Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 28

அத்தியாயம் – 28

கார்முகிலனின் கோப வார்த்தைகள் மதுமதியைப் பலமாகக் காயப்படுத்திவிட்டன. மாய்ந்து மாய்ந்து அழுதவள் எப்போது உறங்கினோம் என்று கூடத் தெரியாமல் தரையில் சரிந்து உறங்கிப் போயிருந்தாள்.

வீட்டில் நடமாட்டத்தை உணர்ந்து கண்விழித்தாள். போதுமான ஓய்வு கிடைக்காததால், இமைகளைப் பிரிக்க முடியாமல் திகுதிகுவெனக் கண்கள் எரிந்தன. சிரமப்பட்டுக் கண்விழித்தவளின் பார்வையில் கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த கார்முகிலன் பட்டான்.

அவசரமாக மணி பார்த்தாள்.

‘ஐயோ… மணி எட்டா…’ என்று எண்ணியபடி எழுந்து சமயலறைக்குச் சென்றாள். பால்காரர் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்ற பால், பாத்திரத்தில் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று என்னதான் அவன் கோபப்பட்டுப் பேசியிருந்தாலும், அவளை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லியிருந்தாலும், அந்தக் கோபம் அவள் மனதில் இன்னும் இருந்தாலும்… அவன் வெறும் வயிற்றோடு கல்லூரிக்குச் செல்வதைப் பொறுக்க முடியாமல்,

‘அவன் கிளம்புவதற்குள் இரண்டு தோசையாவது ஊற்றிக் கொடுத்தாக வேண்டுமே…’ என்று பரபரப்புடன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்து, ஓர் அடுப்பில் பால் காய்ச்சி… மறு அடுப்பில் தோசை வார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கும்தான் அவளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். அவளும் கோபத்தை முன்னிறுத்தி, அவன் வயிற்ரைப் பட்டினி போட்டால் உடம்பு என்ன ஆகும்…! கோபத்தைப் பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டுச் சமையலில் அவள் முனைப்பானாள்.

அவன் சின்ன குஷன் மோடாவில் அமர்ந்து ஷூ போட எத்தனிக்கும் போது பால் டம்ளரை அவனிடம் நீட்டினாள். அவன் அதைத் திரும்பியும் பார்க்காமல் ஷூ போடுவதில் முனைப்பாக இருந்தான்.

“பால்…” அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, டம்ளரை அவனிடம் நீட்டியபடி சொன்னாள்.

அவன் காது கேட்காதவன் போல் அவளை அலட்சியம் செய்துவிட்டு, வெளியே செல்ல எத்தனித்தான்.

“சாப்பிட்டுவிட்டுப் போங்க…”

அவன் பதில் பேசாமல் வெளியே நடந்தான்.

“மாமா… சாப்பிட்டுவிட்டுப் போங்கன்னு சொல்றேன்ல…” அவள் குரல் உயர்த்தினாள்.

சட்டெனத் தயங்கி நின்றவன் “என்னடி சவுண்ட் விடுற…? சாப்பாடும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்… நீயே கொட்டிக்க…” என்று எரிந்து விழுந்துவிட்டு, வேகமாக வெளியேறி வண்டியைக் கிளப்பினான்.

அவளுக்கும் கோபம் வந்தது “சாப்பிட வேண்டாம் போங்க… போய்ப் பட்டினிக் கிடங்க… எனக்கு என்ன வந்தது…” என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். கையிளிருந்த பால் டம்ளரை, டைனிங் டேபிளில் வைத்துவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தாள்.

இவள் சமைத்த உணவை அவன் மறுத்தான்… அவன் பட்டினியாக இருப்பானே என்கிற எண்ணத்தில் இவளும் பட்டினிக் கிடந்தாள்.

அமைதியாக இருப்பவர்கள், உண்மையில் அழுத்தமானவர்களாகவும் இருப்பார்கள் என்பதை மெய்பிப்பது போல மதுமதிக்குச் சிறு வயதிலிருந்தே ஒரு குணம் உண்டு. அவளுக்குப் பிடிக்காத எந்தவொரு விஷயத்திற்கும் தன் எதிர்ப்பைத் தெரிவிக்க… அவள் கையிலெடுக்கும் பலமான ஆயுதம் பட்டினிக் கிடப்பதுதான். அவள் நினைத்ததைச் சாதிக்கும் வரை தண்ணீர் கூட அருந்தமாட்டாள். அதே பிடிவாதம் இப்போதும் எழுந்தது. ‘மாமா சாப்பிடாத போது நமக்கு மட்டும் என்ன சாப்பாடு…’ என்று முரண்டு பிடித்துக் கொண்டு பட்டினிக் கிடந்தாள்.

கௌசல்யாவின் தம்பிக்கு இருக்கும் பிடிவாதம், அவளுடைய மகளுக்கும் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே…!

தேனிக்கு வந்து எப்பொழுதும் போல் நீலாவைப் பார்த்துவிட்டுக் கல்லூரிக்குள் நுழைந்த கார்முகிலன், முதலில் சென்றது கேண்டீனுக்குத்தான். காலை உணவை பொறுப்பாக வயிற்றில் நிரப்பிக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றான். அப்போது மட்டுமல்ல… மதிய உணவு, மாலை டிஃபன் என்று எதையும் தவறவிடவில்லை. மாலை நீலவேணி வீட்டிற்குச் சென்று அவளைப் பார்த்துவிட்டு ஏழு மணிக்கு அவள் வீட்டிலிருந்து கிளம்பியவன், இரவு உணவையும் தேனியிலேயே ஒரு நல்ல ஹோட்டலில் முடித்துக் கொண்டுதான் வீடு திரும்பினான்.

இதையெல்லாம் அறியாத மதுமதி முதல்நாள் இரவிலிருந்து கொலை பட்டினிக் கிடந்தாள். என்னதான் மூக்குமுட்ட சாப்பிட்டாலும் அந்த வேஷக்காரியின் முகத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் சக்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை அவனுக்கு. அதனால்தான் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்க்காதது போல் அவள் முகத்தைப் பார்த்தான்… அவள் முகம் சோர்வாகத் தெரிந்தது.

‘நடிப்பு… எல்லாம் நடிப்பு… வீரராகவன் மகளாச்சே…! நடிக்கச் சொல்லியா தரணும்…!’ என்று நினைத்தபடி இரவு உடைக்கு மாறி, படுக்கையில் சாய்ந்தான்.

# # #

கல்லூரியிலிருந்து வந்த பிறகாவது கோபம் குறைந்திருக்கும், தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மதுமதி ஏமாந்து போனாள். அவனோ… மதுமதி என்கிற ஒருத்தி அந்த வீட்டில் இருப்பதையே பொருட்படுத்தாமல், அவனுடைய வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றுவிட்டான்.

பசி ஒரு பக்கம், அவன் அவளிடம் முகம் திருப்பும் வேதனை ஒரு பக்கம் என்று நொந்து போனவள், நத்தை போல் சுருண்டு படுத்துவிட்டாள். நேரமாக ஆக வயிறு காந்தியது… உறக்கம் வர மறுத்தது… உறங்காமல் படுத்தாவது இருக்கலாம் என்றால், தெம்பில்லாத வயிறு படுக்கவிடாமல் இம்சித்தது… அவள் புரண்டு புரண்டு படுத்து நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

பக்கத்தில் படுத்திருந்தவள் உறங்காமல் புரண்டு கொண்டிருந்ததில் தூக்கம் கலைந்த முகிலன், இரண்டு மூன்று முறை “இப்ச்… இப்ச்…” என்று சத்தம் எழுப்பித் தன் எரிச்சலை வெளிப்படுத்தினான். அவளுக்கும் புரிந்தது, தன்னால் அவன் தூக்கம் கெடுகிறது என்று… ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. முதல்நாள் இரவிலிருந்து பட்டினியாக இருக்கும் வயிறு, நேரமாக ஆக அவளது துன்பத்தை அதிகரிக்கத்தான் செய்தது.

ஒரு கட்டத்தில் அவன் பொறுமையிழந்து தன்னுடைய தலையணையையும், ஒரு போர்வையையும் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டான். தலையணையை சோபாவில் போட்டவனுக்கு, தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது… டைனிங் ஹாலுக்குச் சென்றான். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டுத் திரும்பி வரும்பொழுது… காலையில் அவனுக்குக் கொடுத்த பால், அதே டம்ளரில் ஆடைப் படர்ந்து டைனிங் டேபிளில் இருப்பதைக் கண்டான்.

மனதில் உறுத்தல் ஏற்பட்டது. அவசரமாகச் சமையலறை உள்ளே சென்று பார்த்தான். காலையில் செய்த தோசை ஒரு பாத்திரத்தில் பத்திரமாக மூடியிருந்தது. மதியம் சமைத்ததற்கான அறிகுறியே இல்லை…

‘உண்ணாவிரதப் போராட்டமா…!’ அவன் பற்கள் நறநறவென அறைபட்டன.

வெளியே வந்து ஹாலில் நின்றபடி உள்ளறையில் படுத்திருந்த மனைவியை எட்டிப் பார்த்தான். அவள் உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தாள்…

‘ஐயோ… காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் கிடக்கிறாளே…’ என்று அவன் மனம் வருந்தியது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த வருத்தத்தை விட ‘உனக்கு என்னடி அவ்வளவு திமிர்…? சாப்பிடாமல் கிடந்தால்… என்னை மதிக்காமல், நீ உன் அப்பனுடன் பேசியது சரி என்று ஆகிவிடுமா…?’ என்று நினைத்தான்.

‘பட்டினிக் கிடந்தால் கிட… எனக்கென்ன வந்தது… ஒருநாள் சாப்பிடவில்லை என்றால் உயிர் போய்விடாது… எத்தனை நாள்தான் இப்படிப் பட்டினிக் கிடப்பாய் என்று நானும் பார்க்கிறேன்…’ என்று நினைத்தவன் சோபாவில் படுத்தான். படுத்தானே தவிரத் தூங்கவில்லை… அவள் பசியில் இருக்கிறாள் என்று தெரிந்த பின் இவனுக்கு எப்படித் தூக்கம் வரும்.

இரவு முழுக்கத் தூங்காத மதுமதி ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வெளியே வந்தாள், நடக்க முடியாமல் தலைசுற்றியது. சுவற்றைப் பிடித்துக் கொண்டு, மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து குளியலறையை நோக்கிச் சென்றாள். வெறும் வயிறு புரட்டியது…

‘பல் துலக்கி.. முகம் அலம்பினால் இந்தக் குமட்டல் தீருமா…? கிறக்கம் தெளியுமா…?’ என்று எண்ணியபடி நடந்தவளுக்கு… அடுத்த அடி எடுத்துவைக்கும் முன் கண்கள் இருடிவிட்டன. சுவர், வீடு, தரை எல்லாமே சுற்றுவது போல் உணர்ந்தவள், ஒருநிமிடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வேரறுந்த மரம் போல் தரையில் சாய்ந்தாள்.

இரவு சரியாக உறங்காமல் விடியலில் கண்ணயர்ந்தவன் ‘தடார்…’ என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான். விழித்தவனின் கண்கள் நிலைகுத்திவிட்டன… அங்கே அவன் கண்ணெதிரில் உணர்வற்ற நிலையில் கட்டையாகக் கிடந்தாள் மதி. அவனுடைய வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கொடுத்த மதி… அவன் உயிருக்கு உயிரான மதி…

“ம…தி…” பெரிய அலறலுடன் அவளிடம் ஓடினான். அவளுக்கருகில் மண்டியிட்டு அமர்ந்து “மதி… மதி… எழுந்திரி… மதி… இங்க பார்…” என்று கன்னத்தைத் தட்டினான்… உள்ளங்கையைத் தேய்த்தான்… அவளிடம் அசைவில்லை…

தண்ணீர் கொண்டு வந்து அவள் கண்களைத் துடைத்துவிட்டு முகத்தில் தெளித்தான்… கண்களில் லேசான அசைவு தெரிந்தது.

“மதி… மதி… இங்க பார்… என்னைப் பார்… உனக்கு எதுவும் இல்லை… மதி…” என்று பதறி அவளைத் தேற்ற முயன்றான்.

அவள் கண்விழித்துப் பார்த்தாள். எதிரில் பதட்டமான முகத்துடன் கார்முகிலன் அமர்ந்திருப்பது தெரிந்தது… அவள் கண்கள் கலங்கின.

“ஒண்ணும் இல்ல… எதுக்கு அழற… இந்தா… இந்தத் தண்ணியைக் கொஞ்சம் குடி…” என்று அவளுக்கு, கையிலிருந்த நீரைக் கொஞ்சம் புகட்ட முயன்றான், அவள் பிடிவாதமாக உதடுகளை இறுக மூடிக்கொண்டாள்.

“ஏய்… என்னடி…? கொழுப்பா… திறடி வாயை…” அவன் அதட்டினான்.

“நீ…ங்க சாப்…பிட்டீங்… களா… மா…மா…” அவள் சிரமப்பட்டுப் பேசினாள்.

அவனுக்குச் சரியாகப் புரியவில்லை… “என்னடி…?” அவன் தவிப்புடன் கேட்டான்… ‘தண்ணீர் கூடக் குடிக்காமல் மயங்கி விழுந்துவிட்டு… இப்போ என்ன விசாரணை…?’ என்று எரிச்சலாக வந்தது.

“நீ…ங்க… சாப்பிட்டீங்க…ளா…?” அவள் சைகையுடன் கேட்டாள்.

“எனக்கு என்னடி… நான்தான் மூன்று நேரமும் காலேஜ்ல சாப்பிட்டேனே…!” என்றான்.

அவள் முகத்தில் பரவிய நிம்மதி அவனைக் குற்றவாளியாக்கியது. ‘தேவையில்லாமல் தன்னை வருத்திக் கொண்டோம் என்கிற வருத்தம் சிறிதுமின்றி… நம் வயிறு வாடிவிடவில்லை என்று நிம்மதியடைகிறாளே…! நம்முடைய தாய்தானோ இவள்…!’ அவன் மனம் மனைவியின் களங்கமில்லா காதலை எண்ணிப் பூரித்தது.

“மதி… இந்தா… இதைக் கொஞ்சம் குடி…” என்று அவளுக்குச் சிறிது தண்ணீர் புகட்ட, உடனே அது இருமடங்காக வெளியே வந்தது… அவன் பயந்துவிட்டான். வெளியில் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு, அவளைச் சுத்தம் செய்து கட்டிலில் படுக்க வைத்துவிட்டு… தன்னையும் சுத்தம் செய்துகொண்டு வந்தவன்… பால் காய்ச்சி அவளுக்கு எடுத்துக் கொண்டு வந்து புகட்டினான்.

அரை டம்ளர் பால் குடித்தவள், அடுத்தச் சில நிமிடங்களில் குபுகுபுவென வாந்தி பண்ணிவிட்டாள்… அவன் உள்ளுக்குள் நடுங்கியே போய்விட்டான். எப்போதடா மணி ஏழாகும் என்று காத்திருந்து வாடகை கார் ஒன்றை வரச் சொல்லி, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.




Comments are closed here.

You cannot copy content of this page