Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 23
5002
0
அத்தியாயம் – 23
“என்ன மாமா… இதையெல்லாம் நீங்க ஏன் மாமா செய்றீங்க… நான் செய்யமாட்டேனா…?”
“நேற்றுதான் நமக்குக் கல்யாணம் முடிஞ்சிருக்கு… இன்னிக்கு நாம விருந்துக்குப் போயிருக்கணும். நம்ம சூழ்நிலை வேற மாதிரி இருக்கு. அதான், நானே உனக்கு விருந்து சமைக்கிறேன்…” என்று சொல்லியபடி, கைதேர்ந்த சமையல்காரனைப் போல் வெங்காயத்தை அதிவேகமாகமாகவும் சீராகவும் வெட்டிக் கொண்டிருந்தான் கார்முகிலன்.
“நமக்கு விருந்து…! நாமே நமக்கு விருந்தைச் சமைத்து… நாமே சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமா…? மாமா… உங்க ஐடியா சூப்பர் மாமா…” என்று சொல்லியபடி, ஒரு காரட்டைக் கையில் எடுத்துக் கடித்தாள் மதுமதி.
“ஹேய்… நக்கல் பண்றியா…! அதுசரி… ‘நாம் சமைக்கிறோம்…’ என்று நீ எதுக்கு உன்னையும் சேர்த்துக்குற… இங்க சமைக்கிறது நான்தான் அம்மணி… நீங்க சமையலறை மேடைல உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்குறீங்க…” என்றான்.
“நான் செய்யமாட்டேன்னு சொல்லலையே மாமா… நீங்கதான் என்னை நம்பி சமையலறையைக் கொடுக்க மாட்டேங்கிறீங்க…”
“என்னது… கொடுக்க மாட்டேங்கிறேனா…? அதெல்லாம் இல்லை கண்ணு… இன்றைக்கு ஒருநாள் மட்டும் தான்… நாளையிலிருந்து சமையலறை உன் பொறுப்பு தான்… ” என்று சொன்னவன் பின் முணுமுணுப்பாக,
“விட்டால் சமையல் வேலையை நம்ம தலையிலேயே கட்டிவிடுவா போலிருக்கே..!” என்றான்.
“தாத்தா எனக்கு அப்படித்தான் ஐடியா கொடுத்திருக்கார் மாமா…” என்றாள் மதுமதி அவனுடய முணுமுணுப்பிற்குப் பதில் கொடுப்பவளாக…
“என்னது தாத்தாவா…! யார் அது…?”
“தர்மராஜ் தாத்தா தான் மாமா…”
“தர்மராஜ் சார்… உனக்குத் தாத்தாவா…! இது எப்போதிலிருந்து…?”
“இன்னிக்குக் காலையிலிருந்துதான் மாமா…”
“ஓஹோ… அவர்தான் அப்படிக் கூப்பிடச் சொன்னாராக்கும்…” அவன் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“ஆமா மாமா… அவர் உங்களுக்கு அப்பா மாதிரியாம்… அதனால் என்னைத் தாத்தான்னு கூப்பிடச் சொன்னார்.” என்றாள்.
“எனக்கு அப்பான்னா உனக்கு மாமாதானேடி… அது என்ன தாத்தா…!” என்றான், அவன் உண்மையில் அவர்களுடைய பழைய உறவுமுறையை மறந்துவிட்டவனாக…
“என்னது…! உங்க அப்பா எனக்கு மாமாவா…? ஹா…ஹா… மாமா… உங்க அப்பா எனக்குத் ‘தாத்தா’ மாமா… உங்க அப்பாதானே என் அம்மாவுக்கும் அப்பா…” என்று சொல்லிவிட்டாள். சொன்ன பிறகுதான் உணர்ந்தாள் அவள் கௌசல்யாவைப் பற்றி முகிலனிடம் பேசியிருக்கிறாள் என்று.
‘ஸ்ஸ்ஸ்… போச்சு… மாமா இவ்வளவு நேரமும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். அதைக் கெடுத்துவிட்டோமே… கத்தப் போகிறாரே…’ என்று நினைத்தாள். ஆனால் அவனோ அவளுடைய பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்தான்.
பேச்சும் சிரிப்புமாகச் சமையல் வேலைகள் எல்லாம் முடிந்தது… தர்மராஜ் நாசுக்காக ஏதோ வேலையிருப்பது போல் சொல்லிவிட்டுக் காலையிலேயே கழண்டு, தேனிக்குச் சென்றுவிட்டதால்… அவர்கள் இருவரும் மட்டும்தான் அந்த வீட்டிற்கு ராஜா, ராணி, மந்திரி, சேவகன் எல்லாம்…
அவன் மதுமதியை அமரவைத்துத் தன் கைவரிசையில் விதவிதமாகச் சமைத்திருந்த உணவுவகைகளைப் பரிமாறினான்.
“நீங்களும் உட்காருங்க மாமா… ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாம்…” அவள் அழைக்க…
“முடியாது… இன்றைக்கு நான் உனக்குப் பரிமாற… நீ முதலில் சாப்பிட வேண்டும்…” என்று அவன் பிடிவாதம் பிடிக்க… அதை மறுத்து அவள் கெஞ்ச… “நீ ஊட்டி விட்டால் சாப்பிடுகிறேன்…” என்று அவன் கொஞ்ச… காதலும், பாசமும், நெகிழ்ச்சியுமாக அன்றைய பொழுது இனிமையாகக் கழிந்தது…
# # #
“மதி… நீ செய்றது ரொம்ப அநியாயம்டி… இது நல்லா இல்ல சொல்லிட்டேன்…”
“என்ன மாமா நல்லா இல்ல… இப்போ ஒழுங்கா காலேஜ் கிளம்புறீங்களா இல்லையா… ம்ம்ம்?” அவள் மிரட்டினாள்.
“ஏன்டி இப்படி மிரட்டுற… இன்னிக்கு ஒருநாள் மட்டும் வீட்டுல இருந்துட்டு நாளைக்குப் போறேனே…”
“எதுக்கு…? நாளைக்குச் சனிக்கிழமை… நாளானைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று சாக்குச் சொல்லவா…? கிளம்புங்க மாமா…”
“ஹை… இது கூட நல்ல ஐடியாவா இருக்கே… நாளைக்குச் சனிக்கிழமை லீவ்… பேசாமல் திங்கக்கிழமையே நான் காலேஜ்ல ஜாயின் பண்ணிக்கிறேனே மதி… ஓகே சொல்லுடி செல்லம்…”
“ஏற்கனவே பதினைந்து நாள் லீவ் போட்டுட்டு, டூர் அடிச்சிட்டு வந்தது பத்தாதா மாமா…?”
“பத்தலையேடி…” என்று அவன் விஷமமாகப் பேச…
“அடி…” என்று கையில் இருந்த முருங்கைக்காயால் செல்லமாக ஓர் அடி கொடுத்தாள்.
“ஐயோ… அம்மா… வலி தாங்கமுடியலையே… என்னால இன்னிக்கு காலேஜ் போக முடியாதே…” என்று அவன் சத்தமாகக் கூச்சல் போட்டு நடித்து, ஊரைக் கூட்ட… அவள் பதறினாள்.
“மாமா… ஐயோ… சத்தம்… சத்தம் போடாதீங்க… வாயை மூடுங்க மாமா… மா…மா….” என்று அவள் அவன் வாயை மூட முயற்சிக்க… அவன், அவள் விரல்களில் இதழ்பதிக்க… அங்கே ஒரே ‘இச்சுத்தா… இச்சுத்தா’ என்றாகிப் போனது.
“என்ன மாமா… உங்களோட ஒரே ரோதனையா போச்சு… சின்னப்பிள்ளை ஸ்கூல் போக அடம் செய்ற மாதிரி செய்றீங்க… ஒழுங்கா காலேஜ் கிளம்புங்க மாமா…” என்று அவனை வலுக்கட்டாயமாக அன்று கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள் மதுமதி.
# # #
நீலவேணிக்கு உடல்நிலை பழையபடித் தேறிவிட்டது. அவள் உடலில் என்றைக்குப் பழைய தெம்பு வந்ததோ அன்றிலிருந்தே அவள் கார்முகிலனைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள். அவனைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தாள். அப்போது அவன் வடஇந்தியாவில் இருந்ததால்… கைப்பேசி எண்ணை தற்காலிகமாக மாற்றியிருந்தான். அதனால் அவளால் அவனோடு தொடர்புகொள்ள முடியவில்லை.
கார்முகிலன் எப்பொழுதுமே நீலவேணியைக் காரணமில்லாமல் கைப்பேசியில் அழைக்க மாட்டான். அதனால் அவன் தானாகவும் அவளுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதோடு மதுமதியின் அருகாமை அவன் சிந்தையை மயக்கிவிட்டதால், அவன் வேறு யாரைப் பற்றியும்… எதைப் பற்றியும் நினைக்கவே இல்லை.
கார்முகிலனோடு பேசாமல் நீலவேணிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் ஆனது. அவள் விடாமுயர்ச்சியுடன் அவனுடைய கைப்பேசியைத் தொடர்புகொள்ள முயன்று கொண்டிருந்தாள். இன்று இணைப்புக் கிடைத்துவிட்டது.
நீலவேணியின் எண்ணைத் திரையில் பார்த்த கார்முகிலன் உற்சாகமாக…
“ஹேய்… நீலா… என்ன இத்தனை நாளா போனையே காணோம்… கல்யாணத்துக்குக் கூட நீ வரல… என்ன ஆச்சு உனக்கு…?” என்றான்.
“நான் ஃபோன் பண்ணல… கல்யாணத்திற்கு வரல சரி… ஆனால் நான் ஏன் கல்யாணத்திற்கு வரல… எதுக்கு ஃபோன் பண்ணலைன்னு… அக்கறையோட நீங்க எனக்கு ஃபோன் பண்ணி விசாரிச்சீங்களா… இப்ப கூட நான் தானே உங்களுக்கு ஃபோன் பண்ணினேன்…” என்றாள் நீலவேணி கோப குரலில்.
“நீலா… என்ன நீலா ஒரு மாதிரி பேசுற…?” என்றான் கார்முகிலன் வியப்புடன். நீலவேணி இது போல் அவனிடம் பேசியதே இல்லை.
“நான் எப்பொழுதும் போலத் தான் இருக்கேன்… நீங்கதான் மாறிட்டீங்க…”
“ப்ச்… என்ன நீலா ஆச்சு உனக்கு…?”
“கல்யாணம் ஆனதும்… இந்தப் பழைய ஃபிரண்ட் மறந்து போச்சுல்ல…”
“ச்ச… ச்ச… என்ன நீலா… நீ இப்படி எல்லாம் பேசுற… நான் ஊர்ல இல்ல நீலா…”
“எங்க போய்ட்டீங்க…?
“நானும் மதியும் நார்த் இண்டியா போயிட்டு நேற்றுதான் வந்தோம்… இன்னிக்கு நீ கால் பண்ணிட்ட…”
“நார்த் இண்டியா போனா எனக்கு ஒரு கால் பண்ணக் கூடாதா…? உங்க கல்யாணத்துக்கு நான் வரலையே… எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்க கூடத் தோணலையா உங்களுக்கு…? ” என்று கேட்டுவிட்டு தேம்பினாள்.
உண்மையில் அவன் மதுமதியோடு தேன்நிலவு கொண்டாடிவிட்டு வந்திருக்கிறான் என்கிற செய்தியை அவன் பேச்சில் புரிந்து கொண்டவளுக்கு, மனம் தகித்தது. அந்த வேதனைத் தங்க முடியாமல் தான் அழுதுவிட்டாள். ஆனால் அதை எப்படி அவனிடம் சொல்ல முடியும்…
“நீலா.. ப்ளீஸ்… அழாத… நான் வேணுன்னு உன்னை அவாய்ட் பண்ணல… சரி சொல்லு… என்ன ஆச்சு… ஏன் நீ கல்யாணத்திற்கு வரல…?” என்றான்.
“எனக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லை முகிலன்… எழுந்து நடக்கக் கூட முடியல… இப்போதான் பரவால்ல…” என்று அவனுக்கு விளக்கம் கொடுத்தாள். அவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“முகிலன்… நான் உங்களைப் பார்க்கணும்…”
“என்ன விஷயம் நீலா…?”
முன்பு கூட அவள் அவனைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் அவன் காரணம் கேட்கத்தான் செய்வான். அப்போது ஏதாவது காரணம் கண்டுபிடித்து அவனுக்குச் சமாதானம் சொல்லித்தான் நீல அவனை வரவழைப்பாள். ஆனால் இன்று அவன் காரணம் கேட்டதும், நீலாவின் கோபம் காரணமே இல்லாமல் மதுமதியின் மீது திரும்பியது. அதை அப்படியே உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டு
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… நேர்ல சொல்றேன் வாங்க…” என்றாள்.
“சரி நீலா… நான் இப்போ காலேஜ்ல இருக்கேன்… நாளைக்குக் காலைல சித்தி விநாயகர் கோவிலுக்கு வர்றேன். நீயும் அங்க வந்துவிடு…” என்றான்.
“ம்ம்ம்… சரி… மறந்துடாதீங்க… காலைல பத்துமணிக்கு நான் வந்துடுவேன்… லேட் பண்ணிடாதீங்க…” என்று எச்சரித்துவிட்டுப் போனை அணைத்தாள்.
Comments are closed here.