மலர்மதி 9 – 10
3877
0
அத்தியாயம் – 9
அந்த விழாவிற்குப் பின் மலர்மதியின் நிலையோ மிகவும் மோசமாகிவிட்டது. விடுதியில் வீணாவை பார்க்கும் பொழுதெல்லாம், அன்று நடந்ததே நினைவிற்கு வந்தது. அப்படி வருகையில்… அவள்… அவளது முகம், அவள் கண்களில் வந்து சென்றது. அப்போதும் அவன் அவளது இடையைப் பற்றியிருப்பது போல் ஒரு பிரம்மை… கோபம், வெறுப்பு…ஆக்ரோஷம்… இதுதான் என்று சொல்ல முடியாத ஒரு அருவெறுப்பு அவள் மனதில் பொங்கி எழுந்தது. இத்தனை நடந்து விட்டதே. அவனை தன் கால் செருப்பால் அடிக்காமல் எப்படி விட்டாள் என்று அவளுக்கே ஆச்சர்யம்தான். ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் உண்மை சிரித்தது. நீயாகத்தானே அவனை ஆட அழைத்தாய் அன்று. அது உண்மைதான். இருப்பினும் அவன் எப்படி தவறாக எண்ணலாம்? அதுவும் அவள் மறுக்க… மறுக்க… முத்…. அதற்கு மேல் சிந்திக்கவும் அவளுக்கு அச்சமாக இருந்தது.
இவளது நிலை புரியாமல் வீணா வேறு,
“புளியங்கொம்பாய் பிடித்துவிட்டாய் போல.” என்று புகழ்வது போல் வயிறெரிந்தாள்.
இவள் கெட்ட கேட்டிற்கு மதுசூதனனே அதிகப்படி. ஆனால் இவளுக்கு தன்யன் கேட்கிறதோ என்று புழுங்கினாள்.
“புளியங்கொம்புமில்லை, வேப்பங் கொம்பும் இல்லை. அந்தப் பணக்கார கும்பலைப் பார்த்தாலே குமட்டுகிறது… இதெல்லாம் உன்னோடு நிறுத்திக் கொள்.’’ ஏனோ அக்கா என்று கூற அவளுக்கு நா எழவில்லை.
போயும் போயும் இந்த நடத்தை கெட்டவளைப் போய், அக்கா என்பதா? உடனே மனம் அவளைச் சாடியது… நடத்தை கெட்டவள் என்று எப்படி யோசிக்கலாம். ஒருவேளை வீணா மதுசூதனனை காதலிக்கலாம். திருமணம் செய்து கொள்ள விரும்பலாம்.
அதனாலேயே தன்னை அவளிடமிருந்து தூர நிறுத்த முனைந்திருக்கலாம். இருக்கலாம் என்ன? இப்படித்தான். அதற்காக அவளை தவறாக நினைப்பது தவறுதானே, இருப்பினும் வீணாவை முன்பு போல் அக்கா என்று அவளால் இயல்பாய் கூப்பிட முடியவில்லை. ஏதோ மதுசூதனனுக்கு இருவருமே வாழ்க்கைப்பட்டு, மூத்தாளை அக்கா என்று இளையவள் கூப்பிடுவது போல் ஒரு பிரமை எழுந்து அருவறுப்பை அதிகப்படுத்தியது.
ச்சு…. இது என்ன மடத்தனம் மறக்க வேண்டிய சாக்கடையை திரும்பத் திரும்ப நினைப்பது. மற மனமே மற, எல்லாவற்றையும் மற. என்று உரு போட்டபடி தன் வேலைகளில் கவனம் செலுத்த முனைந்தாள். அவளது நிலை தெரியாமல் அவளுக்கென்று தன்யனின் தலைமையில் உள்ள கிளைகளின்… ஃபைல்களையே கொடுத்தார் வாஞ்சிநாதன்.
வேலையிலும் மனம் லயிக்காமல் சண்டித்தனம் செய்தது. இருப்பினும், கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி, அவளது வேலைகளை முடிக்கையில் அவளது விழிகள் அகல விரிந்தன.
மற்ற மூவரைக் காட்டிலும் தன்யனின் தலைமையில் நடக்கும் கம்பெனிகளின் லாபம் அதிகமாகவே இருந்தது. இவனது பேச்சும் சரியில்லை. செயலும் சரியில்லை. ஆனால் தொழில் மட்டும் எப்படி? என்கின்ற சிந்தனை அவளுள் கனன்று கொண்டேயிருந்தது.
ஏனென்றால் மலர்மதியின் தந்தை அவ்வப்பொழுது ஒரு வாக்கியம் சொல்வதுண்டு. பெண்களை மதிக்காதவன் வாழ்வில் ஒருக்காலும் முன்னேற முடியாது. இவனோ… பெண்களை மதிப்பது இருக்கட்டும், ஒவ்வொரு பெண்ணிற்கும் என்ன விலை என்று கேட்கின்ற ரகம். பிறகு எப்படி தொழில் வெற்றி சாத்தியம்…? தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான்.
அவ்வப்பொழுது தன்யனைப் பற்றி வாஞ்சிநாதனிடம் சந்தேகம் எழா வண்ணம் விசாரித்ததில், அவருக்கு அவன் மீத எல்லை இல்லா பாசமும் – மரியாதையும் இருப்பது தெரிந்து மேலும் குழம்பினாள்.
இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சூழ்நிலையில் தான் வாஞ்சிநாதனின் அறுபதாம் பிறந்த நாள் வெகு விமரிசையாக, கொண்டாடப்பட போவதாக அறிவிக்கப்பட்டது.
அத்தியாயம் – 10
விடுதியில் சொல்லிவிட்டு வாஞ்சிநாதனின் பிறந்த நாளுக்கு முன்தினமே அவர் வீட்டிற்கு வந்து விட்டாள் மலர்மதி. எல்லாம் கோமதி அம்மாவின் வற்புறுத்தலின் பெயரில்தான்.
மறுநாள் இரவு எத்தனை விருந்தினர்கள் வருகிறார்கள், லிஸ்டில் எத்தனை வி.ஐ.பி. இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு கெஸ்ட் ரூமை எப்படி ஏற்பாடு செய்வது, எத்தனை கார்கள் ஏர்போர்ட்டிற்கு செல்ல வேண்டும். எத்தனை கார்கள் ரெயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும். இப்படி பலவாறு மூவரும் அமர்ந்து கணக்கெடுத்துக் கொண்டிருக்கையில்தான்… அந்தக்… குரல்… அதே குரல்,
“என்ன மாமா… இன்னமும் உறங்கவில்லையா?” என்றது.
சட்டென விதிர் விதிர்த்த பார்வையோடு நிமிர்ந்தவளை, வேண்டுமென்றே தவிர்த்தவன், தன் மாமாவை நோக்கி நடந்தான்.
“வாப்பா தன்யா… என்னப்பா இந்த வேளையில், ஏதேனும் பிரச்சனையா?’’ என்றவாறு எழுந்து அவனை வரவேற்றார்.
“பிரச்சனை ஏதுமில்லை மாமா… நாளை விழாவிற்கான ஏற்பாடுகளில் ஏதேனும் உதவலாமா, என்று பார்க்கத்தான் இங்கு வந்தேன்… மற்றவர்களையும் வரச் சொல்லி இருக்கிறேன்… ஆ… ஆனால் உங்களுக்கு அது தேவைப்படாது என்று இப்போது தோன்றுகிறது…” என்றவாறு பார்வை மலர்மதியின் மீது படிய. புரிந்து கொண்ட கோமதியம்மாள் அறிமுகபடலத்தில் இறங்கினார்.
“இவள் மலர்மதி, தன்யா. இவருக்கு கீழ் வேலை பார்ப்பவள்… ஏதோ இந்த வயதானவர்கள் எப்படி, தனித்து விழாவை நடத்துவது, சிரமமாயிற்றே என்று உதவி புரிய வந்திருக்கிறாள்.”
“மலர்மதி இவன் தன்யன். என் அண்ணன் மகன். நீ வேலை பார்க்கும் கம்பெனியின் நான்கு முதலாளிகளில் இவன் பிரதானமானவன்.’’
அவனை நிமிர்ந்து பார்க்கும் எண்ணம் சிறிதுமின்றி இமைகளை உயர்த்தாமலே இரு கை கூப்பி, “வணக்கம்.” என்றாள்.
வேறு வழியின்றி அவனும், “வணக்கம்.” தெரிவித்தான்.
அடுத்து பேச்சை எப்படி தொடர்வது என்று சிந்திக்கையிலேயே, அதற்கு அவசியமே இல்லாமல், “ஹாய் அங்கிள்…! ஹாய் ஆண்டி” – என்று குதூகலக் குரலுடன் அர்ஜுனும் ஸ்ரீகாந்தும் உள்ளே நுழைய, அதன் பின் கோமதியின் விருந்தோம்பல் என்று அந்தக் கூடம், அப்போதே விழாக்கோலம் பூண்டுவிட்டது. கோமதிக்கு உதவும் சாக்கில் சமையலறையினுள் புகுந்து கொண்டாள் மலர்மதி.
“அண்ணனின் தலைவலி இங்கென்ன செய்கிறது ஸ்ரீ.” ஸ்ரீகாந்தின் காதோரம் கிசுகிசுத்தான் அர்ஜுன். “அதன் அஸ்திவாரத்தைத்தான் நானும் கண்டுபிடிக்க முயலுகிறேன். இரு இரு எங்கே போய் விடப் போகிறது. நாளை இரவு வரை இங்கு தானே இருக்கப் போகிறோம். கண்டுபிடித்துவிடலாம்” என்று அர்ஜுனை சமாதானப்படுத்தினான்.
“மதுசூதனை காணவில்லையே.” சந்தேகக் குரலில் கேள்வி எழுப்பினான் தன்யன்.
“இதோ வந்து விடுவார் அண்ணா.’’ அவசரமாக அர்ஜுன் பதில் கூறிய பொழுதும், “அவனைத்தான் அந்த வீணா தன் கைக்குட்டையில் மடித்து இடுப்பில் சொருகியிருக்கிறாளே. அவளாக அவனை விடுவித்தால்தான் முடியும்.” என்று கம்மிய குரலில் கூற, ஸ்ரீகாந்தின் முகத்தில் வருத்தமான சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது.
இரவு உணவு முடிந்து பெரியவர்களும் மலர்மதியும் படுக்கைக்கு சென்று விட, இளைஞர்கள் மாடியில் மாநாடு போட்டனர்.
“கேக் ஆர்டர் கொடுத்து விட்டாயா ஸ்ரீ?” மதுசூதன். “ம்…ம்… சரியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு வந்துவிடும்…” ஸ்ரீகாந்த்.
“….”
“நம் அங்கிளுக்கு நல்ல சர்ப்ரைஸ் இல்லையா அண்ணா.” என்று தன்யனின் முகம் பார்த்த அர்ஜுன், உடனே ஸ்ரீகாந்தை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான். காரணம் தன்யன் வானத்தையே வெறித்த வண்ணம் நின்றிருந்தான்.
அர்ஜுனை பார்த்து கண்ணடித்த ஸ்ரீகாந்த், “நாம் ஏன் அந்தப் பெண் மலர்மதியையும் நம்மோடு இந்த சர்ப்ரைஸ் கேக் கட்டிங்கில் அழைத்துக் கொள்ளக் கூடாது அர்ஜுன்.” அர்ஜுனுடன் பேசினான் என்று தான் பொருள், ஆனால் இருவரது கூர் பார்வையும் தன்யனின் மீது நிலைத்திருந்தது.
அவர்கள் எதிர்பார்த்து போல் சட்டென இவர்கள் புறம் திரும்பினான் தன்யன். உடனே தங்கள் பார்வையை தளர்த்திக் கொண்டவர்கள், அர்ஜுன் நாமுட்டும் சிரிப்போடு, “நல்ல ஐடியாதான் ஸ்ரீ.”
“அவர்கள் இந்நேரம் உறங்கியிருந்தால்?” மதுசூதன்.
“இருக்கலாம் தான்… முதலில் கேக் வரட்டும், நானும் அர்ஜுனும் கேக்கை உள்ளே கூடத்தில் வைத்து அலங்காரம் செய்து விடுகிறோம்.”
“மது நீங்கள் அங்கிளின் அறைக்குச் சென்று அவர்களை எழுப்பி, கூட்டி வந்து விடுங்கள். தன்யண்ணா மலர்மதியை அழைத்துக் கொண்டு வந்துவிடுவார் இதுதான் பிளான்.” என்று ஸ்ரீகாந்த் முடித்துவிட, வேறு வழியில்லாமல் தலையாட்டினான் தன்யன்.
அவனுக்கும் அவளிடம் பேச வேண்டியிருந்தது. அவள் சாப்பாடு பரிமாறியது, யார் யாருக்கு என்ன தேவை என்று குறிப்பறிந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தது. தன்யனை ரசிக்க வைத்தது. ஆனால் அங்கிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவரைக் கூட அவள் ஏரெடுத்தும் பார்க்கவில்லை. முக்கியமாக தன்யனையும் மதுசூதனையும் தப்பித் தவறி கூட பார்த்துவிடக் கூடாது என்கின்ற வைராக்கியத்தில் இருந்தது போல்தான் தன்யனுக்குத் தோன்றியது.
அன்று தான் செய்த தவறு, இன்று நெரிஞ்சி முள்ளாய் அவன் இதயத்தில் தைத்தது. அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன் மனதில் உறுதி பிறந்ததை, அவனே ஆச்சர்யத்தோடு உணர்ந்தான்.
செல்போனில் ஏதோ பேசிய ஸ்ரீகாந்த், “கேக் வந்துவிட்டது, நானும் அர்ஜுனும் கீழே சென்று, ஓசை படாமல் கேக்கை வாங்கி வந்து விடுகிறோம். நீங்கள் இருவரும் உங்கள் வேலையைச் செய்யுங்கள். என்று முடித்தவன் அர்ஜுனின் கரம் பற்றி கீழிறங்கினான்.
உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் எழுந்து மறைய, ஒருவித படபடப்புடன்தான் அவன் மலர்மதியின் அறைக் கதவை தட்டியதே. இரண்டே தட்டுக்களில் அவசரமாக கதவு திறக்கும் ஓசையிலேயே, அவளும் தூங்கவில்லையோ என்கின்ற சந்தேகம் அவனுள் எழுந்தது. திறந்த கதவின் பின் மலர்மதியைப் பார்த்ததும் மனம் வெள்ளைக் காகிதமாய் ஆனது… சகலமும் மறந்துவிட்டது.
இரவு சரியாக பன்னிரெண்டு மணிக்கு வாஞ்சிநாதன் சாருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்த மலர்மதி அறையினுள் தூங்கி விடாமல் புத்தகம் படித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இன்னமும் ஐந்து நிமிடம் இருக்கிறதென்று கடிகாரத்தை அவள் பார்க்கவும், கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது. ஆனால் கதவுக்கு வெளியே நிற்பது இவனாக இருக்குமென்று சிறிதும் அவள் நினைத்தாளில்லை.
சட்டென முகம் வெளிறி விட்டது… அங்கே அவ்வளவு கூட்டத்திலேயே தன்னிடம்… அசிங்கமாக நடந்தவன்… இங்கே, இவனது அத்தை வீட்டில் எப்…படி…?!!!
“அ…..” அம்மா என்று பெருங்குரலெடுத்து கத்த முனைந்தவளின் நோக்கம் புரிந்து, சட்டென தன் வலிய கரத்தால் அவளது வாயைப் பொத்தினான்.
மற்றொரு கையால் அவளது தோள் பற்றி அறையினுள் அவளை தள்ளியவாறு தானும் சென்றான். தன்னை விடுவித்துக் கொள்ள, எத்தனை திமிறியும் அவளால் முடியவில்லை.
அவளது வாயிலிருந்த கையை எடுக்காமலேயே, கதவைச் சாத்தியவனை மிரட்சியோடு ஏறிட்டாள். அவளது கண்கள் அவனை நோக்கிக் கெஞ்சின. ‘என்னை விட்டு விடு’ என்று கூறாமல் அவை கூறின, கண்ணீர் அணை கட்டி நின்றன.
“உன்னை கற்பழிக்கும் உத்தேசம் எனக்கில்லை. உன் திருவாய் திறந்து கத்தாமலிருப்பாய் என்று வாக்கு கொடுத்தால் விடுவிக்கிறேன்.” எரிச்சல் அவன் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.
அவசரமாய் ஆமோதிப்பது போல் தலையசைத்தாள். உடனே அவளை விடுவித்தான். ஐந்தடி பின்னே நகர்ந்தவள், “உ… உங்…. உங்களுக்கு என்ன… வேண்…. வேண்டும்?” பயத்தில் நா உலர்ந்தது.
“சத்தியமாய் நீ நினைப்பது போல் எதுவுமில்லை.”
“….’’
“மாமாவிற்கு சர்ப்ரைஸ்சாக கேக் கட் பண்ணப் போகிறோம். இந்த வீட்டிலேயே நீ இருப்பதால் உன்னை விட்டு விட்டு வெட்டக் கூடாதாம். அதனால் அழைத்துப் போக வந்தேன்… சற்று சீக்கிரமாய் என்றால், சரியாக பன்னிரெண்டு மணிக்கு, கேக் கட் செய்துவிடலாம்.” என்றவன் முன்னே நடக்க, மறுத்து எதையும் பேசாமல் அவன் பின்னோடு நடந்தாள்.
இருவரும் ஒன்றாக நடந்து வர, கேக்கைப் பிரித்துக் கொண்டிருந்த அர்ஜுன் ஸ்ரீகாந்தை தன் தோள்களால் இடித்து, விழியசைவில் அவர்களைப் பார்க்கச் சொன்னான்.
“மேட் ஃபார் ஈச் அதர்.’’ என்று சற்று சத்தமாகவே கூறிவிட்டான் ஸ்ரீகாந்த்.
எல்லோரும் அவனை சந்தேகமாய் பார்க்க, சட்டென வேறுபுறம் பார்த்தவன் அங்கே வாஞ்சிநாதனும் கோமதியும் வந்து கொண்டு இருப்பதை பார்த்து… “அ… அதோ வருகிறார்கள் பார் அந்த மேட்ச் ஃபார் ஈச் அதர் கப்பிள்.” என்று நிலைமையை பக்காவாக சமாளித்து விட்டான். தன் கண்களாலேயே தன் பாராட்டினை தெரிவித்து விட்டான் அர்ஜுன்.
“இப்படி சமாளிப்பதெல்லாம் நமக்கு அல்வா சாப்பிடற மாதிரி அர்ஜுன்.”என்று பெருமையான கிசுகிசுப்பு வேறு… கேக் கட்டிங் இனிதே நடந்து முடிந்தது. கேக்கை எல்லோரும் பகிர்ந்து உண்டவுடன், நால்வரும் ஒன்று கூடி ஒரு கிப்ட் பார்சலை வாஞ்சிநாதனிடம் நீட்டினார்கள்.
“இது என்னப்பா… நான் என்ன சின்னக் குழந்தையா, பிறந்த நாளன்று பரிசு தருவதற்கு?” என்ற கேள்வியோடும் சிறு தயக்கத்தோடும் பெற்றுக் கொண்டார். உள்ளே ஒரு ‘ரோலெக்ஸ்’ வாட்ச் மற்றும், ஒரு சாவி… “இது என்ன சாவிப்பா…” என்றதும்,
“கார்… ஆடிக்கார்.” அறிவிப்ப போல சத்தமாக கூறினான் அர்ஜுன்.
“எ…என்ன காரா…!!! எதுக்கு இத்தனை பெரிய கிப்ட்?’’ கிட்டத்தட்ட குரலில் கண்டனத்தோடு பேசினார்.
“வாழ்வில் ஒரு முறை தானே மாமா நீங்கள் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள். அதனை மறக்காமலிருக்கவே இந்தப் பரிசு.’’ என்று முடித்த தன்யன்,
“ஆ…ங்…. மலர்மதி உங்கள் பரிசு எங்கே? எடுத்து வர மறந்து விட்டீர்களா?” கேள்வியாய் அவளைப் பார்க்க, அவள் உறைந்து விட்டாள்.
எப்படி பார்த்தான்? என் அறையில் இருந்த சில நிமிடங்களில் எப்படிப் பார்த்தான். அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே… “ம்… போங்கள் மலர்மதி. உங்கள் அறையில் ஜிகினாத்தாள் போட்டு சுற்றியிருந்த பரிசை நான் பார்த்தேனே. நாளை கொடுக்கலாம் என்று வைத்திருந்தால், தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிவிடுங்கள். நாளை மற்றவர்கள் கொடுப்பதில் உங்களது பரிசை தனியே பிரித்தெடுப்பது சிரமம். அது மட்டுமல்லாமல் வேண்டியவர்கள் தனியே கொடுப்பதுதான் நன்று.” எனவும், மறுக்கமாட்டாமல் உள்ளே சென்றாள்.
அவளுக்குமே அதே எண்ணம்தான். இரவு பன்னிரெண்டு மணிக்கு சரியாக, வாஞ்சிநாதன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, அந்த பரிசினை கொடுக்க வேண்டுமென்று. ஆனால் அங்கே நடந்த ரசாபாசத்தில் அவளுக்குத்தான் மேல் மாடி காலியாகிவிட்டதே. ஒருவேளை அதனை உணர்ந்துதான் தன்னை இப்படி உந்தித் தள்ளினானா?!! இருப்பினும் அவன் என்ன அவளுக்கு நினைப்பூட்டுவது என்ற ஆத்திரம் உள்ளே கணன்று கொண்டேயிருந்தது. இருப்பினும் அதனை புறந்தள்ளி வாஞ்சிநாதனுக்கு வாழ்த்து கூறி பரிசைக் கொடுத்தாள் மலர்மதி.
அதனை ஆசையோடு பிரித்தார் அவர். அதனை ஆர்வமாய் பார்த்தான் தன்யன். உள்ளே அழகான ஓவியம். ‘வாஞ்சிநாதனும் கோமதியும்.’
“வாவ்.’’ என்று கோரசாக கத்தினர் அர்ஜுனும், ஸ்ரீகாந்தும். பாராட்டுதலான பார்வையை பார்த்து வைத்தான் தன்யன்.
“ரொம்ப நல்லா இருக்கும்மா.” நெகிழ்ந்தார் வாஞ்சிநாதன்.
“மனசுக்கு நிறைவா இருக்கும்மா.” என்ற கோமதி மலர்மதியின் நெற்றியில் இதழ் பதித்தாள்.
இதிலெல்லாம் அத்தனை சிரத்தை காட்டாமல் ஒதுங்கி நின்று தன் செல்போனை தட்டிக் கொண்டிருந்தான் மதுசூதனன்.
Comments are closed here.