Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 27

அத்தியாயம் – 27

மதுமதிக்கு ஃபோன் செய்து பேசலாம் என்று முயன்று கொண்டிருக்கும்போது வீட்டின் அழைப்பு மணி அடித்ததும்… கைப்பேசியை அணைத்துவிட்டுக் கதவைத் திறந்த கார்முகிலன், திண்ணை கேட்டுக்கு வெளியே முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்…

அழைப்பு மணியை அடித்ததும், நீலவேணி வந்து கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்தபடி நின்றிருந்த புதியவன்… அவளுக்குப் பதிலாக, வாட்டசாட்டமாக… உடலை இறுக்கிப் பிடித்த பனியனுடன்… கட்டுமஸ்தான தேகத்துடன்… இளம் சிங்கம் போல் ஒருவன் வந்து கதவைத் திறந்ததும் திகைத்தான்.

பின் “சாரி சார்… வீடு மாறி வந்துட்டேன்…” என்று சொல்லியபடி நழுவப் பார்த்தான்.

“ஏய்… அங்கேயே நில்…” என்ற கடுமையான குரல் அவனை அசையவிடாமல் தடுத்தது.

திண்ணை கேட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்த கார்முகிலன், வாசலில் நின்றவனிடம் “நீலவேணியைத் தேடி வந்தியா…?” என்றான்.

“இல்… இல்ல… வந்து… ” என்று தடுமாறினான் அந்தப் புதியவன்.

அடுத்த நொடி கார்முகிலனின் இரும்புக் கரம் அவனை ‘அம்மா… ஐயோ…’ என அலற வைத்தது…

எதிராளி ஓரளவு திடமானவனாகவே இருந்தாலும், கார்முகிலன் ரெண்டு தட்டுத் தட்டியதைத் தாங்கமுடியாமல் சுருண்டான். அவன் மூக்கும் தாடையும் உடைந்து இவன் வெள்ளைப் பனியனை ரத்தக்கறையாக்கியது…

“பொறுக்கி ராஸ்கல்… உன்னை இதுக்கு மேல இந்தப் பக்கம் பார்த்தேன்… கொன்னே போட்டுடுவேன்… ஓடிப் போடா..” என்று விரட்டிவிட்டான்.

இந்தக் காட்சியை ஜன்னல் திரை மறைவில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த நீலவேணியை மகிழ்ச்சியும், துக்கமும் ஒருசேர ஆட்கொண்டது.

கார்முகிலன் தனக்காக இவ்வளவு செய்கிறான் என்கிற மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதே… அவன் தனக்குச் சொந்தமில்லாதவன் என்கிற எண்ணம் அவளைத் துன்புறுத்தியது. அவள் கண்ணீர் விட்டாள்…

நீலவேணியைத் தேடி வந்தவனை அடித்துத் துரத்திவிட்ட பிறகு அமைதியடைந்த கார்முகிலன், கடிகாரத்தைப் பார்த்தான். அது மணி பதினொன்று என்று சொன்னது. அந்த நேரத்தில் மனைவியைக் கைப்பேசியில் அழைத்தான்… அதுவரை தூங்காமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த மதுமதி, கார்முகிலனின் பெயரைச் சொல்லிச் சத்தமிட்ட கைப்பேசியை எடுத்துக் காதுக்குக் கொடுத்து “ஹலோ…” என்றாள்.

“மதி… நீ இன்னும் தூங்கலையா… நான் தேனிலதான் இருக்கேன்… கொஞ்சநேரத்துல வந்துடுவேன்… நீ பயப்படாமல் தூங்கு…” என்று சொன்னவன்,

“சரி…” என்ற மதுமதியின் ஒற்றை வார்த்தைப் பதிலை பெற்றுக்கொண்டு கைப்பேசியை அணைத்தான்.

“சரி நீலா… இனி அந்த நாய் இங்கு வரமாட்டான். நீ பயப்படாமல் தூங்கு… கதவையும் கேட்டையும் பூட்டிக்கொள். யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்க வேண்டாம். ஏதாவது பிரச்சனையென்றால் எனக்குக் கால் பண்ணு… இங்க பக்கத்துல தான் என்னோட நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்களை உடனே வந்து என்னன்னு பார்க்கச் சொல்றேன்… சரியா…” என்று அவளுக்குத் தைரியம் சொல்லிவிட்டு, வீட்டிற்குப் புறப்பட்டான்.

முகம் தெரியாதவன் மீது கொண்டிருந்த கோபம் வடிந்து அமைதியடைந்த மனம் மதுமதியைத் தேடியது. அவள் முகத்தை ஒருமுறை பார்த்தால் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தோன்றியது. உடனே லக்ஷ்மிபுரத்திற்குப் புறப்பட்டான்.

# # #

மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த லயன்ஸ் கிளப் மீட்டிங் முடிய ஒன்பது மணியாகிவிட்டது. அதன்பிறகு நண்பர்களோடு அளவளாவியபடி, கிளப்பில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தை முடித்துக்கொண்டு வீரராகவன் கிளம்பும்போது, டாக்டர் புருஷோத்தமன்…

“டாக்டர்… என்னோட கார் ப்ராப்ளம் பண்ணுது. எனக்கு உங்க கார்ல கொஞ்சம் லிஃப்ட் கொடுக்க முடியுமா…?” என்றார்.

“கண்டிப்பா…” என்று சொல்லித் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்த வீரராகவன், டாக்டர் புருஷோத்தமனை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த போது அந்தக் காட்சியைக் கண்டார்.

நீலவேணியிடம் விடைபெற்ற கார்முகிலன், வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தன் வண்டியில் ஏறி அமர்ந்து அதை உதைத்துக் கிளப்ப முயன்ற போது… வெளியே வந்த நீலா,

“பத்திரமா போயிட்டு வாங்க…” என்றாள்.

“நீ முதல்ல உள்ளே போய்க் கதவைப் பூட்டிக்கொள்…” என்றான் அவன் கட்டளையாக… அவளும் மறுக்காமல் உடனே உள்ளே சென்று கேட்டைப் பூட்டிக் கொண்டாள்.

இவன் வாசலில் நின்றபடியே அவளிடம் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டு வண்டியை ரோட்டுப் பக்கம் திருப்பவும், அந்த கார் சடன் பிரேக் அடித்து நிறுத்தப்படவும் சரியாக இருந்தது…

நீலவேணியின் வீடு இருக்கும் தெரு குறுகலானது என்பதால்… அந்தத் தெருவில் வீட்டு வாசலுக்கும், பொது சாலைக்கும் அதிக இடைவெளி இருக்காது. அதனால் காருக்குள்ளிருந்த வீரராகவனுக்கும், வண்டியில் அமர்ந்திருந்த கார்முகிலனுக்கும் ஒருவருக்கு ஒருவர் நேருக்குநேர் பார்க்க முடிந்தது.

“இந்த நேரத்துல இவன் ஏன் இந்த வீட்டிற்குள் இருந்து வருகிறான்…! யார் அந்தப் பெண்…?” என்று நினைத்தபடி, இரும்பு கேட்டிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த நீலவேணியிடம் பார்வையை செலுத்தினார்.

அவருடைய பார்வை சென்ற திக்கை நோக்கிய கார்முகிலனின் கண்களில், பரிதாபமாக விழித்துக்கொண்டு நின்ற நீலாவின் முகம் சிக்க… ‘கிட்டதட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு முன் தன் நிலையும் இதுதான்…’ என்பது நினைவிற்கு வந்தது. சற்றுமுன் அமைதியடைந்திருந்த அவன் மனதில் கோபத்தீ மூண்டது… அந்தத் தீயில் எண்ணையை ஊற்றுவது போல் அவனைப் பரிதாப நிலைக்கு ஆளாக்கியவரும் அப்போது அவன் கண்முன் காரில் அமர்ந்திருந்தார்.

தனக்குள் மண்டிய கோபத்தை வெளிப்படுத்தும் வழியாக, கண்களில் தீப்பொறியுடன் அவரைப் பார்த்தபடியே… வண்டியின் கிக் ஸ்டார்ட்டரை உதைத்தான். ஒரு கையால் பிரேக்கை அழுத்தி பிடித்துக்கொண்டு மறுகையால் ஆக்ஸ்லேட்டரை உயர்த்த வண்டி பயங்கரமாக உறுமி அவனுடைய கோபத்தை வெளிப்படுத்தியது.

அதற்குமேல் அங்குத் தாமதிக்காமல் மாமனார் காரைக் கிளப்ப, மருமகன் வண்டியை கிளப்பிக் கொண்டு பறந்தான்.

# # #

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வீட்டை அடைந்தவனுக்கு, அந்த நேரத்திலும் கண்களில் தூக்கத்தின் சாயல் சிறிதுமின்றி, மின்விளக்கின் துணையுடன்… தனக்காக தனிமையில் காத்துக் கொண்டிருக்கும் மனைவியின் முகம் பார்த்த பிறகும் கூட… மனதில் மண்டியிருந்த கோபம் சிறிதும் குறையவில்லை.

கடுகடுத்த முகத்திலிருந்தே அவனுடைய மனதைப் படித்துவிட்ட மதுமதி, அவன் உள்ளே வந்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் வரை அமைதியாக இருந்தாள். பிறகு…

“சாப்பாடு எடுத்து வைக்கவா மாமா…?” என்றாள்.

நள்ளிரவு என்றாலும் குளித்துவிட்டு வந்ததும் நன்றாகப் பசி எடுத்ததால் “என்ன இருக்கு…?” என்றான்.

“இட்லி… சப்பாத்தி… ரெண்டும் இருக்கு மாமா… உங்களுக்கு எது வேணும்…” என்றாள்.

உடம்பில் நீர் பட்டதாலும், அவளுடைய அன்பான பேச்சாலும் அவனுக்குள் மூண்டிருந்த தீ சிறிது மட்டுப்பட்டது.

“இட்லி எடுத்து வை வர்றேன்…” என்று சொன்னபடி இரவு உடையில் தலையை நுழைத்து உடலில் மாட்டிக் கொண்டான்.

தன் கைப்பக்குவத்தில் தயாராகியிருந்த மல்லிகை பூ போன்ற இலவம் பஞ்சு இட்லியைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தவனின் மனம்… வீரராகவனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல்,

“யார் மாமா அந்தப் பொண்ணு…? எதுக்கு அவ வீட்டுக்கு அடிக்கடி நீங்க போறீங்களாம்…” என்று கேட்டுவிட்டாள் மதுமதி.

மட்டுப்பட்டிருந்த கோபம் திமுதிமுவென மேலெழுந்தது… அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை முறைத்துப் பார்த்தான்.

‘நாம் நீலவேணியின் வீட்டிலிருந்து கிளம்பும்போது பார்த்தது வீரராகவன் தான். அந்த ஆள் தான் இவளிடம் சொல்லியிருக்கிறார். அப்படியானால் இவள் பெற்றோரோடு தொடர்பில் தான் இருக்கிறாள்… என்ன திமிர் இவளுக்கு…!” என்று அலையலையாக ஊகத்தில் பிறந்த எண்ணங்கள் முட்டிமோத அவன் முகம் பயங்கரமாக மாறியது.

அவன் முகமாற்றத்தைக் கவனித்த மதுமதி அச்சம் கொள்ளவில்லை. துணிந்து அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.

“மாமா… எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது…? நான் என்ன தவறாகக் கேட்டுவிட்டேன்… காலையில் வேலைக்குப் போன நீங்க நைட் பன்னிரண்டு மணிக்கு வந்து நின்றால்… நான் கேள்விக் கேட்கக் கூடாதா?” என்றாள்.

“மதி… இதற்குமேல் எதுவும் பேசாதே…!” என்றான் அவன் கோபத்தை அடக்க முயன்றவனாக…

“அந்தப் பெண் சரியில்லாத பெண்ணாமே…! உங்களுக்கு என்ன அங்கு வேலை…?”

அசராமல் அவள் அடுத்தக் கேள்வியை அழுத்தமாகக் கேட்க, அவனுடைய கோபம் கட்டுக்கடங்காமல் போனது… அடுத்த நொடி அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுப் பறந்து சென்று சுவற்றில் “ட…னார்…” என்று மோதிக் கீழே விழுந்து உருள… தட்டிலிருந்த இட்லியும் சட்னியும் தரையை நாசம் செய்தன.

மதுமதி அவனுடைய கோபத்தில் திகைத்தாள்.

“மாமா…! என்ன… என்ன ஆச்சு…?” அவள் திணறலாகக் கேட்க,

“சந்தேகப்படறியாடி…? என்னை நீ சந்தேகப்படறியா…?” என்று அவளை உலுக்கினான்.

வீரராகவனின் போதனையில்தான் அவள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று குருட்டுத்தனமாக நம்பியவன், அவர் மீது எழுந்த கோபத்தைக் கையில் சிக்கிய அவர் மகள் மீது காட்ட ஆரம்பித்தான்.

“மாமா…!” அவள் அதிர்ந்தாள்.

“ச்சீ… பேசாதடி… என்ன கேவலமான புத்திடி உனக்கு…!”

“மா…மா…!” அவளுக்கு அழுகைத் தொண்டையை அடைத்தது.

“வீரராகவன் பொண்ணு தானே நீ… அந்த ஆள் புத்திதானே உனக்கும் இருக்கும்… திருட்டுப்புத்தி…!” அவன் வார்த்தைகளில் விஷத்தைக் கக்க, அவள் துடித்துப் போனாள்.

“உனக்கு அந்த ஆள்தான் முக்கியம்… அவரோடு பேசாமல் உன்னால் இருக்கமுடியாது என்றால் அங்கேயே போய்விட வேண்டியது தானே… இங்கு இருந்து கொண்டு என்னை ‘மாமா…’ ‘மாமா…’ என்று அழைத்துக் கொஞ்சியதெல்லாம்… இப்படி என் தலையில் மிளகாய் அரைக்கத்தானா…?”

“மா…மா…!?” தனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை அதுதான் என்பது போல… அந்த வார்த்தையை மட்டும் அதிர்ச்சி, கோபம், வருத்தம், விரக்தி என விதவிதமான உணர்ச்சிகளோடு உச்சரித்தவள்… அவன் எதற்காக இப்படிக் கோபப்படுகிறான் என்பது முழுதாகப் புரியாமல் விழித்தாள்.

“நாளைக்கு விடிந்ததும்… மரியாதையாக உன் பெட்டிப் படுக்கையைக் கட்டிக்கொண்டு, என் கண்ணில்படாமல் உன் அப்பன் வீட்டிற்கு ஓடிவிடு…” என்று சுட்டுவிரலை நீட்டி எச்சரித்துவிட்டு, படுக்கையறையை நோக்கி அவன் சென்றுவிட… அவள் இடிந்து போய் ஹால் தரையிலேயே சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்துவிட்டாள். கண்ணீர் மட்டும் வற்றாத நீர் ஊற்று போல் சுரந்து, கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.




Comments are closed here.

You cannot copy content of this page