Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 26
4554
0
அத்தியாயம் – 26
நீலவேணியின் பாட்டி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரமும் கார்முகிலனால் அதிகநேரம் மதுமதியோடு செலவிட முடியவில்லை. கல்லூரிக்கு வழக்கத்தை விட விரைவாகக் கிளம்பிப் போய்விடுவான். போகும் வழியில் நீலவேணியை அவள் வீட்டில் சென்று பார்த்துவிட்டுக் கல்லூரிக்குச் செல்வான். அதே போல் மாலை வீட்டிற்கு வரும் பொழுதும் அவளைச் சென்று பார்த்துவிட்டு அவளோடு சிறிதுநேரம் செலவழித்துவிட்டுத் தாமதமாகத்தான் வீடு திரும்புவான்.
மதுமதி அவனுடைய நடவடிக்கையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தாலும், கார்முகிலனைத் தவறாக நினைக்கவில்லை.
“மாமாக்கு காலேஜ்ல வேலை அதிகம் போலிருக்கு…” என்று நினைத்துக் கொண்டாள்.
அவனும் மனதில் விகல்பம் இல்லாமல், நட்புக்குத் தோள் கொடுக்கும் நல்ல தோழனாக… தோழியின் தனிமைத் துயரைத் துடைத்தெறிய முயன்று கொண்டிருந்தான். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களின் பார்வைக்கு அது தவறாகப்பட்டது. குறிப்பாக ஜீவித்தாவின் பார்வைக்கு…
அவள் தன் தோழிக்கு நல்லது செய்வதாக நினைத்து அவளை எச்சரித்தாள்.
“ஹலோ…”
“சொல்லு ஜீவி…”
“மது… நான் சொல்றேன்னு வருத்தப்படாதடி… உன் அருமை மாமா செய்றது எதுவும் சரியில்லை…”
“என்னடிச் சொல்ற…? ”
“நான்தான் முதல்லேயே சொன்னேனே மது… உன் மாமா தினமும் அந்த நீலவேணி வீட்டுக்குக் காலையிலேயும் சாயந்திரமும் தவறாம வந்து கொண்டிருக்கிறார். நீ எதையும் கண்டுக்காம இருக்க…”
ஜீவிதா சொன்ன விஷயங்கள் மதுமதிக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது…
‘மாமா இதைப்பற்றி நம்மிடம் எதுவுமே சொல்லவில்லையே…!” என்று நினைத்தாள். ஆனாலும் தோழியிடம் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லாமல்,
“ப்ச்… என்ன ஜீவி… நான்தான் அன்றைக்குச் சொன்னேனே… மாமா எந்தத் தப்பும் செய்ய மாட்டாங்கன்னு…” என்றாள்.
“ஆமாடி… சொன்ன… உன் மாமா நல்லவராகவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா அந்த நீலவேணி சாதாரண ஆள் இல்லை. மிக மோசமான பெண். அவளால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்று எங்கள் தெருவே சொல்லும்… நானே பலமுறை பார்த்திருக்கிறேன். அவள் வீட்டிற்கு விதவிதமான ஆண்கள் வந்து போவார்கள். அப்படிப்பட்டவளின் பிடியில் இன்று உன் மாமா சிக்கியிருக்கார். அவள் ஏதாவது ஜாலம் செய்து உன் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவாளோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது…”
ஜீவிதாவின் பேச்சிளிருந்த உண்மை மதுமதிக்குப் புரிந்தது. ஆனாலும், அவளால் கார்முகிலன் வேறு பெண்ணிடம் மயங்கிவிடுவான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை… அவள் மனதில் அவன் மீதான நம்பிக்கை ஆணியடித்தது போல் பதிந்து போயிருந்தது.
“ஜீவி… யார் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் என் மாமா தவறு செய்ய வாய்ப்பே இல்லை… அவர் என்னைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்க மாட்டார். நீ கவலைப்படாதே…”
“மது…!”
“அதோடு… இனி நீ அவரை வேவு பார்க்கும் வேலையையும் விட்டுவிடு…” அழுத்தமாகச் சொன்னாள்.
மென்மையான மதுமதி தன் கருத்தில் உறுதியாக இருப்பதையும்… அதை அமைதியாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்துவதையும் ஜீவிதா ஏற்கனவே பலமுறை பார்த்திருப்பதால்…
“சரிடி… உன் விருப்பம்…” என்று சொல்லிவிட்டாள். அதன்பிறகு அவள் கார்முகிலனைக் கவனிப்பதைக் குறைத்துக் கொண்டாள்.
என்னதான் தோழியை அதட்டி அடக்கிவிட்டாலும்… அவள் சொன்ன விஷயங்கள் மதுமதியை உறுத்தத்தான் செய்தது. அந்த உறுத்தலை கார்முகிலன் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கை வென்றுவிட ‘இந்த விஷயத்தைப் பற்றி மாமாவாகச் சொல்லும்போது சொல்லட்டும்… நாமாக எதையும் கேட்க வேண்டாம்…’ என்று முடிவு செய்துவிட்டாள்.
# # #
அன்று மாலை, முகிலன் நீலவேணியின் வீட்டிற்கு வந்த போது அவள் வெகுவாகக் கலங்கியிருந்தாள்.
“என்ன ஆச்சு நீலா… ஏன் ஒரு மாதிரி இருக்க…?” என்றபடி உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான்.
“………….” அவள் எதுவும் பேசாமல் அவனுக்கு எதிரில் வந்தமர்ந்தாள்.
“உடம்பு ஏதும் சரியில்லையா நீலா…?”
“அதெல்லாம் இல்ல… நீங்க ஏன் காலையில வரல…?”
“இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் கிளாஸ் இருந்தது… அதான் நேரா காலேஜ்ஜூக்குப் போயிட்டேன்… ஏன் என்ன ஆச்சு…?”
“முகிலன்… நேற்று நீங்க இங்கிருந்து போனதுக்குப் பிறகு அந்த திலீபன் இங்கு வந்தான்…”
“திலீபனா…! யார் அவன்…?”
“…………” அவள் பதில் சொல்லாமல் தலைகுனிந்தாள். அவனுக்குப் புரிந்தது… இருந்தாலும் நீலவேணி சொல்லாமல் தானாக எதையும் முடிவு செய்துகொள்ளக் கூடாது என்று நினைத்து,
“சொல்லு நீலா… எதுக்குத் தயங்குற…?” என்று கேட்டான்.
“அது… வந்து… முகிலன்…” அவள் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தயங்கித் தயங்கி சொன்னாள்…
“அவன் முன்பெல்லாம் அடிக்கடி இங்கு வருவான்…” அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை, தலைகுனிந்தபடியே சொன்னாள்.
“ஓ…” அவன் புரிந்து கொண்டதற்குச் சான்றாக ‘ஓ’ என்றான்.
“நேற்று பாட்டி இறந்ததற்குத் துக்கம் விசாரிக்க வந்ததாகச் சொல்லிக் கொண்டு வந்தவன், இங்கிருந்து கிளம்பவே மாட்டேன் என்று சொல்லிவிட்டான்…”
“…………..”
“நான் பழையபடி அவனோடு இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினான்” அவள் கண்கள் கலங்கின.
“…………”
“நான் மறுத்து அவனை அனுப்பிவிட்டேன். முறைத்துக்கொண்டே போய்விட்டான்”
“………..”
“இன்று காலை வேறொருவன் வந்தான். அவனை நான் பார்த்தது கூட இல்லை… அவனுக்குப் பாட்டியைத் தெரியும் என்று சொன்னான்… உள்ளே அனுமதித்தேன். துக்கம் விசாரித்தான். பிறகு என்னை விலை பேச ஆரம்பித்துவிட்டான்” அவள் முகத்தை மூடிக்கொண்டு தேம்பினாள்.
கார்முகிலனின் முஷ்டி இறுகியது. அவன் மட்டும் இப்போது இவன் கையில் கிடைத்தான்… கையை முறுக்கி ஒரே குத்தில் தாடையை உடைத்துவிடுவான்.
“நான் அவனைத் திட்டி அனுப்பிவிட்டேன்… இன்று இரவு மீண்டும் வருவேன் என்று மிரட்டிவிட்டுப் போயிருக்கிறான்…” என்றாள் லேசான நடுக்கத்துடன்.
உண்மையிலேயே அவள் மிரண்டு போயிருந்தாள். அவளுக்கு உடல் வலு மிகக் குறைவு. ஓர் ஆணிடம் போராடித் தன்னைக் காத்துக்கொள்ளும் சக்தி அவளிடமில்லை என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். அக்கம்பக்கத்திலும் உதவி கிடைக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அவளுக்கு இப்போதிருக்கும் ஒரே பாதுகாப்பு, துணை எல்லாம் கார்முகிலன் மட்டும் தான்.
அவனுக்கும் அது புரிந்தது. அதனால் தான் அன்று நீலவேணியின் வீட்டிலேயே அவளுக்குப் பாதுகாப்பாகத் தங்கிவிடுவது என்று முடிவு செய்தான். நீலவேணியின் பாதுகாப்பைப் பற்றி யோசித்தவன், மதுமதி வீட்டில் தனியாக இருப்பாள் என்பதையும்… அவளுக்குக் கைப்பேசியில் அழைத்து விபரம் சொல்லவேண்டும் என்பதையும் அலட்சியமாக விட்டுவிட்டான்.
மணி எட்டு ஆனது… நீலவேணி தயாரித்துக் கொடுத்த உணவை ஏனோதானோ என்று கொறித்துவிட்டு, எதிரியை ஒரு கை பார்க்க வெறியுடன் காத்துக் கொண்டிருந்தான்.
# # #
‘முன்பெல்லாம் ஆறு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடும் மாமா… இப்போதெல்லாம் எட்டு மணிக்குத் தான் வருகிறார்…’ என்று நினைத்தபடி, வாசல்பக்கம் வந்து கார்முகிலன் வரும் வழியை எட்டிப் பார்த்தாள் மதுமதி. அவன் வருவதாகத் தெரியவில்லை… மீண்டும் வீட்டிற்குள் வந்து டிவியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.
மணி ஒன்பதானது… ‘என்ன இன்னும் மாமாவைக் காணோம்…!’ என்று நினைத்தபடி அவனுக்குக் கைப்பேசியில் அழைத்தாள்… அவனுடைய கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவள் குழம்பினாள்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது… ஒன்பது பத்து… ஒன்பது இருபது… ஒன்பது முப்பது… கார்முகிலனும் வரவில்லை… அவனிடமிருந்து அழைப்பும் வரவில்லை. மதுமதிக்குப் படபடப்பானது…
ஜீவிதா சொன்ன செய்தி நினைவிற்கு வந்து அவள் பதட்டம் இன்னும் அதிகமானது. தோழியைக் கைப்பேசியில் அழைத்தாள்…
“ஜீவி… ”
“ஹேய் மது… என்னடி…?”
“ஜீவி… மாமா இன்னும் வீட்டிற்கு வரவில்லைடி…”
“என்னடிச் சொல்ற?”
“ஜீவி… எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா…?”
“சொல்லுடி… ”
“நீ சொல்லுவியே… அந்த நீலவேணி…”
“ஆமாம்… அவளுக்கென்ன…?”
“இல்ல… மாமா அங்க இருக்காரான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்றியா…?”
“மது…!”
“ஜீவி… என்னை எதுவும் கேட்காத… மாமா அங்க இருக்காரான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லேன் ப்ளீஸ்…”
“சரிடி… ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு…” என்று சொல்லிவிட்டு பால்கனி பக்கம் சென்று பார்த்தாள். நீலவேணி வீட்டுவாசலில் கார்முகிலனின் வண்டி நிற்பது மின்விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது…
“மது… ”
“சொல்லுடி…”
“இங்க தான்டி இருக்கார்…” என்றாள் ஜீவிதா… அவள் குரலில் உண்மையான தோழியின் வருத்தம் வெளிப்பட்டது.
“சரிடி… தேங்க்ஸ்…” என்று சொல்லிக் கைப்பேசியை அணைத்துவிட்ட மதுமதியின் குரல் இறுக்கமாக இருந்தது. அவளுடைய மனநிலை என்ன என்று ஜீவிதாவால் ஊகிக்க முடியவில்லை.
# # #
நீலவேணியோடு பேசிக் கொண்டிருந்தவன் நேரம் போனதைக் கவனிக்கவில்லை. சுவர் கடிகாரம் சத்தமிட்டு ‘மணி பத்து’ என்று நினைவுப்படுத்திய பிறகுதான் மணியைப் பார்த்தான்.
“சரி நீலா… டைமாச்சு… நீ உன் அறைக்குத் தூங்கப் போ… நான் இங்க சோபாவில் படுத்துக் கொள்கிறேன். அவன் வந்தால் நீ வெளியே வர வேண்டாம்… நான் பார்த்துக் கொள்கிறேன்…”
“சரி முகிலன்…” அவள் தன்னறைக்குச் சென்று மறைந்தாள். கார்முகிலன் மதுமதியை மறந்துவிட்டு அவளுக்காக… அவளுடைய பாதுகாப்பிற்காக… அவள் வீட்டில் அன்று தங்கிவிட்டான் என்கிற ஆனந்தத்தை அனுபவித்தபடிக் கட்டிலில் சாய்ந்தாள் நீலவேணி.
‘எப்பவும் லேட் ஆச்சுனா ஃபோன் பண்ணுவாளே… இன்றைக்கு ஏன் பண்ணல…? நானும் நீலாவோடு பேசிக்கொண்டிருந்ததில் மறந்துவிட்டேனே…!’ என்று நினைத்தபடி, சட்டைப் பாக்கெட்டில் இருந்து கைப்பேசியை எடுத்தான் முகிலன். அது சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது…
‘ஆஹா… சார்ஜ் இல்லை போலிருக்கே… ஃபோன் பண்ணி பார்த்துவிட்டுப் பயந்திருப்பாளோ…!’ என்று நினைத்தவன் டிவிக்குப் பக்கத்தில் இருந்த நீலவேணியின் கைப்பேசி சார்ஜரை எடுத்து அவனுடைய கைப்பேசிக்குச் சார்ஜ் போட்டுவிட்டு… சட்டையைக் கழட்டி சோபாவின் ஒரு பக்கம் வைத்தான்.
அதற்குள் கைப்பேசியில் கொஞ்சம் சார்ஜ் ஏறியிருந்தது… அவன் மதுமதியின் எண்ணை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். ரிங் போவதற்குள் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
Comments are closed here.