Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 30
4854
0
அத்தியாயம் – 30
மதுமதிக்குக் கர்ப்பக் கால உபாதைகள் அதிகமாக இருந்தன. ஒருவாரம் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கவனித்துக் கொண்ட கணவனுக்கு, அதற்குமேல் வீட்டிலிருந்து அவளைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போக… அவள் உடல்நிலை மேலும் மோசமானது. கூட்டில் இருக்கும் குஞ்சைத் தேடி வரும் காகமாக… கல்லூரியிலிருந்து பறந்து வரும் கார்முகிலன், வீட்டிற்குள் யார் வந்தார்கள் போனார்கள் என்று கூடத் தெரியாத நிலையில் சுருண்டு கிடக்கும் மனைவியைப் பார்க்கும்போது தவித்துப் போவான்.
அவசரமாக அவளுக்குப் பிடித்த உணவு என்று அவனுக்குத் தெரிந்தவைகளைச் சமைத்துவிட்டு அவளைச் சாப்பிட அழைத்து வந்தால்… தாளிக்கும் வாடை குமட்டுகிறது… சாம்பார் பிடிக்கவில்லை… காரக்குழம்புச் சாப்பிட்டால் தொண்டை எரிகிறது… தோசைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள்ளேயே நிற்கிறது என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்களைக் காட்டி உணவைச் சுத்தமாகத் தவிர்க்கும் மதுமதியோடு சேர்ந்து வயிற்றிலிருக்கும் குழந்தையும் காயும்…
எவ்வளவு முயன்றும் கார்முகிலனால் மதுமதியைச் சரிவரக் கவனிக்க முடியவில்லை. விளைவு அடுத்த மாதம் அவள் பரிசோதனைக்குச் செல்லும்போது ஒரேடியாக நான்கு கிலோ எடை குறைந்துவிட்டாள்.
“என்னம்மா இது… வெயிட் ரொம்பக் குறைந்துவிட்டியே…! ஒழுங்கா சாப்பிடறியா இல்லையா…?” டாக்டர் கேட்டார்.
“இல்ல டாக்டர்… சுத்தமா சாப்பிடவே முடியல…”
“ஓஹோ… சாப்பிட முடியலன்னு சொல்லிச் சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்குத் தேவையான சக்தி கிடைக்காதும்மா… உனக்கு என்ன சாப்பிடப் பிடிக்கிறதோ அதைச் சாப்பிடு… வாந்தி வந்தால் பயப்பட வேண்டியதில்லை. மூன்று மாதத்திற்குக் கட்டாயம் உபாதைகள் இருக்கத்தான் செய்யும்…” மருத்துவர் சட்டமாகச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த மதுமதி கலங்கினாளோ இல்லையோ… கார்முகிலன் கலங்கிவிட்டான்.
‘மூன்று மாதமா…! தாங்குவாளா…!”
“மூன்று மாதம் இதே மாதிரி செய்தால் இவள் தாங்கமாட்டாள் போலிருக்கே டாக்டர்…” அவன் இடைபுகுந்து தன் கவலையைச் சொல்லிவிட்டான்.
மனைவி மீது அவன் கொண்டிருக்கும் அக்கறையைக் கவனித்த மருத்துவர், லேசாகப் புன்னகைத்துவிட்டு…
“கவலைப்பட வேண்டாம் சார்… வாந்தி வந்தாலும் பரவால்லை என்று சொல்லி அவ்வப்போது ஏதாவது ஆகாரம் கொடுத்துக் கொண்டே இருங்கள்… கீரை… பழங்கள்… அதிகம் சேர்த்துக் கொள்ளட்டும்…”
“சரி டாக்டர்…” அவன் மருத்துவரின் அறிவுரையை எப்படிக் கடைப்பிடித்து மதுமதியைத் தேற்றப் போகிறோம் என்ற குழப்பத்துடன், அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
மருத்துவரின் அறிவுரைபடி கீரை, பழம், ஜூஸ், சூப் என்று நேரா நேரத்திற்குக் கொடுத்து மனைவியைத் தேற்ற முயன்றவனின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது. காரணம் அவன் கண்முன், பூச்சாண்டிக்குப் பயந்த குழந்தை போல் உணவை விழுங்கி பின் வெளியேற்றும் மதுமதி… அவன் இல்லாத போது, அவன் தயாரித்து வைத்துவிட்டுச் சென்ற உணவுகளைத் தொடுவது கூட இல்லை… கெஞ்சிப் பார்த்தான்… கொஞ்சிப் பார்த்தான்… அதட்டினான்… போனில் ஞாபகப்படுத்தினான்… பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். ஓர் ஆணாக அதற்குமேல் மனைவியை எப்படிக் கவனிப்பது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவளைவிட அதிகமாக அவன் சோர்ந்து போனான்.
# # #
அன்று மதுமதியைப் பற்றிய கவலையில் கார்முகிலன் ஆழ்ந்திருந்தான். இப்போதெல்லாம் அவள் இரவில் உறங்காமல் எழுந்து அங்குமிங்கும் நடக்கிறாள். ஜன்னல் வழியாக நிலவையும், நிலவு இல்லாவிட்டால் இருளையும் வெறிக்கிறாள். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே…’ ‘ஆராரி ராரோ… நான் இங்குப் பட… தாயே நீ கண்ணுறங்கு…’ ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா…’ என்று அம்மா பாடல்களை அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.
‘ஒருவேளை அம்மாவின் நினைவு அதிகமாக வந்துவிட்டதோ…!’ என்கிற சந்தேகம் அவனுக்கு வந்தது. அவள் உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு ‘மான ரோஷத்தை விட்டுவிட்டு அவளுடைய அம்மாவை வரச் சொல்லிவிடலாமா…?’ என்று தோன்றியது.
என்ன முடிவெடுப்பது என்கிற குழப்பத்துடன் கேண்டீனில் மதிய உணவை அவன் கொறித்துக் கொண்டிருக்கையில் பாக்கெட்டிலிருந்த கைப்பேசி அழைத்தது. அதை எடுத்துக் காதில் வைத்தால், நீலாவின் குரல்…
“முகிலன் எப்படி இருக்கீங்க..?” என்றது.
“நல்லா இருக்கேன் நீலா… நீ எப்படி இருக்க…?”
“ம்ம்ம்… இருக்கேன்…”
“சொல்லு நீலா… என்ன விஷயமா ஃபோன் பண்ணின…?”
“நீங்க இப்போ எங்க இருக்கீங்க…?”
“காலேஜ்ல தான்…”
“சாயங்காலம் வீட்டுக்கு வர முடியுமா… கொஞ்சம் பேசணும்…”
“சாரி நீலா… உனக்குத்தான் தெரியுமே… மதி ரொம்ப முடியாமல் இருக்கா… நான் தவிர்க்க முடியாமல் தான் காலேஜ் வந்துட்டு இருக்கேன்… என்னால இனி கொஞ்சநாள் எங்கேயும் வரமுடியாது நீலா… நீ போன்லேயே சொல்லு… என்ன விஷயம்…?” அவனுடைய திட்டவட்டமான பேச்சு அவளைத் திகைக்க வைத்தது.
“என்ன முகிலன் இப்படிச் சொல்றீங்க…?”
“என்னால இப்போ இப்படித்தான் பேச முடியும் நீலா… அதுக்காக நீ எனக்கு முக்கியமில்லை என்று அர்த்தம் இல்லை. நீ எப்பவுமே என் தோழிதான்… உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் முதல் ஆளாக உதவிக்கு நான் வந்து நிற்பேன்… கவலைப்படாதே…”
“இப்ச்… இப்ப கூட ஒரு பிரச்சனைதான்… வாங்கன்னு சொல்றேன்… எங்க வர்றீங்க… என்ன இருந்தாலும் உங்களுக்கு உங்க மனைவிதானே முக்கியம்… தோழி, நட்பு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்…”
“நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை நீலா…” அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல, நீலவேணிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“சாரி முகிலன்… நான் அவசரப்பட்டுப் பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க…”
“சரி விடு நீலா… நீ எதுக்கு ஃபோன் பண்ணின… என்ன பிரச்சனைச் சொல்லு…” என்று கேட்டான்.
“அந்த முரடன் நேற்று திரும்ப வந்தான் முகிலன்… நான் கதவைத் திறக்கவே இல்லை… ஆனால் எனக்கு ரொம்பப் பயமா இருக்கு…”
“யாரு அன்றைக்கு அடிவாங்கிட்டு ஓடினானே அவனா…?”
“ஆமாம்… அவன்தான்…”
“சரி இன்றைக்கு அவன் திரும்ப வந்தான்னா… எனக்கு உடனே ஃபோன் பண்ணு. நான் என் நண்பன் வசந்த்தை வரச் சொல்லுகிறேன்… அவன் உன்னுடைய ஏரியாவில் தான் இருக்கிறான்… அந்தத் தடிபயலுக்குத் திரும்ப இன்னிக்குக் கச்சேரி வைக்கச் சொல்லுகிறேன்…” என்றான் குரலில் கோபத்துடன்.
“சரி…” அவன் நேரடியாக அவளுக்கு உதவிக்கு வரவில்லை என்கிற ஏமாற்றத்தில் இறங்கிவிட்ட குரலில் சொன்னாள்.
அன்று மாலை அவன் வீட்டிற்குச் சென்ற போது, மதுமதி புயலில் சிக்கிய கொடி போல் நைந்து கிடந்தாள். கலைந்த கேசமும், தொளதொள ஆடையும், ஜீவனற்ற முகமுமாக வெறும் தரையில் சிறு முனகலுடன் படுத்திருந்தவளைக் கண்டதும் அவன் வயிற்றைப் பிசைந்தது.
“மதி…” அவள் கேசத்தை வருடியபடி அருகில் அமர்ந்தவனைக் கண்டதும்… தாயைக் கண்ட பிள்ளைப் போல் கண்களில் நீருடன் அவன் மடிமீதுத் தலையை வைத்துக் கொண்டாள்.
“மதியம் சாப்பிடலையா…?”
“ம்ஹும்…”
“ஃபிரிட்ஜ்ல ஜூஸ் இருந்ததே… குடிச்சியா…?”
“ம்ஹும்…”
அவள் எதையும் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்பது அவள் படுத்திருந்த கோலத்திலேயே தெரிந்தாலும், அவளிடம் கேட்டுப் பார்த்தான். அவளும் அவன் எதிர்பார்த்த பதிலையே சொல்லிவிட்டாள். அந்த நொடி அவனுக்கு ஒன்று தோன்றியது…
‘இனி மதி இங்குத் தனியாக இருக்கக்கூடாது… நான் இல்லாதபோது இவளைக் கவனமுடன் பார்த்துக்கொள்ள ஒரு பெண் அவசியம் தேவை…’
“மதி… நான் ஒரு முடிவு செய்திருக்கேன்…” இதமான சூட்டில் பால் கொண்டு வந்து கொடுத்து அவளைக் குடிக்க வைத்த பிறகு பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன மாமா…?”
“இனி உன்னைத் தனியாக இங்கு விட்டுவிட்டு, என்னால் கல்லூரிக்குப் போக முடியாது…”
” ……….” அவள் அவனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.
“உனக்கு ஒரு பெண்துணை அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது…”
அவனுடைய வார்த்தை அவளுக்குப் புதுத் தெம்பைக் கொடுக்க, அவள் முகம் பரவசமானது. மாமா அம்மாவை வீட்டிற்கு அழைக்கப்போகிறார் என்ற ஆனந்த எதிர்பார்ப்புடன் அவள் சொன்னாள்,
“ஆமாம் மாமா… எனக்கு நிச்சயமாக ஒரு பெண்ணின் துணைத் தேவைதான் மாமா…”
“அதனால தான் நம்ம வீட்டிற்கு நீலாவை வரச் சொல்லலாம் என்று முடிவு செய்திருக்கேன்…” அவன் அலட்டல் இல்லாமல் சொல்ல…
“என்னது…!” என்று அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அமர்ந்தாள் மதுமதி.
“என்ன ஆச்சு மதி…?”
“உங்களுக்கு என்ன ஆச்சு மாமா…?” அவள் அழுத்தமாகக் கேட்டாள். அவன் கொடுத்த அதிர்ச்சியில் அவளுடைய சோர்வெல்லாம் பறந்தோடிவிட்டது போலும்…
“ஏன் எனக்கு என்ன…?”
“அந்தப் பெண்ணை நம்ம வீட்டிற்குக் கூட்டிட்டு வர்றேன்னு சொல்றீங்களே…! உங்களுக்கு என்ன மண்டைக் குழம்பிடுச்சா?”
“நீலா நம்ம வீட்டிற்கு வந்தால் என்ன…? எனக்கு உன் பேச்சுப் புரியவில்லை…”
“புரியலையா…?” அவள் அவனை முறைத்தபடிக் கேட்டாள்.
“ஆமாம் புரியலை…” அவனும் அசராமல் பதில் பேசினான்.
“சரி… உங்களுக்கு எதுவும் புரிய வேண்டாம்… அந்தப் பெண்ணை இங்கு அழைத்துக் கொண்டு மட்டும் வந்துவிடாதீங்க…” அவள் தெளிவாகச் சொல்ல, அவனுக்குக் கோபம் வந்தது.
“ஏன்… நீலா ஏன் நம்ம வீட்டிற்கு வரக்கூடாது…?”
“எனக்குப் பிடிக்கல…”
“என்ன பிடிக்கல…?”
“அந்தப் பெண்ணைப் பிடிக்கல… அந்த மாதிரிப் பெண் கூட நான் ஒரே வீட்டில் இருக்கமாட்டேன்… நீங்க அவளோடு பேசுவதே எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்… நீங்க என்னடாவென்றால் அவளை, என்னோடு ஒரே வீட்டில் தங்க வைக்கிறேன் என்று சொல்கிறீர்களே… ச்சை…” அவள் படபடத்துவிட்டாள்.
“தெரியும்டி… நீ அந்த ஆள் பொண்ணு தானே… அவனோட புத்தி உன்கிட்ட இல்லாமல் போய்விடுமா…? ஏன்டி எப்பவுமே வீரராகவன் பொண்ணாவே யோசிக்கிற…? கார்முகிலனின் மனைவியாகவும் கொஞ்சம் யோசிக்கக் கற்றுக்கொள்…” அவன் கடுப்படித்தான்.
“………………” அவள் வார்த்தைகளைத் தேடாமல் நேருக்குநேர் அவன் கண்களை வெறித்துப் பார்த்தாள். அந்தப் பார்வையின் வீரியம் தாங்காமல் அவன் இறங்கி வந்தான்.
“சாரி…”
“………………”
“சாரி சொல்றேனே மதி… கோபத்துலப் பேசிட்டேன்… விடு…”
“சரி சொல்லுங்க… எதுக்கு அந்தப் பெண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு சொல்றீங்க?”
“மதி… நீலாவுக்கு அங்க பாதுகாப்பில்ல… உனக்கும் இங்க ஒரு பெண்துணை தேவைப்படுது… நீங்க ரெண்டுபேரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாமே…”
“மாமா… அந்தப் பெண் தப்பானவள்.. அவளோடு என்னால் எப்படிச் சேர்ந்து இருக்கமுடியும்… முதலில் நீங்களே அவளோடான நட்பைத் துண்டிக்க வேண்டும்…”
“மதி… நீலா தப்பான பெண்ணில்லை… தவறாக வழிநடத்தப்பட்ட பெண்… இப்போ திருந்தி வாழ்ந்திட்டு இருக்கா… நிறையப் பிரச்சனைகள் வருது… தனியாளாகச் சமாளிக்க முடியாது. உதவிக்கு ஆளில்லாமல் தனிமையில் தெருவில நிற்பது எவ்வளவு கொடுமையானது என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் நீலாவுக்கு உதவுவதில் பிடிவாதமாக இருக்கிறேன்…”
“அப்படின்னா ஏதாவது மகளிர் விடுதியில் சேர்த்துவிடுங்கள்… அல்லது ஏதாவது வெளியூரில் வேலை வாங்கிக்கொடுத்து அனுப்பிவிடுங்கள்…” அவள் கண்டிப்புடன் சொல்ல, அவன் எரிச்சலானான்.
“ஏன்… நீ பெரிய மகாராணி… உன்னோடு நீலா கொஞ்சநாள் இருந்தால் உன் தரம் குறைந்துவிடுமோ…!” அவன் நக்கலாகக் கேட்டான்.
உடலின் சோர்வும் கணவனுடைய கடுமையான பேச்சும் அவளை வலுவிழக்கச் செய்து கண்களைக் கலங்க வைத்தன. அவளுடைய கலங்கிய கண்கள், அவனை இளக்கியது… மீண்டும் அவனே இறங்கிப் பேசினான்.
“மதி… தப்புச் செய்துவிட்டுத் திருந்த நினைப்பவர்களைத் தங்களுள் ஒருவராக நம் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைத் திருந்தவிடுவதும் இல்லை. நீயும் அதே தவறைத்தான் செய்கிறாய்… நீ செய்வது நியாயமா என்று யோசித்துப் பார்…” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
மதுமதியும் யோசித்தாள்… ‘நீலாவைப் பற்றித் தெரிந்தால் யாரும் அவளுக்கு வேலை தரமாட்டார்கள் என்பது உண்மைதான். மகளிர் விடுதியில் இடம் கிடைப்பதும் சிரமம் தான். நமக்கே அவளை வீட்டிற்குள் சேர்க்க மனம் வரவில்லையே…! ஆனால் மாமா சொல்வது கூடச் சரிதான். திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணின் பாதுகாப்பிற்காகக் கொஞ்சநாள் அவளுக்கு வீட்டில் இடம் கொடுப்பதில் என்ன தவறு…!’ அவள் நியாயமாகச் சிந்தித்ததால்… நீலவேணி அந்த வீட்டிற்குள் நுழைய மதுமதியின் அனுமதி கிடைத்தது.
Comments are closed here.