் கோவமாடா?” என அவனை தழுவிய வண்ணமே கேட்க அவனால் தன் காதல் தேவியிடம் கோவம் கொள்ளத் தான் முடியுமா?
அவளுடைய எதிர்பாராத செய்கையில் சுருங்கியிருந்த அவன் முகம் மெல்ல மலரவாரம்பித்தது. மலர்ந்த முகத்துடனே அவனை நோக்கி திரும்பினான் அவன்.
அவள் இடையூடு கையிட்டு இறுக்கி அணைத்தவன், “பின்னே என்ன? நான் கையை பிடிச்சதும் அப்படி சொல்லிட்ட… எனக்கு அந்த உரிமை கூட இல்லையா இனியா?” என்று அவன் கேட்ட விதம் அவளை ஏதோ செய்ய “சாரி அபி..” என்றவள் சட்டென எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அவனுக்கோ அவளது ஒற்றை முத்தம் அவனை ஆனந்தக் கடலில் வீழ்த்தியது. அவளை மீண்டும் தன் அணைப்புக்குள் கொண்டு வந்து அவள் காதோரம் குனிந்து,
“ஸ்வீட்டி இதுக்கு மேலே என்னால வெயிட் பண்ண முடியாது. சீக்கிரமா உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இன்னைக்கே அத்தை மாமா கிட்ட வந்து பேசலாம்னு இருக்கேன்மா…” என அவனது கல்யாணம் பற்றிய பேச்சில் முகம் சிவந்தாள் அவள்.
அவளும் சிரித்த முகமாகவே தலையாட்ட, அவனை நோக்கி குனிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவளிதழ்களை சிறை செய்தான் அவளது காதலன். இது இரண்டாவது இதழ் முத்தம். அவனுடைய காதல் உள்ளம் அந்த இதழ் முத்தத்தில் வெளிப்பட அவனுடன் ஒன்றினாள் அவனது காதல் தேவதை.
மெல்ல மெல்ல முத்தத்திலிருந்து விடுபட்டு அவனுடைய பரந்த மார்பில் தன் முகம் சாய்த்து அவனை தழுவிய வண்ணமே சாய்ந்திருந்தாள். இப்படியே இக் கணம் உறைந்து, அவளுடனே இருந்து விட வேண்டும் என துடித்துது அவ்வாண் மனம்.
அவன் அணைப்பிலிருந்து மெல்ல விடுபட்டு வந்தவளாயினும் அவனை நிமிர்ந்து கூட நோக்கவில்லை. வெட்கத்தில் அவள் கன்னக்கதுப்புக்கள் சிவக்க அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சப்பட, அவனுக்கோ அவளது வெட்கம் கூட அழகாய்த் தெரிந்தது.
அவளை மீண்டும் தன் அணைப்புக்குள் கொண்டு வந்து, அவள் நெற்றியில் குட்டி முத்தம் ஒன்றை வைத்தவன்,
“இதுக்கப்புறம் எல்லாமே கல்யாணத்துக்கு பிறகு தான். விக்கி ஹனிமூன் முடிச்சிட்டு வந்ததும் நம்ம கல்யாணம்,நம்ம ஹனிமூன் தான்..” என அவன் புன்னகையுடனே கூற நாணத்துடன் மீண்டும் தலை குனித்து நின்றாள்.
இனியாவின் தாய் தந்தையரிடம் இதைப் பற்றி இன்றே பேச வேண்டும் என எண்ணியவன் அவளை தோளோடு அணைத்தவாறு வெளியேறினான்.
தொடரும்..
Comments are closed here.