மலர்மதி 13 – 14
3541
0
அத்தியாயம் – 13
வீட்டிலுள்ளவர்கள் மட்டும் ஹாலில் இளைப்பாரும் விதமாக, இருக்கைகளில் சாய்ந்திருக்க, எல்லோருக்கும் வெதுவெதுப்பான நீரை கண்ணாடிக் கோப்பைகளில் வழங்கிக் கொண்டிருந்தாள் மலர்மதி.
ஒரு கோப்பையைத் தனக்காக எடுத்துக் கொண்ட அர்ஜுன். “என்ன இருந்தாலும் நீங்கள் செய்தது முழுமையான துரோகம் அங்கிள்!” என்றான் சற்றும் தொடர்பில்லாமல்.
அவன் கண்களில் குறும்பைக் கண்டு கொண்ட வாஞ்சிநாதன், “அடடா… அப்படி என்னப்பா பெரிய துரோகம் செய்து விட்டேன்.”
அர்ஜுன் ஸ்ரீகாந்தை பார்த்து கண் சிமிட்ட, அவன் தொடர்ந்தான்.
“நாங்கள் அண்ணன் தம்பிகள் நாலு பேராக இருக்கும் பொழுது, ஒரே ஒரு பெண்ணை தத்தெடுத்தால் மற்ற மூவரின் கதி என்ன?” பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும், முதலில் அங்கே ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.
மலர்மதியின் கன்னங்கள் லேசாக கன்றிச் சிவந்தன. கேலி என்று தெரிந்தும் அவனுக்குப் பதிலளித்தார் வாஞ்சிநாதன்.
“உங்களில் எவரும் என் பெண்ணை மணக்க நான் அனுமதியளிக்க மாட்டேன்.” கிட்டத்தட்ட அறிவிப்பு போல் ஏற்றி இறக்கி சத்தமாக உரைத்தார்.
“ஏன்… ஏன்… எங்களுக்கு என்ன குறை?” வீராப்போடு எழுந்து நின்று நியாயம் கேட்டான் அர்ஜுன்.
“உங்கள் இருவர் பற்றி தெரியாதா, விளையாட்டுப் பிள்ளைகள். இன்னமும் பக்குவம் வரவில்லை. மதுவைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு புரிய வேண்டும் என்பது இல்லை.” என்றவர் நிறுத்த,
“அப்படியானால் எங்கள் தனா அண்ணா…” கோரஸ் பாடினர் அர்ஜுனும் ஸ்ரீகாந்தும். தன்யனின் பார்வையும் ஆர்வமாக வாஞ்சிநாதனிடம் சென்றது.
“சர்வ நிச்சயமாய் அவனுக்கு என் பெண்ணை ஒருக்காலும் மணமுடிக்க சம்மதிக்க மாட்டேன்.”
“ஏன்….!!!….ஏன்….!!!….ஏன்!!” அர்ஜுனும் ஸ்ரீகாந்தும்.
“காரணம் தானே… தனா நீ உன் அம்மா அப்பாவை பார்த்து, அவர்களோடு பேசி, எத்தனை நாட்களாகிறது?” தன்யனின் முகம் பார்த்துக் கேட்டார்.
சற்றே படபடப்புற்றவன், “வ….வ….வந்து ஒரு….” அவனுக்கு சிந்திக்கும் திறன் அறவே அற்றுப் போனது.
“நான் சொல்கிறேன்… இரண்டு மாதமாகிறது. இந்த விழாவிற்கு அழைக்க, உன் அம்மாவை தொடர்பு கொண்ட பொழுது, அவர்கள் கூறியது தான். மிகவும் வருத்தப்பட்டார்கள்.
கோவை ஒன்றும் செல்ல முடியாத தூரமில்லையே. போகக்கூட வேண்டாம். தொலைபோசியிலாவது தொடர்பு கொள்ளலாமே.
இப்படி உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத உன்னை, எப்படி என் மகளுக்காக தேர்ந்தெடுப்பேன். அப்படியே தேர்ந்தெடுத்தாலும், என் மகளையும் இப்படி அம்போ என்று விட்டுவிட்டால்?”
“நான்…”
“நீ கூறும் தொழில், அதிக வேலை, மனச்சோர்வு இது எல்லா ஆண்களுக்கும் உண்டுதான். ஆனால் குடும்ப உறவுகள் இது எல்லாவற்றையும் விட மிக முக்கியம் தனா. இனிமேலாவதுமாற்றிக்கொள்.” என்ற ஆலோசனையோடு நிறுத்தினார்.
பதில் கூற முடியாத ஆற்றாமையோடு இங்கும் அங்கும் இலக்கில்லாமல் பார்த்த தன்யனை பார்க்க மலர்மதிக்கே பாவமாக இருந்தது. என்னதான் அவள் இவர்களுக்கு மகளாக இன்று மாறினாலும், நேற்று வரை இவள் யாரோ தானே. அப்படிப்பட்ட அன்னியப் பெண்ணை வைத்துக் கொண்டு, குடும்பப் பிள்ளையை இப்படிப் பேசியது அவளாலும் தாங்க முடியவில்லை.
அர்ஜுனும், ஸ்ரீகாந்தும் பாவமென தன்யனைப் பார்க்க, இது எதிலுமே தலையிடாமல் தன் செல்பேசியிலேயே மூழ்கிக் கிடந்தான் மதுசூதனன்.
இந்த இறுக்கம் தளர, “ஆங்… அம்மா… இன்றைக்கு நம் விருந்தில் இடம் பெற்றிருந்த காண்டினன்டைல் ஐட்டத்தைப் பாற்றி, நிறைய பேர் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். எனக்குத் தெரிந்து, நீங்கள் அதனை ருசி பார்க்கவே இல்லையே. மீதமானவை ஃப்ரிஜ்ஜில்தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். கொண்டு வரட்டுமா?” என்று பேச்சை மாற்றினாள். உடனே புரிந்து கொண்ட கோமதியம்மாள், “ஆ…. ஆமாம் மதிம்மா, என்னிடம் கூட நிறைய பேர் பாராட்டுதலாக கூறினார்கள்தான். எல்லோருக்குமே எடுத்து வா… லேசாக உண்டு விட்டுப் பார்க்கலாம். கை, கால் எல்லாம் வலிக்கிறது.” எனவும் சூழ்நிலை மாறியது.
தன்யனின் நன்றிப் பார்வையை கண்டும் காணாமலும் சமையலறை நோக்கி நடக்கலானாள் மலர்மதி. அர்ஜுன், ஸ்ரீகாந்தின் கண்கள் ஏதோ செய்தியோடு கலந்து மீண்டன.
அத்தியாயம் – 14
மறுநாள் மாலை தன்யன் கோவையில் தன் தாய் தந்தையரோடு இருந்தான். சற்று நேரம் அவர்களோடு உற்சாகமாய் உரையாடிவிட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றான்.
இது என்ன மாயம் என்று பானுமதிக்கு ஒரே ஆச்சர்யக் களிப்பு. உடல் சோர்ந்திருந்த சோமசுந்தரின் முகமும் ஏதோ பல்பு போட்டது போல் பிரகாசமாக இருந்தது. உடனே சென்னைக்கு தொலைபேசியில் செய்தி பரவியது.
“இது என்ன அண்ணா மாயம். நீங்கள் ஏதேனும் கண்டித்தீர்களா.” என்ற பானுமதியின் கேள்விக்கு உரக்கச் சிரித்தார் வாஞ்சிநாதன்.
“உன் மகனை மாற்றியது நானல்ல, தனாவிற்கு திருமண ஆசை வந்து விட்டது.”
“அப்படி என்றால் அவன்…?”
“இன்னமும் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.”
“அண்ணா… அவன் பாட்டில் நம் மதுவைப் போல்…” பானுவின் குரலில் திகில் இருந்தது.
‘‘ச்சே… ச்சே… நம் தனா தேர்ந்தெடுப்பது சோடை போகுமா…? அந்தக் கவலையே உனக்கு வேண்டாம். சீக்கிரமா திருமணச் சாப்பாடு போட உன் உடம்பைத் தேற்றிக் கொள், மாப்பிள்ளையையும் தான். பிறகு வருகிறவர்களை, கவனிக்க முடியவில்லை என்று குறைபடக் கூடாது.” என்றவர், ஒரு வெற்றிப் புன்னகையோடு தொலைபேசியை கீழே வைத்தார்.
சோமசுந்தரத்திற்கு ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்திருந்தது. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி, அதிக நெரிச்சலில்லாத, நல்ல தட்ப வெப்ப நிலை உள்ள கோவையில் தனக்கிருந்த ஒரு ஹெஸ்ட் ஹவுசில் குடிபெயர்ந்தார். கணவனை பார்த்துக் கொள்ள, பானுமதியும் அங்கே புலம் பெயர நேர்ந்தார் அவர்களது செல்ல மகள் கனிக்கு் திருமணம் முடிந்து அவள் யூ.எஸ்.ஏ.வில் குடி புகுந்தாள். தனா பெரும்பாலும் சென்னையில்தான் இருப்பது. முடிந்தவரை அலுவலகத்தில், தூக்கத்திற்கு மட்டும் வீட்டில் என்று. எப்போதேனும் அர்ஜுன், ஸ்ரீகாந்த் வீட்டிற்கும் அவர்களது பெற்றோர் நச்சரிப்புத் தாங்காமல் செல்வதுண்டு. மற்றபடி அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தொழில்… தொழில்… தொழில்தான். இப்பொழுது கொஞ்ச நாளாகத்தான் ஏதோ ஒன்று அவனுள் கரைந்து கொண்டிருந்தது.
சோமுவால் அதிக பிரயாணம் செய்ய முடியாது என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் அவர்கள் இந்தப் பிறந்த நாள் விழாவுக்கு வர முடியாதது குறித்து அங்கு சர்ச்சைகள் ஏதும் எழவில்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை டூர் போகிறோம் என்று பெயர் பண்ணி மூன்று குடும்பங்களும் கோவையில் கூடுவது வழக்கம். தனாவும் அவர்களும் வருவதுதான் வழக்கம். இப்போது தங்கள் மகன் அவர்களைப் பார்க்கவென்று தனித்து வந்திருந்தது ஏதோ அவர்களுள் இருந்த தனிமைத் துயரை டெட்டால் போட்டு துடைத்தெரிந்தது. மகனுக்குப் பிடித்தமானதாக செய்து, அவனை உண்ண வைத்து, பிரியா விடை கொடுத்து அனுப்பினார்கள்.
************
இந்த இடைவேளையில், மலர்மதியும் தன் விடுதிக்குச் சென்று தன் பொருட்களை எடுத்துக் கொண்டு, கணக்குகளை முடித்துக் கொண்டு, வீணாவிடம் விடைபெற்று, வாஞ்சிநாதன் வீட்டு மகளாக, தன்னை முழுதாக மாற்றிக் கொண்டாள்.
வீணாவிற்கோ மனதில் தீ கனன்று எரிந்தது. எங்கிருந்து வந்தாளோ இந்த மலர்மதி, பெயரைப் பார் மலர்மதி என்று, அவளைப் பார்த்தாலே முள்ளைப் பார்ப்பது போல்தான் தோன்றுகிறது. இதில் மலர் எங்கிருந்து வந்தது. மதி…அது அறவே இல்லை.தன்யன் அவளை காதலோடு பார்ப்பதைக் கூட பார்க்காத மதியீனம். ஆனால் அது எனக்குத் தப்பவில்லை.
இந்தஅனாதைக்கு தனா கேட்கிறதா, என்னால் ஒருக்காலும் ஒப்ப முடியாது. நான் வாழப் போகிற குடும்பத்தில், எனக்கு மூத்தவளாக இந்த அனாதையா, நிச்சயம் இது நடக்கக் கூடாது.
நடக்க விட மாட்டேன். ஆனால் இந்தக் கிழம் வாஞ்சிநாதனுக்கு என்னவாயிற்று. காலம் போகிற காலத்தில் தேவையா இந்த தத்தெடுப்பு. இதனால் தனாவிற்கு மாமன் மகளாக வேறு ஆகிறாளே! என்று உள்ளே எழுந்த கொதிப்பு மெல்ல மெல்ல எரிமலையாய் உருவாகிக் கொண்டிருந்தது. அது வெடித்துச் சிதறும் வாய்ப்பு மிக விரைவாகவே கிடைத்தது.
Comments are closed here.