Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 10

அத்தியாயம் – 10

‘மதுமதி இன்று கல்லூரிக்கு வரமாட்டாள்…. என்னத்த… காலேஜுக்குப் போயி… என்னத்த பாடம் சொல்லிக் கொடுத்து…!’ கார்முகிலன் ஒரு வெறுமையான மனநிலையோடு தான் கல்லூரிக்கு வந்தான். ஆனால் அவனுடைய வெறுமையை நொடியில் களைந்தெறிய வகுப்பறைக்குள் மதுமதி அமர்ந்திருந்தாள்.

 

வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவள் முகம் அவன் கவனத்தை ஈர்க்க, அவனுடைய முகம் சட்டெனப் பிரகாசமானது. அந்தப் பிரகாசத்திற்கான காரணத்தைக் கண்டுகொண்டவளின் முகமும் மகிழ்ச்சியில் மின்னியது…

 

‘இப்போ பரவால்லையா…? ஏன் காலேஜுக்கு வந்த…?’ என்று அவன் கண்களால் கேட்பதும்… அதற்கு ‘பரவால்ல…’ என்று இவளும் கண்களால் பதில் சொல்வதும்… யாரும் பார்க்காத போது அவன் இவளைப் பருகுவது போல் பார்ப்பதும்.. இவள் வெட்கத்தில் முகம் சிவப்பதும்… வகுப்பறையில் ஒரு பெரிய நாடகமே நடந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை தான்…

 

ஆனால் மதுமதி கடித்துத் துப்பிய நகங்களும், அவள் நோட்டில் கிறுக்கிய கோலமும், அருகில் அமர்ந்திருந்த ஜீவிதாவை ஈர்க்க… அவள் தோழியை உற்றுக் கவனித்தாள். அவள் கவனிப்பதை நொடியில் உணர்ந்து கொண்ட கார்முகிலன், தன் பாவனையை மாற்றிக் கொண்டான். ஆனால் அசட்டு மதுமதி ஜீவிதாவிடம் மாட்டிக் கொண்டாள்.

 

“அடியேய்… என்னடி நடக்குது இங்க…?” வகுப்பிற்கு இடையில் விடப்பட்ட பத்து நிமிட இடைவெளியில் ஜீவிதா மதுமதியைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போய்க் கேட்டாள்.

 

“என்ன… என்னடி…?” – புரியாதவளைப் போல் பாவனைச் செய்தாள்.

 

“என்னவா… நீ அந்த ஆளைப் பார்த்து நகத்த கடிச்சு… கடிச்சுத் துப்புறதும்… வெக்கப்படுறதும்… நோட்டுல என்னென்னமோ கிறுக்கி வைக்கிறதும்… என்னடி இதெல்லாம்…?”

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜீவி..” அவள் மழுப்பினாள்.

 

“ஏய் உன்ன பத்தி எனக்கு நல்லாத் தெரியும்… அந்தாளு ஒரு முசுடு… இன்னும் ரெண்டு வாரம் கிளாஸ் எடுத்துட்டுப் போய்க்கிட்டே இருக்கும். அது எங்க இருக்கு… எந்த காலேஜ்ல வேலை பார்க்குது… எதுவும் உனக்குத் தெரியாது… வேண்டாம்… இதோட நிறுத்திக்க…” என்றாள் எச்சரிப்பவள் போல…

 

“என்ன சொல்ற ஜீவி…?”

 

“என்ன… நொன்ன சொல்ற…? அந்தாளு உன்னைத் திரும்பியே பார்க்கல.. நீ ஏன்டி அந்த ஆளப் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கிட்டுருக்க… ஆளுப் பார்க்க பர்ஸ்னால்ட்டியா இருந்தாக் கூடப் பரவால்ல… ஒரு கருவாயனப் போயி… பேபி… குல்ஃபி ஐஸைப் பார்க்குற மாதிரி பார்த்துக்கிட்டு… ச்ச… ச்ச…” அவள் அலுத்துக் கொண்டாள்.

 

மதுமதிக்குக் கண்கள் கலங்கிவிட்டன…

 

“ஐயையோ… எதுக்குடி அழுவுற…? நீ அந்தாளைப் பார்க்கலன்னா விட்டுத்தள்ளு… அதுக்குப் போயி ஏன் அழுது கண்ணீரை வேஸ்ட் பண்ணுற…?”

 

“அது இல்ல ஜீவி…”

 

“வேற எது…?”

 

“அவர் என்ன அவ்வளவு கறுப்பாவா இருக்காரு…? கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் அழகாத்தானே இருக்காரு… நீ அவரை ‘அது… இது… அந்த ஆளு… இந்த ஆளுன்னு’ சொல்லாதேயேன்…” மதுமதி கெஞ்சுவது போல் கேட்டாள்.

 

“அடி…ப்ப்ப்…பாவி… அப்ப நீ அந்த ஆளைப் பார்த்தது உண்மைதானா…!” ஜீவிதாவிற்கு நெஞ்சு வலிப்பது போல் இருந்தது. அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.

 

“ஐயயோ ஜீவி என்ன ஆச்சு…?” மதுமதி பதறினாள்.

 

“கையை எடுடி… பெரிய இடியைத் தூக்கித் தலையில போட்டுட்டு என்ன ஆச்சா…! நீ நினைக்கிறது நடக்குமா…? அப்படியே நடந்தாலும்…” அவள் முடிக்காமல் இழுத்தாள்.

 

“அப்படியே நடந்தாலும்…” மதுமதி எடுத்துக் கொடுத்தாள்.

 

“அப்படியே நடந்தாலும்… உன் கல்யாணத்திற்குப் பிறகு நான் உன்னைப் பார்க்க உன் வீட்டிற்கு வர முடியுமா…? இதையெல்லாம் நெனச்சுப் பார்க்காம இப்படிப் பொசுக்குன்னு அந்தாளு பக்கம் சாஞ்சுப்புட்டியேடி…”

 

“ஏன்டி… கல்யாணத்திற்குப் பிறகு நீ எங்க வீட்டுக்கு வந்தா என்ன ஆகும்…?”

 

“அந்தாளு அப்பவும் என்னை ‘தெர்மோ டைனமிக்ஸ்’லேருந்து கேள்விக் கேட்காதுன்னு என்னடி நிச்சயம்…?”

 

“ச்சே..ச்சே.. அப்படியெல்லாம் கேட்கமாட்டாங்கடி…” அவள் உறுதி கொடுத்தாள்.

ஜீவிதா அவளை ஒரு மாதிரிப் பார்த்தாள்…

 

“என்னடி…?” மதுமதி குழப்பமாகக் கேட்டாள்.

 

“முடிவே பண்ணிட்ட…?”

 

அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்துகொண்டாள்.

 

“சரி விடு… இனி உன்னை மாத்தவா முடியும்… நடக்கிறது நடக்கட்டும்…” என்று சமாதானமடைந்தாள் ஜீவிதா.

 

# # #

 

கார்முகிலன் கல்லூரியில் இருந்தான். அவனுடைய கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பேசினான்.

 

“ஹலோ…”

 

“ஹலோ… நான் வேதவல்லி பேசுறேன்பா…”

 

“ம்ம்ம்… பாட்டி சொல்லுங்க…” என்றதுதான் தாமதம்,. பாட்டி ‘ஓ…’வென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

“என்ன பாட்டி…? என்ன விஷயம்…? எதுக்கு அழறிங்க…? சொல்லுங்க பாட்டி…” என்று படபடத்தான் கார்முகிலன்.

 

‘நீலாவுக்கு ஏதும் ஆகிவிட்டதோ…’ – அவன் மனம் பதறியது.

 

“என்னத்தப்பா சொல்றது… நாங்க தற்கொலை பண்ணிக்கிட்டுச் சாகறதைத் தவிர வேற என்ன வழி இருக்கு…?” என்று மீண்டும் அழ ஆரம்பித்த பாட்டியை,

 

“சொல்லிட்டு அழுவுங்க பாட்டி…” என்றவனுடைய அழுத்தமாகக் குரல் அடக்கியது.

 

“நேற்று இங்க பெரிய பிரச்சனையாயிடுச்சுப்பா… தம்பி… நீலாவுக்கு அப்பா… அம்மா… படிப்பு… வேலை… எதுவுமே இல்லை… கடன் வாங்கிச் சாப்பிட்டு… சாப்பிட்டு… இப்போ கடன் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது… தூக்குலத் தொங்குறதைத் தவிர வேற வழியில்லை எனக்கும் நீலாவுக்கும்…” என்று நீலாவின் பெயரைக் கடைசியாக உச்சரித்து முடித்தார்.

 

“எவ்வளவு கடன் இருக்கு…?” என்றான்.

 

“அது இருக்கு… நிறைய… ”

 

“அவசரமா செட்டில் பண்ண வேண்டியது எவ்வளவுன்னு சொல்லுங்க…” என்றான்.

 

“ரெண்டு லட்சம்…” என்றார் பாட்டி.

 

“நீலா இதைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லையே…”

 

“அவச் சொல்லமாட்டா… கௌரவம் பார்ப்பா…”

 

“சரி… நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்…”

 

“எத்தனை மணிக்கு…?”

 

“பத்துமணிக்குப் பேங்க்குக்குப் போயிட்டு… பதினொன்னு இல்லைன்னா பன்னிரண்டு மணிக்கு வந்துடுவேன்…” என்றான்.

 

பாட்டிக்குப் புரிந்தது அவன் பணத்தோடுதான் வருவான் என்று.

 

கார்முகிலனுக்கு நீலாவின் மீது பயங்கரக் கோபம் வந்தது. இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறது என்று அவள் ஒரு வார்த்தைக் கூட அவனிடம் சொல்லவில்லையே… கைப்பேசியை எடுத்து நீலாவிற்கு அழைத்தான். ஏனோ அவளுடைய கைப்பேசி எடுக்கப்படவில்லை.

 

‘வீட்டுக்குத் திரும்ப அழைத்தால் பாட்டிதான் எடுப்பார்கள்… சரி நாளைக்கு நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்’ என்று விட்டுவிட்டான்.

 

மறுநாள் சரியாகக் காலை பதினோரு மணிக்கு நீலாவின் வீட்டிற்குப் பணத்தோடு வந்தான். பாட்டிதான் கதவைத் திறந்தாள்.

 

“நீலா இல்ல…?”

 

“ப்ச்…” பாட்டி பதில் சொல்லாமல் சோகமான முகத்துடன் வீட்டிற்குள் திரும்பினாள்.

 

அவனும் உள்ளே சென்றான். சோஃபாவில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த லெதர் பையைப் பிரித்து அதிலிருந்து இரண்டு ஆயிரம்ரூபாய் நோட்டுக் கட்டுகளை எடுத்து டீப்பாயில் வைத்தான்.

 

பாட்டின் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்து, கண்கள் மின்னியதை அவனுக்குக் கண்டுகொள்ளத் தெரியவில்லை.

 

“ரொம்ப நன்றி தம்பி…” என்று சொல்லியபடி பணத்தை எடுத்துக் கொண்டாள். அந்தப் பணம் அவர்களுக்காகக் கொண்டு வந்தது என்பதை அவன் சொல்வதற்கு முன்னரே…

 

அதையெல்லாம் அவன் நினைக்கவில்லை. அவன் மனம் ‘நீலா ஏன் அவளுடைய பிரச்னையை என்னிடம் சொல்லவில்லை… என்னை அவளுடைய நண்பனாக அவள் நினைக்கவே இல்லையா…?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.

 

“நீலா எங்க பாட்டி…?”

 

“அவக் கோவிலுக்குப் போயிருக்காப்பா…” பாட்டியின் வாய் பதில் சொல்ல… கை பணத்தை எண்ணிக் கொண்டிருந்தது.

 

“சரி… நான் வர்றேன்…” என்று எழுந்து வெளியே வந்தவன் தன் வண்டியை கிளப்பினான். அது கோவிலில் போய் நின்றது.

 

கோவிலில் கூட்டமே இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டும் அங்குமிங்குமாக இருந்தார்கள். அவன் உள்ளே சென்று அவளைத் தேடினான். பாட்டியின் லீலைகள் எதையும் அறியாமல்… அவள் பிரகாரத்தில் ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன் போய் நின்றதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

 

“முகிலன்… நீங்க எங்க இந்த நேரத்துல இங்க…? காலேஜ் இல்லையா…?” என்றபடி எழுந்தாள்.

 

“நீ ஏன் என்கிட்ட சொல்லல நீலா… என்கிட்டயே கெளரவம் பார்க்கிறாயா…?”

 

அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவளுடைய செவிகளை எட்டியது, கால்கள் நடுங்கின… ‘அவன் எதைச் சொல்கிறான்… ஒருவேளை, தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டதோ…’ என்கிற பயம் அடிவயிற்றிலிருந்து பந்தாக உருண்டு வந்து குரல்வளையை அடைத்தது.

 

அப்போதுதான்… அந்த நொடிதான் அவளுக்குப் புரிந்தது… அவன் தன்னை உதறிவிட்டுப் போய்விட்டால் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை என்று. அவளுக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ… அது தெரியாது… ஆனால் காதல் அவள் நெஞ்சுக்குள் நுழைந்துவிட்டது. எத்தனையோ ஆண்களுடன் எல்லைகளைக் கடந்து பழகியிருக்கிறாள். அவர்கள் யாரிடமும் தோன்றாத ஒரு பிணைப்பு, இவனோடு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது.

 

அவனுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துவிட்டதோ என்கிற பயமும்… தன்னைத் தானே புரிந்துகொண்ட அதிர்ச்சியும் பலமாகத் தாக்க… அவள் கல் போலச் சமைந்து நின்றாள்.

 

“நீலா… நீலா… ” அவனுடைய குரல் அவளை உலுக்கியது…

 

“என்… என்ன… சொல்.. சொல்றீங்க… முகிலன்…” அவள் தடுமாறினாள்.

 

“யார் நேற்று பிரச்சனைப் பண்ணினது… எவ்வளவு கடன் இருக்கு…?”

 

“கடனா… பிரச்சனயா…?” அவள் குழப்பமாகக் கேட்டுவிட்டாள்.

 

அவன் விழித்துக் கொண்டான். அவளும் அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.

 

சாதாரணமாக இதே டெக்னிக்கைப் பயன்படுத்திப் பாட்டி பலரிடம் பணம் வாங்கியதுண்டு. அப்போதெல்லாம் அவள் பாட்டிக்கு ஒத்தூதுவாள். சாதுர்யமாகப் பேசி, பணம் பறிக்கப் பாட்டிக்கு உதவுவாள். ஆனால் இன்று நிலைமையே வேறு… அவள் தடுமாற்றத்தில் இருந்தாள்.

 

அதோடு இன்று பாட்டி ஏமாற்றியிருப்பது அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கணக்குப் பண்ணிக் கொண்டிருப்பவனை… அவளுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.

 

“பாட்டிகிட்ட பணம் எதுவும் கொடுத்தீங்களா…?” என்றாள் கடுமையான முகத்துடன்.

 

“ஆமாம்… இப்போதான் கொடுத்துட்டு வர்றேன்… ஏன்… என்ன ஆச்சு…?” என்றான் குழப்பத்துடன்.

 

“சரி… இப்போ காலேஜ் போகணுமா…?”

 

“ஆமாம்… உன்னைப் பார்த்துட்டுப் போகலாம் என்றுதான் இங்க வந்தேன்… நீ ஃபோன் எடுக்கல…”

 

“சரி… சாயங்காலம் வீட்டுக்குப் போகும் போது என்னை வந்து பார்த்துட்டுப் போங்க…”

 

“சரி…” – கல்லூரிக்குப் புறப்பட்டான்.

 

அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது… ‘இந்தப் பாட்டி ஏதோ தில்லுமுல்லு பண்ணியிருக்கு…’ என்று நினைத்தவனுக்குக் கோபம் வந்தது. ‘முழு விபரம் தெரிவதற்கு முன் யாரையும் தவறாக நினைக்கக் கூடாது…’ என்று முடிவு செய்து அமைதியாகக் கல்லூரிக்குச் சென்றான்.

 

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த நீலாவின் முகம் கோபத்தில் தகதகத்தது.

 

“என்னம்மா… ஏன் இப்படி முகமெல்லாம் வேர்த்துப் போயிருக்கு?” கதவைத் திறந்துவிட்ட பாட்டி அக்கறையாகக் கேட்க… பாட்டியை இடித்துத் தள்ளாத குறையாக உள்ளே நுழைந்தாள் நீலா.

 

“ஏய்… கெழவி… உனக்குக் கொஞ்சம் கூடப் புத்தியே கிடையாதா…? எத்தனை தடவ சொல்றது… என் வாழ்க்கையோட விளையாடாதன்னு… எதுக்கு அவர்கிட்ட பணம் வாங்கின…? அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாம…!”

 

“இது என்னடியம்மா நீ காளியாட்டம் ஆடுற…! நான் என்ன புதுசாவா வாங்குறேன்… இதேமாதிரி எத்தனயோ முறை நம்ம வீட்டுல நடந்திருக்கே… இப்ப என்ன நீ இந்தக் குதிக் குதிக்கிற..?” பாட்டி பாவனையுடன் கேட்டது, அவளுடைய கோபத்தை இன்னும் கிளறியது.

 

“இங்க பாரு… உன்னோட பணத்தாசைக்கெல்லாம் நான் ஆளாக முடியாது… மரியாதையா அவர்கிட்ட வாங்கினப் பணத்தைக் கொண்டுவா…”

 

பேத்தி பணத்தைக் கேட்டதும் பாட்டிக்கும் கோபம் வந்தது…

 

“வயசு இருக்கும்போதே சம்பாதிக்காமல் என்னை மாதிரிக் கிழவியானதும் பிச்சை எடுக்கப் போறியா…? மதிகெட்டவளே… அவனோட பழக ஆரம்பிச்சு ரெண்டு மாசம் ஆகப் போகுது… கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன… அதுக்கும் அடி போட காணோம்… பணம் பறிக்கிற வேலையையும் காணோம்… பியூட்டிஷியன் படிக்கிறேன்… கியூட்டிஷியன் படிக்கிறேன்னு பொழுதைக் கழிக்கிற… அதுலயெல்லாம் என்னத்தடி சம்பாதிக்க முடியும்…? என்னை என்ன எதுவும் தெரியாத முட்டாளுன்னு நெனச்சியா…?” பாட்டி சீறினாள்.

 

“நீ புத்திசாலிதான்… உன்னோட புத்திசாலித்தனத்தை என்கிட்டே காமிச்ச… நான் மனிஷியா இருக்கமாட்டேன்… உன்னைக் கொலையே பண்ணிடுவேன்…” என்று சொல்லியபடி பாட்டியின் இடுப்பில் இருந்த பீரோ சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயற்சித்தாள். பாட்டி பேத்தியுடன் மல்லுக்கட்டினாள். சில நிமிடங்களில் நீலவேணி மயங்கிச் சரிந்தாள்.

 

###

 

“ஏம்மா… பார்த்தா வயசானவங்களா இருக்கீங்க… ஒருமுறை சொன்னாப் புரியாது…? வீக்கா இருக்கா… பத்திரமா பார்த்துக்கணும்… முக்கியமா இன்னொரு முறை கருகலைக்கிற நிலை வந்தா… நான் செய்ய மாட்டேன்னு சொன்னேனா இல்லையா…?” அந்தப் பெண் மருத்துவர் இரைந்தார்.

 

“ஆமாம்மா… சொன்னீங்க… ஆனா இப்போ அது மாதிரியெல்லாம் இருக்காதே…” பாட்டி குழப்பத்துடன் சொன்னார்.

 

“கருவெல்லாம் இல்ல… ஆனா நீங்க அவளைச் சரியாக் கவனிக்கவில்லை என்பது நல்லாத் தெரியுது…”

 

“என்ன சொல்றிங்க…”

 

“கழுத்துல கைல எல்லாம் என்ன நகக்கீறல்…? இன்னொரு முறை…” மருத்துவர் ஏதோ சொல்ல வர… அதற்குள் பாட்டி குறுக்கே நுழைந்தார்.

 

“இல்ல.. இல்ல… அது எங்களுக்குள்ள ஒரு சின்னச் சண்டை…”

 

“என்ன குடுமிப் பிடியா…? அதுவும் இருக்கக்கூடாது… இந்த மருந்தைக் குடுங்க… காயமெல்லாம் ஒண்ணும் பெருசா இல்ல… சத்தான ஆகாரம் சாப்பிடச் சொல்லுங்க. திரும்பத் திரும்பச் சொல்றேன்… சின்ன வயதிலேயே நாலஞ்சு முறை கருகலைப்பு செய்த உடம்பு… சின்ன எதிர்ப்பையும் தாங்காது. பார்த்து நடந்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு, அடுத்த நோயாளி உள்ளே வரலாம் என்று சொல்வது போல் மேஜை மீதிருந்த மணியை அழுத்தினார்.

 




Comments are closed here.

You cannot copy content of this page