உயிரைத் தொலைத்தேன் – 3
7700
0
அத்தியாயம் – 3
‘சித்தி விநாயகர்’ கோவிலில் சுமாரான கூட்டம். தர்மராஜுக்கு விநாயகரைத் தரிசிக்காமல் அந்த இடத்தைக் கடந்து போக மனமில்லை…
“வண்டிய நிறுத்துப்பா…”
“என்ன சார்…?” முகிலன் கேட்டான்.
“வீட்டுக்குப் போயிட்டா… இனி எப்ப வெளிய வருவேனோ தெரியாது. ஒரு பத்து நிமிஷம் என்னைக் கோவிலுக்குள்ள கூட்டிட்டுப் போயேன்…” அவர் இறங்கிய குரலில் கேட்டார்.
“சரி சார்… கூட்டிட்டுப் போறேன்… வாங்க…” அவன் ஆதரவாகப் பேசி, சக்கர நாற்காலியை காரின் பின்பக்கத்திலிருந்து எடுத்துவந்து விரித்து… அவரை அலேக்காகத் தூக்கி அதில் அமரவைத்து உள்ளே தள்ளிக் கொண்டு போனான்.
“அப்பாடா… இந்தக் கோவிலுக்கு வந்து எத்தனை நாள் ஆச்சு…” தினமும் கணபதியைத் தரிசிக்கும் முதியவர், இரண்டு மாதமாக மருத்துவமனையில் அடைந்துகிடந்த கொடுமையிலிருந்து விடுதலை பெற்றவராக நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
அவர் கணபதியை வணங்கிவிட்டுச் சுற்றுப் பிரகாரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் அமைதியைக் கெடுக்க விரும்பாத கார்முகிலன், ஒருமுறை கோவிலைச் சுற்றி வந்தான். அப்போதுதான் அந்தக் காட்சி அவன் கண்ணில் பட்டது.
ஓர் அழகிய பெண், அழகு என்றால் சாதாரண அழகு அல்ல… ஆளை அடித்துப்போடும் அழகு. அப்படிப்பட்ட அழகான பெண்ணொருத்தி, தங்கத்தில் செய்து வைத்த சிலை போல… கண்களை மூடி, கைகளைக் கூப்பி நின்றிருந்த காட்சி அவனை ஈர்த்தது. அவன் அந்த இடத்தைவிட்டு அசையாமல் நின்றுவிட்டான்.
மீண்டும் மீண்டும் அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. ஓர் அழகிய இளம் பெண்ணைப் பார்க்கும் போது, ஓர் இளங்காளைக்குத் தோன்றும் ஈர்ப்புதான் அது. அந்தச் சுகமான உணர்வை கட்டுப்படுத்த மறந்து, அந்தப் அழகியின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
தந்த நிறத்தில் இருந்தவள் ரத்தச் சிகப்பில் சேலை உடுத்தியிருந்தாள். ஆபரணங்கள் அதிகம் இல்லை. நீளமான கூந்தலை நடுவில் ஒரு கிளிப்பைப் போட்டு விரித்துவிட்டிருந்தாள். மல்லிகைச் சரம் விரித்துவிடப்பட்டிருந்த கூந்தலில் தொங்கிக் கொண்டிருந்தது. சாயம் பூசியிருக்கிறாளா அல்லது இல்லையா என்றே தெரியாத வண்ணம் அவளுடைய இதழ்கள் பிங்க் கலரில் மின்னின. கண்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே என்றாலும் அழகாக மை தீட்டியிருந்தாள்.
மூடியிருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தான்.
“இவ்வளவு அழகான பெண்ணுக்கு என்ன துன்பம் இருக்கக் கூடும்… இவளைப் பார்த்தால் பணத்திற்குச் சிரமப்படுகிறவள் போலவும் தெரியவில்லையே…!” அவன் குழம்பினான்.
‘அழகான பெண் என்றால்… பிரச்சனைகள் இருக்கக் கூடாதா…? முட்டாள்தனமாகச் சிந்திக்கிறோமே…!’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவன்… ஒரு நொடி கண்களை மூடித் தலையைக் குலுக்கிக் கொண்டு, பின் கண்களைத் திறந்து பார்த்தால் அங்கே அந்தப் பெண் இல்லை… அவன் அவசரமாகத் தலையைச் சுழற்றி நாலாப்பக்கமும் அவளைத் தேடினான். அவள் போன இடம் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் பெரியவரைத் தேடி வந்தான்.
“என்னப்பா… கிளம்பலாமா…?” – தர்மராஜ் கேட்டார்.
“ம்ம்ம்… கிளம்பலாம் சார்…” என்று சொல்லியபடி அவருடைய சக்கர நாற்காலியை நகர்த்திக் கொண்டு வெளியே வந்தான். அவரை பார்த்தவுடன் அவனுடைய சிந்தனைகள் மாறுபட்டன. சிந்தனைகள் மாறுபட்டவுடன் அந்தப் பெண்ணைப் பற்றிய நினைவுகளும் கலைந்து போயின…
# # #
கார்முகிலன் தர்மராஜ் வீட்டிலேயே தங்கி அவரைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டான். அதற்காக அவனுடைய வீட்டிலிருந்து சில முக்கியப் பொருட்களை மட்டும் கொண்டு வந்திருந்தான். அவன் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தில் அவரைப் பார்த்துக்கொள்ள, ராமு அண்ணாவை ஏற்பாடு செய்திருந்தான்.
அன்று அவன் கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது, தர்மராஜ் அவனை அழைத்து… தான் அடுத்த வாரம் ‘ஏ.ஆர்.எம்’ கல்லூரியில் கடைசி வருட மெக்கானிக்கல் மாணவர்களுக்கு ‘தெர்மோ டைனமிக்ஸ்’ பாடத்தில் ‘கெஸ்ட் லெக்ச்சர்’ கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருப்பதாகவும்… தான் இப்போது இருக்கும் நிலையில் ஏற்றுக் கொண்ட வேலையை முடிக்க முடியாது என்பதால், தனக்குப் பதிலாக அவன் அந்தக் கல்லூரிக்குச் சென்று லெக்ச்சர் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வாரம் ரெண்டு நாள் வகுப்பு. ஆறு வாரத்திற்கு பாடம் எடுக்க வேண்டும் என்று அவர் விபரம் சொன்னதும், அவன் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டான்.
அதன்படி அந்த வாரம் சனிக்கிழமை காலை சரியாக ஒன்பதுமணிக்கு, “நான் கார்முகிலன்… உங்களுக்கு ‘தெர்மோ டைனமிக்ஸ்’ கிளாஸ் எடுக்க வந்திருக்கேன். நான் வேறு ஒரு கல்லூரியில் வேலை செய்வதால்… என்னால் வார நாட்களில் உங்களுக்கு வகுப்பு எடுக்க முடியாததற்கு வருந்துகிறேன். ஆறு வாரம் இந்த கிளாஸ் உங்களுக்கு இருக்கும். அதுவரை ஒவ்வொரு வாரமும் நீங்கள் சனி ஞாயிறுகளில் கல்லூரிக்கு வர வேண்டியிருக்கும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்… இப்போ பாடத்தைக் கவனிக்கலாம்…” என்று அவன் பாடத்தைத் துவங்க எத்தனிக்கையில்,
“எக்ஸ்கியூஸ் மீ சார்…” என்றபடி மூச்சிரைக்க வாசலில் வந்து நின்றாள் அவள். மூன்றுமாடி ஓட்டமும் நடையுமாக ஏறியதன் விளைவு…
‘யார் அது… முதல் நாளே பாடம் ஆரம்பிக்கும் முன் தடங்கலாக வந்து நிற்பது…?’ எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவனின் புருவங்கள் சுருங்கின… சிந்தனைகள் ஓடின.
‘இவளை இதற்கு முன் பார்த்திருக்கிறோமா…!’ அவன் குழம்பினான். முதல் முதலில் இவளை இப்போதுதான் பார்க்கிறான். ஆனால் அந்த முகம் அவனுக்குப் பரிச்சயமான முகமாக இருந்தது. பலமுறை பார்த்துப் பழகியது போல் ஒரு உணர்வு…
மாநிற மேனியும், ஒல்லியான உருவமும், களையான முகமுமாக அவள் பாந்தமாக இருந்தாள். அழகாகவும் தான்…! ஆனால் முதல் பார்வையிலேயே புலப்படக் கூடியதல்ல அவளுடைய அழகு. ஏற்கனவே பலமுறை பார்த்துப் பழகியது போல் உணர்ந்த கார்முகிலன், முதல் பார்வையிலேயே அவள் அழகையும் உணர்ந்தான்.
அவளுக்கும் அதே உணர்வுதான். எழுபது வயதான தர்மராஜ் வந்து பாடம் நடத்துவார் என்று எதிர்பார்த்து வந்தவளுக்கு, இளம் வயதில் ஆறடி உயரத்தில்… கட்டான தேகமும், கருமையான நிறமும், திருத்தமான முகமுமாக… வசீகரமான தோற்றத்துடன் வகுப்பிற்குள் நிற்பவனைக் கண்டதும் திகைப்பு, அதைத் தாண்டி அவனுடைய முகம் அவளுக்குப் பரிச்சயமானதாகத் தோன்றியதும் குழப்பம்.
இப்படித் திகைப்பும் குழப்பமுமாக நின்றவளை,
“என்ன விஷயம்…?” என்ற வார்த்தைகள் நனவுலகுக்குக் கொண்டு வந்தன.
அவள் புத்தகமும் கையுமாக நின்றவிதம், அவள் மாணவி என்பதைத் தெளிவுபடுத்தினாலும்… அவள் தாமதமாக வகுப்பிற்கு வந்திருப்பதைச் சுட்டிக்காட்ட அப்படிக் கேட்டான்.
“லேட் ஆனதுக்கு மன்னிக்கணும் சார்…” என்றாள்
“பெயர் என்ன…?” குனிந்து நோட்டில் எதையோ எழுதியபடி கேட்டான்.
“மதுமதி…” – அவன் கை ஒரு நிமிடம் எழுதுவதை நிறுத்தியது. அந்தப் பெயர் அவனைத் தாக்கியது. அவன் முகம் கடினமானது… கண்கள் சிவந்தன… அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள மிகுந்த சிரமப்பட்டான். முடியவில்லை…
“தாமதமாக வர்றவங்களுக்கு என் வகுப்பில் இடம் இல்லை மதுமதி… இன்னைக்கு வீட்டுக்குப் போய்விட்டு, நாளைக்குச் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வாங்க…” என்று கடுமையான குரலில் சொல்லிவிட்டான்.
ஐம்பது மாணவர்களுக்கு முன் முகத்தில் அடித்தது போல் அவன் பேசியதில் அவள் அதிர்ந்தாள். அதிர்ச்சியில் விழிவிரிய நின்றவளை, லட்சியம் செய்யாமல் அவன் பாடத்தைத் தொடர்ந்தான். அவள் முகம் அவமானத்தில் சிவந்தது. அந்தத் தருணம் தன் வாழ்நாளில் இருந்து மறைந்து போய்விடாதா என்றிருந்தது அவளுக்கு… குன்றிப்போனவளாகக் குனிந்த தலை நிமிராமல் வந்த வழியே திரும்பி நடந்தாள்.
Comments are closed here.