Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 11
5055
0
அத்தியாயம் – 11
“என்ன நீலா… என்ன ஆச்சு? என்னை வரச் சொல்லிட்டு நீ எதுவுமே பேசாமல் இருந்தா என்ன அர்த்தம்…?” கார்முகிலன் நீலவேணியிடம் கேட்டான்.
அவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்று இரண்டுகட்டுப் பணத்தை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். அவனுடைய முகம் இறுகியது. அது அவன் கொடுத்த பணம்தான். அதை அவள் கொடுக்கிறாள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்…
‘ஒன்று அவள் அவனுடைய உதவியை மறுக்கிறாள்… அல்லது பாட்டியிடம் அவன் ஏமாந்திருக்க வேண்டும்… இதில் எந்தக் காரணத்தை இவள் இப்போது சொல்லப் போகிறாள்…?
அவன் அமைதியாகக் கேட்டான்… “என்ன இது…?”
“நீங்க கொடுத்த பணம்தான்… இது இப்போ இங்க தேவையில்லை…”
“ஏன்…?”
“ஏன்னா… இங்க கடன்… பணக்கஷ்டம்… இதெல்லாம் எதுவும் இல்லை…”
“அப்படின்னா…?” அவன் அமைதியிழக்கவே இல்லை.
“பாட்டி உங்ககிட்ட பொய் சொல்லி, பணம் வாங்கிட்டாங்க… மன்னிச்சிடுங்க…” அவள் குரல் அவமானத்தினாலோ, பயத்திலோ… லேசாக நடுங்கியது.
“சோ… நான் ஏமாந்திருக்கேன்…” என்று சிறிதுநேரம் இடைவெளி விட்டவன், பக்கத்து அறையிலிருந்து ஹாலில் நடப்பதை மறைந்திருந்து பார்க்கும் பாட்டியின் பக்கம் பார்வையைத் திருப்பினான். பாட்டி அவசரமாகத் தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்கள்.
“ஹும்… ஓகே… நீலா… இந்தப் பணத்தை உன் பாட்டிகிட்டயே கொடுத்துவிடு… நான் ஏமாந்தது ஏமாந்ததாகவே இருக்கட்டும்… இனி ஒருவரோடு பழகும்போது கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு இது எனக்கு ஒரு பாடம்…” என்றவன் எழுந்தான். அவன் குரலில் அமைதி இருந்ததே தவிர முகம் கடுமையாகத்தான் இருந்தது.
“முகிலன்… என்ன இது…? ரெண்டு லட்சம் நீங்க கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச பணம்… தயவு செஞ்சு எடுத்துக்கோங்க…”
“என்மேல உனக்குக் கொஞ்சமாவது அன்பும்… மரியாதையும் இருந்தா… இனியொருமுறை இந்தப் பணத்தைப் பற்றி என்னிடம் பேசாதே…”
“……..” அவள் எதுவும் பேச முயாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிரச்சனை இவ்வளவு சுமூகமாக முடியும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
நீலாவுக்குத் தெரிந்த கார்முகிலன் சாதுவாகத்தான் இருப்பான் என்றாலும் இந்தப் பிரச்சனைக்கு நிச்சயம் கோபப்படுவான், திட்டுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அவனுடைய கோபத்தை வார்த்தைகளில் கூடக் காட்டவில்லை…
“நீலா… இனி இந்த வீட்டிற்கு நான் வரவே மாட்டேன்… உன் பாட்டியின் முகத்திலும் விழிக்க மாட்டேன். உனக்கு என்னைப் பார்க்கவேண்டும்… பேசவேண்டும் என்றால் நீ என் வீட்டிற்கு வா…” என்று சொன்னவன் அதற்குமேல் அங்கு ஒருநொடி கூடத் தாமதிக்காமல் வெளியே நடந்தான்.
ஒரு நாள்… இரண்டு நாள்… பத்து நாள்… இருபது நாள்… ஒரு மாதம்… நாட்கள் ஓடிக்கொண்டே இருந்ததே தவிர நீலா நினைத்தது நடக்கவில்லை. அவளும் எவ்வளவோ முயன்று பார்த்தாள், அவனைத் தன் வீட்டிற்குத் திரும்ப வரவழைக்க… கெஞ்சினாள், அழுதாள், திட்டினாள், உடம்பு முடியவில்லை என்று நாடகம் ஆடினாள்… அவன் எதற்கும் மயங்கவில்லை. பிடித்த பிடிவாதத்திலிருந்து இறங்கவும் இல்லை.
நீலவேணி கடைசியாகத் தன் தோல்வியைத் தனக்குள் ஒத்துக் கொண்டாள்… அப்பொழுதுதான் கார்முகிலனுக்கு மற்றொரு முகம் இருக்கிறது என்பதையும்… அந்த முகம் ஓர் இறுகிப்போன பாறை என்பதையும் புரிந்து கொண்டாள்.
# # #
மதுமதிக்கு முன்பு போல் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையென்றாலும், முயன்று படித்துக் கொண்டிருந்தாள். அப்படி அவள் புத்தகமும் கையுமாகத் தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது வீரராகவன் அவளிடம் வந்தார்.
“அம்மாடி…”
“என்னப்பா…?” என்று புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்தாள்.
“உக்காரும்மா… உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்…”
“சொல்லுங்கப்பா…”
“இந்தப் படத்தைப் பார்…” என்று சொல்லி ஒரு புகைப்படத்தை காட்டினார்.
புகைப்படத்தில் ஓர் இளைஞன் இருந்தான். அவளுக்கு விஷயம் விளங்கிவிட்டது. மிரண்ட விழிகளுடன் தந்தையைப் பார்த்து,
“அப்பா…!” என்றாள்.
“ஏம்மா…? எதுக்கு இப்படிப் பயப்படற…? பையனைப் பிடிச்சிருக்கான்னு சொல்லு… மற்றதை நான் பார்த்துக்குறேன்…”
“என்.. என்னப்பா…?”
“உனக்குக் கல்யாணம் செய்துவிடலாம் என்று நினைக்கிறேனம்மா… அம்மாவுக்கும் விருப்பம்தான்…”
“கொஞ்சநாள் போகட்டுமேப்பா…”
“எதுக்கும்மா…?”
“மே… மேலப் படிக்க…”
“கல்யாணம் செஞ்சுக்கிட்டுப் படி…”
“என்னப்பா நீங்க…”
அவர் சிறிதுநேரம் எதுவும் பேசாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சொன்னார்…
“அம்மாடி… என்னையும் அம்மாவையும் பார்த்து உனக்குக் கல்யாண வாழ்க்கையே வெறுத்துப் போச்சா…?” என்றார் எங்கோ பார்த்தபடி…
“இல்லப்பா… அப்படியெல்லாம் எதுவும் இல்ல..”
“வேற என்னம்மா…?”
“எதுவும் இல்லப்பா… இப்பவே கல்யாணம் வேண்டாமேன்னுதான்… கொஞ்சநாள் போகட்டுமே…”
“சரிம்மா… எவ்வளவு நாள்…?”
“ரெண்டு… ரெண்டு வருஷம்…” அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் எதையோ சொல்லி வைத்தாள்.
“ரெண்டு வருஷம் கழிச்சு நமக்குப் பிடிக்கிறமாதிரி வரன் அமையனுமேம்மா…”
“………” அவள் எதுவும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவர் அவளை ஆழமாகப் பார்த்தார். பிறகு கேட்டார்,
“உன் மனசுல யாராவது இருக்காங்களாம்மா…? அப்படி இருந்தா நீ அப்பாகிட்ட எந்தப் பயமும் இல்லாமல் சொல்லலாம்மா… உன் விருப்பத்துக்கு நான் மதிப்பு கொடுப்பேன்…”
அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவள் மனதில் அவன் இருப்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்தாலும், அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி… அவன் அவளிடம் வெளிப்படையாகப் பேசவில்லையே…! அவள் பரிதாபமாக விழித்தாள்.
“என்னம்மா… ஏன் இப்படிப் பார்க்குற…?”
“ஒண்ணும் இல்லப்பா… அதுமாதிரி யாரும் இல்ல…”
“அப்படின்னா சரின்னு சொல்லு… உன் விருப்பப்படி செய்ய முடியலைன்னாலும் கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளிப் போட பார்க்கிறேன். நிச்சயதார்த்தத்தை மட்டும் உனக்குப் பரிட்சை முடிந்த கையோடு முடித்துவிடுவோம்… என்ன சொல்ற…” அவர் ஆர்வமாகக் கேட்டார்.
அவள் பதில் சொல்லவில்லை. மெளனமாக அமர்ந்திருந்தாள். மௌனம் சம்மதம் என்கிற நினைவில் அவர் எழுந்து சென்றுவிட்டார்.
அன்று இரவு கௌசல்யாவும் மகளிடம் பேசினாள்.
“மது… உன் அப்பா உன்கிட்டப் பேசினாரா…?”
“ஆமாம்மா…”
“உனக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருக்காம்மா…?”
“அம்மா…”
“என்னடா…”
“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்மா…” – அம்மாவைக் கட்டிக்கொண்டாள். அவள் உடல் அழுகையில் குலுங்கியது. கௌசல்யா துணுக்குற்றாள்.
“மது… என்னடா… ஏன் அழற…?”
“எனக்குக் கல்யாணம் வேண்டாம்மா…”
“ஏம்மா…”
“பிடிக்கல…” அவள் எதார்த்தமாகச் சொல்ல, கௌசல்யா பயந்துவிட்டாள்.
“மது…” என்றாள் ஆழ்ந்த குரலில்.
மதுமதி தாயை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னையும் அப்பாவையும் பார்த்துப் பயந்துட்டியாடா…?”
‘இவர்கள் இருவரும் எப்படி ஒரேமாதிரி சிந்திக்கிறார்கள்’ என்று நினைத்தவள் ‘இல்லை…’ என்பது போல் தலையாட்டினாள்.
கௌசல்யாவிற்கு நிம்மதி வந்தது. “சரிடா… நான் அப்பாகிட்ட இது பற்றிப் பேசுறேன்… கொஞ்சநாள் போகட்டும்… நீ அமைதியா இரு…” என்றாள்.
மதுமதிக்குக் கல்யாண ஏற்பாடு நிற்க போகிறது என்பதைவிட, அம்மா அப்பாவிடம் பேசுகிறேன் என்று சொன்னது ஆச்சர்யமாக இருந்தது.
“சரிம்மா…” என்றாள் மகிழ்ச்சியாக.
###
சாரல் மழை அடிக்கும்… மழையில் நனைய நினைத்து வெளியே சென்றால் பஞ்சை விட மென்மையான சாரல் மேனியை தீண்டிக் குளிர்விக்கும்… ஆனால் உடல் முழுவதும் நனையாது. அது ஒரு புதுவித அனுபவம்… உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்க வைக்கும் அனுபவம்… அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் கார்முகிலனும் மதுமதியும்…
அவர்களுக்கு இடையே வார்த்தைகளற்ற மெல்லிய சுகமான ராகம் இழையோடிக் கொண்டிருந்தது. ஒருவரையொருவர் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி… ஒருவர் குரலை ஒருவர் கேட்கும்போது ஏற்படும் ஆனந்தம்… ஒருவர் பார்வையை ஒருவர் சந்திக்கும் போது ஏற்படும் பரவசம்… இவையெல்லாம் இன்னதென்று சொல்ல முடியாத சாரல்மழையாக அவர்களின் உள்ளத்தைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.
சிலிர்ப்பைத் தாண்டிய நிதர்சனத்தை வீரராகவன் மதுமதிக்குப் புரியவைத்து விட்டார். அவள் நீண்டநேரச் சிந்தனைக்குப் பிறகு மனம் திறந்து கார்முகிலனிடம் பேசிவிடுவது என்று முடிவு செய்தாள்.
கார்முகிலனும் மதுமதியைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. ‘அவன் மனம் அவளிடம் விழுந்துவிட்டது’ என்பதெல்லாம் புரிந்தாலும், அவன் ஒரு ஆசிரியர்… பாடம் சொல்லித்தர வந்துவிட்டு மாணவியையே காதல் கீதல் என்று சொல்லி அவளுடைய மனதைக் கலைப்பது சரியில்லை என்று நினைத்தான். ஆனாலும் இன்றைய வகுப்பு முடிந்துவிட்டால் இனி அவளைப் பார்க்க முடியாது என்கிற எண்ணம் அவனைச் சோர்வடையச் செய்தது…
இன்றுதான் கார்முகிலன் மதுமதியின் கல்லூரிக்குப் பாடம் சொல்லித் தர வருவது கடைசி நாள். இன்று விட்டுவிட்டால் அவனிடம் பேசும் வாய்ப்பு கிடைக்காமலே போனாலும் போகலாம்… கிடைத்திருக்கும் கடைசிச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு தான் மதுமதி அன்று கல்லூரிக்குத் தயாரானாள்.
மதுமதிக்குத் தன் விருப்பத்தை கார்முகிலனிடம் சொல்லும் போது புடவையில் இருக்க வேண்டும் என்று தோன்றியதால்… அன்று அழகிய புடவை ஒன்றை உடுத்திக் கொண்டாள்.
கௌசல்யா, மகள் புடவைக்கட்டிக் கொண்டு வண்டி ஓட்டினால் எங்காவது விழுந்து விடுவாளோ என்று பயந்து, தந்தையுடன் காரில் செல்லச் சொன்னாள். மதுமதியும் பற்பல கனவுகளுடனும் படபடப்புடனும் ‘கார்முகிலனை எப்படி எதிர்கொள்வது… எப்படித் தன்னைப் புரியவைப்பது…’ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டு தந்தையின் காரில் பயணம் செய்தாள். தன் விருப்பத்தை அவனிடம் சொன்னால் நிச்சயம் சந்தோஷப்படுவான் என்று தோன்றினாலும், வெட்கம் அவளைப் பெரும் கஷ்டத்துக்குள்ளாக்கியது… அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள். கார் சட்டென பிரேக் அடித்து நிறுத்தப்பட்டதும் சுயநினைவுக்கு வந்தவள் “ஐயோ…” என அலறினாள்.
Comments are closed here.