மலர்மதி 11 – 12
3792
0
அத்தியாயம் – 11
அதிகாலை 6.30… கையில் காப்பி ட்ரேயுடன் அந்த அறையினுள் நுழைந்தாள் மலர்மதி. அங்கே கிங்சைஸ் கட்டிலில் தலை முதல் கால் வரை போர்த்திய படி மூவர் படுத்திருப்பது தெரிந்தது. இன்னமும் எழவில்லை போல, சரி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வெளியேற எத்தனித்தவள், வேகமான மூச்சு சத்தத்தில் சற்று நிதானித்தாள். எங்கிருந்து இந்த ஒலி வருகிறதென்று உற்று கவனித்தாள். கண்டிப்பாக படுக்கையிலிருந்து வரவில்லை. பின்னே… சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு போர்ட்டிகோவில் அரவம் தெரிந்தது. மெல்ல நடந்து எட்டிப் பார்த்தாள் அங்கே… தன்யன் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான்.
முழங்கால் தெரிய பர்முடாவும், வேர்வையில் நனைந்த பனியனுமாக அவன் தண்டால் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்த மலர்மதிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று புகுந்து நாணத்தை ஏற்படுத்தியது. இதுவரை அவள் ஆண்களை இப்படிப் பார்த்தது இல்லை. சட்டென தலை கவிழ்ந்தவள், முகச் சிவப்பு அடங்குவதற்கு சில நொடி அவகாசம் எடுத்துக் கொண்டு, “வ….வந்து… காப்பி.’’ என்றாள் குரலே எழும்பாமல்.
ஆனால் அதனைத் தெளிவாக உள்வாங்கியது போல் எழுந்து நின்றான் தன்யன். ஊஞ்சலில் கிடந்த டவலை எடுத்து தன் வேர்வைத் துளிகளின் மேல் ஒற்றி எடுத்தவன்.
“குட்மார்னிங் மலர்மதி.” என்றான் உற்சாகத்தோடு.
“குட்மார்னிங்.”
பதிலுக்குச் சொன்னவளின் குரலில் சுரத்தேயில்லை. ஏதோ கடமைக்குக் கூறுவதுபோல் கூறிவிட்டு, காப்பி டிரேயை அவன் புரம் நீட்டினாள். ஒரு கப்பை அவன் எடுத்துக் கொள்ளவும், “இவங்களெல்லாம் எப்போது எழுவார்கள்?” என்றாள் இழுத்து மூடப்பட்ட போர்வைகளைப் பார்த்து,
“அண்ணி நம்மைத்தாண்டா கேக்கராங்க, எழுந்து ஒரு அட்டென்டன்று போடுவோமா.” போர்வைக்குள் ஸ்ரீகாந்திடம் கிசுகிசுத்தான் அர்ஜுன்.
“ஸ்… ஸ்… மெதுவா பேசு… அண்ணனும் அண்ணியும் பேசும் போது நாம் தொந்தரவு செய்யக் கூடாது பேசாமல் படு.” உத்தரவிட்டான் ஸ்ரீகாந்த்.
“ஆமாம்… ஆமாம். இங்க என்ன கௌதம் பட சீனா நடக்கப் போகுது… உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு நான் ஏன் காப்பியை மிஸ் பண்ணனும்.” அர்ஜுன்.
“உஸ்… அண்ணா ஏதோ பேசறாங்க அமைதியா இரு.” கோவமாக கிசுகிசுத்தான் ஸ்ரீகாந்த்.
“எனக்கு எப்படித் தெரியும். இந்த தடிமாடுகள் விடுமுறை நாட்களில், சூரியன் உச்சிக்கு வந்த பிறகுதான் எழுவார்களாம்.
இவர்களைப் பெற்ற அன்னைமார்கள் கூறக் கேட்டிருக்கிறேன். இன்று எப்படியோ?” அவளுடன் ஸ்னேகமான ஒரு உறவினை ஏற்படுத்திக் கொள்ள முயன்றான்.
“என்ன கொடுமைடா இது, இந்த அண்ணன் சைக்கிள் ஓட்ட நாம காத்தடிக்கனுமா.” அங்கலாய்த்தான் அர்ஜுன்.
“உஸ்…” ஸ்ரீகாந்த்.
“அப்படியானால் இவர்களுக்கு காப்பி தேவைப்படாது என்று நினைக்கிறேன். நான் போகிறேன்.” என்றவள் கதவினை நோக்கி விரைந்தாள்.
“இப்பவும் எழலைன்னா காப்பி போயிடும்டா?” அர்ஜுன்.
“உஸ்…” ஸ்ரீகாந்த்.
“அட, நீ வேற பாம்பு சவுண்டெல்லாம் கொடுத்துக்கிட்டு மனுஷன் கடுப்பு தெரியாமல்.” சட்டென அர்ஜுனின் வாயைப் பொத்தினான் ஸ்ரீகாந்த்.
“ஒரு நிமிஷம் மலர்மதி…” என்ற தன்யனின் குரல் அவளை நிறுத்தியது. ஆனால் அவன் புறம் திரும்பினாள் இல்லை.
“வ…ந்…வந்து… சாரி.” என்றான் இறுகிய குரலில். அவனது குரலே முன் பின் அவன் சாரி என்கின்ற வார்த்தையை உச்சரித்திராதது போல் இருந்தது. முகத்தை மட்டும் அவன் புறம் திருப்பி ஆச்சர்யமாக புருவம் உயர்த்தினாள்.
“நீ நினைப்பது சரிதான் மலர்மதி…இதுவரை நான் யாரிடமும் மன்னிப்பை கோரியதில்லை… அதுவும் மனமார்ந்த மன்னிப்பு…. முதன் முதலில் உன்னிடம்தான் மன்னிப்பைக் கோர வேண்டியதாய் போயிற்று.” என்றான் எங்கோ பார்த்தபடி, அவளது கொலுசுச் சத்தம் கேட்டதும்தான் அவனது மன்னிப்பிற்கு அவள் பதிலளிக்காமல் சென்று கொண்டிருக்கிறாள் என்பதே அவனுக்கு விளங்கியது.
“ப…பதில்… எதுவும் சொல்லலையே.” என்றான் உரக்க…
சட்டென நின்றவள், “மன்னிக்கும் தவறை நீங்கள் செய்யவில்லை என்று பொருள்.” என்று முடித்தவள் மறைந்தே போனாள்.
பால்கனியில் கிடந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் கையில் இருந்த காப்பியையும் மறந்து, இலக்கின்றி வெறிக்கலானான்.
“அடடா… அண்ணன் கிட்டகிட்ட வந்தும், அண்ணி விலகி ஓடறாங்களேடா!!?” அங்கலாய்த்தான் ஸ்ரீகாந்த்.
“காப்பி போச்சே.” வடபோச்சே வடிவேலு பாணியில் அர்ஜுன் சொல்ல, இருவரும் அடிதடியில் இறங்கிவிட்டார்கள். (செல்லச் சண்டை). அப்போதுதான் துயில் கலைந்த மதுசூதனன் கண்களை தேய்த்துக் கொண்டே,
“காப்பி வந்ததா?” என்றான் சோம்பலாய்.
“ம்… மாடுகளெல்லாம் இன்னிக்கு ஸ்டிரைக்காம். அதனால் காப்பியும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.” அர்ஜுன்.
“போ… போய் குளிடா.” ஸ்ரீகாந்த்.
“நீங்க ஏண்டா அடிச்சிக்கிறீங்க?” புரியாமல் விழித்தான் மதுசூதனன்.
“ம்… ஒரே பொண்ணுக்கு ரெண்டு பேரும்ரூட்டு போடறோம் அதுதான்.” ஸ்ரீகாந்த்.
“என்ன!!!” மதுசூதனன்.
“நீ கவலைப்படாதே பா. அந்த பொண்ணு கண்டிப்பா அந்த வீணாப்போன வீணா இல்லை.” அர்ஜுன்.
உடனே மதுசூதனன் கை ஓங்க, மூவருமே செல்லச் கண்டையில் குத்தினர்…. இது எதுவுமே கவனத்தில் பதியவில்லை தன்யனுக்கு. அவன் மனதில் ஓடியதெல்லாம், மலர்மதி ஏன் மன்னிக்கவில்லை? என்பது மட்டும்தான்.
அத்தியாயம் – 12
வாசல் நிறைந்த ரங்கோலியை வேறு வேறு கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர் ஃபோட்டோ கிராப்பர். தன் மனதாலேயே படம்பிடித்துவிட்டான் தன்யன். அதனை போட்டது மலர்மதியாயிற்றே. விழாவுக்கு வருவோர் அனைவரும் இந்த கோலத்தைப் பற்றிப் பேசுவது சர்வ நிச்சயம். கோலம் போட்ட கைகளுக்கு முத்தமிட துடித்த உதடுகளை அடக்கப் பெரும்பாடுபட்டான் தன்யன். தன் இருபத்தி ஒன்பது வயதிற்கு எத்தனைப் பெண்களை பார்த்திருப்பான். அதுவும், வீணாவைப் போல, எத்தனை மேனா மினுக்கிகள்… வேண்டுமென்றே இழைகின்ற ரகம்… ஆனால்… மலர்மதியின் பாராமுகம் அவனை என்னவோ செய்தது உண்மைதான். என்னவோ என்ன, ஒரு வாலிபனுக்கு இளம் பெண்ணைப் பார்த்தால் என்ன தோன்றுமோ அதுதான்.
வாஞ்சிநாதனின் பிறந்த நாள் விழா மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ஏழு கிலோ கேக் வெட்டப்பட்டது. பஃபே முறையில் எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. உணவு முடிந்து எல்லோரும், நடன நிகழ்ச்சி ஆரம்பமாக காத்திருந்த தருவாயில் வாஞ்சிநாதன் மைக்கைப் பிடித்துப் பேசலானார்.
“என் அன்பு நண்பர்களே, இன்று இங்கே வருகை புரிந்த, இந்த நாளை சிறப்பு செய்ததற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு முக்கிய செய்தியை அறிவிக்கப் போகிறேன். இத்தனை நாள், எனக்காக இவளும், இவளுக்காக நானும் என்று வாழ்நாளைப் பகிர்ந்து கொண்டோம். வாழ்க்கை இனிமையாகத்தான் இருந்தது. இருப்பினும், ஒரு சிறு குறை… நெருடல்… வருத்தம், இப்படி பெயர் வைக்க முடியாத ஏதோ ஒன்று எங்களைக் குடைந்து கொண்டே இருக்கிறது. அதனால் இந்த வயதில், இருவரும் ஒரு மனதாக, ஒரு முடிவெடுத்திருக்கிறோம். எங்களுக்காக ஒருவர் வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறோம். எங்களுக்கு மகளாக…”
ஒரு நிமிடம் நிறுத்தினார் வாஞ்சிநாதன். எல்லோரது முகங்களும் கேள்வியோடும், ஆச்சர்யத்தோடும் அவரை நோக்கின.
“ஆம், எங்களுக்கு மகளாக மலர்மதியை சுவீகரிக்க விரும்புகிறோம். மலர்மதியின் விருப்பத்துடன்… மலர்மதி, இங்கே வாம்மா.” என்ற வாஞ்சிநாதன் அன்புடன் அழைத்தார்.
அவரது அறிவிப்பினை கேட்டதுமே, கண்கள் கலங்க, உடல் நடுங்க, நிற்க முடியாமல் நின்றிருந்தாள் மலர்மதி.
வாஞ்சிநாதனின் அழைப்பை ஏற்று நடக்க முயன்றவளால் முடியவில்லை. அவளது உணர்வுகளை புரிந்து கொண்ட கோமதியம்மாள் மேடையிலிருந்து இறங்கி வந்து, அவளது தோள் பற்றி மெல்ல முன்னேறி நடக்க வைத்தார். அவரது பற்றுதலில்தான் அவள் நடந்து மேடைக்கு வந்ததே… எல்லோரும் கைதட்ட வாஞ்சிநாதன் – கோமதி இருவருக்கும் நடுவில் நின்ற மலர்மதி, மானசீகமாக தன் உண்மையான தாய், தந்தைக்கு நன்றியுரைத்தாள். இப்படிப்பட்ட அற்புதமான மறு வாழ்வை அவளுக்காக ஏற்படுத்திக் கொடுத்ததற்கு, எல்லோரும் தங்கள மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
“அட்றா சக்க, இதுவல்லவா டுவிஸ்ட்.” என்று ஸ்ரீகாந்த்தின் தோள்களை இடித்தான் அர்ஜுன்.
“தன்யா அண்ணாவின் மாமன் மகள் மலர்மதி, அடடா, கேட்கவே, ஆனந்தமாக இருக்கிறதே. அண்ணாவின் முக உணர்வுகளை பார்க்கலாம் என்றால், இங்கே ஆடுவதற்கு ஏதுவாய் மெல்லிய விளக்கொளி அல்லவா இருக்கிறது.” என்று சந்தோஷமாய் ஆரம்பித்து வருத்தமாய் முடித்தான் ஸ்ரீகாந்த்.
“பார்க்க முடியாவிட்டால் என்ன, கற்பனை செய்து கொள்வோம். தனா அண்ணாவின் விழிகள் மலர் அண்ணியின் வதனத்தை விழுங்கும் ஆவலோடு விரிவதாகவும், உதடுகளில் ஓர் இளம் புன்னகை அதனிடையே லேசாகத் தெரிந்த வெண் பற்கள், கைக்கு எட்டிய இந்தப் பழம், வாய்க்கு எப்போது கிடைக்கும் என்கின்ற ஏக்கம், சுற்றுப்புறம் மறந்து, அண்ணி மட்டுமே உலகம் என்கின்ற மோன நிலை.”
அதைப் புரிந்து கொண்ட அண்ணியின் முகம் ரத்தமென சிவந்து வெட்கப் புண்ணகை வீச…”
“கட் கட்…” – அர்ஜுனின கற்பனைக் குதிரையை கட் அடித்து நிற்க வைத்தான் ஸ்ரீகாந்த்.
“என்னடா உன் பிரச்சனை.” எரிச்சலைக் காட்டினான் அர்ஜுன்.
“அடித்தளமே ஆட்டம் காண்பது போல் கதை போகலாமா” ஸ்ரீகாந்த்.
“என்ன?” அர்ஜுன்.
“முன் பாதி சரிதான். அண்ணனுக்கு நீ சொன்ன மாதிரி உணர்வுகளெல்லாம் தோன்றாவிட்டாலும் சிலது நிச்சயம் தோன்றியிருக்கும். ஆனால் பின் பாதி… என்னவென்று நான் சொல்கிறேன்.” என்றான் ஸ்ரீகாந்த்.
சொல்லு பார்ப்போம் என்பது போல அமைதி காத்தான் அர்ஜுன். ஸ்ரீகாந்த் தொடர்ந்தான்.
“அப்படி மையலோடு பார்க்கும் அண்ணாவை, கொன்று விடுவேனாக்கும். என்கின்ற முகபாவனையோடு தான் அண்ணி எதிர்கொள்வார்கள்.” என்று முடித்தவன், அப்படி ஒரு பார்வை பரிமாற்றத்தை கற்பனையில் கண்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டான் ஸ்ரீகாந்த். அவனுடன் அர்ஜுனும் இணைந்து கொணடான், சிரித்து முடித்ததும்,
“சரி, மது, அண்ணா எங்கே?” அர்ஜுன்.
“அவரது பெயருக்கு பொருத்தமான வேலையில் இருப்பார்.’’ ஸ்ரீகாந்த் கூறவும், மீண்டும் சிரிப்பலை எழுந்தது. அவர்களின் யூகம் சரியே என்பது போல் தன்யனின் ஆனந்த புன்னகை வீசிய பார்வை மலர்மதியின் மேல் படத்தான் செய்தது. ஆனால் அந்தப் பார்வைக்கு எந்த எதிர் வினையும் இல்லாமல் போயிற்று. ஒருவேளை மலர்மதியின் கலங்கிய கண்கள் அவனது பார்வையை மறைத்திருக்குமோ என்று யூகித்துக் கொண்டான் தன்யன்.
***********
விழா முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டிருந்தனர். விழாவுக்கு வந்தவர்களுக்காக பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்துக் கொண்டு, முன் வாயிலை அடைந்தவளுக்கு சத்தமான இரு குரல்கள் தெளிவற்றுக் கேட்டது. அது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தவளுக்கு முன் வாயிலுக்கு ஒட்டினாற் போல் அமைந்த தோட்டத்திலிருந்து என்பது புரிந்தது… அங்கே அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய தடுப்புகளற்ற ஜன்னலிலிருந்து தான் அந்தச் சத்தம் வந்தது. யாராக இருக்கும் என்று சிந்தித்தவள்… வாயிலில் நின்றிருந்த ஸ்ரீகாந்த் அர்ஜுனிடம் பரிசுப் பைகளை ஒப்படைத்து விட்டு ஜன்னலின் அருகில் நெருங்கினாள்.
அருகில் செல்லச் செல்ல அந்தப் பெண்ணின் கிசுகிசுப்பான குரல் அவளுக்கு பரிச்சயமாகப்பட்டது. அவளது பேச்சு எதிர் இருப்பது யாராக இருக்கும் யூகிக்க வைத்தது.
“என்ன மது இது… நீங்கள், நான் ஆசையாய் உங்களை நெருங்கி வந்தால், இப்படி விலகிப் போவதா?” குழைவாய் பேசியது வீணாவேதான். “இது என் குடும்ப விழா வீணா. இங்கே நாம் இப்படி உராய்வதை, என் அம்மா, அப்பா பார்த்துவிட்டால் எல்லாம் முடிந்தது” கண்டிப்பான குரல் மதுசூதனனுடையது.
“பார்த்தால் பார்க்கட்டுமே டார்லிங். நம் விஷயம் அவர்களுக்கு இப்படியேனும், தெரிந்துவிட்டு போகட்டுமே. நமக்கு சாதகமான ஏதேனும் நடந்தால் நல்லதுதானே!”
“உஷ். வாயை மூடு, எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனது திருமணம் முடியாமல் நம் விஷயம் தெரிவது சரியில்லை.”
“தனா சொந்த அண்ணன் இல்லையே, பின் எதற்கு இந்த கெடுபிடி.”
“கோபத்தைக் கிளறாதே. அவர் என் அண்ணன்தான். நீ எங்கள் உறவின் மேன்மைப் பற்றி உனக்கு என்ன தெரியும்.” அவன் குரலில் எரிச்சல் அதிகமாக.
“அச்சச்சோ… என்ன மது, இப்படி கோபம் வரலாமா…? என் அவசரத்தின் காரணம் உங்கள் மீது எனக்கிருக்கும் அளவிலா காதல் என்று தெரியவில்லையா உங்களுக்கு.” அவனது முகத்தில் தன் ஆள்காட்டி விரலால் கோலமிட்டாள்.
“சரி, சரி இப்போது நீ உன் விடுதிக்குப் கிளம்பு. நாளை மாலை எப்போதும் சந்திக்கும் இடத்தில் சந்திக்கலாம்.” என்று முடித்தான் மதுசூதனன். வேறு பேச வழியில்லாமல் வீணாவும் வாயிற்புறமாக வெளியேறத் தொடங்கினாள்.
கதை இப்படிப் போகிறதோ! என்று உள்ளூர சிறுசிரிப்புடன் ஜன்னலை விட்டு அகலுகையில், அங்கே ஒரு நிழல் வரி வடிவம் தெரிந்தது. வெளிப்புறத்தில் ஆங்காங்கே எறிந்த விளக்கின் ஒளியால் அந்த கண்களில் தெரிந்த குரோதத்தை மலர்மதியில் காண முடிந்தது. அந்த பார்வை வீணாவை துரத்தியதுதான் ஏன் என்று புரியவில்லை. அது யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் வாயிற்புறமாக தோட்டத்தினுள் நுழைய எத்தனித்தவளை தன்யன் எதிர் கொண்டான்.
“என்ன மலர்மதி, வந்தவர்களுக்கு இந்த வீட்டுப் பெண்ணான நீ பரிசுப் பொருள் கொடுத்தால் தானே பாந்தமாக இருக்கும். அதனை விடுத்து, எங்கே இத்தனை அவசரமாக செல்கிறாய்.” அவன் குரலுக்கு நின்று விட்டாலும், மலர்மதியின் மனதிற்குள், ஒருவேளை இவன் தான் அங்கே நின்றிருப்பானோ! என்று சந்தேகம் எழ, உடனே அவனது கண்களை ஊடுறுவினாள்.
அந்தக் குரோதம் இந்தக் கண்களில் இல்லை. மாறாக ஒரு குளுமை, ஒரு இனிமை, ஒரு…கா… யோசனையை சட்டென கத்தரித்து, அவன் கூறிய வேளையில் ஈடுபடலானாள்.
ச்சே… இவர் அந்த கண்களுக்குரியவராய் இருக்க மாட்டார்தான். அப்படியானால் அது யாராக இருக்கும்? மதுசூதனன் வீணா காதலைப் பிடிக்காதவர்கள் யாரோ இந்தக் குடும்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். பாவம் வீணா… தன் அழகால் நிச்சயம் ஒரு பணக்காரனை கவிழ்த்து, ஏகபோக வாழ்வு வாழலாம் என்று கனவு காண்கிறாள். அது அத்தனை எளிதல்ல என்பது அந்தக் கண்களிலிருந்தே சர்வ நிச்சயமாய் தெரிகிறது… என்று நினைத்தவள். பரிசளிக்கும் உபசாரத்தில் மூழ்கினாள்.
Comments are closed here.