Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 21
5068
0
அத்தியாயம் – 21
“என்னடா முகிலா இப்படிப் பண்ணிட்ட…?” என்றார் ஆற்றாமையுடன் தர்மராஜ்.
கார்முகிலன் காம்காபட்டிக்குப் போகாமல் லக்ஷ்மிபுரம் வந்துவிட்டான் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் உடனே தேனியிலிருந்து லக்ஷ்மிபுரம் வந்துவிட்டார் அந்தப் பெரிய மனிதர்.
கால் இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையிலும், அவர் சிரமப்பட்டுத் திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவனைத் தாங்கிப் பிடித்ததில் பெருமையாகவும்… அதேநேரம் இந்த நல்ல மனிதனின் பேச்சைத் தட்டும்படி ஆகிவிட்டதே என்று வருத்தமாகவும் இருந்தது கார்முகிலனுக்கு.
“சார்… கோபப்படாமல் இப்படி உட்காருங்க…” என்று அவரைச் சமாதானம் செய்ய முயன்றான்.
“நான் உட்கார்றது இருக்கட்டும்… இப்படியாடா நீ நடந்துக்குவ…? அங்க எல்லோரும் என்ன நினைப்பாங்க… உங்க சண்டையெல்லாம் விசேஷம் முடிந்தபிறகு வச்சுக்கக் கூடாதா…?” என்றார்.
“…………” கார்முகிலன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“சரி… சரி… சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் மனிதர்கள் ஏற்படுத்தினது தான்… இங்க நேரடியாக வந்ததினால் எதுவும் தப்பில்லை… இப்போ கிளம்பி அங்க ஒருமுறை போய்விட்டு வாங்க…” என்றார்.
அவன் முடியாது என்பது போல் தலையாட்டினான்.
“என்னடா…?” அதட்டினார் தர்மராஜ்.
“முடியாது சார்… நான் அங்க போகமாட்டேன்…” தெளிவாகச் சொன்னான்.
“டேய்… அநியாயம் செய்றடா… அவர் என்னதான் தப்புப் பண்ணியிருந்தாலும் உறவுக்காரங்க எல்லாரும் கூடியிருக்கும் நேரத்துல அவரை அவமானப்படுத்தறது நல்லா இல்ல முகிலா…”
“எதுக்கு அவமானப்படணும்… கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லித்தானே தாலிக் கட்டினேன்…” என்றான்.
“என்னத்த சொன்ன…?” என்றார் பெரியவர் கடுப்பாக.
“நான் மதுமதி கழுத்துல தாலிக்கட்ட வேண்டும் என்றால்… திருமணத்திற்குப் பிறகு அவங்களுக்கும் மதுமதிக்கும் எந்த உறவும் தொடர்பும் இருக்கக்கூடாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டேனே…” என்றான் எந்தத் தயக்கமும் இன்றி.
தர்மராஜ் சட்டெனத் திரும்பி, அவர்களுடைய வாக்குவாதத்தில் குறுக்கிடாமல் அருகில் நின்று கொண்டிருந்த மதுமதியின் முகத்தைப் பார்த்தார். அங்கே அவள் முகத்தில் அறை வாங்கிய வலி தெரிந்து… ஒரு நொடியில் மறைந்தும் போனது.
‘மனதின் வலியை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொள்கிறாளே… இந்த அருமையான பெண்ணை நோகடிக்கிறோம் என்பது கூடப் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறானே மடையன்…’ என்று நினைத்தவர்,
“பெத்தவங்ககிட்டேயிருந்து பெண்ணைப் பிரிக்கிறது பெரிய பாவம்…” என்றார்.
“அந்தாள் மட்டும் என் அம்மாவின் மகளை அவங்ககிட்டேயிருந்து பிரிக்கலையா… அதுமட்டும் பாவம் இல்லாமல்.. புண்ணியமா..?” இப்போது அவன் குரலும் முகமும் கடினமாக மாறிவிட்டது.
‘அக்காவை அக்கா என்று சொல்லாமல்… அம்மாவின் மகள் என்று சொல்லும் ஜென்மத்தை என்ன செய்வது…?’ என்று மனதிற்குள் அவனைக் கறுவியவர், நேரில் அதைப்பற்றிப் பேசாமல்
“அவங்க செஞ்சா… நீயும் அதையே செய்வியா…?” என்றார்.
“அப்புறம்…! செய்யாமல்…! வேற எதுக்கு அவரோட பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கேன்…?” அவன் சற்றும் தயங்காமல் சொல்ல, மதுமதி உள்ளுக்குள் துடித்துப் போனாள். ஆனாலும் ‘மாமாவின் மனக்காயம் எவ்வளவு ஆழமாக இருந்தால் இப்படிப் பேசுவார். என்றாவது ஒருநாள் இவருடைய மனக்காயம் ஆறி முழுநிம்மதியை அடைவாரா…’ என்று அப்போதும் அவனுக்காகத்தான் அவள் வருந்தினாள்.
கார்முகிலனுக்கு மதுமதி மீது ஆழ்ந்த காதல் உள்ளது என்பது உண்மை. ஆனால் அந்தக் காதலை வீரராகவன் மீது உள்ள கோபம் நிலவை மறைக்கும் வான்முகில் போல அவ்வப்போது திரைப்போட்டு மறைத்துவிடுகிறது. ஆனாலும் முகில் விலகிய பின் பிரகாசிக்கும் நிலவு போல் அவனது காதலும் பிரகாசிக்கத்தான் செய்தது.
ஆனால் மதுமதியின் காதல் சுட்டெரிக்கும் சூரியன் போல அதிதீவிரமானது. அதைத் தாய்ப்பாசம், தந்தைப்பாசம் போன்ற எந்தத் திரைப் போட்டாலும் மறைக்க முடியாது. அவள் அவன்மீது காட்டும் காதலையும் யாராலும் தடுக்க முடியாது… கார்முகிலனால் கூட…!
இந்த உள் விவகாரங்கள் எல்லாம் தர்மராஜ்ஜுக்குப் புரியவில்லை. அவர் கார்முகிலனின் பேச்சால் மதுமதி காயம்பட்டு அவர்களுக்குள் பிரச்சனை வந்துவிடக் கூடாதே என்று நினைத்துப் பேச்சை முடித்துக்கொண்டார்.
“சரிப்பா… இந்தப் பிரச்னையை இதோடு விட்டுவிடலாம்…” என்று சொல்லிவிட்டுத் தற்காலிகமாக அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
# # #
‘இந்த தர்மராஜ் சார் சும்மாவே இருக்கமாட்டார்… இந்த அலங்காரங்களை எல்லாம் யார் செய்யச் சொன்னது…? காலையிலிருந்து டென்ஷன்… மதி பக்கத்துல இருக்கும்போதே கோபத்துல என்னென்னவோ பேசிவிட்டேன். அவளுக்கு நிச்சயம் கோபம் வந்திருக்கும்… இந்த நிலையில் இந்த மாதிரி ஏற்பாட்டையெல்லாம் யாரைக் கேட்டுக்கொண்டு இவர் செய்யச் சொன்னாரோ தெரியவில்லை…’ என்று மனதிற்குள் குமைந்தபடி, சற்று எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் கார்முகிலன்.
கௌசல்யா தன் தாய்வீட்டு உறவுக்காரப் பெண்களுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி… சம்பிரதாய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னதை அறியாமல்… அவன் அப்பாவி தர்மராஜ் சார் மீது பழியைப் போட்டதோடு நிறுத்தாமல், அவரை மனதிற்குள் அர்ச்சித்துக் கொண்டும் இருந்தான்.
வெள்ளிமணிச் சதங்கை ஒலிக்க, ஒப்பனைகள் அதிகமில்லாமல்… தலை நிறையப் பூவுடனும்… முகம் நிறைய வெட்கத்துடனும்… கையில் ஒரு பால் சொம்பை ஏந்தியபடி உள்ளே நுழைந்து, கதவைத் தாளிடும் கொள்ளை அழகைப் பார்த்த நொடி அவன் தடுமாறித்தான் போனான். அதுவரை அவனிடமிருந்த எரிச்சல் காணாமல் போனது…
“தங்கத்தாமரை மகளே வா அழகே
தத்தித்தாவுது மனமே வா அருகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்…
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே…”
என்று பாடவேண்டும் போல் இருந்தது. உள்ளே வந்த கொள்ளை அழகை அள்ளி அணைக்க கைகள் இரண்டும் பரபரத்தது… அதை அங்கீகரிப்பது போன்ற அவளுடைய கள்ளப்பார்வையும் நாணச் சிரிப்பும் அவனை உசுப்பேற்றியது…
“செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே – என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே – உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே…
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீங்க?”
என்னதான் வீரராகவன் மீதிருக்கும் வன்மம், அவன் காதலைத் திரைப்போட்டு மறைத்தாலும்… தங்கத்தாமரை போல் மனதுக்குப் பிடித்த பெண் ‘மனைவி’ என்கிற உரிமையுடன் தனியறையில்… சுகமான சூழ்நிலையில்… கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்பொழுது, எந்த மூடி போட்டு அவன் தன்னை மறைத்துக்கொள்ள முடியும்… எந்த மூடியும் வேலை செய்ய மறுத்தது. ஆசை அத்துமீறத் தூண்டியது…
“பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கணைக்கும் தவளைத் துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடைத் தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்…
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை…!!!”
கார்காலத்தையொத்த குளிரூட்டப்பட்ட அறையில்… அறையை அலங்கரித்த மலர்கள் மனதை மயக்க… அவன் உலகை மறந்தான். நடுங்கும் விரல்களில் சேலை தலைப்பைச் சுற்றிச் சுற்றிப் பிரித்தபடி தலைகுனிந்து நிற்கும் மதுமதியைப் பார்க்கும் பொழுதே, கார்முகிலன் மன்மத வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை என்று எண்ணி, பூஜைவேலை கரடியாக இருந்த நாகரீகத்தை ஒதுக்கி வைத்தவன், செயலில் குதித்தான். நெருக்கமே காதல் பாஷை என்று உணர்ந்தவன், அவளை நெருங்கி அவள் கரம்பிடித்து மருதாணியால் சிவந்திருந்த அவள் கையில் இதழ் பதித்தபோது அவள் முகமும் சிவந்தது… அந்த அப்பாவி மாணவிக்குக் காதல் பாஷையை, கதிரவன் வந்து முழுமதியை மறைக்கும்வரை இனிக்க இனிக்கக் கற்றுக் கொடுத்தார் அந்த ஆசிரியர்.
காலை கதிரவன் தன் மென்கரங்களைத் திரையிடாத ஜன்னல் கண்ணாடியின் வழியே உள்ளே அனுப்பி மதுமதியைத் தட்டியெழுப்ப… அவள் கண்களைக் கசக்கியபடி எழுந்துகொள்ள முயன்றாள். அவளிடம் அசைவை உணர்ந்த இரு கரங்கள் அவளை இறுக்கிக் கொள்ள, அவள் அசையமுடியாமல் மூச்சு முட்டினாள்.
“மா…மா… என்ன மாமா… விடுங்க நான் போகணும்…” என்றாள் கொஞ்சிப் பேசும் குழந்தையாக மாறி.
“ம்ம்ம்… போ…யேன்… உன்னை யார் தடுத்தது…?” என்று ராகம் போட்டு கூறியபடி அவன் பிடியை இன்னும் இறுக்கிக் கொள்ள… அவள் போலியாக விலக… அவன் சில்மிஷ விளையாட்டுகளை ஆரம்பித்தான். மேலும் அரை மணிநேர விளையாட்டுக்குப் பிறகு அவள் அவனிடமிருந்து விடுபட்டு, குளித்துத் தயாராகிக் கீழே வந்தாள். அவளுக்கு அங்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
Comments are closed here.