Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மலர்மதி 15 – 16

அத்தியாயம் – 15

 

நாட்கள் மெல்ல நகர்ந்தன. மலர்மதி வாஞ்சிநாதன் வீட்டில் ஒன்றிப் போனாள். தன்யனின் அக்கவுண்ட்ஸ் சம்பந்தமாக அவனை அவ்வப்பொழுது சந்திக்க வேண்டி வந்தது. முன்பானால் வாஞ்சிநாதனே பேச்சுவார்த்தை நடத்தி அதன் சாராம்சத்தை மட்டும் இவளிடம் கூறி ஆவனச் செய்யச் சொல்லுவார். ஆனால் சமீப காலமாக தன் வயதை காரணம் காட்டி, அவர் அந்த வேலையை மலர்மதியிடம் ஒப்படைத்தார். இதனால் மற்ற சீனியர் அக்கௌண்டன்டிற்கு எரிச்சல் வருமோ என்று அஞ்சியவளுக்கு அவர்களிடமிருந்து நன்றி தான் கிட்டியது. பேச்சு வார்த்தை ஆரம்பித்தால் சில சமயம் இரவு எட்டு, எட்டரை கூட ஆகும். பிறகு எங்கள் குழந்தையையும், வீட்டையும் கவனிப்பதெப்படி. நீயே இதை செய்யம்மா, என்று ஒரு மனதாகக் கூறி பின்னடைந்தார்கள்.

 

அவர்களைப் பார்க்கவும் மலர்மதிக்கு பாவமாகவே இருந்தது. இந்த சந்திப்புகளில் மலர்மதி நிறையத் தெரிந்து கொண்டாள். தன்யனின் கைவசம் உள்ள கம்பெனிகளின் புள்ளி விவரத்தைத் தன் விரல் நுனியில் வைத்திருந்தான். அங்கே வேலை புரியும் கடைநிலை ஊழியனின் பெயரைக் கூட தன் மூளைக்குள் பதிய வைத்திருந்தான். அதுவே மலர்மதிக்கு ஆச்சர்யத்தைத் தூண்டியது என்றால்,மதுசூதனின் கைவசம் இருந்த கம்பெனிகளின் விவரமும் இவனிடமேதான் இருந்தது. அவன் பெயருக்குத்தான் மீட்டிங்கில் அமர்ந்திருப்பான். கையில் செல்பேசியோடு தான் விளையாடுவான். அவ்வப்பொழுது தன்யன்கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏதோ வாய் திறந்து உலருவான்.

 

ஏனோ அவன் மீது மலர்மதிக்கு அளவில்லா கோபம் வந்தது. தன்யனின் மீதும் தான். இவள் இவ்வளவு உதவுவதால் தானே, அவன் ஏனோ தானோவென்று அமர்ந்திருக்கிறான். முதலில் இது பற்றி தனா சாரிடம் பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.

 

அர்ஜுன், ஸ்ரீகாந்த் கைவசமிருக்கும் கம்பெனிகளின் பேச்சு வார்த்தை படு சுவாரஸ்யமாக இருக்கும். இருவருக்குள்ளும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் விபரங்கள் துல்லியமாய் இருக்கும். இடையில் அவர்கள் ஏதேனும் தவறிழைத்தாலும் அதனை தன்யன் திருத்திக் கொடுத்தான். அவர்களும் ஆர்வமோடு கற்றனர். அதிலிருந்தே அர்ஜுனும் ஸ்ரீகாந்தும் மலர்மதியின் தோழர்களாயினர். வேலைத் தவிர வேறு பேச்சுக்களும் அவர்களுக்குப் பரிமாறப்பட்டது.

 

“இந்த சுடிதார் மிக அருமை.” என்பான் ஸ்ரீகாந்த்.

 

“இதை விடவும் புடவைதான் உனக்கு அழகு மலர்.” என்பான் அர்ஜுன்.

 

“ஆமாம்… ஆமாம் இப்பொழுது இங்கு என்ன அழகிப் போட்டியா நடக்கிறது.” என்று பேச்சை எளிதாக திசைத் திருப்புவாள் மலர்மதி.

 

சில ஞாயிறுகளில், வாஞ்சிநாதன் வீட்டில் இவர்கள் கூடி விட்டால், எல்லோரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு வீடே அதிரும்.

 

இப்படித்தான் ஒரு முறை மதிய உணவு முடிந்து வாஞ்சிநாதனும், கோமதியும் ஓய்வெடுக்க சென்றுவிட இளசுகள் கூட்டம் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

 

அரட்டை யென்றால் அதில் ஈடுபட்டவர்கள் அர்ஜுன், ஸ்ரீகாந்த் மற்றும் மலர்மதிதான். தன்யன் லேப் டாப்பிற்குள் புகுந்து முத்தெடுத்துக் கொண்டிருந்தான். மதுசூதனன் தன் செல்பேசிக்குள் உலகை மறந்து கொண்டிருந்தான், மதுசூதனன் நிமிர்ந்து பார்கக்க்கூட வழியில்லாமல் போயிற்று. ஆனால் தன்யனால் அப்படி முடியவில்லை. அவ்வப் பொழுது மலர்மதியின் சிரிப்பொலியால் கவனம் கலைந்து, அவளை மையலோடு பார்த்தான். அவள் பேசும் பொழுது, அவளது கூந்தலசைவையும், தொங்கட்டானின் அசைவையும் பார்த்து தன்னுள் கரைந்து போனான். அவளது செவ்விதழ்கள் மலர்ந்து உள்ளிருக்கும் அரிசிப்பல் தெரியும் பொழுது, அவன் அவனாக இருக்க மிகவும் சிரமப்பட்டுப் போனான். ஆனால் இது எதுவும் மலர்மதியின் கவனத்தில்தான் விழுந்தபாடில்லை. சட்டென அந்த யோசனை அவனுள் உதயமானது.

 

“நான் காஃப்பி தயாரிக்கப் போகிறேன். வேறு யாருக்கெல்லாம் காஃபி வேண்டும்.” என்று லேப் டாப்பை ஷட்டவுன் பண்ணிக் கொண்டு எழுந்தான் தன்யன்.

 

“எனக்கும்… எனக்கும்.” ஸ்ரீகாந்த் அர்ஜுன்.

 

ஏன் மதுசூதனனும் தன் செல்பேசியிலிருந்து தலை நிமிர்த்தி, “எனக்கும்.” என்றான்.

 

“அப்படியானால் நான் தயாரிக்கிறேன்.” என்று எழுந்த மலர்மதியை, ஸ்ரீகாந்த் தடுத்தான்.

 

“வேண்டாம் மலர், எங்கள் அண்ணா தயாரித்த காஃபியை நீங்கள் குடித்ததில்லையே, மிக…மிக… அற்புதமாய் இருக்கும்.” காரியத்தை கெடுத்து விடுவான் போலிருக்கிறதே என்று அப்பாவியாய் தன்யன் பார்க்க, உதவிக்கு வந்தான் அர்ஜுன்.

 

“அது சரிதான் ஸ்ரீ, ஆனால் எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று அண்ணாவிற்கு எப்படித் தெரியும். அதனால் அவருக்கு உதவுங்கள் மலர், அப்படியே எங்களுக்கும்.” புரியாமல்,

 

“உங்களுக்கா?” என்றாள் மலர்மதி.

 

“ஆம், அண்ணா பாட்டிற்கு சர்க்கரைக்குப் பதில் உப்பைக் கொட்டி விட்டால், அதனை குடிக்கும் நாங்கள் என்ன கதிக்கு ஆளாவோம். அப்படி ஏற்படாமல் உதவி செய்யுங்கள்.” என்று ஏற்றி இறக்கி, ஏதேதோ கூறி இருவரையும் சமையலறைப் பக்கம் நகர்த்தி விட்டு, ஸ்ரீகாந்தும், அர்ஜுனும் இருவருக்குள் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டனர்.

 

பிரிஜ்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து தன்யனிடம் கொடுத்தாள். அதனை கத்தரிக்க கத்திரிக்கோல், பால் காய்ச்சும் பாத்திரம் என்றெல்லாம் அவனுக்கு எடுத்துக் கொடுத்தாள். இந்தத் தனிமை இனி கிடைக்க வாய்ப்பில்லை. தன் மனத்தில் இருப்பதை மலரிடம் கூற வேண்டும் என்று தனக்குள்ளேயே உரு போட்டு, ஒருவாரு அவன் மனதை திறக்க எத்தனிக்கையில்,

 

“நான் உங்களிடம் ஒன்று பேச வேண்டும்.’‘ என்றாள் மலர்.

 

“….?!”

 

அதற்காக வெகுநாள் காத்திருந்தேன். இப்போது தான் இந்தத் தனிமை கிடைத்தது பேசட்டுமா?”

 

“!!!…..!!!….”

 

இது என்ன கொடுமை, நான் பேச நினைத்ததை மலர் பேசுகிறாளே… சரி, யார் பேசினால்தான் என்ன என்று அனுமதி அளித்தான்.

 

“தாராளமா பேசலாம் மலர்.”

 

“வந்… வ….வ…வந்து…”

 

“என்னிடம் என்ன தயக்கம் மலர். எதுவானாலும் தைரியமாகச் சொல்.” ஊக்குவித்தான்.

 

“மதுசூதனன் சாரிடம் நீங்கள், சற்று கண்டிப்பாக இருப்பது, நல்லது என்று தோன்றுகிறது சார்.”

 

“!!!….!!!…..”

 

“ம்… மது… மதுவா.”

 

“ஆமாம் சார், அவரது தொழிலையும் சேர்த்து நீங்களே பார்த்துக் கொண்டால், அவருக்கு எப்போது பொறுப்பு வரும்… எந்நேரமும் செல்பேசியிலும், உலகை மறக்கடிக்குமளவு மதுவும் என்று, அவர் சுற்றுவது நீங்கள் இருக்கும் தைரியத்தில்தானே!”

 

“…..”

 

தான் பேச நினைத்தது என்ன? இவள் பேசுவது என்ன, என்று சற்று ஏமாற்றம் மனதினுள் எழுந்தாலும், அவளது கேள்விக்குப் பதிலளிக்கலானான்.

 

“நீ, நினைப்பது சரிதான் மலர். ஆனால்…” ஏதோ கூற முயன்றவனால் முடியவில்லை.

 

“சாரி சார், இதனை கேட்கும் உரிமை எனக்கு இல்லைதான். இருப்பினும் கண்ணெதிரில் ஒருவர் தடம் புரள்வதை, என்னால் பார்க்க முடியவில்லை. அதனால்தான், ஏதோ ஒரு ஆர்வத்தில்…. மன்னித்து விடுங்கள்.”

 

“ச்சே… ச்சே… உனக்கு உரிமை இல்லை என்று இங்கு யாரும் நினைத்ததில்லை. ஆனால் அது ஒரு பெருங்கதை. அதைக் கூறினால் உனக்கு போர்டிக்கலாம். ஆனால் உன்னுடைய இந்த அக்கறைக்கு, என்னால் ஒரு வாக்குறுதியை மட்டும் இப்போது கொடுக்க முடியும். கூடிய விரைவில் மதுவை அவனது தவறுகளை உணர வைத்து, கவனத்தைத் தொழில் புறம் சாய்க்கிறேன் சரிதானா.” என்றவனை திருப்தியோடுப் பார்த்து ஸ்னேகமாய் புன்னகைத்தாள்.

 

இந்த சிரிப்பிற்கு உலகத்தையே எழுதி வைக்கலாம் என்று தான் அவனுக்குத் தோன்றியது. அதனாலேயே மதுவை நல்வழி படுத்தும் எண்ணத்தை தன்னுள் தீவிரமாக்கிக் கொண்டான்.

 

உண்மையிலேயே தன்யனின் காஃபி ருசியாக இருந்தது. ருசித்துக் குடித்தாள் மலர்மதி. “சூப்பர் சார். நல்ல காஃபி சர்க்கரை, டிக்காஷன் எல்லாம் அளவாக, ரொம்ப நல்லா இருக்கு. உங்கள் சரிபாதி ரொம்பவும் கொடுத்து வைத்தவர்தான் போங்கள்.” என்றாள் பாராட்டும் விதமாக.

 

இந்த உலகினை தன்யன் மறக்க, இந்த வரிகள் போதுமானதாக இருந்தது.

 

ஸ்ரீகாந்த், அர்ஜுனுக்கோ இருப்பு கொள்ளவில்லை. “இன்றைக்கு இவர்கள் பிரிவதற்குள், அந்த சரிபாதி மலர்தான் என்று இருவருக்குமே புரிய வைக்கிறேன், பார்.’‘ என்று சவால் விடுத்தான் அர்ஜுன்.

 

“எப்படிடா” ஸ்ரீகாந்த்.

 

“பொறுத்திருந்து பார்” அர்ஜுன்.

 

காலி காஃபி கப்புகளை சேகரித்துக் கொண்டிருந்தாள் மலர்மதி. தன்யனின் கப்பை எடுக்க அவள் குனிந்த நேரம், கால்களுக்கு கீழ் பூமி, நழுவியது போல் தோன்ற, “ஆ….” என்ற அலறலுடன் கண்களை இருக்கமாக மூடிக் கொண்டாள். தரையில் விழுந்து மண்டை உடைவது நிச்சயம் என்று நினைத்து அஞ்சியவள், இன்னமும் கீழே விழாததை உணர்ந்து லேசாக விழி விரித்தாள். ஒரு மலர் செண்டைப் போல் தன்யன் அவளை தன் இரு வலிய கரங்களால் தாங்கியிருந்தான்.

 

அவனது இடக்கரம் கனகச்சிதமாக, அவளது இடுப்பை பற்றியிருந்தது. இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று, ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டன. சுற்றுப்புறம் புரிந்து, கூச்சம் மேலிட, சட்டென விலகி எழுந்தாள் மலர். கன்னங்கள் செம்மையுற, வேகமாக சமையலறையினுள் ஓடி மறைந்தாள்.

 

தினப்பத்திரிகை ஒன்றை எடுத்து படிப்பது போல் பாவனை செய்து கொண்டு, மனத்திற்கு விசிலடித்துக் கொண்டான் தன்யன்.

 

“எப்படி!” என்று காலரை தூக்கி விட்டான் அர்ஜுன்.

 

“ஏன்டா கார்பெட்டை இழுத்த.” ஸ்ரீகாந்த் கோபமாக கிசுகிசுத்தான்.

 

“அப்படி இழுக்கலைன்னா, இப்படி ஒரு ரொமாண்டிக் சீன் கிரியேட்டாகி இருக்குமா.” அர்ஜுன்.

 

“மலர் கீழே விழுந்திருந்தால், வேற சீன் கிரியேட்டாகி இருக்கும்” ஸ்ரீகாந்த்.

 

“நம்ம கால்குலேஷன் நிச்சயம் மிஸ்ஸாகாது புரோ.” அர்ஜுன்.

 

“என்னதான் இருந்தாலும் குட் மூவ் புரோ.” பாராட்டினான் ஸ்ரீகாந்த்.

 

“தாங்க்யூ… தாங்க்யூ…தாங்க்யூ…” அர்ஜுன்.

 

இவை எல்லாவற்றையும் வீட்டு வாயிற்படி ஏறி உள்ளே நுழைந்து கொண்டிருந்த வீணாவின் கண்களில் செந்தனலாய் விழுந்தன. ‘இந்தளவு வந்துடுச்சா?’ கூடாது, ‘இதை நிச்சயம் ஒட்ட வெட்டி விடணும்.‘ மனதினுள் நினைத்தவள் முகத்தில் போலி புன்னகையை பூசிக் கொண்டு, “மலர்… மலர்.” என்று அழைத்தவண்ணம் நுழைந்தாள் வீணா.

 

தன் பெயரை யார் கூப்பிடுவது என்று சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் மலர்மதி.

 

‘இது ஏன் இங்கே வந்து தொலைத்தது’ என்பது போல் பார்த்தனர், அர்ஜுன், ஸ்ரீகாந்த், தன்யன். மதுசூதனன் கண்களில் ஆர்வம்.

 

வீணாவா தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள்? நம்பவும் முடியவில்லை மலர்மதியால். இருப்பினும் வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் பாணியில், “வா… வீணா, எப்படி இருக்க?” என்று விசாரித்த வண்ணம் வீணாவை நெருங்கினாள்.

 

“நீ இல்லாமல் என்னால் அந்த ஹாஸ்டல் ரூமில் இருக்கவே முடியலை. எந்நேரமும் உன் நினைவுதான். அதுவும் ஞாயிறு வந்துவிட்டால், அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அதுதான் உன்னைப் பார்த்துவிட்டு வரலாம் என்று வந்தேன், இங்கானால் உனக்கு, என் நினைவு துளியும் இருக்காது போல் தோன்றுகிறதே.” என்று முகம் வாட கூறினாள்.

 

“ச்சே… ச்சே… அப்படியெல்லாம் இல்லை வீணா. நானும் உன்னை, அவ்வப்பொழுது நினைப்பதுண்டு, இப்படி உட்கார், என்ன சாப்பிடுகிறாய்?”

 

“எதுவும் வேண்டாம் மலர்…” என்றவள், அப்போதுதான் மதுசூதனனை பார்ப்பது போல், “மது சார், நீங்களா, வணக்கம் சார்.” என்று அதிகப்படியாக குழைந்தாள். எதேச்சையாய் உட்காருவது போல் மதுசூதனன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

 

வீணாவிற்கு தண்ணீர் கொண்டு வர திரும்பிய மலர்மதிக்கு அந்தக் கண்கள் மீண்டும் தோன்றின. குரோதம் கக்கும் கண்கள், அன்று விளக்கொளியில் அவள் பார்த்த கண்கள். அவளால் சிறிது கூட நம்ப முடியாத தன்யனின் கண்களா? ஒரு நிமிடம் உலகம் நின்று மீண்டும் சுழன்றது. தன்யனா அந்தக் கண்களுக்கு உரியவர். ஆனால் இந்தப் பார்வை ஏன்? வீணாவும் மதுவும் பழகுவது ஒரு வேளை தன்யனுக்குப் பிடிக்கவில்லையோ? மதுவிற்கு வீணாவை பிடித்திருக்கிறதே, இதில் கருத்து சொல்ல இவர் யார். உள் மனதில் ஓர் அலாரம் அடித்தது. ‘வீணாவின் நடவடிக்கைகள் உனக்கே பிடிப்பதில்லை. தங்கள் குடும்பத்தில் அவள் இணையப் போகும் வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தன்யனின் குரோதப் பார்வையில் தவறென்ன?’ என்று கேட்டது உள்மனம்.

 

ஆம்… இந்தக் குடும்பத்தில் வீணா பொருந்துவது கடினம்தான். ஆனால் இது மதுவிற்கு புரிய வேண்டுமே! ஒருவேளை திருமணத்திற்குப் பிறகு வீணாவை திருத்தி விடலாம் என்றும் நினைத்திருக்கலாம். இது என்ன தேவையில்லாத குழப்பம். அண்ணன் தம்பிகளுக்குள் எப்படியும் போகட்டும். நமக்கென்ன? என்று அந்த நினைவை பின் தள்ளினாள் மலர்மதி. கூடிய விரைவில் தான் சந்திக்கப் போகும் பேரிடியை அறிந்திராமல்.

 

அத்தியாயம் – 16

 

நாட்கள் நகர்ந்தது. மெல்ல மெல்ல தன்யன் மலர்மதியின் இருதயத்தில் இடம் பிடித்துவிட்டான். இருப்பினும் அதனை வெளிப்படுத்த இருவருமே தயங்கினர். இப்படிப்பட்ட வேளையில்தான் மலர்மதிக்கு வீணாவின் அழைப்பு வந்தது.

 

“நீ என்னை எப்படி நினைத்தாலும், நான் உன்னை என் தோழியாகத்தான் நினைக்கிறேன். உன் மகிழ்ச்சி எனக்கு முக்கியம். அதனால் இன்று மாலை ஏழு மணிக்கு லீமெரிடியனில் டேபிள் நம்பர்ஃபோருக்கு வந்துவிடு.” என்றாள் வீணா.

 

என்னவாக இருக்கும் என்கின்ற, எந்த ஒரு யூகமும் இல்லாமல்தான் மலர்மதி வேண்டா வெறுப்பாக லீமெரீடியனுக்கு சென்றது. ஆனால் அவள் அங்கு கண்ட காட்சி அவளை உருக்குலைய வைத்தது.

 

டேபிள் நம்பர் ஃபோரில் வீணா வருகிறாளா என்று வாயிலை பார்த்த வண்ணம் அமர்ந்தாள் மலர்மதி. பேரர் வந்ததும் லெமன் ஜுசுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வீணாவிற்காக காத்திருந்தாள். ஓர் பதினைந்து நிமிட காத்திருப்பிற்குப் பின், கண்ணாடிக் கதவினை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த வீணாவை பார்த்ததும் எழ நினைத்த மலர்மதியால் எழ முடியவில்லை. காரணம் வீணாவின் இடையைப் பற்றியபடி சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்த தன்யன்.

 

தன்யனா! வீணாவுடனா! என்ற அதிர்ச்சி தாக்க அவர்களை வெரித்தபடி அமர்ந்திருந்தாள். அவர்கள் தன் டேபிளின் அருகே வருவது புரிந்து, சட்டென செருப்பை சரி செய்யும் பாவனையில், டேபிளின் கீழே குனிந்து கொண்டாள். நல்லவேளையாய் இவளை தன்யன் பார்க்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சு வந்தது.

 

உடனேயே யாரோ பாராங்கல்லால் இருதயத்தை அழுத்துவது போன்ற வலி பிறந்தது. தன்யனும் வீணாவும் மலர்மதி அமர்ந்திருந்த டேபிளுக்கு பின் இருந்த டேபிளில் அமர்ந்தனர். டேபிள் நம்பர் த்ரீ. தன்யனின் முதுகுக்குப் பின் மலர்மதி இருந்ததால் அவன் கவனத்திலும் கண்களிலும் அவள் பதியவில்லை. ஆனால் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டியால் ஓங்கி இருதயத்தில் அடிப்பது போல் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

 

“என்ன தனா, திடுமென என்னை அழைத்ததன் காரணம் என்ன?”கொஞ்சும் குரலில் குழைந்து வினவினாள் வீணா.

 

“என்ன அவசரம் வீணா இதோ.. பேரர் வந்துவிட்டார். சாப்பிட என்ன சொல்லட்டும்.” என்று கேட்டு இருவருக்கும் ஒரு ரெட் வைன் ஆர்டர் செய்தான். உதடுகளில் ரெட் வைனை சுவைத்துக் கொண்டே தன்யன் பேசலானான்.

 

“நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாயே வீணா.’’

 

“நீங்கள் இப்படி கேட்பதுதான் பிடிக்கவில்லை தனா, உரிமையாய் கேளுங்கள்.” என்றாள் குழைவாய்.

 

“உன்னை என் தம்பி மதுவோடு பார்த்தால், என் ரத்தம் கொதிக்கிறது தெரியுமா?” கோபத்தில் கண்கள் சிவந்தன தன்யனுக்கு.

 

“ஏ….ஏன் தனா?’’ என்றாள் சற்று மிரண்ட விழிகளுடன்.

 

சட்டென அவளது கையை பற்றியவன், “உ…உ….உன்னை என்னால் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். முதன் முதலில் நீ என் பி.ஏ.வாகத் தானே இருந்தாய்.

 

அப்போதே உன் மேல் எனக்கு தனி பிரியம் உண்டு. பிறகு மதுவின் பி.ஏ.வாக மாறியதும் நீயும் மாறிவிட்டாய். ஏன்… ஏன்… என்னை உனக்கு பிடிக்கவில்லையா?” பற்றிய அவளது கரத்தை எடுத்து அவன் இருதயத்தில் வைத்துக் கொண்டான்.

 

வீணா இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொலைபேசியில் தன்யன் அழைக்கும் பொழுது, ஏதோ சற்றுக் குழையாவாய் அழைப்பது போல் தான் தோன்றியது. டார்லிங் என்கின்ற அழைப்பு வேறு, சரி பணக்காரப் பிள்ளையாயிற்றே, பெண் சுகம் தேடுகிறான் என்றுதான் வீணா நினைத்தாள்.

 

அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் அவள் வேலை பார்த்தது தன்னியனிடம்தான். அப்பொழுதே அவன் மீதும், அவன் கம்பீரத்தின் மீதும் வீணாவிற்கு ஓர் ஈடுபாடு இருந்தது உண்மைதான். அவ்வப்பொழுது அதனை அவள் வெளிப்படுத்த, அவள் மதுசூதனனின் கம்பெனிக்கு மாற்றப்பட்டாள்.

 

இருப்பினும் தன்யனின் ஆண்மை நிறைந்த தேகத்தை, ஆட்கொள்ளும் ஆவல் அவளுள் கனன்று கொண்டேதான் இருந்ததன. இப்பொழுது மலர்மதி தன்யனின் விழி பரிமாற்றத்தை காண்கையில் அதனை எப்படியாவது உடைக்க வேண்டுமென்று நினைத்துத்தான் மலர்மதியை இங்கே அவள் அழைத்ததே. எப்படியாவது தன்யனுடன் நெருக்கமாக இருப்பது போல் காண்பித்துவிட்டாள். மானஸ்த்தியான மலர்மதி இனி ஒருக்காலும் தன்யனின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டாள். அதுதானே அவளுக்கு வேண்டும். இந்த அனாதை நாயை ஓட… ஓட விரட்ட வேண்டும் என்றுதான் நினைத்தாள்.

 

ஆனால் இப்போதோ! தன்யன் அவளை விரும்புவதாக கூறுகிறான். சிறிதும் நம்ப முடியாத விஷயம். அப்படியானால் மது…!!! சில வினாடி சிந்தித்தாள், ஆனால் அதிகம் சிந்திக்க தேவையிறாமல்,

 

“பிடிக்கும் தனா! நிச்சயம் பிடிக்கும்! ரொம்பவும் பிடிக்கும்!” தன் மற்றொரு கரத்தையும் அவன் இருதயத்தில் வைத்து அழுத்தினாள்.

 

மலர்மதியின் இருதயத்திலிருந்து குருதி வழிந்தது. “நீ கூறுவது உண்மையானால் நிரூபித்துக்காட்டு” என்றான் தன்யன்.

 

“எப்படி நிரூபிக்க வேண்டும் தனா!” கிறங்கினாள் வீணா.

 

“நீ உன் ஹாஸ்டலை காலி செய்து கொண்டு மஹாபலிபுரத்தில் இருக்கும் என் கெஸ்ட் ஹவுசிற்கு வந்துவிடு.”

 

“ஏ…ஏன்… புரியவில்லையே தனா!”

 

“நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால்… என் வீட்டில் நிச்சயம் நம் காதலை ஏற்க மாட்டார்கள். என்னால் நீ இல்லாமல் இருக்கவும் முடியாது. உலகத்திற்காக, என் தாய் தந்தைக்காக, அவர்கள் வளர்த்த சொத்து கைதவறி போகாமலருக்க, ஏதோ ஒரு முட்டாளைப் பிடித்து திருமணம் என்று செய்து கொள்கிறேன். மற்றபடி நான் உன்னவன்தான் எப்பொழுதும். வாரக்கடைசியில் நாம் இருவர் மட்டும் ஹெஸ்ட் ஹவுசில் யோசித்துப் பார்.” என்றான்.

 

“அதாவது சின்ன…!’’ முடிக்க முடியாமல் தவித்தாள் வீணா. பெண்ணல்லவா அவளாலும் அதனை தாங்க முடியவில்லைதான். ஆனால் தன்யன் விடவில்லை.

 

“மதுவை திருமணம் செய்து கொண்டு என்ன செய்வாய். இப்போதே அவனது தொழிலை நான் தான் பார்க்கிறேன். நீ அவனை மணம் செய்து கொண்டால், நீ எனக்கு கிடைக்கவில்லையே என்கின்ற எரிச்சலில் நான் நிச்சயமாய் அவன் தொழிலைப் பார்க்க மாட்டேன். பிறகு அவனது தொழில் வீழ்வதில் சிறிதும் ஐயமில்லை. பிறகு இருவரும் தெருவிற்கு வரவேண்டியதுதான். உனக்கு அப்படியொரு நிலை வரவேண்டுமா வீணா. ஐயோ நினைக்கும் பொழுதே எனக்கு வலிக்கிறதே.” வலி அவன் குரலில் எதிரொலித்தது.

 

தன் காதுகள் ஏன் கேட்கும் சக்தியை இன்னமும் இழக்கவில்லை என்று ஆச்சர்யப்பட்டாள் மலர்மதி. அவள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்களின் பேச்சு காதில் விழத்தான் செய்தது. எழுந்து ஓடிவிடலாம் என்றாலும் தன்யன் நிச்சயம் பார்த்து விடுவான். பிறகு இதனை பொய் என சித்தரிக்க வேறு கதை கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நல்ல நடிகன் தன்யன் என்பது இப்போதுதானே தெரிகிறது. கண்களில் நீர் யாருக்காகவும் பயப்படாமல் வெளியேறிக் கொண்டிருந்தது.

 

“ஆங்… தனா… எனக்கு புரிகிறது. இருப்பினும் நாம் திருமணம் செய்து கொள்ளலாமே!’’

 

“என்னதான் இத்தனை நாள் எங்கள் கம்பெனியில் குப்பைக் கொட்டினாயோ! அதிக பங்குகள், எங்கள் அப்பாமார்கள் பெயரில்தான் இருக்கிறது, மிக மிக சொற்பமே எங்களிடம். என் அப்பா, அவரது பங்குகளை விற்றுவிட்டால் பிறகு நான் எம்.டி. என்கின்ற கிரீடத்தை இறக்கி வைக்க வேண்டியதுதான். செல்வ செழிப்பான இந்த வாழ்வையும் தான்.”

 

“உங்கள் அப்பாவிற்குத்தான் உடல் சரியில்லையே சீக்கிரமே கண் மூடிவிடுவார். பிறகு எல்லாம் உங்களது தானே அதுவரை காத்திருக்கலாமே!’’

 

அடிப்பாவி… அப்பாவியான அங்கிளும் ஆண்டியும் உன்னை என்னடி செய்தார்கள். அவர்களை சாகச் சொல்கிறோயே, நீ நன்றாக இருப்பாயா? உள்ளுக்குள் கதறினாள் மலர்மதி. இருப்பினும் தன்யனின் பதிலுக்காக செவிகள் கூர்மையுற்றன.

 

சில நொடி அமைதி காத்தவன் “உனக்கு புரியவில்லை வீணா, அப்பா என்னுடைய திருமணத்திற்கு அவசரப்படுகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கு திருமணம் முடித்தால் தான், அவர் பெயரில் இருக்கும் பங்குகளை எனக்கு எழுதி வைப்பார். அதனால்தான் கூறுகிறேன்.’’சிறு அமைதிக்குப் பின் வீணா பேசலானாள்.

 

“அப்படியானால்… நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். பிறகு பங்குகள் உங்கள் கைகளுக்கு வந்த பிறகு அவளை விவாகரத்து செய்துவிட்டு என்னை மணந்து கொள்ளுங்கள், எப்படி என் ஐடியா.” கிராதகி, ஒரு பெண்ணின் வாழ்வை அழிக்க ஏற்பாடு செய்து விட்டு, எப்படி கொக்கரிக்கிறாள்.

 

“சரி… அப்படி ஒரு சாத்தியக்கூறு இருந்தால் நிச்சயம் செய்யலாம். பிறகு நடக்கப் போவதை அப்புறம் பார்ப்போம். இப்போது நான்… உன்… மேல்… இனியும் மறைக்க விரும்பவில்லை. மேலே இரண்டாவது மாடியில் ரூம் போட்டிருக்கிறேன். வருகிறாயா டார்லிங்?’‘ என்றான் போதை ஏறிய விழிகளுடன், வார்த்தைகள் குளரலாய் குழைவாய்.

 

“நிச்சயம் டார்லிங்.” என்று கைத்தாங்கலாய் அவனை அணைத்து லிப்டிற்கு அழைத்துச் சென்றாள்.

 

அவர்களின் முதுகை வெறித்த மலர்மதிக்கு அதற்கு மேல் அங்கு நிற்கவும் பிடிக்கவில்லை. வயிற்றிற்குள்ளிருந்து ஏதோ ஒன்று குடைவது போல் இருந்தது. மெல்ல மெல்ல மேலெழுந்து குமட்டலாய் மாறியது. வேகமாகச் சென்று வாந்தியெடுத்தாள்.

 

அங்கேயே சில நிமிடங்கள் நின்று கண்ணீர் வடித்தாள். கைப்பையில் இருந்த செல்போன் அலரவும்தான் நடப்பிற்கு வந்தாள். அழைத்தது வீணாதான். இன்னமும் இவளுக்கு என்னதான் வேண்டும் என்ற எரிச்சலுடன் எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

 

“ஏய், மலர் எங்கடி இருக்க.”

 

“கீ…கீ… கீழே வாஷ் ரூமில்.”

 

“இதோ, ஒரே நிமிஷம் வரேன்.’’

 

“ஏ…ஏ… ஏன்.” அவள் கேட்குமுன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இவள் ஏன் இப்பொழுது இங்கு வருகிறாள். இவள் அங்கே தன்யனுடனல்லவா இருக்க வேண்டும் என்று நேரம் பார்த்தவள் அயர்ந்து போனாள். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகவா அழுதிருக்கிறாள். அதுவும் அந்த பெண் பித்தனை நினைத்து, அவளை நினைத்து அவளுக்கே எரிச்சல் வந்தது. ஆனால் என்ன செய்ய, அவளுக்குத்தான் இன்று கோள்களும், கிரகங்களும் எதிராய் இருக்கின்றனவே. எல்லாம் என் தலையெழுத்து. அதற்குள் வீணா வந்துவிட்டாள், வேகமாக வந்ததால் அவளுக்கு மூச்சு வாங்கியது.

 

வேகமாய் வந்ததால்தானா, தரிகெட்டு ஓடிய தன் மனதை அடக்க பெரும்பாடுபட்டாள் மலர்மதி. என்ன முயன்றும் வீணாவின் மேனியை, அளவெடுக்கும் தன் கண்களை, அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

கலைந்திருந்த கேசம், கண்களின் மஸ்காராவும் ஐ லைனரும் கலைந்திருந்தது. உதட்டுச் சாயம் ஆங்காங்கே காணாமல் போயிருந்தது.

 

இதழ்களில் என்ன ரத்தக்கட்டு, ஒரு வேளை… யோசிக்கையிலேயே இருதயம் வெடித்துவிடும் போல் கனத்தது. நல்லவேளையாய் வீணாவின் கவனம் கண்ணாடியில் இருந்தது.

 

“ச்சு… இந்த தனா சுத்த மோசம், என்னதான் ஆசை இருந்தாலும் இப்படியா கடிப்பது.” என்று உதட்டு காயத்தை கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டு இருந்தாள். அத்தோடு நிறுத்தாமல்,

 

“மலர் எனக்கு ஒரு உதவி செய்வாயா, இதோ சுடிதாரின் பின்னால் இருக்கும் இந்த ஜிப்பை போட்டு விடுகிறாயா.” என்று முதுகு புறத்தை காண்பித்தாள்.

 

“ஏன் அவிழ்த்தவருக்கு போடுவதற்கு நேரமில்லையா?” என்றாள் விரக்தியாய்.

 

“ஏதோ அவசர வேலையாம் சென்று விட்டார், வந்து… உனக்கு… அவர்… மீது…” முடிக்க முடியாமல் நிறுத்துவது போல் திணறினாள்.

 

“நீ நினைப்பது போல் எதுவுமில்லை வீணா.” உணர்ச்சி துடைத்த குரலில்.

 

“அடடா, உனக்கு அவர் மீது, ஏதோ என்று தோன்றியதால்தான் உன்னை இங்கு அழைத்தேன். உன் வாழ்விற்கு உதவுவதாய் நினைத்து, உன் நேரத்தை வீணடித்துவிட்டேனே, சாரிப்பா.” என்றாள் பவ்வியமாய், மலர்மதியினுள் கரைந்து கொண்டு இருக்கும் கண்ணீரைப் பற்றி தெரிந்தவளாய்.

 

“நடந்த எல்லாவற்றையும் கேட்டாய் தானே, நான் நினைத்தது போல் ஒரு வாழ்க்கை எனக்கு கிடைத்துவிட்டது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.’’ இவளாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்தவள்,

 

“வாழ்த்துக்கள் வீணா, நான் கிளம்புகிறேன் வேலை இருக்கிறது, பாய்.” என்று விடைபெற்று வேகமாக வெளியேறினாள். வெற்றிப் புன்னகையுடன் நின்றாள் வீணா.




Comments are closed here.

You cannot copy content of this page