Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 19
6201
0
அத்தியாயம் – 19
பழைய கதையைப் பேசி முடித்திருந்த தாய் மகள் இருவரின் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது.
“அம்மா… இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் தாத்தாவும் பாட்டியும் தானே…! அவங்களை அப்பா எதுவுமே சொல்லலையா…?”
“என்ன சொல்லி… என்ன செய்றது மது…? நடந்து முடிந்ததை யாராலும் மாற்ற முடியாதே…!”
“இருந்தாலும் அவங்க பண்ணின தப்புக்குத் தண்டனை இல்லையா…?”
“உங்க அப்பா அவங்களைச் சத்தம் போட்டார். கொஞ்சநாள்ல இந்த வீட்டைக் கட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் வந்துவிட்டார். அவங்க என்னன்னவோ டிராமா பண்ணினாங்க… உங்க அப்பா முதல் தடவையா ஒரு திடமான முடிவு எடுத்து, கடைசிவரை அதில் உறுதியா இருந்தார். உங்க தாத்தா பாட்டி கூடக் கடைசிவரை ஒருநாள் கூட அந்த வீட்ல தங்கவில்லை… அவங்களும் பையனின் பாசத்தைத் திரும்பப் பெற முயன்று… தோற்று… கடைசியில் இறந்தும் போனார்கள். ஆனால் அதிலெல்லாம் என் மனம் ஆறவில்லை மது. என் அம்மா எனக்காக ஏங்கித் தவித்து… இறந்தது இறந்தது தானே! அதை யாரால் மாற்ற முடியும்…?”
“அப்பா தெரிந்து தவறு செய்யவில்லையேம்மா… சூழ்நிலை கைதியாகிவிட்டார்… அவரை நீங்க மன்னிக்கக் கூடாதாம்மா…?”
“முடியலையே மது… உங்க அப்பாவை என்னால மன்னிக்க முடியலையே… அன்று ஒருநாள் நான் சொன்னதை இவர் கேட்டிருந்தால் என் அம்மாவைக் காப்பாற்றியிருக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் நான் என் அம்மாவை ஒருமுறை உயிரோடு இருக்கும்போது பார்த்திருப்பேன். அவர்களும் மகளைப் பார்த்த நிம்மதியில் போயிருப்பார்கள். முகிலனும் நம்மோடு இருந்திருப்பான். ஆனால் அவர் கேட்டாரா…?”
“………………” மதுமதியிடம் பதில் இல்லை…
“என் தம்பி… தனிமையில் எப்படித் தவித்தானோ…! அந்தக் கடைசிநாள் அவன் எப்படி என் கையைப் பிடித்துக்கொண்டு அழுதான் தெரியுமா…? அவ்வளவு சாதாரணமாக அவன் கண்ணில் தண்ணி வராது… ஆனால் அன்றைக்கு…! அவர் முகத்தைப் பார்த்தாலே என் தம்பி பட்டத் துன்பங்கள் தானே ஞாபகம் வருது. அவரை எப்படி மன்னிக்க முடியும்…” கௌசல்யாவின் குரலில் சுருதி ஏறிக்கொண்டே இருந்தது.
தாயின் கோபத்தை மதித்த மதுமதி அமைதியாக இருந்தாள். சிறிதுநேர அமைதிக்குப் பிறகு கௌசல்யா மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.
“மது… நான் உன்னை ஒண்ணே ஒண்ணு மட்டும் கேட்டுக் கொள்கிறேனம்மா…”
“என்னம்மா…?”
“மது… என் தம்பி… உன் மாமா… சின்ன வயசிலிருந்து ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டான்… அவனுக்கு மனஅமைதி போய்ப் பல வருஷம் ஆச்சு… தனிமையிலேயே கிடந்தவன்… உன்கிட்ட எப்படி நடந்துக்குவான்னு சொல்ல முடியாது…”
“…………..”
“நீ அவனை விரும்பிக் கல்யாணம் செய்துக்குற… அவனுக்கு நீ ஒரு மனைவியா மட்டும் இல்லாமல்… ஒரு தாயா இருக்கணும் மது. அவன் உன்னிடம் சண்டைப் போட்டாலும், வம்பு பண்ணினாலும் பொறுத்துப் போம்மா… ஏதாவது காரணம் கொண்டு நீயும் அவனை உதறிவிட்டால் அவன் தாங்க மாட்டான் மது… தாங்கவே மாட்டான்…” என்று சொல்லியபடி விம்மியழும் தாயை ஆதரவுடன் பார்த்தவள்,
“கவலைப்படாதீங்கம்மா… நான் மாமாவைப் பத்திரமா பார்த்துக்குவேன்… என் குழந்தை மாதிரி… போதுமா…” என்று தாயை ஆறுதல்படுத்தினாள். அவளுக்குத் தெரியும் அவள் அவன் மீது கொண்டுள்ள அதிதீவிரமான காதல், அவனோடு அவளைப் பசைப்போட்டு ஒட்டிவிடும் என்பது… எந்தச் சக்தியாலும் இனி அவர்களைப் பிரிக்க முடியாது என்று முழுமனதாக நம்பினாள்.
# # #
கார்முகிலன் கொடுத்த பத்திரிக்கையைக் கையில் வாங்கிய நீலவேணிக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது…
“என்… என்ன… இது… உங்க பேர்… நீங்க தானா…?” என்று பேச்சுக் கோர்வையாக வராமல் தவித்தாள்.
“மன்னித்துவிடு நீலா… உன்னிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்… ஆனால் இது திடீர்க் கல்யாணம்… அதனால் தான் சொல்ல முடியவில்லை…”
நீலவேணியின் கண்களில் கண்ணீர் முட்டியது. பொதுஇடம் என்றும் பார்க்காமல் கதறி அழ வேண்டும் போலிருந்தது.
“நீலா… ப்ளீஸ்… அழாத… உன்கிட்டச் சொல்லக் கூடாதுன்னு இல்ல… சொல்லமுடியாத சூழ்நிலை…” என்றான் வருத்தத்துடன்.
தன் தோழன் அவனுடைய திருமண விவகாரத்தைப் பற்றி அவளிடம் முன்கூட்டியே சொல்லவில்லை, அவளை அவன் மதிக்கவில்லை என்பதற்காகதான் அவள் கண் கலங்குகிறாள் என்று நினைத்தான் கார்முகிலன். அவள் மனதில் ஏற்பட்ட பூகம்பத்தால் அவளுடைய மனக்கோட்டை சிதைந்து, அவள் நொறுங்கிப் போயிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை.
“நாளைக்குக் காலையிலேயே நீ வந்துவிடு நீலா… ஒன்பதரைக்குக் கல்யாணம்… தேனியில் தான்… விசாலாட்சியம்மன் கோவிலில்…” என்றான்.
“அப்படி என்ன அவசரம்… நாளைக்கே கல்யாணம் வச்சிருக்கீங்க… ஏன் ஒருமாசம் தள்ளிப் போட்டா என்ன…?” என்றாள் கடுப்பாக… அவள் குரல் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவள் பலமாக அதிர்ந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது… அவளைச் சமாதானம் செய்வது தன் கடமை என்று நினைத்து, தன்னுடைய கடந்தகால வாழ்க்கை முதல் நேற்று நடந்தது வரை முழுவதும் சொன்னான். மதுமதியைத் தான் காதலித்ததைக் கூட விடவில்லை…
நீலவேணிக்கு உடம்பெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. கண்களிரண்டும் கோவைப்பழம் போல் சிவந்துவிட்டன. அவள் அவனிடம் விடைபெற்று, எப்படி வீடு வந்தோம் என்றே தெரியாமல்… எப்படியோ வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்தவள் அழக்கூடச் சக்தியற்றவளாகக் கட்டிலில் சுருண்டு படுத்தாள். குளிர்க்காய்ச்சல் அவளைப் பிடித்துக் கொண்டது. எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. அந்தளவு பலமாக கார்முகிலனின் திருமணம் அவள் மனதையும் உடலையும் பாதித்திருந்தது.
# # #
அழகான இளம் ரோஜா வண்ண புடவையில் ஜொலிப்பாக மணமேடையை அலங்கரித்த மதுமதி, தன் பிறவிப்பயனை அடைந்து விட்டது போல் நிறைந்த மனதுடன்… மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். நெருங்கிய உறவுப்பெண்கள் வரிசையாக வந்து மணமகளுக்குத் திருமணத்திற்கு முன் செய்யும் சடங்குகளைச் செய்தார்கள்.
பிறகு பூ, பழத்தோடு… முகூர்த்த புடவையும் வைத்த தாம்பூலத்தட்டை ஐயர் கொடுக்க… அதை வாங்கிக்கொண்ட மதுமதி மணமகள் அறைக்குச் சென்றாள். பிறகு அதேபோல் சடங்குகள் கார்முகிலனுக்கும் நடந்து முடிந்தது. அவனும் மணமகன் அறைக்கு முகூர்த்த ஆடை மாற்றிக்கொள்ளச் சென்றான்.
மணவறை ஏறி திருமணத்திற்கு முன் செய்யும் சடங்குகள் எல்லாம் செய்து முடித்தாயிற்று… கிட்டத்தட்ட பாதி திருமணம் முடிந்துவிட்ட நிலையில், வாசலில் வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த வீரராகவனை அழைத்துவரச் சொல்லி ஒரு சிறுவனை அனுப்பினான் கார்முகிலன்.
அவர் பதட்டத்துடன் மணமகன் அறைக்கு வந்தார். கார்முகிலனிடமிருந்து அழைப்பு வந்தாலே அவருக்குப் பதட்டம் தானே…! அறையில் அவன் மட்டும் தனித்திருப்பதைக் கண்டு துணுக்குற்றார்…
‘என்ன குண்டைப் போடுவதற்காக எல்லோரையும் அனுப்பிவிட்டுத் தனியாக இருக்கிறானோ தெரியவில்லையே…!’ என்று நினைத்தபடி
“என்ன முகிலா…?” என்றார்.
“நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்.. நீங்க என்ன செய்து வச்சிருக்கீங்க…?” என்றான்.
“என்ன… என்ன செஞ்சேன்…?” அவர் புரியாமல் கேட்டார்.
“கல்யாணத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டத்தைக் கூட்டி வச்சிருக்கீங்க… நான் தான் எளிமையாகத் திருமணம் நடக்கணும் என்று சொன்னேனே…!” என்றான் கடுப்பாக.
“முகிலா… நான் பார்த்துப் பார்த்து ரொம்ப நெருங்கினவங்களைத் தான்பா கூப்பிட்டிருக்கேன். அதுவே இவ்வளவு கூட்டம் சேர்ந்துவிட்டது… என்ன செய்றது…” என்றார் இயலாதவராக.
“ம்ஹும்… இல்லை… நீங்க என்னைக்குமே என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்ததில்லை. ‘இவன் என்ன பெரிய ஆளா…?’ என்கிற நினைப்பு உங்களுக்கு…” என்றான் கடுகடுத்த முகத்துடனே.
“இப்ச்… அப்படியெல்லாம் இல்லப்பா…” அவர் அலுப்புடன் சொன்னார்.
“சரி… சரி… நான் இப்போ உங்களைக் கூப்பிட்டது அதுக்காக இல்ல…”
“வேற என்ன…?” அவர் ஒருவிதப் பயத்துடனேயே கேட்டார்.
அவன் அவரைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான் “இந்தக் கல்யாணம் எந்தத் தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று உங்களுக்கு அக்கறை இருக்கா…?”
“முகிலா… என்னப்பா இந்த நேரத்துல இப்படிக் கேட்குற…?”
“கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…”
“ஆமாம் இருக்கு…”
“அப்படின்னா… எனக்கு ஒரு வாக்கு கொடுங்க…”
“என்ன… என்ன வாக்கு…?”
“கல்யாணத்திற்குப் பிறகு உங்களுக்கும் மதுமதிக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது… உங்களுக்கு என்றால் நீங்க மட்டும் இல்லை… உங்க குடும்பத்தில் உள்ள யாருக்கும் மதுமதியோடு தொடர்பு இருக்கக்கூடாது…” அழுத்தம் திருத்தமாகப் பேசினான்.
கல்யாண நேரத்தில் கார்முகிலன் ஏதாவது ஒரு குண்டைத் தூக்கி அவர் தலையில் போடுவான் என்று வீரராகவன் எதிர்பார்த்திருந்தாலும்… அவன் சொன்ன விஷயத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கலங்கிவிட்டார்.
“முகிலா… மது எங்களோட பிரிவ தாங்கமாட்டாப்பா…” தழுதழுத்தார்.
“அப்போ அவளை நீங்களே உங்க வீட்டுல வச்சிக்கோங்க… எதுக்கு எனக்குக் கல்யாணம் செய்து தர நினைக்கிறீங்க?” பட்டென்று பதில் கேள்விக் கேட்டான்.
அவருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவனிடம் பேசி பயன் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர் ‘எப்படியோ… இந்தத் திருமணம் முதலில் நல்லபடியாக முடியட்டும்… பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்…’ என்று நினைத்து அவனுடைய கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டார்.
என்னதான் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனதைச் சமாதானம் செய்துகொண்டு கல்யாண வேலைகளைக் கவனித்தாலும், வீரராகவன் கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அவருடைய முகம் கார்முகிலனுக்குக் காட்டிக் கொடுத்தது. அதுவே அவனை உற்சாகப்படுத்தியது. அவன் முகத்தில் சிரிப்புடன் மணமேடைக்கு வந்தான்.
Comments are closed here.