Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 29
5040
0
அத்தியாயம் – 29
“நீங்க தான் அந்தப் பெண்ணின் கணவரா?”
“ஆமாம் டாக்டர்…”
“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்களே… நீங்க கவனிக்கிறதே இல்லையா…?”
“இல்ல… வந்து…” அவன் தடுமாறினான்.
“முப்பத்தி ஐந்து நாள் கரு அவங்க வயிற்றில் இருக்கிறது. இந்த நேரத்தில் அந்தப் பெண் நடக்கக்கூட வலு இல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்? எத்தனை நாட்களாகச் சாப்பிடவில்லை…?”
அந்தப் பெண் மருத்துவர் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாலும்… சொன்ன செய்தி இனிப்பானதாயிற்றே…! அவன் முகம் சட்டென பிரகாசமானது…
“நேற்று… நேற்று மட்டும் தான் டாக்டர்…”
“ஒருவேளை கூடப் பட்டினியாக இருக்கக் கூடாது. அவ்வப்போது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணி, ஆகாரம் நிறைய எடுத்துக் கொள்வது அவசியம்”
“சரி டாக்டர்… இனி கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன்…”
“என்னத்த பார்த்துக்குவீங்களோ…! இன்றைக்கு இங்கு அந்தப் பெண்ணை அட்மிட் செய்திருக்கேன். ட்ரிப்ஸ் ஓடிக்கிட்டிருக்கு… போய்ப் பாருங்க… நாளைக்கு வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்…” என்றார் அந்த மருத்துவர்.
“சரி டாக்டர்… நன்றி…” என்று சொல்லிவிட்டு, தன் நீண்ட கால்களை வேகமாக எடுத்து வைத்து ஒரே நிமிடத்தில் மதுமதியின் அறைக்குள் நுழைந்தான்.
சோர்ந்த முகத்துடன் கண்களை மூடிப் படுத்திருந்த மதுமதி, அவன் மனதைக் கரைத்துவிட்டாள். வீரராகவனாவது… கோபமாவது… மண்ணாவது…! அந்த நொடி அவன் அனைத்தையும் மறந்துவிட்டான். அவனுடைய மதுமதி தாயாகப் போகிறாள். அவன் தந்தையாகப் போகிறான்… அதைத் தவிர அவன் மனதில் வேறு எதுவுமே இல்லை.
அவன் வேகமாக மனைவியின் அருகில் சென்று அவளுடைய ஒரு கரத்தைத் தன் கரங்களுக்குள் எடுத்து அடக்கினான். அவள் கண்விழித்துப் பார்த்தாள்.
“மாமா…” மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்கும் அவளுடைய சோர்வும், வருத்தமும், கோபமும்… எங்கே போனது…! சற்றுமுன் அவளைப் பரிசோதித்த மருத்துவர் சொல்லிவிட்டுச் சென்ற தித்திப்பான செய்தியில்… கரைந்து காற்றோடு கலந்துவிட்ட கற்பூரமாகிவிட்டதோ…!
“மதி…”
“மாமா…”
“தேங்க் யூ… தேங்க் யூ… தேங்க் யூ சோ மச் மதி… தேங்க் யூ சோ மச்…” அவன் உணர்ச்சிவசப்பட்டான். தன்னுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல், அதை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் அவன் கண்கள் பனித்தன.
“மாமா…” அவளும் உணர்ச்சிவசப்பட்டாள்.
அவன் அவள் கரத்தை எடுத்துத் தன் கண்களோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“மாமா…” அவள் அவனை அழைத்தாள்.
அவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“என்னைக் கொஞ்சம் பிடிங்க மாமா… நான் உட்கார வேண்டும்…”
அவன் அவளை வசதியா அமரவைத்தான்.
“நீங்களும் என் பக்கத்துல உட்காருங்க மாமா…” அவன் அவளுக்கருகில் அமர… அவள் அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள். அவன் கரம் அவளை ஆதரவாக வளைத்துக் கொண்டது.
“மதி… நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். இந்தளவு சந்தோஷத்தை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை… அவ்வளவு சந்தோஷம்… எல்லாம் உன்னாலதான்…”
“…………” எல்லையில்லா மகிழ்ச்சியை அவன் அனுபவிக்க அவகாசம் கொடுத்து, அவள் அமைதியாகக் கண்மூடி அவன் தோள் சாய்ந்திருந்தாள்.
“சொல்லு மதி… உனக்கு என்ன வேணும் சொல்லு…? இப்போ நீ எதைக் கேட்டாலும் கொடுக்க நான் தயாரா இருக்கேன்… சொல்லு…”
“அம்மா…” அவள் தன்னையறியாமல் ‘அம்மா வேண்டும்’ என்று கேட்கத் துவங்கிய அதே நொடி… அவனும் ‘அம்மா…’ என்ற அவளுடைய வார்த்தையைக் கேட்டு உடல் விரைத்தான். அதை உணர்ந்தவள்…
“அம்மா ஆகப்போகிறேனே மாமா… இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்…!” என்று மழுப்பினாள்.
என்னதான் அவள் மழுப்பினாலும்… அவள் கேட்க வந்தது என்ன என்று அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. அவள் தனக்காக அவளுடைய ஆசையை மறைத்துக் கொள்கிறாள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டான்.
அவன் அவள் மீது கொண்ட காதலை விட, அவள் அவன் மீது கொண்ட காதல் ஆயிரம் மடங்கு ஆழம் என்கிற உண்மை அவனை உருக வைத்தது. அவன் உடலில் இறுக்கம் மெல்ல தளர்ந்தது…
இந்த நேரம் மதுமதி ‘தாய் வேண்டும்…’ என்று அழுத்திக் கேட்டிருந்தால் நிச்சயம் அவன் கௌசல்யாவை வரவழைத்திருப்பான். அதனால் அவனுடைய மனஅமைதிக் கெடும் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டான். ஆனால் மதுமதி, அவனுடைய மனஅமைதிக்கு முதலிடம் கொடுத்துத் தன் ஆசையை மறைத்துக் கொண்டாள்.
சிறிதுநேர அமைதிக்குப் பிறகு கார்முகிலன் கேட்டான்.
“ஏன் மதி அப்படிச் செஞ்ச…?”
“எப்படி மாமா…?”
“சாப்பிடாமல் இருக்கலாமா நீ…”
“நீங்க மட்டும் என்ன செஞ்சீங்க… நான் சாப்பிடச் சொல்லும்போதே என்னை அலட்சியம் செஞ்சிட்டுப் போகலையா…?”
“அதுக்காக…? என்மேல தானே உனக்குக் கோபம்… அதுக்குப் போய் என் குழந்தையைப் பட்டினிப் போட்டுட்டியேடி…!” அவன் வருத்தத்துடன் சொல்ல,
“அப்போ நான் பசியோட இருந்ததைப் பற்றி உங்களுக்குக் கவலையில்லையா மாமா…? உங்க குழந்தை தான் உங்களுக்கு முக்கியமா போச்சு இல்ல…!” அவள் அவன்மீது சாய்ந்திருந்த தலையை நிமிர்த்தி, அவனை முறைத்துப் பார்த்தபடி உண்மையான கோபத்துடன் உரிமைக் கொடியைத் தூக்க… அவன் சிரித்துவிட்டான்.
“உன்னைப் பார்த்துக்கத் தான் உன் அப்பா இருக்காரே… என் குழந்தைக்கு என்னைவிட்டால் யார் இருக்காங்க…?” என்றான் விளையாட்டுப் போலவே, கொஞ்சம் வருத்தத்துடனும்… இப்போது அவனால் மதுமதியிடம் கடுமை காட்ட முடியவில்லை. அதேநேரம் அவள் வீரராகவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதைப் பற்றிக் கேட்காமலும் இருக்க முடியவில்லை… அதனால் பட்டும்படாமலும் ஒரு மாதிரிக் கேட்டுவிட்டான்.
“அப்பா இருக்காரா…! அவர் தான் கல்யாணத்திற்குப் பிறகு இல்லை என்று ஆகிவிட்டதே… பிறகு எப்படி அவர் என்னைக் கவனித்துக்கொள்ள முடியும்…” அவள் தயங்காமல் பதில் கொடுத்தாள்.
அவன் அவளைக் குழப்பத்துடன் பார்த்தான்.
“என்ன மாமா… ஏன் அப்படிப் பார்க்குறீங்க?”
“உன் அப்பா உன்னோடு பேசவே இல்லையா…?”
“இல்லையே… ஏன் மாமா…?”
“அப்புறம் எப்படி நீ அன்றைக்கு நீலாவைப் பற்றிப் பேசின…?” அவன் குழப்பத்துடன் வினவ, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னாள்…
“அந்த நீலவேணி வீட்டிற்குப் பக்கத்தில் தான் ஜீவிதாவின் வீடு இருக்கு… அவள் தான் தினமும் ஃபோன் பண்ணி நீங்க அங்குப் போவதைப் பற்றிச் சொல்லிக்கிட்டே இருந்தாள்…”
“அப்போ நீ உன் அப்பாவோடு பேசவே இல்லையா…?”
“இப்ச்… நீங்கதான் அவங்களோடு பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கீங்களே… பிறகு எப்படி நான் பேசுவேன்…” அவள் சற்று எரிச்சலுடன் கேட்டாள்.
அவன் திகைத்துவிட்டான். “சாரி மதி… நான் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு சத்தம் போட்டுவிட்டேன்… ரொம்ப சாரிடி…”
“என்ன சொல்றீங்க…?” என்று அவள் கேட்டதும் அவன் விபரம் சொன்னான்.
“ஐயையோ… நீங்க அந்தப் பெண் வீட்டிற்குப் போவதை அவரும் பார்த்துவிட்டாரா…? இன்னும் யார் யார் எல்லாம் பார்த்தாங்களோ…! ஏன் மாமா நீங்க இப்படி இருக்கீங்க? அந்தப் பெண் சரியில்லாத பெண்ணாம்… அவள் வீட்டிற்கு நீங்கள் அடிக்கடி போவதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்…? அதோடு ‘நைட் டைம்’ல அங்க என்ன உங்களுக்கு வேலை…?” என்று கேள்வி மேல் கேள்விக் கேட்டாள். இந்தமுறை அவன் கோபம் கொள்ளாமல், அவளுடைய எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக விளக்கம் கொடுத்தான்.
“உதவி செய்றதுல தப்பில்லை மாமா… ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்குல்ல… நம்ம பெயரையும் நிம்மதியையும் கெடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணிற்கு உதவணுமா…?”
“என்ன மதி சொல்ற?”
“நீங்க அந்த நீலவேணி வீட்டிற்குப் போவதைப் பற்றி எத்தனை நாள் ஜீவி எனக்கு ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கிறாள் தெரியுமா…? அப்போல்லாம் எனக்கு ரொம்ப… மனசு கஷ்டமா இருக்கும் மாமா…”
“என்னை நீ நம்பலையா மதி…?”
“ச்ச… ச்ச… என்ன மாமா நீங்க… உங்களை நம்பாமல் நான் வேறு யாரை நம்புவேன்… உலகமே உங்களைப் பற்றித் தவறாகச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன். ஆனால் உங்களைப் பற்றித் தவறாக ஒருவர் என்னிடம் சொல்லும்போது என்னால் தாங்க முடியவில்லை மாமா… என் நிம்மதி போய்விடுகிறது…” அவள் அவன் தோளில் மீண்டும் சாய்ந்துகொண்டாள்.
அவன் பெருமிதப்பட்டான். இந்த உலகமே அவனைப் பற்றித் தவறாகச் சொன்னாலும் அவள் நம்பமாட்டாளாம்… அவன் நிறைந்த மனதுடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
“இனி உன் நிம்மதி கெடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் மதி…” என்று மனைவிக்கு உறுதி கொடுத்தான். இனிதான் அவள் நிம்மதியைக் குழித் தோண்டிப் புதைக்கப் போகிறோம் என்பதையறியாமல்…
Comments are closed here.