மலர்மதி 7 – 8
3662
0
அத்தியாயம் – 7
தன்யன் மலர்விழியை இத்துடன் பதினான்காவது முறையாகப் பார்த்துவிட்டான். பார்க்கும் பொழுதெல்லாம், மனதின் தீ கனன்று எழுந்தது…. ம்ச்…. அழகான பெண்கள், ஆனால் அது பாம்பின் அழகல்லவா? சீறும் பாம்பை நம்பலாம், சிரிக்கும் பெண்ணை நம்பக் கூடாதென்று, எத்தனை ஆட்டோக்களில் பொறித்து வைத்து இருக்கிறார்கள். அதனை ஒரு நாளும் இந்த மது பார்த்திருக்க வாய்ப்பில்லையா என்ன! இவனோடு இதே ரோதனையாய் என்றவனது சிந்தனை முடியுமுன். அவனது விழிகள் அகன்று விரிந்தன.
மலர்மதி யாருடனே பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். பெண்களின் சிரிப்புக்கு இப்படியொரு மயக்கச் சக்தியா? கண்களை விரித்து மயக்கம் தெளிவிக்கும் அளவுக்கு, சக்தி வாய்ந்தது தான் போலும்! அவனே கேள்வியும் கேட்டு, அவனே பதிலும் கற்பித்துக் கொண்டான்.
பெண்களென்றால் என்னவென்று இன்றே மதுவிற்கு புரிய வைக்க வேண்டும். இனிமேலும் இதுபோன்று அசட்டுத்தனங்களில் அவன் ஈடுபடாமல் காத்துவிட வேண்டும் என்கின்ற தீர்மானம் அவனது மனதில் எழுந்த பின்புதான் தன்யனால் மலர்மதியின் முகத்திலிருந்த கண்களை விலக்க முடிந்தது.
விருந்து முடிவடையவும் எல்லோரும் மைதானத்தின் நடுவே கூடினார்கள். மைக்கில் பல அறிவிப்புகள், அதில் இறுதியாய்,
“நம் விழா முடிவடையும் தருவாய்க்கு வந்து விட்டது. இனி நடனம் தான். எல்லோரும் ஆடலாம். சின்னதா ஒரு டான்ஸ்.” என்று முடித்தனர். அதனைத் தொடர்ந்து மெல்லிய அயல்நாட்டு இசை காற்றை நிறைத்தது. பெரியவர்கள் இருக்கைகளில் அமர்ந்து விட வாஞ்சிநாதன் – கோமதி தம்பதியரை ஒட்டியே மலர்மதி அமர்ந்துவிட்டாள். எல்லோரும் இசைக்கேற்ப அழகாய் ஆடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள்.
சட்டென அவள் முன் ஒரு கரம் நீள தன்னிச்சையாய் பின்னடைந்தாள். மிரட்சியாய் அவள் நிமிர்ந்து பார்க்கையில், எதிரில் அவன் தான். அவளை அழகி என்று வர்ணித்த அவனேதான்.
“என்னோடு ஆட வருகிறாயா பியூட்டிஃபுல்.’’ என்று மென்மையாக சிரித்தான்.
முன்பின் ஆடி பழகியிராததால், இல்லை என்பது போல் அவள் தலையசைக்க, வாஞ்சிநாதன் அவளை ஊக்குவித்தார்.
“அட, சும்மா ஆடம்மா…! இதெல்லாம் சிறு விளையாட்டு போல் தானே… இணைந்து ஆடுவதில் என்ன தவறு. அழகான பொழுது போக்கு அவ்வளவே.’’ என்றதும், அவரிடம் மறுக்க முடியாமல் நீட்டிய அந்த மனிதனின் கரத்தில் தன் கரத்தை வைத்து எழுந்தாள். இருப்பினும் மனதின் ஓரத்தில் ஒரே உதறலாக இருந்தது. மனதில் கடவுளை வேண்டிக் கொண்டாள், இந்த ஆட்டம் விரைவாக முடிய வேண்டுமென்று.
அவளது பிரார்த்தனை கடவுளை எட்டிவிட்டது போலும். அவளது விரல் நுனியைப் பற்றி கூட்டத்தின் மத்தியில் அழைத்துச் சென்று நின்ற மதுசூதனன் அவளது இடைநோக்கிக் கரங்களை உயர்த்தும் பொழுதே கண்களை இருக மூடிக் கொண்டாள் மலர்மதி. ஆனால் உயர்த்திய அவளது கை அவளது இடையைத் தொட்டது போல் எந்த அறிகுறியும் இல்லாமல் போகவே மெதுவாக இமை திறந்தாள். உயர்ந்த அவனது கரத்தை வேறு ஒரு கரம் இறுக பற்றியிருப்பது தெரிந்ததும், சட்டென விலகி விட்டாள். மனதில் கடவுளுக்கு நூறு கோடி நன்றிகள் பாராயணம் செய்யத் தொடங்கிவிட்டது.
அவளைக் காப்பாற்றிய அந்தக் கரத்தின் உரிமையாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள விழி உயர்த்தியவள் இரண்டடிப் பின்னடைந்தாள். காரணம் மதுசூதனனின் கரத்தைப் பற்றியிருந்தவள் சாட்சாத் அந்த வீணாவேதான். அவளது மற்றொரு கரத்தில் நிஜமான மதுக்கிண்ணம். அவளது பார்வை மலர்மதியை சுட்டெரித்தது. எல்லாம் அரை வினாடிதான். உடனே கண்களைச் சொருகி, “மது… இங்கே தான் இருக்கிறீர்களா? உங்களுக்காக, ஸ்பெஷலாக உங்களுக்கு பிடித்த விதமாக கலந்து கொண்டு வருவதற்குள், இங்கே வந்து விட்டீர்களே… வாருங்கள் அப்படி உட்கார்ந்து என் கலவையைப் பாராட்டிக் குடியுங்கள்.” என்று பேசிக் கொண்டே அவனை வெளிவட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகள் ஒன்றில் அமர வைத்துவிட்டு, கையில் மதுக்கிண்ணத்தை திணித்துவிட்டு, வேகமாக மலர்மதியை நோக்கி விரைந்தாள்.
மலர்மதி தப்பித்தோம், பிழைத்தோம் என்கின்ற ரீதியில் கோமதியம்மாவை தேடிக் கொண்டிருந்தாள். சட்டென அவளது தோளைப் பற்றி யாரோ ஆவேசமாக இழுக்க, சற்று நிலை குலைந்து விட்டவள், உடனே தன்னை சமனப்படுத்திக் கொண்டாள்.
வேறு யாராக இருக்க முடியும் வீணாதான், வீணாவேதான். “உனக்கு அறிவில்லை… அவருடன் நீ எப்படி ஆடலாம்.” ஆவேசம் நிறைந்த வார்த்தைகள்.
“அவர்தான்…’’
“அவர் கூப்பிட்டால் அவரது படுக்கைக்கே போய் விடுவாயா?” கண்கள் கோபத்தில் சிவந்து விட்டது.
“ஜாக்கிரதை அக்கா… நாவடைக்கிப் பேசினால் எல்லோருக்கும் நலம்.’’
“நீ முதலில் ஜாக்கிரதையாக நடந்து கொள். இனி மதுவுடன் உன்னைப் பார்த்தால், நீ தொலைந்தாய்.”
“அவருடன் இழைய இங்கே ஒன்றும் ஏங்கிவிடவில்லை.”
“இதை நம்ப நான் என்ன முட்டாளா?”
“நம்பாமைக்கு நான் என்ன செய்ய முடியும், உங்கள் விருப்பம்.’’
“நீ இப்படி தனியே நின்றால், மது திரும்பவும் வந்து கூப்பிடத்தான் செய்வார். அதுவும் அவர் பணக்கார இளைஞன். அடுத்த அடி என்னவாக இருக்குமென்று நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கேயே வேறு யாருடனேனும் ஆடுவது போல, பாவ்லா காண்பித்துவிட்டு, அப்படியே ஹோட்டலுக்கு ஓடிவிடு. இல்லையேல் நான் சொல்வதற்கு எதுவுமில்லை.” என்று அவள் அறிவுரை கூற. பணக்கார இளைஞனின் அடுத்த அடி பற்றித் தெரிந்த இவள் ஏன் அவனோடு இழைகிறாளாம். என்ற கேள்வி கொழுந்து விட்டு எரிந்தாலும், இவள் வீணாவாயிற்றே. எதற்கும் துணிந்தவளாகக் கூட இருக்கலாம். ஆனால் நமக்கு எதற்கு இந்த சிக்கலெல்லாம் என்கின்ற தீர்மானத்திற்கு வந்தவள் நிமிர்கையில், மது அவளை நோக்கி விரைந்து வருவது தெரிந்தது. அவ்வளவுதான், மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல அருகிலிருப்பது யார், எவர் என்பதைக் கூட நிமிர்ந்து பாராமல், “என்னோடு ஆட முடியுமா ப்ளீஸ்.” என்று இருகரம் உயர்த்தினாள்.
அவளது கைகளை வலிய இரு கரங்கள் அழுந்தப் பற்றின. அவன் அழுத்திய வேகத்தில் அவளது கைகளில் ரத்தம் கட்டத் தொடங்கியது. மலர்மதியை அவ்வப்பொழுது மேற்பார்வை இட்டபடியேதான் தன்யன் ஆங்காங்கே தொழில் பேச்சு நடத்திக் கொண்டிருந்தான். அதற்குள் அவனது கவனம் மது கிண்ணத்துடன் நின்று கொண்டிருந்த மதுசூதனின் மேல் படிந்தது.
இவன் எப்படி இங்கே என்கின்ற அவனது சிந்தனைக்குப் பதிலாய் அவனோடு ஒட்டிக் கொண்டு நின்ற வீணா விளங்கினாள்.
இப்போதும் நடந்தவற்றை யூகிக்க முடியவில்லை என்றால் அவன் என்ன முதலாளி.
எப்போதும் மதுசூதனையே ஒட்டிக் கொண்டிருக்கும் அவனது பீ.ஏ. வீணா. அவனை காணாததை பொறுக்க முடியாமல், அவனது ஹோட்டல் அறைக்கு அவனை தேடிச் சென்றிருப்பாள். பின் அவளிடம் இருந்த சாவி கொண்டு அறையைத் திறந்து மசூதனனை இங்கே அழைத்து வந்திருப்பாள். இந்த ஆள் மயக்கிகள் எல்லாம் எப்படித்தான் மதுசூதனனையே நடுநிலைப் படுத்துகிறார்களோ தெரியவில்லை.
பற்களைக் கடித்து கோபத்தை விழுங்கி நிமிர்ந்தவன் கண்ட காட்சி, அவனை ஆத்திரப்படுத்தியது.
மலர்மதியின் விரல் பற்றி, கூட்டதத்தின் உள்ளே இழுத்துச் சென்று கொண்டிருந்தான் மதுசூதன்.
‘ச்சே… ஒரு ஆண்மகனுக்கு இரண்டு பெண்கள், வெட்கமே இல்லாமல் போட்டி போடுகிறார்களே.’ என்று பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு.
பழைய சிக்கலையே எப்படி தீர்ப்பது என்று புரியாமல் தன்யன் சிந்தித்துக் கொண்டிருக்க, இப்போத மலர்மதி ரூபத்தில் இன்னுமொரு சிக்கல். பழையதை மெல்லத் தீர்க்கலாம், புதியதை வளர விடுவத மடத்தனம் என்று தோன்றவும், உடனே தன் தொழில் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு, கூட்டத்தினுள் விரைவாக நடந்தான்.
எல்லையில்லா ஆத்திரத்தோடுதான் அவன் மலர்மதியை அனுகியதே. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசிவிடும் ஆவலில் அவளை அடைந்தான். அதற்காக கடுமையான வார்த்தைகளைக்கூட தேடிப்பிடித்து கோர்வையாக சிந்தித்துக் கொண்டான். ஆனால் அவன் எதுவும் பேசுமுன் அவளே,
“என்னோடு ஆட முடியுமா ப்ளீஸ்.” எனவும், அவனுக்கு மேலும் ரத்தம் சூடேறி, அதனை அவள் உள்ளங்கையிலேயே இறக்கியும் வைத்தான்.
“ஸ்…ஆ…” – வலி தாங்காமல் நிமிர்ந்தவள், அவனது கண்களில் தெரிந்த கோபத்தில் துணுக்குற்றாள். யார் இவன், எதற்காக இத்தனைக் கோபம். இதற்கு முன் இவனை பார்த்ததில்லையே என்று சிந்தனைகள் வரிசையாக மனதில் எழ, எதற்கும் பதிலதான் புலப்படவில்லை. இருப்பினும் தன் முந்தைய பிரச்சனை நினைவு வர, வேகமாக விழிகளால் ஆராய்ந்தாள். தூரத்தில் மதுசூதனன் வீணாவைப் பற்றிக் கொண்டு ஆட முடியாமல் ஆடும் காட்சி கண்களில் பட, சற்றே நிம்மதி தோன்றியது. ஆனால் அதற்குள் கதகதப்பாய் அவளது இடையில்…. இடையில்… புதியவனது கரம்… சட்டென துள்ளிக் குதித்த பின்னடைய முயன்றாள். ஆனால் அவளது எண்ணம் ஈடேறவில்லை. அவனது ஒரு கரம் மலர்மதியின் கையிலும் மறுகரம் இடையிலுமாக அவளை அழுந்தப் பற்றியிருந்தான்.
“மிஸ்டர், முதலல் கையை எடுங்கள்.” என்று அடிக்குரலில் ஆத்திரத்துடன் பேசினாள். கோபத்தில் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது.
“ஆட அழைத்து விட்டு, இப்படி பேசலாமா கண்மணி.’’ தன் கைகளால், தன் கண்களையே குத்திக் கொள்வது என்றால் என்னவென்று இப்போது புரிந்தது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க எண்ணி, “தெரியாமல் அழைத்துவிட்டேன், இப்போது ஆடும் எண்ணம் துளியும் இல்லை; ப்ளீஸ் விட்டுவிடுங்கள்.” என்ற கெஞ்சலுடனே, தன் இடையில் அழுந்தியிருந்த அவனது முரட்டுக் கரத்தை விலக்க முயற்சித்தாள்.
“எனக்கும் ஆடுவதற்கு மூட் இல்லைதான் டியர். வாயேன் அருகிலிருக்கும் ஹோட்டலில்தான் எனது ரூம், அதுவும் சூட் ரூம்… அங்கே சென்று.”
“போதும்… மன்னிக்கவும், நான் அப்படிப்பட்டவள் இல்லை. தெரியாமல் உங்களை ஆட அழைத்த, என் பிழைக்கு, என்னை மன்னித்து விடுங்கள் ஃப்ளீஸ்.’’ மன்றாடும் குரலில் அவனிடம் மன்னிப்பு வேண்டியவளைப் பார்த்ததும், அவனது மனம் இரங்கவில்லை.
“உன் ரேட் எதுவானாலும், எவ்வளவானாலும் நான் தருகிறேன் டியர்… அதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் அதனை விட்டுவிடு… நான் மதுசூதனனை விடவும் பணம் படைத்தவன்.” என்று பேசிக் கொண்டே மலர்மதியின் இதழ் நோக்கி குனிய, அவ்வளவுதான், தன் பலத்தை யெல்லாம் ஒன்று திரட்டி அவனை அழுந்தப் பிடித்து பின்னே தள்ளினாள்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலில் அவன் தடுமாறி பின்னடைய, “ஜாக்கிரதை மிஸ்டர்… பணம் இருந்தால் கொம்பு முளைத்து விட்டதா… இதுபோன்ற பேச்சுக்களுக்கென்றே திரிகிறதுகள். எதையேனும் பிடித்துக் கொள்ளுங்கள், என்னிடம் வேண்டாம்.” என்று சுட்டு விரல் நீட்டி எரிச்சரித்துவிட்டு கூட்டத்தில் கலைந்து விட்டாள் அவள்.
அத்தியாயம் – 8
அலுவலறையில் நுழைந்ததுமே, “யார் இவள் என்று அவனிடம் விசாரித்தாயா?” என்ற கேள்வியோடுதான் அர்ஜுனை எதிர்கொண்டான் தன்யன்.
“ஏதேது… மதுவிற்காக…? அவருக்கு அவர் நேற்று அடித்த பிராண்டின் பெயர் கூட தெரியிவில்லை. பிறகு எப்படி?’’ என்று கிண்டலாகப் பேசிக் கொண்டே போனவனை இடைவெட்டி, “கேட்டதற்கு மட்டும் பதில்.’’ என்றான் கடுமையாய்.
லேசாக அதிர்ந்தாலும் அதனை வெளிக்காட்டாமல், “போதை தெளிந்ததும்… மலர்மதியா…? யார் அவள்… என்று கேட்கிறார் அண்ணா” உண்மையை உள்ளபடி உரைத்துவிட்டான்.
“ஸ்ரீகாந்த் எங்கே?” அடுத்த கேள்விக்குத் தாவனின்.
“இன்னமும் வரவில்லை” – கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு தன் கோப்புகளில் மூழ்கினான். சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்து கோப்புகளைப் புரட்டியவன், அதில் மனம் ஒட்டாமல் மூடி வைத்தான். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும், பின் வாயிலைப் பார்ப்பதும் என்று இருபது நிமிடங்கள் கரைந்திருக்கும். ஸ்ரீகாந்த் கதவினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். இரண்டே எட்டில் அவனை நெருங்கிவிட்ட தன்யன், அவன் தோள் பற்றி, “விபரம் கிடைத்ததா?” என்று கேட்டான்.
“ம்… முதலில் இப்படி உட்காருங்கள் அண்ணா.” என்றவன், தன்யனை சோபாவில் அமர்த்திவிட்டு தானும் அமர்ந்தான்.
“பெயர் மலர்மதி… நம் அக்கெள்ண்ட்ஸ் செக்க்ஷனில், வாஞ்சிநாதன் மாமாவின் கீழ் பணி புரிகின்ற புது வரவு. நம் கம்பெனியில் சேர்ந்து ஆறு மாதம்தான் ஆகிறது. பெற்றோர் இல்லை. பெண்கள் விடுதியில் இருக்கிறாள். மாமாவிற்கு அவள் மீது அதிக மரியாதை. பாசம் எல்லாம். கூட வேலை பார்ப்பவர்களையும் ஒருவாறு இலைமறை, காய் மறையாய் விசாரித்து விட்டேன். யாருமே அந்தப் பெண்ணைப் பற்றி சிறிதும் குறை கூறவோ, முகம் கோணவோ இல்லை.” சற்று இடைவெளி விடுத்தான்.
“அப்படி என்றால்?’’
ஒருவாறு யூகித்து விட்டான் தன்யன். “அதேதான் அண்ணா தவறு நம் மதுவிடம் தான்.”
“அந்த வீணா?” சந்தேகமாய் இழுத்தான்.
“அந்த வீணாவையும், மலர்மதியையும் ஒன்றாக நினைப்பது கூட பாவம் என்றுதான் தோன்றுகிறது அண்ணா. வீணாவைப் பற்றி, பெரிய நல்ல எண்ணம் யாருக்குமே நம் அலுவலகத்தில் இல்லை. ஆனால் மலர்மதியை பற்றி தவறான எண்ணம் யாருக்குமே இல்லை.” என்று முடித்தான் ஸ்ரீகாந்த்.
இனி விளக்க ஏதுமில்லை என்பது போல் அர்ஜுனிடம் விரைந்தான். அவனது வருகைக்காகவே காத்திருந்த அர்ஜுன்.
“ஒரே தலைவலியாக இருக்கிறது.’’ என்று சிந்தனையில் மூழ்கியிருந்த தன்யனை குறிப்பாய் பார்த்துவிட்டு,
“கேண்டினில் சென்று டீ குடிப்போம் வா.’’ என்று ஸ்ரீகாந்தை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
நெற்றிப் பொட்டை பிடித்துக் கொண்டு சிந்திக்கலானான் தன்யன். ஸ்ரீகாந்த் கூறுவது சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் மலர்மதியின் கையைப் பற்றி மதுசூதனன் கூட்டத்தின் நடுவே, இழுத்துச் சென்றதை தன் கண்களாலேயே பார்த்தேனே. அது பொய்த்து விடுமா, ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல், அத்தனைப் பெரிய கூட்டத்தில் அவளை பலவந்தப்படுத்துவதும் நடக்க முடியாத காரியம். அதனால் தானே அவள் நெட்டித் தள்ளியதும், எட்டிப் பிடிக்க அவன் முயற்சிக்கவில்லை. இப்படி இருக்க… எது உண்மை… எது பொய் என்பதிலேயே அவன் மனம் உழன்று கொண்டிருந்தது.
சுடச்சுட ஆவி பறக்கும் டீக் கோப்பைகளை டேபிளில் வைத்துவிட்டு அமர்ந்த அர்ஜுனும், ஸ்ரீகாந்தும் சட்டென வெடித்துச் சிரித்துவிட்டனர்.
“பயங்கர தலைவலிதான் போலவே.” விஷமப் புன்னகையுடன் வினவினான் ஸ்ரீகாந்த்.
“ஆமாம், ஆமாம் விடாத தலைவலி என்று தோன்றுகிறது.’’ அர்ஜுனும் பூடகமாகவே பேச இருவரும் சட்டென சிரித்துவிட்டனர். சிரிப்பினூடே.
“சிறு தீயா? அல்லது காட்டுத் தீயா?” ஸ்ரீகாந்த்.
“காட்டுத் தீதான்… கால் தரையில் படவில்லை. நீ வரும் வரை ஒரே படபடப்பும் எதிர்ப்பார்ப்பும், ஓரக்கண்களால் பார்த்த எனக்க, சிரிப்பை அடக்க எத்தனை சிரமமாக இருந்தது தெரியுமா?” அர்ஜுன்.
“இது போல் அண்ணா இருந்ததேயில்லையே அர்ஜுன்” ஸ்ரீகாந்த்.
“ம்… நேற்று அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டது சற்று அதிகப்படிதான். பேச்சு கேளாவிட்டாலும் நடந்ததை நாமும் தூரத்திலிருந்து பார்த்தோம் தானே.” அர்ஜுன்.
“ஏதோ நேற்றைக்குத்தான் சிவானந்த ஆசிரமத்தில் இரண்டு சீட் போடுவது பற்றிப் பேசினோம். இன்றே அதனை மறுபரிசீலனை செய்யும்படி ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது… பார்ப்போம், நமக்கு நல்ல நேரம் இருந்தால்.’’
சோகமாக ஸ்ரீகாந்த் முடிக்க, இருவரும் அடக்க மாட்டாமல் சிரித்தனர்.
Comments are closed here.