Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 15
4973
0
அத்தியாயம் – 15
மதுமதி நம்பமுடியாத ஆச்சர்யத்தில் விழிவிரித்துக் கேட்டாள்,
“என்னம்மா சொல்றீங்க…? நெஜமாவா…? கார்முகிலன் சார் உங்க தம்பியா…! என்னோட மாமாவா…! முகி மாமா தானே…! ம்ம்ம்… நான் முன்னாடி அவங்கள முகி மாமான்னு தானே கூப்பிடுவேன்…”
“ஆமாம்மா…” கௌசல்யாவின் கண்கள் கலங்கின.
“மது உனக்கு நம்ம அம்மாச்சியை ஞாபகம் இருக்கா…?”
“ம்ம்ம்… கொஞ்சம் ஞாபகம் இருக்கும்மா… ஆனா சரியா ஞாபகம் இல்ல…”
“உன்னோட நாலு வயசு வரைக்கும் நாம எல்லோரும் அம்மாச்சி வீட்டில்தான் இருந்தோம் மது…” என்று கௌசல்யா பழைய கதையை மகளிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
குடும்பப் பாரம்பரியம், பொருளாதாரம், கல்வி போன்ற ஏற்றதாழ்வுகளைக் கருத்தில் கொண்டு வீரராகவன் – கௌசல்யாவின் காதலை, வீரராகவனின் பெற்றோர் எதிர்த்தார்கள். பலநாள் போராட்டத்திற்குப் பிறகு, வீட்டைவிட்டு வெளியேறி கௌசல்யாவை அவளுடைய தாயின் சம்மதத்தோடு கைபிடித்த வீரராகவன் மாமியார் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
ஆண்துணை இல்லாத வீட்டிற்கு அவரது வரவு ஆனந்தமாக இருந்தது. மாமியாரையும் மைத்துனனையும் நன்றாகவே பார்த்துக் கொண்டார். மருத்துவத் தொழில் அவருக்குப் போதுமான வருமானத்தைக் கொடுத்ததால் குடும்பத்தைச் சிறப்பாகவே கவனித்துக் கொண்டார்.
சிறுவன் கார்முகிலன் அக்காவையும் அத்தானையும் ஒட்டிக்கொண்டே அலைவான். புதுமணத் தம்பதிகளாக இருந்தாலும் வீரராகவன், கார்முகிலனின் உரசலைத் தொல்லையாக நினைக்காமல் ரசிப்பது கெளசல்யாவிற்குப் பெருமை கலந்த நிம்மதியாக இருந்தது.
அவர்களுக்குத் திருமணமான ஓர் ஆண்டில் மதுமதி பிறந்தாள். குடும்பமே குதூகலத்தில் திளைத்திருந்த போது, வீரராகவனுக்கு மட்டும் சின்ன வருத்தம் இருந்தது. இந்தச் சந்தோஷத்தைத் தன் தாய்தந்தை அனுபவிக்கவில்லையே என்கிற வருத்தம்… அவர் குழந்தையைச் சாக்கிட்டுப் பெற்றோரைச் சமாதானம் செய்ய முயன்றார். முடியவில்லை…
வீரராகவனுக்குப் பெற்றோரின் ஏக்கம் அதிகமானது. அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. இப்படியே அடுத்த மூன்று ஆண்டுகள் கழிந்தன.
மதுமதிக்கு மூன்று வயது முடிந்திருந்த நிலையில், வீரராகவன் தனியாக மருத்துவமனை ஒன்றை ஆரம்பிக்க நினைத்தார். அதற்குப் பணம் தேவைப்பட்டது. வெளியில் புரட்ட முயற்சி செய்து கொண்டிருந்தார்.
“கௌசி… மாப்பிள்ளைக்குப் பணம் கிடைத்தாம்மா…?” கௌசல்யாவின் தாய் பர்வதம் கேட்டார்.
“இல்லம்மா… லோன் கொஞ்சம் கிடைக்கும். மேல தேவைப்படுற பணத்துக்குச் சிரமப்படுகிறார்.”
“நம்ம கரம்ப நிலத்தை வித்துடலாம் என்று நினைக்கிறேன் கௌசி…”
“எதுக்கும்மா…?”
“அந்தப் பணம் மாப்பிள்ளைக்கு உதவுமே…”
“அதை வித்தா என்னம்மா வரப்போகுது… மிஞ்சிப் போனா ஐம்பதாயிரம் வரும்… இவருக்குப் பணம் லட்சக்கணக்குல தேவைப்படுதும்மா…”
“நீ சொல்ற கணக்கெல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கண்ணு… இப்ப அந்த இடம் நல்ல விலைக்குப் போகுதாம்… நம்ம நிலத்துக்குப் பக்கத்து நிலத்துக்காரர் வாங்கிக்கத் தயாரா இருக்காரு… என்ன சொல்ற…?” அம்மா ஆர்வமாகக் கேட்க கௌசல்யா சிந்தித்தாள்.
அவர்களுக்கு என்று இருந்த ஒரேயொரு பூர்வீக நிலத்தின் மதிப்பு எக்குத்தப்பாக எகிறியிருந்ததால் அவர்களுக்குத் திடீர் அதிர்ஷ்டம் அடித்திருந்தது. அம்மா சொன்ன கணக்குப்படிப் பார்த்தால் அந்த நிலத்தை விற்றால் பத்துப் பதினைந்து லட்சம் தேறும். வீரராகவன் கடனே வாங்காமல் ஒரு சின்ன மருத்துவமனையை லக்ஷ்மிபுரத்தில் கட்டிவிடலாம். அவளுக்கு மகிழ்ச்சியில் குதிக்க வேண்டும் போல் இருந்தது.
அவள் வேகமாகக் கணவனிடம் சென்று செய்தியைத் தெரிவித்தாள். அவர் வேறொரு கணக்குப் போட்டார். பத்துலட்சம் அதிகமாகக் கிடைக்கிறது என்றதும் தேனியில் மருத்துவமனையைக் கட்டிவிடலாம் என்று தீர்மானம் செய்தார். கௌசல்யா கலங்கிய போது,
“லக்ஷ்மிபுரத்தை விட தேனியில் நல்ல வருமானம் வரும் கௌசி…” என்று சமாதானம் சொன்னார்.
“ஆனா கடன் வாங்கணுமே…”
“அதனால் என்ன…? நான் சமாளிச்சிடுவேன்… நீ பயப்படாத…” என்று தைரியம் சொன்னார்.
“என்னங்க… நமக்கு மது மட்டும் குழந்தை இல்ல… முகிலனும் தான்… அதை நீங்க எப்பவும் மறக்கக் கூடாது…”
“நிச்சயமா கௌசி… அதை நீ எனக்குச் சொல்லணுமா…” என்றார். கௌசல்யா மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள்.
# # #
வீரராகவன் கௌசல்யாவின் நகைகளையும், பர்வதத்தின் பெயரிலிருந்த நிலத்தையும் விற்றார். அவர்களிருந்த வீட்டை அடமானம் வைத்தார். பேங்க்கில் லோன் போட்டார். மேலும் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கினார்… போதாக்குறைக்குச் சில லட்சம் வட்டிக்கும் வாங்கி மருத்துவமனையைக் கட்டி முடித்தார்.
தேனியில் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற அந்த மருத்துவமனைக்கு ‘ரஞ்சிதம் மருத்துவமனை’ என்று அவருடைய தாயின் பெயரை வைத்தார். திறப்புவிழாவிற்குப் பெற்றோரை அழைக்கச் சென்றார்.
“இதப் பாரு ராகவா… நீ பெரிய மருத்துவமனைக் கட்டிவிட்ட… அதுக்கு என் பெயரையும் வச்சிட்ட… சந்தோஷம்..! அப்படியே உன்னோட ஓட்டிக்கிட்டு இருக்கற அந்தப் பொண்ணுக்கும் ஒரு செட்டில்மெண்ட் குடுத்து அவ தொடர்ப முறிச்சுக்கிட்டு வந்தன்னா ரொம்பச் சந்தோஷப்படுவேன்…” ரஞ்சிதம் கறாராகப் பேசினார்.
“அம்மா… அவ என் மனைவிம்மா… இப்போ என் குழந்தைக்குத் தாயும் கூட…”
அம்மாவின் முகம் கடுத்தது. “அவளை மனைவின்னு சொல்ல உனக்குக் கேவலமா இல்ல…? பள்ளிக்கூடத்தைத் தாண்டாத படிப்பு… பத்து பைசாவுக்கு லாயக்கு இல்லாத பெத்தவங்க.. இப்போ உன் சம்பாதியத்துல உட்கார்ந்து சாப்பிடும் குடும்பம்… ச்சை…” அம்மாவின் முகம் அருவருப்பைக் காட்டியது.
இப்போது அவருக்கு அவமானத்தில் முகம் சிவந்தது. “அம்மா அவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கம்மா…” என்றார் அம்மாவைச் சமாதானம் செய்யும் விதமாக.
“ஆமா… அந்த நல்லவங்க தான் என் பையனை என்கிட்டேருந்து பிரிச்சிருக்காங்க…” அம்மாவின் வார்த்தைகள் ஏளனமாக வெளிப்பட்டன.
“அம்மா… நடந்து நடந்து முடிந்துவிட்டது… என்னை மன்னித்து, என்னையும் என் மனைவி, குழந்தையையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதா…?” அவர் வெளிப்படையாகக் கெஞ்சினார்.
“முடியாது ராகவா… நீ கெளம்பு… போறதுக்கு முன்னாடி ஒண்ணு தெரிஞ்சுகிட்டுப் போ… அந்தப் பெண்ணைத் தலைமுழுகிட்டு வர்றதா இருந்தா மட்டும்… இனி இந்த வீட்டுப் பக்கம் வா. இல்லையென்றால் வரவே வராதே…” தாய் இளக்கமின்றிச் சொல்ல, தந்தை உணர்ச்சிகளைத் துடைத்துவிட்டு அமர்ந்திருக்க… மகன் கலங்கிய முகத்துடன் வீட்டிலிருந்து வெளியேறினான்.
“ஏன் ரஞ்சிதம் அவனை இப்படி நோகடிக்கிற… அவனுக்கு அந்தப் பெண்ணை விட்டுக் கொடுக்க முடியும்னு எனக்குத் தோணல… பேசாம அவனை அந்தப் பெண்ணையும் குழந்தையையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வரச் சொல்லிவிடலாமே…”
“ஏங்க… வயசானா புத்தியும் மழுங்கிடுமா…? அவனுக்கு வேணுன்னா அவளை மனைவின்னு சொல்லிக்கப் பெருமையா இருக்கலாம். ஆனா என்னால அந்த அவமானத்தை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரமுடியாது… நிச்சயம் முடியாது. ராகவனைப் பற்றி எனக்குத் தெரியும். அவனுக்கு என்னை விட்டுவிட்டு ரொம்ப நாள் இருக்கமுடியாது. நிச்சயம் வந்துடுவான். அப்போ… நம்ம சொந்தத்திலேயே ஒரு நல்ல டாக்டர் பொண்ணா பார்த்துக் கல்யாணம் செஞ்சுவச்சு அந்த மருமகளையும்… ராகவனையும் ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிடுறேன்…”
“எனக்கு நம்பிக்கை இல்ல…”
“நடக்கும் பாருங்க…”
“ம்ம்ம்… ம்ம்ம்…” அவர் அரைமனதாக ‘ம்’ போட்டபடி எழுந்து சென்றார்.
# # #
மருத்துவமனைத் திறப்புவிழா விமர்சையாக நடந்து முடிந்தது. அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள், வீரராகவன் மட்டும் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தார். அவருடைய பெற்றவர்கள் விழாவில் கலந்துகொள்ளாதது அவருக்குப் பெரிய குறையாக இருந்தது.
மனதில் சூழ்ந்திருந்த ஏமாற்றத்துடன் அவர் தன் குடும்பத்தை நண்பர்களிடம் அறிமுகம் செய்துவைக்கும் போது… கௌசல்யா ஆங்கிலத்தில் பேசமுடியாமல் தடுமாறியது அவமானமாக இருந்தது. அவளுடைய ஆடை அலங்காரம் பட்டிக்காட்டுத்தனமாகத் தோன்றியது. அவளுக்கு ஆண்களுடன் பேசிப் பழகும் நாகரிகமும் தெரியவில்லை என்பது குறையாகத் தோன்றியது. இந்த அவமானத்தையெல்லாம் எரிச்சலாகப் பலமுறை விழாவிலேயே மனைவியிடம் வெளிப்படுத்தினார்.
பெற்றவர்கள் அருகில் இல்லாத ஏக்கம், மனைவியின் சிறுசிறு குறைகள்… இவையெல்லாம் பூதாகரமாக அவர் முன் நிற்க, முதல்முறையாக அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது.
‘கௌசல்யாவை அவசரப்பட்டுத் திருமணம் செய்து கொண்டோமோ… அம்மாவைச் சமாதானம் செய்ய இன்னும் சில நாட்கள் அல்லது வருடங்கள் காத்திருந்திருக்கலாமோ…!’
திறப்புவிழா முடிந்ததிலிருந்து அவருக்கு மனைவியிடமும் மகளிடமும் பிடிப்புக் குறைந்திருந்தது. மனைவி, குழந்தையிடமே அப்படியென்றால்… மாமியார் மற்றும் மைத்துனனை அவர் திரும்பியும் பார்ப்பதில்லை. நாள் முழுக்க மருத்துவமனையில் செலவிடுபவர், உறங்குவதற்கு மட்டும் வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
“ஏங்க… என்னங்க இப்போவெல்லாம் ஆஸ்பத்திரியே கதின்னு இருக்கீங்களே… என்ன ஆச்சு…?” முகம் கழுவிவிட்டு வந்தவரிடம் துண்டைக் கொடுத்தபடி கேட்டாள் கௌசல்யா.
“ஏன்னு சொன்னா உனக்குப் புரிஞ்சிடுமோ…!” அவர் நிதானமாக முகத்தைத் துடைத்தபடி பதில் கேள்விக் கேட்டார்.
கெளசல்யாவின் மனதை அவரது வார்த்தை ‘சுருக்’ என்று தைத்தது. சமாளித்துக் கொண்டு புன்னகைத்தவள் “எனக்கு என்னங்க தெரியம்…? நீங்களாச்சு… உங்க ஆஸ்பத்திரியாச்சு… எனக்கு எதுக்கு வம்பு… நீங்க நேரா நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு… தூங்கி உடம்ப பார்த்துக்கிட்டீங்கன்னா… அது போதும் எனக்கு…”
“டாக்டரான எனக்குத் தெரியாது உடம்பை எப்படிப் பார்த்துக்கணும் என்று…! நீ எனக்குப் பாடம் எடுக்குற…! வெரி குட்…” செயற்கையான வியப்பைக் காட்டி பாராட்டினார்.
அவர் பேச்சு கௌசல்யாவைக் காயப்படுத்தினாலும், ‘அவர் எதார்த்தமாகப் பேசுகிறாரா… வினையை உள்ளே வைத்துக் கொண்டு பேசுகிறாரா…’ என்று குழம்பத்தான் முடிந்ததே தவிர, அவர் மனதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
Comments are closed here.