மலர்மதி 1 – 2
4804
0
அத்தியாயம் – 1
விண்…விண்… என்று தெரித்த நெற்றிப் பொட்டை அழுத்திக் கொண்டு கண்களை மூடியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் மலர்மதி. மனம் சிறிதும் சமனப்பட மறுத்தது.
“போயும்… போயும் இவனை… இவனை… ச்சீ… அதற்கு மேல் நினைப்பது கூட அருவறுப்பாய் இருக்கிறது”
உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது போல் முழங்கால்களை மடித்து கைகளை சுற்றி முகத்தை கால்களுக்குள் அழுந்தப்புதைத்துக் கொண்டாள்.
எத்தனையோ பழமொழிகள்; நாய் வாலை நிமிர்த்த முடியாது. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அதன் புத்தி…. இப்படி நினைக்கையிலேயே மனம் வலித்தது. அவனை நாயோடு ஒப்பிடவும் அவளால் முடியவில்லை. ஆனால் உண்மையில் அப்படித்தானே ஆகிவிட்டது.
ஒரு முறையல்ல இருமுறையல்ல இத்துடன் மூன்றாம் முறையாய் தன் கண்களாலேயே பார்த்த பின்பும் அவனுக்காக வக்காலத்து வாங்கும் மனதை என்னவென்று ஏசுவது… அத்தனை அன்பு. இதில் அன்போடு ஏன் நிறுத்துவது. காதல்! அதுதானே உண்மை. தன்னிடமே அதை மறைத்து என்ன பயன்.
அவளிடம் மட்டுமா, அவனிடமும் தான் மறைத்துவிட்டாள். அது எத்தனைப் பெரிய பிசகு… என்ன பெரிய பிசகு. அப்படி கூறியிருந்தால்தான் அவன் மனம் அவளை ஏற்றுக் கொள்ளும் என்று என்ன நிச்சயம். அவன் மனது, அவளை நிமிர்ந்து கூட பார்க்காத பொழுது….
“இது வெறும் ஒருதலை ராகம்” இப்படி எண்ணுகையிலேயே அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அழுவது பொதுவாக மலர்மதிக்கு பிடிப்பதில்லை. அவள் அழுத காலம் முடிந்துவிட்டதாகவும், இனி அவள் எதற்கும் அழமாட்டாள் என்று, ஆறு வருடத்திற்கு முன்பே சபதம் செய்தவளாயிற்றே. ஆனால் அப்போது இந்தக் காதல் கீதல் என்று கண்ட கருமமும் வந்து தொலைக்கும் என்று அவள் என்ன கனவா கண்டாள்? ஆ….ஆனால் வந்து விட்டதே! அதுவும் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் சேர்த்து வைத்திருந்த திடத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து வழித்துக் கொண்டல்லவா போய்விட்டது.
ஆ… ஆங்… போயே விட்டதுதான். இனி அவனை நினைத்தாலே அதற்குப் பெயர் அசிங்கம். அத்தகைய அசிங்கத்தைச் செய்ய அவள் ஒன்றும் அத்தனை தரங்கெட்டுப் போய்விடவில்லை.
முதலில்… இந்த உலகத்தை விட்டே சென்றுவிடத்தான் அவள் மனம் துடித்தது. ஆனால் தற்கொலை ஒரு கோழைத்தனம், கடவுள் கொடுத்த வாழ்வு. அவரைத் தவிர அதனை விடுவித்துக் கொள்ள யாருக்கும் அதிகாரமில்லை என்பது அவளது கூற்று. நினைவுகள் ஆறு வருடங்கள் பின்நோக்கிச் சென்றன.
தாய், தந்தை உடன் பிறந்த தங்கை, தம்பி, தாத்தா, பாட்டி என்று மொத்த குடும்பத்தையும் விபத்தில் பறிகொடுத்து விட்டு அனாதையாக நின்றபோது ஆற்றுவார், தேற்றுவாரின்றி அழுது கரைந்து, சாவின் மடியில் சென்று விட்டவளை தூரத்து பெரியப்பா ஒருவர் அரவணைத்து அவளை பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டு, மாதா மாதம் கல்லூரிக்கும், விடுதிக்கும், அவளது செலவிற்கும், அவளது தாய், தந்தையின் பி.எஃப் கிராஜிவிட்டி, இன்சூரன்ஸ், அவர்களின் சிறு நிலம் என்று அத்தனையும் பணமாக்கி, நல்லதோர் வங்கியில் போட்டு, அவளிடம் செக் புக், கிரெடிட் கார்ட் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, சிறு வருத்தத்துடன் பலமுறை அவளை பாவமாக, திரும்பித் திரும்பிப்பார்த்துக் கொண்டே சென்ற காட்சி. இன்னமும் அவளது கண்களை விட்டு அகலவே இல்லை.
பாவம் அவரும் என்னதான் செய்வார். அவருக்கும் இரண்டு பெண்கள் திருமண வயதில் வீட்டில் இருக்கையில், இவளை எப்படி அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். இந்த காலத்தில் இருப்பதை பிடுங்கும் உறவினர் மத்தியில். நல்லவராக ஒருவர் அமைந்தாறே என்று அவள் ஆறுதல் பட்டுக் கொள்ளும்படிதான் ஆயிற்று.
அத்தியாயம் – 2
அந்த மகளிர் விடுதியில் ஓர் அறையை இரண்டு பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டாம் பெண்ணை நட்போடு பார்த்த மலர்மதிக்கு, அந்தப் பெண் வீணாவின் பார்வை தன்னை ஆராய்ச்சியாய் பார்ப்பது போலவே இருந்தது. இவளது உதடுகள் சினேகமாய் புன்னகை புரிவதை பார்த்ததும் வீணாவும் லேசாக சிரித்தேன் என்று பெயர் பண்ணும்படியாயிற்று.
கல்லூரி இறுதியாண்டில் இருந்த மலர்மதிக்கு படிப்பிலேயே அதிக நேரம் கரைந்தது. அப்போதுதான் படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்திருந்தாள் வீணா. அவளும் வேலை விட்டு வர தாமதமாகும். அதுபோக மிச்சமிருக்கும் சொர்ப்ப நேரத்தில் இவர்கள் இருவரும் பேச முயற்சித்தார்கள். வேறு என்ன செய்வது. ஒரே அறைக்குள் இருந்து கொண்டு முகத்தைத் திருப்பவும் வழியில்லைதான். ஆனால் இருவருக்குமே பல வேறுபாடுகள் இருந்தது… அது வளர்ப்பு முறையால் வருவதுதான்.
மலர்மதியின் அலமாரிகளும், கட்டிலும் எப்போதும் திருத்தமாக இருக்கும். எடுத்த பொருள் எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம். அவளது காலனிகள் வரிசையாக கட்டிலுக்கடியில் அடுக்கப்பட்டிருக்கும் ஒன்று ஹாஸ்டலுக்குள் அணிய இலகுவாய் ரப்பர் செருப்பு. இன்னொன்று கழிப்பறை பயன்பாட்டிற்கு. வழுக்கி விழாமல் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டது. இன்னொன்று கல்லூரிக்குச் செல்லும் போது பயன்படுத்த கைப்பை, கல்லூரிப்பை என்று எல்லாம் அது அதன் இடத்தில் அணிவகுப்புச் செய்யும்.
ஆனால் வீணாவின் பகுதி நேர்மாறாக இருக்கும் கட்டிலில் மடிக்கப்படாத கம்பளியும், எண்ணெய்க் கறையுடன் தலையணை உறையும், திருத்தப்படாத படுக்கை விரிப்பும், அதன் மேலேயே அழுக்குத் துணி, தோய்த்த துணி என்ற வேறுபாடே இல்லாமல் எல்லாம் கலந்த கலவையாய் மடிக்காமல் கிடக்கும். அவள் அலமாரி உள்ளே கை வைத்தால் தேள் கடித்து விடுமோ என்று மலர்மதி அஞ்சும் வகையில் அது குப்பையாக கிடக்கும்.
கட்டிலுக்கடியில் ஒரு டஜன் செருப்பு தாறுமாறாய் கலைந்தே கிடக்கும். தலை வாரீய சீப்பு எப்போதும் முடியுடனேயே இருக்கும். அது கூட பரவாயில்லை அதிலிருக்கும் அழுக்கும் அப்பப்பா பார்த்தாலே மலர்மதி இரண்டு நாளைக்குச் சாப்பிட மாட்டாள். ஆனால் ஒன்று வீணாவிடம் பாராட்டியே ஆக வேண்டும். அவள் அலுவலகம் செல்லும் போது தயாராவதை, அத்தனை நேர்த்தியாக தன்னை அலங்கரித்துக் கொண்டு ஒயிலாக காட்டுவதில் அவளுக்கு ஒரு ஆர்வம்.
அவள் அவ்வாறு டிப்டாப்பாக வேலைக்குக் கிளம்பிப் போனதும் அவளது கட்டில், அலமாரியை பார்த்து ஏளனமாய் பல முறை சிரித்திருக்கிறாள். இதைத்தான் “ஒய்யார கொண்டையாம் தாழும்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும், பேணும்.” என்பது போலும் என்று தனக்குத் தானே நினைத்துக் கொள்வாள்.
சில நேரங்களில் அவளுக்கே அருவருப்பு பொறுக்காமல் கலைந்து கிடக்கும் அவளது பொருட்களை பல முறை சரி செய்து வைப்பாள். வேலை முடிந்து வந்தவுடன் அதனை கேள்வியாய் பார்க்கும் வீணாவிடம்,
“படித்து முடித்து விட்ட பின் ரொம்பவும் போர் அடித்தது அக்கா, அதுதான் உங்களுக்கு உதவலாமே என்று….!” இழுத்தவளிடம்,
“நன்றி” என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு முடித்துக் கொண்டாள் வீணா.
Comments are closed here.