Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 16
4834
0
அத்தியாயம் – 16
பணம் அதிகமாகும் போது மட்டும் மனிதனின் குணம் மாறுவதில்லை; பணத் தட்டுப்பாடு வரும்பொழுதும் அவன் குணம் மாறுகிறது. வீரராகவனுடைய குணமும் மாற ஆரம்பித்தது…
அவர் எதிர்பார்த்த அளவு மருத்துவமனையில் வருமானம் இல்லை. வட்டிக்கு வாங்கியிருந்த கடன் குட்டிபோட்டுக் கொண்டே இருந்தது. மருத்துவமனையின் பகட்டைப் பராமரிக்கவும்… அவர் பஞ்சத்தில் இல்லை என்பதாக வேஷம் போடவுமே வருமானம் சரியாக இருந்தது. அவரால் கடனிலிருந்து ஒரு பைசாவைக் கூடத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அந்தக் கோபத்திற்கு எல்லாம் வடிகால் கெளசல்யா தான்…
சில நாட்களில் அவர் இரவு வீட்டிற்கு வருவதற்கு மிகவும் தாமதம் ஆகிவிடும். அந்த நேரத்தில் கௌசல்யா அவரைத் தொடர்பு கொண்டால் அவருடைய வார்த்தைகள் குத்தீட்டியாய் அவளைத் தாக்கும்…
“உதவிதான் செய்ய முடியலன்னா, உபத்திரமாவது செய்யாமல் இருந்து தொலையேன்… வேலையா இருக்கும்போது ஏன் இப்படிப் படுத்துற…” என்று கத்திவிட்டு டொக்கென்று போனை வைத்துவிடுவார்.
ஒவ்வொரு முறையும் வீரராகவனின் வார்த்தைகள் கௌசல்யாவை குறிபார்த்துத் தாக்கினாலும், அவள் பொறுத்துக் கொண்டாள். அவளால் புரிந்து கொள்ள முடிந்தது… அவர் சிரமத்தில் இருக்கிறார் என்று…!
வீரராகவனுக்குக் குடும்பப்பாசம் மனதின் அடிஆழத்தில் அமிழ்ந்து போய், கடனை எப்படியாவது தீர்த்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினால் போதும் என்கிற நிலை விரைவிலேயே வந்தது.
# # #
“ரஞ்சிதம்… பையனுக்குக் கடன் அதிகமாயிடுச்சாம்… ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறான்னு கேள்விப்பட்டேன்…”
“அதுக்கு என்ன செய்யணும்… அவதான் முக்கியம்னு சொல்லிட்டுப் போனானே… அவளே அவனோட கஷ்டத்தைத் தீர்க்கட்டுமே…”
“ரஞ்சிதம்… நீ பேசுறது சரியில்ல… அவனுக்குக் கடன் கழுத்தை நெரிக்க ஆரம்பிச்சிடுச்சு… இனி நாம தாமதம் பண்ணினா ஏதாவது விபரீதமா ஆனாலும் ஆகிவிடும்… எத்தனை பேர் கடன்தொல்லைத் தாங்காம தற்கொலை… அது… இதுன்னு போயிடறாங்க… ராகவன் நமக்கு ஒரே பையன்… ஞாபகம் வச்சுக்கோ… ” என்றார்.
அவரது வார்த்தை ரஞ்சிதத்தையும் உலுக்கியது. ஆனாலும் பிடிவாதம் தலைதூக்க “அவன்தான் நம்மகிட்ட உதவிகேட்டு வரலையே…!” என்றார்.
“நீதான் அந்தப் பொண்ண தலைமுழுகிட்டு வந்தா வா… இல்லைன்னா வராதன்னு சொல்லிட்டியே…!”
“அப்படின்னா… இப்ப கூட அவனுக்கு அவதான் முக்கியமாப் போயிட்டாளா..?” ரஞ்சிதத்தின் வார்த்தையில் கோபம் தெறித்தது.
“ரஞ்சிதம்… இளவயசுக்குன்னு ஒரு வீம்பு இருக்கும். அதோடு அவனால் அவன் மனைவியையும் குழந்தையையும் இனி விட்டுக்கொடுக்க முடியாது. உன்னுடைய முட்டாள்தனமான பிடிவாதத்திற்கு நான் என் மகனை இழக்கத் தயாராக இல்லை… நான் அவனை வீட்டுக்கு வரச் சொல்லப்போகிறேன்…” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்ட கணவரின் வார்த்தைக்கு, ரஞ்சிதம் வேறுவழியின்றித் தலையாட்ட வேண்டியதாகிவிட்டது.
# # #
வீரராகவன் உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்தார். அவருடைய பெற்றோர்… அவரையும், அவர் மனைவி குழந்தையையும் வீட்டிற்கு வரச் சொல்லி தொலைபேசியில் அழைத்துச் சொல்லிவிட்டார்கள். அவர் ஆனந்தமாக வீட்டிற்கு வந்து மனைவியையும் மகளையும் புறப்படச் சொல்லி அவசரப்படுத்தினார்.
‘வயதான தாயையும்… விபரம் தெரியாத தம்பியையும் தனித்து விட்டுவிட்டு உடனடியாகக் கிளம்புகிறோமே… அவர்களை இந்தப் பிரிவுக்குத் தயார்ப்படுத்தக்கூட இல்லையே…’ என்று கலங்கிய மனைவிக்கு ஆறுதல் சொல்லும் மனநிலையில் கூட அவர் இல்லை.
“என்ன கௌசி நீ… இவ்வளவு நாளும் இங்கதானே இருந்தோம். இப்பத்தான் என் அம்மா அப்பா மனசு மாறியிருக்காங்க. அவங்களோட சேரப் போகிற சந்தோஷத்துல நான் இருக்கேன். சும்மா என் உற்சாகத்தைக் கெடுக்காமல் கிளம்பு…” அவர் எரிச்சலாகச் சொல்ல, அதற்குமேல் எதுவும் பேசமுடியாமல் கௌசல்யா குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனின் பின் நடந்துவிட்டாள்.
கலங்கிய முகத்துடன் நின்ற தாயும், பிரிவைத் தாங்கமுடியாமல் அழுது கொண்டிருந்த தம்பியும் கௌசல்யாவை மிகவும் பாதித்தார்கள். அவள் பாரமான மனதோடு தான் மாமியார் வீட்டிற்குச் சென்றாள்.
வீரராகவன் மனைவி மகளுடன் வீட்டிற்குச் சென்றபோது, பெற்றோர் இருவரும் வீட்டில் இருந்தாலும் தந்தை மட்டும்தான் வெளியே வந்தார்.
அவரும் “வா…” என்று மகனைமட்டும் உள்ளே அழைத்தார். அவரோடு ஒட்டிக் கொண்டு கௌசல்யாவும் குழந்தை மதுமதியும் உள்ளே சென்றார்கள்.
“என்னடா இதெல்லாம்… பெருசா ஆஸ்பத்திரி கட்டியிருக்கன்னு நெனச்சு சந்தோசப்பட்டுக்கிட்டு இருந்தா… நீ ஊரைச் சுத்திக் கடனை வாங்கி வச்சிருக்கியே…! இதுதான் இத்தனை நாள் நீ சம்பாதிச்ச லட்சணமா…?” என்று சத்தம் போட்டார்.
“அப்பா… ஹாஸ்பிட்டல் பிக்அப் ஆக டைம் எடுக்கும்பா… அதுவரை சமாளிச்சுத் தான் ஆகணும்…”
“எப்படிச் சமாளிக்கப் போற…?”
அவர் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தார்.
“சரி சரி விடு… நீ ஒண்ணும் காச வெளியில விடல… எல்லாத்தையும் ஒரே இடத்துல முடக்கிட்ட… அவ்வளவுதான்…! பரவால்ல… நம்ம நிலத்தைக் கொஞ்சம் விற்று வெளியில் வாங்கியிருக்கும் கடனை அடைத்துவிடலாம். மீதியை நீ பார்த்துக்க…” என்றதும் வீரராகவனுக்கு நம்பவே முடியவில்லை. தன்னைத் தக்க சமயத்தில் காத்த தெய்வமாகத் தந்தையைப் பார்த்தார்.
“சரிப்பா…” அவர் குரலில் மகிழ்ச்சி பொங்கியது.
“ஆனா ஒண்ணு ராகவா… இனி நீ எந்த முடிவெடுத்தாலும் என்னுடைய சம்மதம் இல்லாம செய்யக்கூடாது… புரியுதா…”
“சரிப்பா…” என்று தலையை வேகமாக ஆட்டினார். அன்றிலிருந்து பெற்றோருக்கு ஒரு நல்ல தலையாட்டி பொம்மையாகிப் போனார்.
# # #
வீரராகவனுக்குக் கடன் தீர்ந்துவிட்டது… பெற்றோரின் பாசமும் திரும்பக் கிடைத்துவிட்டது. பிரச்சனைகள் குறைந்துவிட்டதால் அவர் மனைவியிடம் அன்பாக நடந்துகொண்டார். கெளசல்யாவிற்கும் மாமியார் வீட்டில் பெரிதாக எந்தத் தொந்தரவும் இல்லை. மாமனாரும் மாமியாரும் அவளோடு அதிகம் பேசமாட்டார்களே தவிர, வேறு வகையில் அவளுக்கு எந்தத் தொந்தரவும் தரவில்லை. அவள் வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருந்தது.
அவள் அவ்வப்போது தம்பியையும் தாயையும் லக்ஷ்மிபுரத்திற்குச் சென்று பார்த்துவிட்டு வருவாள். அவர்களுடைய வறுமையும் சிரமமும் இவள் நிம்மதியைக் குழித் தோண்டி புதைக்கும். அப்படி அவள் லக்ஷ்மிபுரம் சென்று வரும் நாட்களில் வீரராகவனை வறுத்தெடுப்பாள். அவர் எதையாவது பேசிச் சமாளிப்பார். இப்படியே வருடங்கள் உருண்டோடியது.
ஒருநாள் வாக்குவாதம் முற்றிவிட்டது…
“நீங்க சரியான சுயநலவாதி… உங்களுக்கு உங்க அம்மா அப்பா கிடைத்தவுடன் என் அம்மாவையும்… தம்பியையும்… நட்டாத்துல விட்டுட்டீங்க… அவங்களுக்கு எதாவது உதவி செய்யணும் என்கிற எண்ணமே உங்களுக்கு இல்ல…” ஆச்சா… போச்சா… என்று கௌசல்யா குதிக்க…
“என்னை என்னதான்டி செய்யச் சொல்ற…?” என்று வீரராகவன் கடுப்படிக்க…
“அங்க என்னோட வயசான அம்மா… என் தம்பியைக் காப்பாத்த வேலைக்குப் போறாங்க. நான் இங்க கல்லுமாதிரி வீட்டுல உட்கார்த்திருக்கேன்…”
“வேற என்ன செய்யணுங்கற…?”
“நான் வேலைக்குப் போகப்போறன்…”
“வேலைக்கா…! என்ன விளையாடறியா…?”
“நான் ஒண்ணும் விளையாடல… என் அம்மாவைக் காப்பாத்த நான் வேலைக்குப் போகப்போறேன். இதுல என்ன தப்பு இருக்கு…?”
“ஒரு தப்பும் இல்ல… ஆனா நீ என்ன வேலைக்குப் போவ…”
“எனக்குத் தெரிஞ்ச வேலை… காம்காபட்டியில தோட்டவேலைக்குப் பஞ்சமா என்ன…!”
“ஏய்… ஏய்… என்னடி நெனச்சுகிட்டு இருக்க நீ…? என் மானத்த வாங்கணும்னு முடிவே பண்ணிட்டியா…?” என்று அவர் ஆவேசமாகக் கத்த, கௌசல்யா அவரைப் பயங்கரமாக முறைத்தாள்.
மனைவி தன்னை ‘கார்னர்’ பண்ணுகிறாள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவரால் மாமியார் வீட்டிற்கு உதவுகிறேன் என்று சொல்ல முடியவில்லை. காரணம் அவருடைய வருமானத்தின் கணக்குவழக்குகள் எல்லாம் தந்தையிடம் சிக்கியிருந்தது.
“கௌசி… புரிஞ்சுக்க கௌசி… இன்னும் கொஞ்சநாள்… நாம ஸ்டடி ஆகிவிட்டோம் என்றால்… முகிலனையும் அத்தையையும் நாம நல்லா பார்த்துக்கலாம். இப்போ என்னால எதுவுமே செய்யமுடியாது கௌசி…” அவர் கெஞ்சினார்.
“அவங்க குடியிருக்கிற வீட்டை அடமானம் வச்சீங்க… இருந்த கொஞ்ச நிலத்தையும் நல்ல விலைக்கு விற்றுவிட்டீங்க… இப்படி அவங்ககிட்ட இருந்ததையெல்லாம் துடைத்து எடுத்துக்கொண்டு வந்துட்டீங்களே… அவங்க வாழ்க்கைக்கு என்ன வழின்னு ஒருநாளாவது யோசிச்சீங்களா…?”
“எனக்குப் புரியுது கௌசி… ஆனா நம்ம நிலைமை இப்போ அவங்களுக்கு உதவற மாதிரி இல்லையே…”
“பொய் சொல்லாதீங்க…”
“நிஜம்மா கௌசி… ஹாஸ்பிட்டல் கணக்குவழக்கு எல்லாம் இப்போ அப்பா கண்ட்ரோல்ல இருக்கு. என்னால எதுவுமே செய்ய முடியாதும்மா…”
“உங்க அப்பாகிட்ட இதைப்பற்றிப் பேச வேண்டியதுதானே…”
“அவர்கிட்ட இதைப்பற்றி எப்படி…” அவர் தயங்கினார். ஏற்கனவே அவருடைய மாமியார் வீட்டைப் பற்றி, பெற்றவர்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இதில் இதை வேறு கேட்டால்… சுத்தமாக மதிப்பே இருக்காது என்று அவர் நினைத்தார்.
கௌசல்யா அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. அவளுக்கு எப்படியாவது பெற்றவளின் துன்பத்தை நீக்க வேண்டும் என்கிற வேகம் மட்டும்தான் இருந்தது.
“உங்க அப்பாகிட்டப் பேச முடியலன்னா… என்னைத் தடுக்காதீங்க… நான் வேலைக்குப் போகத்தான் போகிறேன்…” என்று அவள் பிடிவாதமாகச் சொல்லிவிட, வீரராகவன் தலையைப் பிடித்துக் கொண்டார்.
Comments are closed here.