Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மலர்மதி 5 – 6

அத்தியாயம் – 5

அன்று அலுவலகத்தில் நுழைந்த பொழுதே, வாஞ்சிநாதன் மலர்மதியிடம் ஓர் அழைப்பிதழை நீட்டினார். ஆண்டுதோறும் அலுவலகத்தில் நடைபெறும் ஆண்டு விழா அழைப்பிதழ்தான். அவள் வேலைக்குச் சேர்ந்து இதுதான் முதல் ஆண்டு விழா. அதனால் அவளது ஆர்வத்தை அடக்கமாட்டாமல் வாஞ்சிநாதனிடம் அது பற்றி கேள்வி எழுப்பினாள்.

 

“ஆம் மதிம்மா… நமது முப்பது கிளைகளின் அத்தனை தொழிலாளர்களும் மேல் அதிகாரிகளும் என்று ஒருவர் விடாமல் கலந்த கொள்வார்கள். முதன் முதலில் மூன்று நண்பர்கள். ஒன்று சேர்ந்து ஆரம்பித்த கம்பெனிம்மா. அது சீனிவாசன். நீலகண்டன், வாசன் என்ற மூன்று ஆத்மார்த்த நண்பர்கள் மூன்று தலைமுறைக்கு முன் ஆரம்பித்தது. அவர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்த சீநீவா ஸ்டீல் என்று பெயரிட்டனர். இப்போது மூன்றாம் தலைமுறையான இளவல்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். அர்ஜுன், ஸ்ரீகாந், மதுசூதன், தன்யன்” என்றவர், சிறு இடைவேளை எடுத்தார்.

 

இந்தப் பெயர்களை அவளும் அவ்வப்பொழுது, எழுத்து வடிவிலும், ஸ்பைல்கள் வடிவிலும், கணக்கு குறிப்பிலும் பார்த்திருக்கிறாள்தான்.

 

“அப்படியானால், இவர்கள் நால்வர்தான் நமக்கு முதலாளிகளா சார்.” என்ற கேள்வியை வேறு கேட்டாள்.

 

“ஆம், அப்படித்தான்.”

 

“ஆனால், நான் இவர்களில் ஒருவரைக் கூட பார்த்ததில்லையே! சார்” என்றவளை, சிறு கேலிச் சிரிப்போடு பார்த்தார் வாஞ்சிநாதன்.

 

“இது கம்ப்யூட்டர் உலகம் மதிம்மா. எல்லாபம் ஈமெயிலிலும், ஸ்கைப்பிலுமாக முதலாளிகள் நேரில் வரத்தேவையிருப்பது மிகமிக குறைவுதான். நீங்கள் எல்லோரும் முடிக்கும் வேலைகளை, நான் தினமும் தவறாமல் ஈமெயில் செய்துவிடுவேன். ஏதேனும் சந்தேகமென்றால் தொலைபேசியிலேயே கேட்டுவிடுவார்கள். அவரவர் கிளைகளை எல்லோரும் சாப்பிட நேரமில்லாமல் சுற்றி சுற்றி பார்த்துக் கொள்கிறார்கள். ஆ…. ஆனால்… என்று ஏதோ கூற ஆரம்பித்தவர் உடனே நிறுத்திக் கொண்டார்.

 

அவர் விடுத்ததை துருவித் துருவி கேட்ட அவளது உள்ளம் இடமளிக்கவில்லை. சொல்லக்கூடியதென்றால், சார், சொல்லியிருப்பார்தானே. அது அவளுக்குத் தேவையில்லை என்று அவர் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும். இப்படி இவள் சிந்திக்கையிலேயே அவர் வேறு பேசினார்.

 

“இந்த நால்வரையும் நானே, இந்த ஆண்டு விழா சமயத்தில்தான் சேர்த்து வைத்து பார்ப்பதே. எல்லோரும் அத்தனை பிசி… நீயும் தான் பார்க்கப் போகிறாயே.” என்று முடித்தவர் தன் அன்றாட வேலைகளில் ஈடுபட்டார்.

 

அவர் என்ன சொல்ல வந்திருப்பார்? என்று சில வினாடி, பலவிதமாய் யூகித்தவள், இறுதியில் நமக்கென்ன வந்தது, என்பது போல விட வேண்டியதாய் தான் அமைந்தது.

 

இவர்களது தலைமைக் கணக்கு அலுவலகம் சென்னையின் நடுத்தரமான இடத்தில் இருந்தது. ஆனால் கம்பெனியின் தொழிற்சாலைகள் எல்லாம் நகரத்தை விட்டு ஒதுங்கினாற்போலத்தான் அமைக்கப்பட்டிருந்தன. அங்கேதான் இளவல்கள் அதிகம் வலைவருவது. இங்கே தலைமை அலுவலகத்தில் அவர்களது தகப்பனார்களை அவ்வப்போது பார்க்கலாம் அவ்வளவே. ஆண்டு விழா நாளும் வந்தது. அன்று தான் முதன் முதலில் அவனை அவள் பார்த்தது.

 

அத்தியாயம் – 6

 

நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பெரிய மைதானத்தை வாடகைக்கெடுத்து, அதனை ஒரு சொர்க்கபுரியாகவே மாற்றிருந்தார்கள். பிரதான சாலையின் திருப்பத்திலிருந்து அந்த மைதானம் வரை சீரியல் செட்டுகள், டியூப் லைட்டுகள், பேனர்கள் என்று விழாக் கோலமாக இருந்தது. நுழைவாயிலில் “சீநிவா ஸ்டீல்ஸ் ஐம்பதாவது ஆண்டு விழாவிற்கு வருக வருக’’ என்ற கொட்டை எழுத்துக்கள் ஜிகினாத்துஹளின் உதவியுடன் ஜொலித்தன. அதனடியில் வெள்ளையும், வானின் நீலமுமாக பலூன்கள் ஒரு அரை வட்ட வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

நுழைந்த உடனே ஜுஸ், காப்பி, சூப் என்று மூன்று ஸ்டால்கள் இருந்தன. யாருக்கு என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் விளையாட ஒரு பெரிய காற்றுப் படுக்கை செய்து அதில் பல வண்ண பந்துகள் மிதந்தன. அது மட்டுமல்லாமல், பலூன், …டாட்டூஸ், சாக்லேட் ஸ்டால், ஐஸ்கிரீம் ஸ்டால் என்று எல்லாம் ஒரே தடபுடல்தான்.

 

இதனை எல்லாம் ரசித்துக் கொண்டும், சிறுவர்களுடன் விளையாடுவது போல் அவர்களை கவனித்துக் கொண்டும் வாயிலிலேயே நின்றுவிட்டாள் அங்கே தூரத்தில் மேடை அமைக்கப்பட்டு நிகழ்ந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போயிற்று.

 

நிகழ்ச்சி முடிந்ததும், குழந்தைகளின் பெற்றோர்கள், அவரவர்களின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு விருந்துக்கு சென்று விட, மலர்மதி, வாஞ்சிநாதன் கோமதி தம்பதியினரை கண்களால் துளாவியபடி முன்னேறினாள். அவள் எண்ணியது போல் மேடைக்கு மிக அருகாமையில் தான் நின்று கொண்டிருந்தார்கள். அங்காங்கே சிறு சிறு கூட்டமாக கூடிப் பேசிக் கொண்டிருந்த மக்கள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளும், அவர்களது குடும்பமும்மாகத்தான் இருந்தது.

 

கோமதி வற்புறுத்திக் கொடுத்து, விழாவுக்கு நீ இதைத்தான் கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டிருந்த ரோஜா வண்ண நெட்டட் சாரியில் தேவதையாக வந்தவளை, ஒரு ஜோடிக் கண்கள் துல்லியமாய்க் கண்டது. அவன் மதுசூதன். கோமதியை அவள் நெருங்கியதும்,

 

“கூ ஈஸ் திஸ் பியூட்டி” என்று தன் புருவத்தை உயர்த்திக் கேட்டவன்னம் அவனே. நேரடியாக வந்த புகழில், லேசாக கன்னங்கள் சூடேற தலை கவிழ்ந்தாள் மலர்மதி. அவனுக்கு துணை புரிவது போல், கோமதி அவளை அறிமுகப்படுததி வைத்தார். இதுவரை ஆண்களுடன் அதிகம் பழகியிராத மலர்மதிக்கு தர்மசங்கடமாயிற்று. அவனது குறுகுறு பார்வை வேறு அவளை என்னவோ செய்தது. இருப்பினும் கோமதியம்மாள் அறிமுகப்படுத்தியால், இருகரம் குவித்து வணக்கம் என்றாள்.

 

“ஐ லைக் இட்” என்றவன் அத்தோடு நில்லாமல்,

 

“ஐ லைக் யூ” என்றும் சேர்த்து அடித்தான்.

 

லேசாக மிரண்டு விழித்தவளைப் பார்த்து, சட்டென கண்ணடித்து விட்டான். தர்ம சங்கடத்துடன் நெழிந்தாள் மலர்மதி. ‘பணம் பத்தும் செய்யும்’ என்ற மனதிற்குள் எழுந்த கோபத்தை உதடு கடித்து விழுங்க முயற்சித்தாள். அதன் பிறகு அவனது கண்களை நேருக்கு நேர் சந்திக்கக் கூட அஞ்சினாள். மெல்ல நழுவி விருந்து நடக்கும் இடத்திற்குள் கலந்து மறைந்தாள். பஃபே தானே! அதனால் அவளது எண்ணம் எளிதாக ஈடேறியும் விட்டது.

 

“அர்ஜுன் வர்க்கர்ஸ்க்கு கொடுக்க வேண்டிய கிஃப்ட்ஸ் எல்லாம் வாயிலுக்குச் சென்று விட்டதா?” என்ற கேள்வியோட வந்தான் ஸ்ரீகாந்.

 

“அதெல்லாம் எப்பொழுதோ ராமன் பொறுப்பில் கொடுத்தாகிவிட்டது. எதேர்ச்சையாக அந்தப் பக்கம் செல்வது போல், அதனை சரிபார்த்தும் வந்து விட்டேன்.” என்று அமர்த்தலாகக் கூறினான் அர்ஜுக்.

 

“அதுதானே, உன்னிடம் ஒரு வேலையை கொடுத்துவிட்டால், மறந்து விடலாம் என்று உன் அண்ணன் அவ்வப்போது கூறுவது உண்மை தான் போலும்.” என்று கேலிக் குரலில் முடித்தவனை, அதே கேலி போலவே அடிக்க கை ஓங்கினான் அர்ஜுன்.

 

“உங்களை எங்கெல்லாம் தேடுவது, கடைசியில் இங்குதான் இருக்கிறீர்களா? அ…..அங்கே…..” பேச முடியாமல் மதுசூதனின் நாக்கு குளறியது.

 

“எங்கே என்ன மது?” அக்கரையாய் கேட்டபடி அவனருகில் வந்தான் அர்ஜுன்.

 

“அங்கே… ச….சமையா ஒரு… பொண்ணு… அப்படியே… வானத்து தேவதை கீழே இறங்கி வந்தாப்போல, அப்படி ஒரு அழகு…” அவன் மெய் மறந்து வர்ணிக்கையிலேயே, அர்ஜுனும், ஸ்ரீகாந்தும் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டனர்.

 

“திருமணம் என்கின்ற ஒன்று நடந்தால் அவளோடுதான் நடக்கணும்.” அவனது கண்கள் கூட்டத்தில் மலர்மதியை தேடின.

 

“இத்துடன் இதே வாக்கியத்தை சுமார் ஓர் அறுபது பெண்களை பார்த்தாவது கூறியிருப்பாய் மது.” ஸ்ரீகாந்.

 

“அது கூட பரவாயில்லை ஸ்ரீ… ஆனால் அதே ஃபீலிங் சிறிதும் மாறாமல் நம்ம மதுவால் மட்டும் தான் கூற முடியும்.” என்ற அர்ஜுன் வாய்விட்டு நகைக்க ஸ்ரீகாந்தும் அவனுடன் சேர்ந்து கொண்டான். இருவரையும் எரித்து விடுவது போல் முறைத்தான் மதுசூதனன்.

 

“என்ன இங்கே நின்று கூத்தடித்துக் கெண்டிருக்கிறீர்கள்? அங்கே நம் ஷேர் ஹோஸ்டஸ் எல்லோரும் காத்திருக்க இங்கே என்ன வெட்டிப்பேச்சு.” அடிக்குரலில் கேட்ட தன்யனின் வார்த்தைகளுக்கு பணிவது போல், சட்டென்று அவர்களது சிரிப்பு நின்றது.

 

“அது… வந்து… அண்ணா.” அர்ஜுன், அவர்களை கை உயர்த்தி நிறுத்திய தன்யன், “நீங்கள் எதுவும் பேச வேண்டாம், மதுவின் பிரச்சினை என்னவென்று எனக்குத் தெரியும்.’’ மதுசூதனின் அருகில் சென்றவன்,

 

“எத்தனை முறைதான் உனக்கு பாடமெடுப்பது. பெண்களை நம்பாதே என்று! உனக்கெல்லாம் பட்டால்தான் புத்தி வருமா? பலமுறை உன்னை பற்பல இக்கட்டிலிருந்து மீட்பதே எனக்குப் பெரும் போராட்டமாகிவிட்டது. இப்பொழுது என்ன?”

 

“இ…இல்லை தன்யா… எல்லாப் பெண்களும் கெட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாதே… இப்போது நம் அம்மாக்கள் இல்லை? நம் தங்கைகளும் தான்… அதே போல்,”

 

“போதும்… உன் இந்த பேச்சு சாமர்த்தியம் மட்டும் இல்லையென்றால், தொழிலில் என்றைக்கோ நாம் படுத்திருக்க வேண்டும் தான். வாக்கு ஜாலம் உடையவனாயிற்றே. சரி… உன் வழிக்கே வருகிறேன்…யார் அந்த விதி விலக்கான பெண்… என்று நான் தெரிந்து கொள்ளலாமா” என்று தன்யன் முடிப்பதற்கும், மதுசூதனின் முகம் ஆயிரம் விளக்கொளியில் மிளிர்வது போல் பிரகாசமாக விரியவும் சரியாக இருந்தது.

 

“கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததென்று பழமொழிதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று அது நிஜத்திலும் நடக்கிறது தன்யா… அ… அதோ… இதோ பார், அங்கே புடவையில் குழந்தைக்கு பலூன் கொடுக்கிறாளே! ஐய்யோ… என்ன ஒரு அழகு… சுண்டி இழுக்கும் வகையுமில்லை, அதேபோல் ஒரு முறைக்கு இருமுறை பார்த்தாலும், மனதில் புகைப்படமாய் பதிந்து விடும் முகம்…” மதுசூதனன் விவரித்துக் கொண்டே போக, அவனை ஒரு அற்பப் புழுவைப் பார்ப்பது போன்று பார்த்து வைத்தான் தன்யன்.

 

“என்ன அர்ஜுன் மதுவிற்கு, மது சற்று அதிகமாகி விட்டதா என்ன? தன்யன்ணாவின் முன்னிலையில் இப்படியெல்லாம்…” ஸ்ரீகாந்த் கிசுகிசுத்தான்.

 

“இதில் சந்தேகம் வேறா? விடிந்ததும் கேட்டால் நானா, தன்யனிடமா ச்சே… ச்சே… இருக்கவே இருக்காது என்று சாதித்து விடுவார்” – அர்ஜுன்.

 

தன்யன்யண்ணான் முன்பு எந்த பெண்ணையும் ஏரெடுத்துப் பார்க்கும் தைரியம் கூட நமக்கில்லையே… நமக்கெல்லாம் என்றைக்காவது திருமணம் நடக்குமா?” ஸ்ரீகாந்த்.

 

“கவலை வேண்டாம் ஸ்ரீ, பெற்றோர்கள், நம்மைக் காப்பாற்றுவார்கள். தைரியமாக இரு…” அர்ஜுன்.

 

“அதுதான்கவலையே, நம் குடும்பத்திலேயே தன்யண்ணாதான் மூத்தவர். அவருக்கு திருமணமாகாமல் நமக்குத் திருமணம் செய்ய, நம் பெற்றோர்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டார்கள். இது தான், அந்த பைத்தியம் தெளிந்தால்தான் திருமணம். திருமணம் நடந்தால்தான் பைத்தியம் தெளியும் கதை. எதற்கும் சிவானந்தா ஆசிரமத்தில, இரண்டு இடம் ஒதுக்கி வைக்கச் சொல்லி விடலாம்…”என்று சிரியாமல் கண்ணடித்து முடித்தவனை, சிரிப்போடு எதிர்கொண்டான் ஸ்ரீகாந்த்.

 

“உங்களது ரகசியப் பேச்சு முடிவடைந்து விட்டால் இவனை அறையில் படுக்க வைத்துவிட்டு வருகிறீர்களா, அடுத்தவர்களின் முன்பு அசிங்கமாகி விடப் போகிறது.” என்ற உறுமலுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான் தன்யன்.

 

தங்களின் அசட்டுத்தன்மையை எண்ணி சிரித்தவாறே மதுசூதனனை ஒருவாறு பேசிஅழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்குச் சென்றனர்.

 

விழா நடந்த விளையாட்டு மைதானத்தை ஒட்டிய ஹோட்டலில் தான் முக்கிய விருந்தாளிகளுக்கு தங்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மதுசூதனனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு, அவனை அழைத்து வந்து படுக்கச் செய்தனர். அவன் தூங்கி விட்டதால் பெரிய பிரச்சனை எதுவுமில்லை என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்து வெளியேறி விழாவில் கலந்து கொண்டனர்.




Comments are closed here.

You cannot copy content of this page