உயிரைத் தொலைத்தேன் – 22
6405
0
அத்தியாயம் – 22
கௌசல்யாவும் வீரராகவனும் லக்ஷ்மிபுரத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று, வீட்டில் உதவியாக இருந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் காப்பிக் கொண்டுவரச் சொல்லி… அவர்களுக்குக் கொடுத்து உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தார் தர்மராஜ்.
“அம்மா… அப்பா… வாங்க… வாங்க… எப்பம்மா வந்தீங்க…? ரொம்பநேரம் ஆச்சா…?” என்றபடி மகிழ்ச்சியுடன் புள்ளிமானாய் துள்ளிவரும் மகளைப் பார்க்கும்பொழுது தாய்க்கு மனம் நிறைந்தது.
‘பரவால்ல… முகிலன் மதுவிடம் நன்றாகத்தான் நடந்துகொள்கிறான் போலிருக்கு…’ என்று நினைத்தபடி
“இப்போதான்டா வந்தோம்… நீ எப்படியிருக்க…? ” என்று கேட்டாள் கௌசல்யா.
“நல்லா இருக்கேன்..மா… இருங்க உங்களுக்கு காப்பி எடுத்துட்டு வர்றேன்…” என்றவளைத் தடுத்து,
“இல்லம்மா… நாங்க வந்தபோது செல்லம்மா பெரியம்மா இங்கதான் இருந்தாங்க. காப்பிப் போட்டுக் கொடுத்தாங்க… குடித்துவிட்டோம். சரி… முகிலன் எங்க…?”
“மாமா குளிச்சிட்டு இருக்காங்கம்மா… இப்போ வந்திடுவாங்க…” என்றாள்.
அங்கிருந்த அனைவருக்குமே முகிலன் வந்ததும் எப்படி நடந்துகொள்ளப் போகிறான் என்கிற கவலை இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அதை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளாமல் சகஜமாகப் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
மாடிப்படியில் நடந்துவரும் காலடி ஓசை அனைவரது கவனத்தையும் ஈர்க்க… அவர்கள் திரும்பிப் பார்க்கும் நொடி, தாயின் கையைப் பிடித்தபடி நின்றிருந்த மதுமதியை அந்தக் குரல் அதட்டியது…
“மதி…”
கார்முகிலனின் அழுத்தமான குரல் அங்கிருந்த அனைவரையும் கலங்கடிக்க, மதுமதி மனவலியுடன் தாயிடமிருந்து விலகி நின்றாள்.
“யார் இவங்க…? எதுக்கு இங்க வந்திருக்காங்க…?” என்றான் கடுகடுத்த முகத்துடன். அவனுடைய கேள்வி அனைவரையும் திகைக்க வைத்தது.
“முகிலா… என்னடா இது… வீடு தேடி வந்தவங்களை எதுக்குடா இப்படிக் காயப்படுத்துற…?” என்றார் தர்மராஜ்.
“சார்… இவங்க எதுக்கு இங்க வந்து என்னோட நிம்மதியைக் கெடுக்குறாங்க…?” என்றான் அவனும் கோபம் குறையாத குரலில்.
“நேற்றுதான் முகிலா உனக்குக் கல்யாணம் முடிந்திருக்கு… இன்னிக்கு நீ உன் மாமியார் வீட்டிற்கு விருந்துக்குப் போகணும். அதுதான் முறை…” என்றார்.
“மாமியார் வீடா…! எனக்கு அப்படி எந்தச் சொந்தமும் இல்லை. இவங்களை முதலில் இடத்தைக் காலி பண்ணச் சொல்லுங்க…” என்றான் கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி.
கௌசல்யா, வீரராகவனின் முகம் கறுத்துவிட்டது. மதுமதியின் மனம் பெற்றோருக்காக அழுதது. ஆனால் அவள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.
“உன்னோட விருப்பத்தை மட்டும் பார்க்க முடியாது… நீ இப்போ தனிமனிதன் இல்லை. உன்னை நம்பி ஒரு பெண் வந்துவிட்டாள். அவள் விருப்பத்துக்கும் நீ மதிப்புக் கொடுத்தாக வேண்டும். சும்மா நீ பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் என்று சொல்லுவதை விட்டுவிட்டுக் கிளம்புடா…” என்றார் தர்மராஜ் அதட்டலும் அக்கறையுமாக.
“சார்… இந்த விஷயத்துல என்னை நீங்க ரொம்பச் சங்கடப்படுத்துறீங்க. என்னால என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் இருப்பேன். அவளுக்குப் பிடித்தால் என்னோடு இருக்கட்டும். இல்லையென்றால் இப்பொழுதே அவள் அப்பா அம்மாவுடன் கிளம்பட்டும். நான் தடுக்கவில்லை…” அவன் மதுமதி மீது சிறிதும் அக்கறையற்றவானாகப் பேசிய விதத்தில் மதுமதிக்கு அழுகைப் பீறிட்டது. அவள் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று, தோற்று விம்மினாள்.
தாயுள்ளம் தவித்தது… மகளைச் சமாதானம் செய்யத் துடித்தது. ஆனால் கொலைவெறியுடன் எதிரில் நிற்கும் தம்பியின் கத்தி போன்ற பார்வை, அவளை அசையவிடாமல் தடுக்க… அவள் நெருப்பில் நிற்பவள் போல் நிலைகொள்ளாமல்,
“போகலாம்…” என்றாள் கணவனிடம்.
“கொஞ்சம் இரும்மா…” என்று கௌசல்யாவைத் தடுத்த தர்மராஜ், கார்முகிலனிடம் “என்னடா உனக்கு அவ்வளவு பிடிவாதம்… நேற்று தாலிக் கட்டிய பெண்ணை இன்றைக்குப் பிறந்தவீட்டுக்குப் போனால் போகட்டும்… என்று அலட்சியமாகப் பேசுகிறாயே… என்ன துணிச்சல்டா உனக்கு…! அந்தப் பெண் இல்லாமல் உன்னால் வாழ்ந்துவிட முடியுமா…?” என்று கேட்டுவிட்டார் ஆற்றாமையுடன்.
“ஏன் முடியாது…? நான் எப்பவோ அனாதையாக்கப்பட்டவன். தனிமையும் துயரமும் எனக்குப் பழகிப் போன விஷயம்… நேற்று என் வாழ்க்கையில் வந்த மதுமதி இன்றைக்கு இல்லாமல் போய்விட்டால்… என்ன பெரிதாக நான் பாதிக்கப்பட்டுவிடப் போகிறேன்…!” என்று துயரம் நிறைந்த குரலில் அவன் சொல்லும்போது கௌசல்யா மதுமதி இருவருமே தேம்பிவிட்டார்கள்.
வீரராகவனின் கண்களும் பனித்தன. தர்மராஜ் மட்டும் விரைப்புடன் நின்றார். அவன் மதுமதியின் பக்கம் திரும்பினான்…
“மதுமதி… நீ இப்போது ஒரு முக்கியமான முடிவெடுத்தாக வேண்டும்…” என்றான்.
மதி, மதுமதியாகிவிட்டதை அவள் உணர்ந்தாலும்… அவன் நெஞ்சில் உள்ள ரணம் தெரிந்தவள் என்பதால் பொறுத்துக்கொண்டு,
“சொல்லுங்க மாமா…” என்றாள் அன்பு நிறைந்த குரலில்.
“உன் அப்பாவிற்கும் எனக்கும் சமாதானம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை… உனக்கு நான் வேண்டுமா…? அல்லது உன் அப்பா வேண்டுமா…? இப்பொழுதே முடிவு செய்… உனக்கு உன் பெற்றோர் தான் முக்கியம் என்றால்… தாராளமாக நீ இப்பொழுதே உன் பெற்றோருடன் செல்லலாம். உன்னை யாரும் தடுக்கமாட்டார்கள்” என்றான்.
‘ஒரு மணிநேரத்திற்கு முன் தன்னிடம் குழைந்த அதே கார்முகிலன் தானா இவன்’ என்கிற சந்தேகம் கூட மதுமதிக்கு வந்தது… அந்தளவு அவன் குரல் இளக்கம் இல்லாமல் கடினப்பட்டிருந்தது. ஆனாலும் மதுமதிக்கு அவனை விட்டுக்கொடுக்க முடியவில்லை. அவன் பேசி முடிப்பதற்குள் அவனை நெருங்கி அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டு,
“உங்களை விட்டுவிட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் மாமா… எனக்கு நீங்கதான் முக்கியம்…” என்றாள் அழுகுரலில்.
அவன் முகம் மிருதுவானது. அவன் தன் கரத்தைப் பிடித்திருந்த மதுமதியின் கரங்களைத் தன்னுடைய மறுகரத்தால் ஆதரவாக அழுத்தினான். இதுவரை அவனுடைய கோப வார்த்தைகளால் காயப்பட்டிருந்த அவள் மனம் நொடியில் ஆறுதலடைந்து லேசானது.
அவன் வீரராகவனையும் கௌசல்யாவையும் வெற்றிப் பார்வைப் பார்த்தபடி, மனைவியின் பிடித்த கையை விடாமல் உள்ளே அழைத்துச் சென்றான். அவனுடைய வெற்றி அவர்களையும் மகிழ்ச்சிகொள்ளச் செய்ததை அவன் அறியவில்லை. ‘எப்படியாவது அவன் மனம் ஆறுதலடைந்தால் போதும்…’ என்றுதான் அந்த இரு உள்ளங்களும் நினைத்தன.
“நீங்க வருத்தப்படாதீங்க சார். கௌசல்யா… நீயும் கவலைப்படாதம்மா… இந்தப் படவா இன்னும் எத்தனை நாள் இப்படி ஆட்டம் போட போகிறான்…” என்றார் தர்மராஜ்.
“பரவால்ல சார்… மதுவும் முகிலனும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டுச் சந்தோஷமா இருந்தாலே எங்களுக்குப் போதும். அவன் மனதில் உள்ள காயம் ஆறட்டும். அதுவரை நாங்கள் பொறுமையாக இருப்போம்…” என்றார் வீரராகவன்.
“பெரியவர்கள் இல்லாத வீடு. ரெண்டு பேருமே சின்னப் பிள்ளைகள். நீங்க கொஞ்சம் பார்த்துக்கணும்…” என்றாள் கௌசல்யா.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்மா… நீ கவலைப்படாதே…” என்று அவர்களை ஆறுதல்படுத்தி அனுப்பி வைத்தார் தர்மராஜ்.
# # #
கார்முகிலனுக்கு மதுமதியைப் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. அவளுடைய பெற்றோரை அவமதித்து அனுப்பியதற்காக இவள் நிச்சயம் அவன்மீதுக் கோபம் கொள்வாள் என்று எதிர்பார்த்தவனின் எண்ணத்தைப் பொய்யாக்கி… மதுமதி மலர்ந்த முகத்துடன் அவனுக்குக் காஃபி கலந்து கொடுத்தாள்.
“மாமா… இந்தாங்க மாமா காஃபி… நல்லா இருக்கா சொல்லுங்க. ஃப்ரிட்ஜ்ல மாவு இருக்கு… இட்லி பண்ணிக்கலாமா…? என்ன சட்னி உங்களுக்குப் பிடிக்கும்…?” என்று சகஜமாகப் பேசும் மதுமதி மீதான அவனுடைய காதல் பலமடங்கு பெருகியது.
“மதி…”
“என்ன மாமா…?”
“உனக்கு என்மீதுக் கோபம் இல்லையா…?”
“இல்லையே…” அவள் தோள்களைக் குலுக்கி அழகிய சிரிப்புடன் சொன்னாள்.
அவன் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். பிறகு கேட்டான்,
“உனக்கு உன் அம்மா அப்பாவைப் பிடிக்காதா…?”
“பிடிக்குமே…” என்று உடனடியாகப் பதில் சொன்னவள் தொடர்ந்து, “ஆனால் அவங்களைவிட உங்களை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்குமே மாமா…” என்றாள்.
“மதி…” என்றபடி கையிலிருந்த காஃபி டம்ளரை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, அவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். அவள்தான் தன்னுடைய உலகம், சொர்க்கம் என்று அவனுக்குத் தோன்றியது.
“மதி…” அவன் கிசுகிசுப்பாக அவள் காதில் அழைத்தான்.
“ம்ம்ம்… என்ன மாமா…”
“ஐ லவ் யூ..டி செல்லம்…”
“நானும் தான் மாமா…” அவளும் முணுமுணுப்பாகச் சொன்னாள்.
“என்ன நீயும்…?”
“அதான் மாமா… நீங்க சொன்னீங்களே…”
“நான் என்ன சொன்னேன்…?”
“மா…மா…” அவள் ராகம் போட்டாள்.
என்னவோ ‘லவ்’ என்கிற வார்த்தை, சொல்லக்கூடாத வார்த்தை என்பது போலவும், அதைப் பிடிவாதமாக அவன் அவளைச் சொல்லச் சொல்கிறான் என்பது போலவும், கூச்சப்பட்டு அவள் கொஞ்ச… அவன் உண்மையாகவே பிடிவாதம் பிடித்தான்.
“மாமாவா… நான் எப்போ மாமான்னு சொன்னேன்…” என்றான் இடக்காக.
“ஐயோ மாமா… அது இல்ல…”
“வேற எது…? நீதான் சொல்லேன்…”
“ஐ லவ் யூ ட்டூ… மாமா…” என்று சொல்லிவிட்டு அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள, அவன் சத்தமாகச் சிரித்தான்.
“படிச்சப் பொண்ணு… இதைச் சொல்ல இவ்வளவு வெட்கப்படறியே…!” என்று அவன் வம்பிழுக்க,
“என்ன மாமா நீங்க… படிச்சா வெட்கம் வராதா… போங்க மாமா…” என்றாள் அவள்.
வார்த்தைக்கு வார்த்தை அவள் ‘மாமா’ போடுவது அவனுக்கு இனம்புரியாத இன்பத்தைக் கொடுத்தது. இந்த இன்பம் வாழ்வின் எல்லைவரை தனக்கு வேண்டும் என்று எண்ணினான்.
Comments are closed here.