உயிரைத் தொலைத்தேன் – 31
4521
0
அத்தியாயம் – 31
கார்முகிலன் நீலவேணியை அவனுடைய வீட்டிற்கு அழைத்ததும் பெரிதாக அதிர்ந்தவள் ‘வரவே முடியாது…’ என்று பிடிவாதம் பிடித்துவிட்டாள். அவள் விரும்பிய, விரும்பும்… கார்முகிலன் மற்றொரு பெண்ணோடு வாழ்வதை அவள் கண்ணால் பார்க்க வேண்டுமா…! அது அவளால் முடியுமா…! அவள் மனம் வெந்து, புழுங்கிச் செத்துவிடாதா…?
“என்ன நீலா… நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்குப் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்…? மதிக்கு ரொம்ப நேரம் தனியாக இருக்கமுடியாது… நீ சீக்கிரம் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பு…” என்று அவசரப்படுத்தினான்.
“முகிலன்… என்னால் உங்களுக்கு எதுக்குச் சிரமம்…? நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்… நீங்கள் கிளம்புங்களேன்… ப்ளீஸ்…” கடந்த ஒரு மணிநேரமாக இதையே திரும்பத் திரும்ப அவள் சொல்லிக் கொண்டிருந்ததில், அவனுக்கு எரிச்சல் வந்துவிட்டது.
“என்னதான் உன் பிரச்சனை…? தினமும் என்னை இங்கு வரச்சொல்லிக் கூப்பிடும் போதெல்லாம், என்னைத் தொல்லை செய்வதாக உனக்குத் தோன்றவில்லையா…? இப்போ மட்டும் என்ன புதிதாகத் தொல்லை செய்வதைப் பற்றி ரொம்ப வருத்தப்பட்டு மாய்ந்து போகிற…?” சுருக்கென்று கேட்டுவிட்டான்.
அவனுடைய கோபத்தைத் தாங்கமுடியாமல் கண்களைக் கரித்தது அவளுக்கு. பல்லைக் கடித்து அழுகையை மென்று விழுங்கிவிட்டு சொன்னாள்…
“நீங்க என்னோட நண்பன்… உங்களுக்கு நான் பாரமாகத் தெரியமாட்டேன். ஆனால் உங்கள் மனைவி என்னைத் தொந்தரவாக நினைத்தால் என்ன செய்வது…?”
அவள் சொல்வதிலும் உண்மை இருப்பதை உணர்ந்தவன், கோபத்தை விடுத்துச் சமாதானமாகப் பேசினான்.
“மதி அப்படியெல்லாம் நினைக்க மாட்டாள் நீலா… நீ எங்கள் வீட்டிற்கு வருவதில் அவளுக்குச் சம்மதம்தான்… அதோடு நீ வந்தால் அவளுக்கும் உதவியாக இருக்கும்… உனக்கும் பொழுது போகும்… உனக்கு அங்கு எந்தச் சங்கடமும் ஏற்படாது… பயப்படாமல் கிளம்பு…” அவன் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.
கார்முகிலனுக்குத் தெரிந்து அவனைத் தவிர நீலவேணிக்கு நல்ல நட்பு என்று எதுவும் இல்லை. அதனால் மதுமதியோடு அவள் பழகினால் அவளுக்கு நல்ல மாறுதல் கிடைக்கும், பாதுகாப்பாகவும் இருக்கும்… மதுமதிக்கும் துணையாக இருக்கும் என்று பலவற்றையும் சிந்தித்து, அவளைத் தேனியிலிருந்து லக்ஷ்மிபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.
# # #
மதுமதியின் அனுமதியின் பெயரில்தான் கார்முகிலன் நீலவேணியை அழைத்துவர தேனிக்குச் சென்றிருக்கிறான் என்றாலும்… அந்தப் பெண்ணின் வரவை இவளால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜீவிதா அவளைப் பற்றிச் சொன்ன விஷயங்களை மண்டையில் போட்டுக் குழப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். மதில்சுவரின் கேட்டைத் திறந்து கொண்டு, கார்முகிலனின் வண்டி உள்ளே வரும் சத்தம் கேட்டது.
மனம் படபடத்தது… இனம்புரியாத தவிப்புடன் வெளியே பாய்ந்து ஓடி பார்த்தாள். நல்லவேளை, கார்முகிலன் அவன் வண்டியில் நீலவேணியை அழைத்துக் கொண்டு வரவில்லை. அவன் தனியாகத்தான் வந்து கொண்டிருந்தான். அவள் மனம் அமைதியடைந்தது…
‘அவள் எங்கே…!’ என்று இவள் கண்களால் தேடும்போது கார்முகிலனின் வண்டியைத் தொடர்ந்து, ஒரு ஸ்கூட்டி உள்ளே வந்து மதில் சுவர் கேட்டுக்குள் நுழைந்தது.
மதுமதியின் கண்கள் கார்முகிலனை விட்டுவிட்டு, பின்னால் வருபவளையே அளவெடுத்துக் கொண்டிருந்தன.
‘ஹப்பா… என்ன கலரா இருக்கா…! சினிமா ஹீரோயின் மாதிரி இவ்வளவு அழகா இருக்காளே…!’ சொக்க வைக்கும் அழகைப் பார்த்துப் பிரம்மிப்புடன் நின்றவள், லேசாகக் குனிந்து தன் கையையும் உடலையும் பார்த்துக் கொண்டாள். உடல் மெல்லியதாகத் தான் இருந்தது… ஆனால் கையைப் பார்த்து அவள் மேனியின் நிறத்தைக் கணக்கிட்டவளின் வயிறு காந்தியது. நீலவேணியின் கலரில் பாதிக் கூடத் தான் இருக்க மாட்டோம் என்று தோன்றியது. தானும் அழகான பெண்தான் என்பது மறந்து போய்விட்டது…
நீலவேணி என்னும் அந்த மோசமான பெண், இவ்வளவு அழகானவளாக இருப்பாள் என்று மதுமதி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தனக்கும் பொறாமை என்கிற உணர்வு வரும் என்பதையும், அதிலும் தான் ஒரு பெண்ணின் அழகைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடும் என்பதையும் அன்றுதான் உணர்ந்தாள் அவள்.
“மதி… இதுதான் நீலா…, நீலா… இது மதுமதி… என் மனைவி…” என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தான்.
“ஹலோ…”
“ஹாய்…” என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்களே தவிர, இருவருக்குள்ளும் பொறாமை புகைந்து கொண்டிருந்தது. நீலவேணிக்கு, கார்முகிலனின் மனைவி என்கிற அந்தஸ்து மதுமதிக்குக் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமை… மதுமதிக்குத் தன்னைவிட நீலவேணி பலமடங்கு அழகாக இருக்கிறாளே என்கிற பொறாமையுடன் கூடிய மிரட்சி…
லக்ஷ்மிபுரத்திற்கு வரும் பொழுது தயக்கத்துடன் வந்த நீலவேணி, மதுமதியின் மிரண்ட விழிகளைப் பார்த்ததும், தன்னை இந்தச் சிறு பெண்ணால் எந்த விதத்திலும் காயப்படுத்த முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு துணிச்சல் பெற்றாள்.
“உட்காருங்க…” என்று சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்துவிட்ட மதுமதி, மூக்கில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு காப்பி போடுவதற்காகப் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.
சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்த கார்முகிலன் “ஒரு நிமிஷம் நீலா… இதோ வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்க இங்க…?”
“காஃபி போட்டுட்டு இருக்கேன் மாமா…”
“உன்னை யார் இதையெல்லாம் செய்யச் சொன்னது… உனக்குத்தான் இந்தப் பக்கமே வர முடியாதே… நீ போ… நீலா கூடப் பேசிட்டு இரு… நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே சமையலறைக்கு வந்துவிட்ட நீலா…
“அதெல்லாம் எதுவும் வேண்டாம்… நீங்க ரெண்டுபேரும் வெளிய வாங்க… நானே காஃபி போட்டுட்டு வர்றேன்… காஃபி பொடியும், சக்கரையும் எங்க இருக்குன்னு மட்டும் சொல்லிடுங்க…” என்று புன்னைக்க, மதுமதி நீலவேணியின் புன்னகையில் பயந்துவிட்டாள்.
‘இவ்வளவு அழகான பெண்ணை… அதுவும் சரியில்லாத பெண்ணை வீட்டிற்குள் விட்டது சரியா…?’ என்கிற சந்தேகம் அவளை அமைதியிழக்கச் செய்தது. அவள் முகத்தில் மூக்கை மறைத்துச் சுத்தியிருந்த துணியை அகற்றிவிட்டு, பேந்த விழித்துக் கொண்டிருக்கும் போதே…
“ஹேய்… நீலா… நீயும் வந்துட்டியா… குட்… குட்… வா… வா… இதோ… சக்கரையும் காஃபி பொடியும் இங்க தான் இருக்கு…” என்று அவளுக்கு அனுமதி கொடுத்தான் நாயகன்.
“இல்ல… இல்ல… நீங்க எதுக்குச் சிரமப்படணும்… நானே…” என்று மதுமதி சுதாரிக்கும் போதே,
“அதெல்லாம் ஒரு ஃபார்மாலிட்டியும் பார்க்க வேண்டியது இல்லை மதி… இனி நீலாவும் நம்மைப் போல் இந்த வீட்டில் எல்லா சுதந்திரத்தோடும் உரிமையோடும் இருக்கட்டும்… நீ வா நீலா…” என்று மனைவியைத் தடுத்துப் பேசினான் கணவன்.
மதுமதிக்கு ‘சுருக்’கென்றது… ‘தப்புச் செய்துவிட்டோம் போலிருக்கே…!’ என்று நினைத்தாள். ஆனாலும் மாமன் மீது அவள் கொண்ட அபார நம்பிக்கை அவளுக்கு ஆதரவளிக்க, மனம் சற்று அமைதியடைந்தது.
வந்த முதல் நாளிலிருந்தே நீலவேணி சமையலறையைத் தன் வசமாக்கிக் கொண்டாள். முதல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவள், மூன்றாவது நாள் சமையலறையில் பாத்திரங்களும், பொருட்களும் அடுக்கி வைத்திருந்த முறையை மாற்றித் தன் விருப்பபடி அடுக்கி வைத்தாள்.
“நீலவேணி… எதுக்கு இதல்லாம் செய்றீங்க…?” மதுமதி எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்டாள்.
“சமையலறை இப்படி இருப்பதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது மதுமதி…” அவள் தெளிவாகப் பதில் கொடுத்தாள்.
வீட்டின் உரிமைக்காரிக்குக் கோபம் வந்தது… இரண்டுநாள் சமையலறையில் புழங்க விட்டதற்கு எல்லாவற்றையும் அவள் விருப்பத்திற்கு மாற்றிக்கொண்ட அதிகப்பிரசங்கிடம் எதைப் பேசுவது…! ஆனால் பேசாமலும் இருக்க முடியாது… ஆரம்பத்திலேயே தட்டி வைக்காவிட்டால் ஆபத்தாகிவிடும் என்று உணர்ந்து,
“உங்களுக்கு வசதியாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை நீலவேணி… இந்தச் சமையலறையில் நான் தான் எப்பொழுதும் சமைக்கப் போகிறேன்… எனக்கு எது வசதியோ, அதைத்தான் பார்க்க முடியும்…” என்றாள்.
“நீங்கள் சொல்வது சரிதான் மதுமதி… ஆனால் எப்படியும் உங்கள் உடல் இருக்கும் நிலையில்… இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் சமையலறைக்குள் நுழைய முடியாது. நான் தானே சமைக்கப் போகிறேன்…. இப்போதைக்கு என் விருப்பப்படி இருக்கட்டும். நீங்கள் எப்போது உடல்நலம் பெற்றுச் சமைக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்போது உங்களுக்கு எது வசதியோ… அப்படி நான் மாற்றி அடுக்கிக் கொடுத்துவிடுகிறேன்…” என்று சொல்லிச் சமாதானமாகப் புன்னைகைச் செய்பவளை என்ன சொல்வது என்று மதுமதிக்கு விளங்கவில்லை.
# # #
அன்று நீலவேணி தனியாளாகச் சமையலறையில் உழன்று கொண்டிருந்தாள். கார்முகிலனுக்கு மதிய உணவிற்கு இரண்டு காய்கறிகளோடு குழம்பு, சாதம்… காலை உணவிற்குச் சப்பாத்திக் குருமா… மதுமதியின் குமட்டலைச் சமாளிப்பதற்காக கஞ்சி, துவையல் என்று சமையலறையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் போல் மதுமதிக்குத் தலை நிமிர்த்த முடியாமல் மயக்கம் கிறுகிறுக்க, அவள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உணராதவளாகப் படுக்கையில் கிடந்தாள்.
காலை உடற்பயிற்சிகளை விரைவாக முடித்துக் கொள்வதற்காக, அதிகாலையிலேயே எழுந்து மைதானத்திற்குச் சென்றுவிட்ட கார்முகிலன் அப்போதுதான் உள்ளே நுழைந்தான். அவன் தலையைக் கண்டதும், அவசரமாகக் காஃபி தம்ளருடன் அவனிடம் ஓடியவள்,
“என்ன முகிலன்… காலையில் நான் எழுந்திருப்பதற்கு முன்னாலேயே வெறும் வயிற்றில் கிரௌண்டுக்குப் போயிட்டீங்களே..! என்னை எழுப்பியிருக்கக் கூடாதா…?” என்று கடிந்துகொண்டு அவன் கையில் காஃபி டம்ளரைத் திணித்தாள்.
“தேங்க்ஸ் நீலா… நீ காஃபி சாப்பிட்டியா…?” என்று கேட்டபடி அவள் கொடுத்த காப்பியைச் சுவைத்தான்.
“ம்ம்ம்… சாப்பிட்டேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவசரமாகச் சமையலறைக்குள் ஓடினாள். இவனும் அவளைத் தொடர்ந்து சமையலறைக்குச் சென்றான்.
“என்ன நீலா… எதுக்கு இவ்வளவு சமைக்கிற…? சிம்பிளா செய்யக் கூடாதா…?”
“நாள் முழுக்க உழைப்பவருக்கு இதைவிட சிம்பிளாக என்ன சமைத்துக் கொடுப்பது…?” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.
தோழியின் பாசத்தில் நெகிழ்ந்தவன் “சரி… உனக்கு நானும் ஹெல்ப் பண்ணறேன்… என்ன செய்யட்டும் சொல்லு…” என்றான்.
“உங்களுக்கு டைம் ஆச்சுனா காலேஜுக்குக் கிளம்புங்க… இல்லைன்னா இந்தக் காயை வெட்டிக் கொடுங்க…” என்று இயல்பாக அவனுக்கும் ஒரு வேலையைக் கொடுத்தாள்.
அவன் வெண்டைக்காயை வெட்டிக் கொண்டே கேட்டான்…
“மதி எழுந்தாளா…? ஏதாவது சாப்பிட்டாளா…?”
“இன்னும் இல்ல…”
“இவ்வளவு நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்காளே… எதுவும் செய்யாதே…!” என்று கவலையுடன் கேட்டான்.
மதுமதி மீது அவன் காட்டும் அக்கறை, அவளுக்கு எரிச்சலாக இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்…
“எதுவும் ஆகாது… கவலைப்படாதீங்க…” என்று ஆறுதல் சொன்னாள்.
நீலவேணிக்கு அந்த நிமிடம் கார்முகிலனோடு ஒரே சமையலறையில் நெருக்கமாக நின்று வேலை செய்வதும்… ஒருவருக்கொருவர் அக்கறை காட்டிப் பேசிக் கொள்வதும்… இன்பமாக இருந்தது. அந்த இன்பத்தை அனுபவிப்பதற்காகவே தன்னுடைய வேலைகளை அதிகப்படுத்திக் கொண்டாள். அவள் தனியாக இவ்வளவு வேலைகளையும் செய்கிறாளே என்று மனம் தாங்கமல் அவளுக்கு உதவ எண்ணி கார்முகிலன் அருகில் வந்தால் அந்தத் தருணத்தை ரகசியமாக உள்ளுக்குள் ரசிப்பாள்.
மதுமதி அவளுடைய செயல்களுக்குத் தடைப்போடாமல் காலைவேளையில் படுக்கையறையில் முடங்கிவிடுவது இன்னும் வசதியாகிப் போனது.
நீலவேணி முடிந்தளவு கார்முகிலனைச் சமையலறையிலேயே பிடித்து வைத்திருந்தாள். ஒரு கட்டத்தில்,
“நீலா… நீ கொஞ்சநேரம் இந்த வேலைகளைப் பார்த்துக் கொள்… நான் மதியைப் பார்த்துவிட்டு வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு மனைவியைப் பார்க்கச் சென்றான்.
நீலவேணிக்கு உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் “சரி முகிலன்… நான் பார்த்துக்குறேன்… நீங்க போய் மதுமதியைப் பாருங்க…” என்று சொல்லி அனுப்பினாள்.
மதுமதி செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும், நீலவேணி பொறுப்பாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும்… மனதளவில் மதுமதியை வெறுக்கத்தான் செய்தாள். ‘தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய வாழ்க்கையைப் பறித்துக் கொண்டவள் இவள்…’ என்கிற எண்ணம் அவளை மதுமதியோடு ஒட்டவிடாமல் செய்தது. அதனால் அவளுக்குச் செய்யும் வேலைகளைக் கடமைக்காகவும், கார்முகிலனுக்குச் செய்யும் வேலைகளை முழு மனநிறைவோடும்… ஆசையோடும் செய்வாள். இதைப் புரிந்துகொள்ளாத கணவன் மனைவி இருவரும் தங்களுடைய வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
Comments are closed here.