Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 12
5053
0
அத்தியாயம் – 12
‘கார்முகிலனிடம் தன் விருப்பத்தைச் சொல்லும் பொழுது அவன் எப்படி மகிழ்வான்…’ என்று எண்ணியபடி கனவில் திளைத்திருந்த மதுமதி, கார் சடன் பிரேக் அடிக்கப்பட்டதும்… சுற்றுப்புறத்தை உணர்ந்தபோது அவர்களுடைய காருக்கு முன் பத்தடி தூரத்தில் அவளுடைய கனவின் நாயகன் ரோட்டில் தூக்கி எறியப்பட்டிருந்தான்.
அவனுடைய வண்டிக்கு குறுக்கே ஒரு நாய் வந்ததையோ, அந்த நாய் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக அவன் வண்டியை ஒடித்துத் திருப்பும் போது, பின்னால் வந்து கொண்டிருந்த தங்களுடைய கார் அவன்மீது லேசாக மோதிவிட்டதையோ அறியாதவள் “ஐயோ…” என்று அலறியபடி பதட்டத்துடன் காரிலிருந்து இறங்கி,
“ஐயோ… சார்… என்னாச்சு சார்…?” என்று கத்திக் கொண்டே அவனை நோக்கி ஓடினாள்.
கீழே விழுந்தவன் தரையிலிருந்து எழுந்தபடி அவளைத் திரும்பிப் பார்த்தான். பதட்டம் நிறைந்த முகத்துடனும், கலங்கிய விழிகளுடனும் அவனை நோக்கி ஓடிவந்த மதுமதியை அவனுடைய விழிகள் காதலுடன் வருடின.
அந்த நேரத்திலும் ‘புடவையில்… என் மதி… கொள்ளை அழகு… ‘ என்று நினைத்தபடி,
“ஒண்ணுமில்ல மதி… பயப்படாத…” என்றவன் அவளைத் தொடர்ந்து வந்த வீரராகவனைப் பார்த்ததும் உடல் விறைத்தான். கார்முகிலனைப் பார்த்த வீரராகவனும் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.
“சார்… என்ன ஆச்சு சார்…? அடி பலமா…?” என்று பதட்டத்தில் நடுங்கும் தன் கரத்தால் அவனுடைய கரத்தைப் பிடித்து ஆராய்ந்தாள் மதுமதி.
குப்புற விழுந்த வேகத்தில் முகத்தில் அடிபட்டுவிடாமல் காப்பதற்காக அவன் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியதால், இரண்டு உள்ளங்கையிலும் பலமான காயம்… முழங்காலிலும் அடிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது…
“ஐயையோ… ரத்தம் வருதே… ரொம்ப வலிக்குதா சார்…” என்று அவள் பதற, அவன் இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.
அவள் அவனுடைய கையை விடாமலே பிடித்தபடி பின்பக்கம் திரும்பி “அப்பா… முதலுதவி பெட்டியைக் கொண்டுவாங்க…” என்று தந்தையிடம் சொல்ல… அவன் உள்ளம் கொதித்தது.
‘கடைசியில் இந்தாளுடைய மகள்தானா நீ…! அதனால்தான் உன் முகம் எனக்குப் பரிச்சயமானதாக இருந்ததா…! மதுமதி என்கிற உன் பெயரை வைத்தே நான் சுதாரித்திருக்க வேண்டும்… ஏமாந்துவிட்டேன்…’ என்று நினைத்தபடி, சட்டெனத் தன் கையை அவளுடைய பிடியிலிருந்து உருவினான்.
“வெயிட்… வெயிட்… என்ன செய்றிங்க…?” என்று படபடப்பாக அவனுடைய கையை மீண்டும் பிடிக்க முயன்றாள்.
“ப்ச்… விடு என்னை…” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, கையைப் பிடிவாதமாக உருவி கொண்டான்.
அவன் கீழே விழுந்து எழுந்து சிறிதுநேரம் ஆகிவிட்டதாலோ, அல்லது அங்கு உதவிக்கு இரண்டு பேர் நின்று கொண்டிருந்ததாலோ என்னவோ… சாலையில் போய் வந்து கொண்டிருந்த யாரும் வண்டியை நிறுத்தி அவனுக்கு உதவவில்லை.
அவன் தானாகவே தன்னுடைய வண்டியை நிமிர்த்தினான். வண்டியிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்துக் கையில் காயத்தோடு பதிந்திருந்த மண்ணைக் கழுவினான். பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஈரத்தைத் துடைத்தான். அதே கைக்குட்டையை மீண்டும் தண்ணீரில் நனைத்து முழங்காலில் கட்டிக்கொண்டு வண்டியை உதைத்துக் கிளப்பினான்.
அவள் பதறினாள் “இருங்க… ரத்தம் நிக்கலையே… கையில வேற காயம் இருக்கு… வண்டி ஓட்டுறது கஷ்டம்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்… ப்ளீஸ்…” என்று அவனிடம் கெஞ்சியவள் “அப்பா… அப்பா… என்னப்பா… ஹெல்ப் பண்ணுங்கப்பா…” என்று தந்தையை உலுக்கினாள்.
அவர் அப்போதுதான் திகைப்பிலிருந்து மீண்டவராக “ம்ம்ம்… என்ன… என்னம்மா…?” என்றார்.
அவன் தந்தையையும் மகளையும் ஏளனமாகப் பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு போயேவிட்டான்.
மதுமதிக்கு எதுவும் புரியவில்லை. தூரத்தில் சென்று கொண்டிருக்கும் கார்முகிலனின் உருவம் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரால் கலங்கலாகத் தெரிந்தது.
# # #
வீரராகவன் மிகுந்த கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். ஜீவிதா அப்படியொரு குண்டை அவர் தலையில் போட்டுவிட்டுப் போயிருந்தாள்.
மதுமதியின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்து, அதை கௌசல்யா வீரராகவனுக்குத் தெரியப்படுத்தியதால் அவரும் மகளைக் கவனித்தார். மெலிந்த உடலும், களையிழந்த முகமுமாக… கண்களில் ஜீவனே இல்லாத மதுமதி அவரைக் குழப்பினாள். அதைப் பற்றி கௌசல்யாவும், வீரராகவனும் தனித்தனியாக எவ்வளவோ பேசியும் அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடியாமல் சோர்ந்துவிட்டார்கள்.
அப்போதுதான் ஜீவிதா ஒருநாள் மதுமதியைப் பார்க்க வந்திருந்தாள். இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜீவிதா வீட்டிற்குப் போகும்போது மதுமதியின் முகம் அழுதழுது வீங்கியிருந்தது. ஜீவிதாவிற்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை வீரராகவன் புரிந்து கொண்டார்.
மறுநாளே அவர் தேனிக்குச் சென்று தனியாக ஜீவிதாவை சந்தித்து, தன்மையாகப் பேசி விஷயத்தைக் கறந்துவிட்டார்.
மதுமதி கார்முகிலனை ஒருதலையாகக் காதலிக்கும் செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மகளின் வாழ்க்கை என்னாகுமோ என்கிற பயம் அவரை ஆட்கொண்டது. ஒரு நாள் முழுவதும் யோசித்தபிறகு மதுமதியிடம் நேரடியாகப் பேசிவிடுவது என்று முடிவு செய்தார்.
“அம்மாடி… ஏன்டா இப்படி இருக்க…?”
“என்ன… என்னப்பா… எப்படி இருக்கேன்…?” அவள் தெரியாதது போல் கேட்டாள்.
“சரியாச் சாப்பிடறது இல்ல… தூங்குறது இல்ல… பரிட்சைக் கூடச் சரியா எழுதுனியான்னு தெரியலை…” என்றார்.
“அதெல்லாம் இல்லப்பா… நான் எப்பொழுதும் போலதான் இருக்கேன்… பரிச்சைக் கூட நல்லா எழுதியிருக்கேனே…”
“என்கிட்டயே மறைக்கிறாயாம்மா…? எனக்கு எல்லாம் தெரியும்மா…”
“அப்பா…!” அவள் திகைப்புடன் தந்தையைப் பார்த்தாள்.
“விசாரிச்சேன்…”
“……………………..”
“நீ நினைக்கிறது நடக்காதும்மா…”
“ஏன்பா…?”
“கார்முகிலனுக்கு உன்னைத் திருமணம் செய்து கொடுக்க என்னால் முடியாது…”
“அவரை உங்களுக்குத் தெரியுமா…?”
“தெரியும்… அதனால்தான் சொல்கிறேன்… அவனை மாதிரிக் குணமுடைய பையனை உன்ன மாதிரி சாதுவான பெண்ணால் சமாளிக்க முடியாதும்மா…”
“அப்பா… அவரை உங்களுக்கு முன்பே தெரியும் என்றால்… உங்களுக்கும் அவருக்கும் என்னப்பா பிரச்சனை…? உங்களுடைய பிரச்சனையால் தான் அன்று அவர் கோபமாகப் போய்விட்டாரா…? அல்லது நம் கார் அவர் மீது மோதிவிட்ட கோபமா… என்னப்பா…?” மகளின் குழப்பமும் தவிப்பும் அவரைச் சங்கடப்படுத்தியது.
“அம்மாடி… என்னால் இப்போ எந்த விளக்கமும் சொல்ல முடியாதுடா… ஆனால் உன்னைவிட அவனை எனக்கு நன்றாகத் தெரியும்… அவன் நல்லவன்தான்… ஆனால் அவனிடம் சில முரட்டுக் குணங்களும் உண்டும்மா. அந்த குணம் வெளிப்படும்போது நீ தாங்க மாட்டாயம்மா… அவன் உன்னைக் கசக்கி குதறிவிடுவான்…” அவருடைய கண்களில் பீதி தெரிந்தது.
“அப்பா… நீங்க நினைக்கிற அளவு அவர் மோசமானவர் இல்லப்பா… அவருடைய உருவத்தைப் பார்த்து எல்லோரும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைப்பாங்க… ஆனால் பழகும்போது அவர் ரொம்ப இனிமையானவர்…பா. பார்க்கக் கரடுமுரடா இருந்தாலும் உண்மையில் அவர் அப்படி இல்லப்பா…” அவளுடைய கண்கள் கலங்கின.
“ஐயோ… நான் உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பேன்னு தெரியலையே… சரிம்மா… அவன் நல்லவனாவே இருந்துட்டுப் போகட்டும். உன்னை விரும்புவதாகவோ… திருமணம் செய்து கொள்வதாகவோ… அவன் சொன்னானா…?” அவர் அழுத்தமாகக் கேட்க, அப்போதுதான் அவளுக்கு உரைத்தது…
‘அடி மண்டே… அப்பாவிடம் வாதாடி என்ன பயன்…? கண்களால் காதலை உணர்த்தியவன், வாய்த் திறந்து எதுவும் சொல்வதற்கு முன்பே முறைத்துக்கொண்டு போய்விட்டானே…! எதற்குப் போனான்… எங்கு இருக்கிறான்… எதுவும் தெரியவில்லையே…!’ அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்கள் மட்டும் மறந்திருந்த விஷயத்தை அறிவு குத்திக் கிளப்பியது…
அவள் மெளனமாகத் தலை குனிந்தாள். அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவன் ஒரு ஆண்… அவனுக்கு இவள்மீது எந்த ஈடுபாடும் இருப்பதாக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமலே மறைந்துவிட்டான். ஆனால் இவள் ஒரு பெண்… இவள் மனம் அவனிடம் மயங்கிக் கிடப்பதை பெற்றவரிடமே ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.
மகளின் சங்கடத்தைப் புரிந்து கொண்டவர் அதற்குமேல் அவளைத் துன்புறுத்த விரும்பாமல் வெளியே சென்றுவிட்டார். அவர் சென்ற சில நிமிடங்களில் மதுமதி கைப்பேசியில் ஜீவிதாவை அழைத்தாள்.
“ஹலோ… ஜீவி…”
“மது… நேற்று அப்பா என்னைப் பார்க்க வந்திருந்தார்டி…”
“தெரியும்… இப்பதான் என்கிட்ட பேசினார்… அதைவிடு… நான் கேட்டது கிடைத்ததா…?”
“வாங்கிட்டேன்டி… அவர் காலேஜ் வாசல்லதான் இருக்கேன்… காலேஜ் செமஸ்டர் லீவ் என்பதால் ஆசாமி காலேஜுக்கு வரல… ஆனா ஆபீஸ் ஸ்டாஃப்கிட்ட கடலைபோட்டு ஃபோன் நம்பர் வாங்கிட்டேன்… நோட் பண்ணிக்க…”
“சொல்லு… சொல்லு…” என்று அவசரமாகக் கேட்டுக் குறித்துக் கொண்டாள்.
“சரிடி… நீ சாருக்கு ஃபோன் பண்ணிப் பேசு… நான் வைக்கிறேன்…”
“ஜீவி… ”
“சொல்லுடி…”
“தேங்க்ஸ் டி…” உருக்கமாகச் சொன்னாள்.
“பரவால்ல மது… நீ பேசு…” என்று சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைத்தாள்.
மதுமதி ஜீவிதா கொடுத்த எண்களை அழுத்திப் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
###
தான் இப்போது இருக்கும் மனநிலையில் தர்மராஜ் சார் வீட்டில் இருப்பது சரியாக இருக்காது என்று நினைத்து, தனிமையைத் தேடி தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்த கார்முகிலன், கைப்பேசியைக் காதிற்குக் கொடுத்து “ஹலோ…” என்றான்.
கார்முகிலனின் குரலைக் கேட்ட மதுமதி பரவசமடைந்தாள். அவளுக்குத் தொண்டையடைத்தது… அழுகை வந்தது.
“நா… நான்… மதுமதி…” அழுகையில் தழுதழுத்த குரலில் திக்கித் திணறிச் சொல்லிவிட்டாள்.
அவள் குரலைக் கேட்டதும் அவனுக்குள் மின்னல் பாய்ந்தது. மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேர ஆட்கொண்டது. தலையைச் சற்றுப் பின்னால் சரித்து, கண்களை இறுக்கமாக மூடி சோபாவில் நன்றாகச் சாய்ந்து… தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, பின் கண்களைத் திறந்தான். அந்தநேரம் சுவற்றில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த தாயின் புகைப்படம் பார்வையில் பட்டது. பழைய நினைவுகள் எல்லாம் முட்டி மோதிக்கொண்டு மேலெழும்ப, இறுகியக் குரலில்
“எந்த மதுமதி…” என்றான்.
மதுமதி திகைத்தாள். அவளால் நம்ப முடியவில்லை. ‘அதற்குள் மறந்துவிட்டானா…! இது சாத்தியமா… அது எப்படி முடியும்…! முடியவே முடியாது… இவனால் என்னை மறக்க முடியாது…’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டு,
“சார்… நான் மதுமதி பேசுறேன் சார்…” என்றாள் தெளிவாக.
“சும்மா சொன்னதையே சொல்லாமத் தெளிவா சொல்லும்மா… எந்த மதுமதி…?” இந்தமுறை அவன் குரல் அதட்டலாக வந்தது.
அவனுடைய அதட்டல் அவளைப் பாதித்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசவந்ததைப் பேசிவிடும் பிடிவாதத்துடன் “நீங்க ஏதோ கோவமா இருக்கீங்க சார்… அன்னிக்கு உங்க மேலத் தெரியாம…” என்று அவள் ஆரம்பிக்கும் முன்
“இதோ பார்… உன்னுடன் வெட்டி அரட்டை அடிக்க எனக்கு நேரம் இல்லை… ஃபோனை வை முதலில்…” என்று கடுப்படித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அவள் வாயடைத்துப் போனாள். அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். கார்முகிலன் அவளை வெறுக்கிறான். இனி அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்கு முன் போய் நின்று விளக்கம் சொல்லி புரியவைத்து… அதன்பிறகு தன் ஆசையைச் சொல்லி அவனிடம் காதல் பிச்சைக் கேட்க அவளுடைய தன்மானம் இடம் தரவில்லை.
‘ஒரு பெண்ணாக இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே தவறோ…! அதனால் தான் அவன் இளக்காரமாக நினைத்துவிட்டானோ…!’ என்று எண்ணங்கள் அலைபாய… சோர்வுடன் கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
Comments are closed here.