Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 32

அத்தியாயம் – 32

கார்முகிலனின் உந்துதலால் எழுந்த மதுமதி பல் தேய்ப்பதற்குள் இரண்டுமுறை வாந்தி செய்துவிட்டாள். மிகுந்த சிரமத்துடன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவளைத் தோள் சாய்த்து, தலை கோதி… ஆதரவுடன் அணைத்தபடி ஹாலுக்கு அழைத்து வந்து சோபாவில் அமரவைத்து, நீலவேணி தயாரித்துக் கொடுத்த கஞ்சியைப் புகட்டினான்.

“குமட்டுது மாமா… வேண்டாம் மாமா…” என்று உணவை மறுத்து அவள் கெஞ்சும் போது, கார்முகிலனோ அவளை அதட்டி… உருட்டி… கெஞ்சிக் கூத்தாடி… அந்தக் கஞ்சியைக் குடிக்க வைத்துக் கொடிருந்தான்.

இந்தக் காட்சியைச் சமையலறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நீலவேணிக்கு இதயத்துடிப்பு அதிகமானது.

அவளும்தான் எத்தனையோ முறை கருவுற்று அவதிப்பட்டிருக்கிறாள். இப்போது முகிலனின் தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சுபவளை விட, மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் இது போல் அவளைத் தாங்குவதற்கு யாரும் அருகில் இருந்ததில்லையே…! இப்படிப்பட்ட அன்பான வாழ்க்கைக்குத் தானே அவள் ஏங்கினாள். இந்த ராட்சசி மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்நேரம் முகிலனின் தோளில் சாய்ந்திருக்கும் தலை அவளுடையதாக இருந்திருக்கும்… அவனுடைய காதலை அனுபவிக்கும் பாக்கியவதி அவளாக இருந்திருப்பாள்.

எல்லாவற்றையும் பாழ் செய்த பாவி… அவனோடு ஒட்டி உறவாடுவதைப் பார்க்கும் போது அவள் உதடுகள் துடித்தன, கண்கள் கலங்கின… மூச்சு முட்டியது, நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது…

அவள் தன்னைக் கட்டுப்படுத்தமுடியாமல் “முகிலன்…” என்று கத்திவிட்டாள்.

திடுக்கிட்ட கணவன் மனைவி இருவரும் வியப்புடன் சமையலறைப் பக்கம் பார்த்தார்கள். தன் முகமாற்றத்தை மறைக்கும் பொருட்டு அவர்களுக்கு முதுகு காட்டித் திரும்பி நின்றபடி, ஏதோ டைனிங் டேபிளில் வேலை செய்து கொண்டிருந்தாள் நீலவேணி.

“என்ன நீலா…?” கார்முகிலன் குரல் கொடுத்தான்.

“நேரமாச்சு… சாப்பிட வாங்க…”

“இதுக்குதான் அவ்வளவு சத்தம் போட்டியா…? கொஞ்சம் வெயிட் பண்ணு நீலா… வர்றேன்…” என்று சாதாரணமாகச் சொன்னான்.

ஆனால் மதுமதி, நீலவேணியின் கத்தலைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘அவள் எதற்காக அப்படிக் கத்தினாள்…?’ என்று நினைத்துக் குழம்பியபடி, கணவன் ஸ்பூனால் கொடுத்த உணவை மென்று விழுங்கினாள்.

சிறிதுநேரம் கழித்து மீண்டும் கார்முகிலனை அழைத்தாள் நீலவேணி. அப்போதும் அவன் மனைவியைக் கவனிப்பதில் அக்கறை காட்டிக் கொண்டிருந்தானே தவிர, அவளுடைய அழைப்பை மதித்துச் சாப்பிடச் செல்லவில்லை. அதில் எரிச்சலானவள்,

“என்ன முகிலன் செய்றீங்க…? லேட் ஆச்சுன்னா சாப்பிடாமல் கிளம்பிடுவீங்க… மதுமதி என்ன சின்னக் குழந்தையா… பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிட வைக்க… எழுந்து சாப்பிட வாங்க முகிலன்…” என்று குரலில் சிறு அழுத்தத்தைக் கொண்டுவந்து அழைத்தாள்.

அந்த அழுத்தம் மதுமதியை விழித்துக்கொள்ள வைத்தது. அவள் நீலவேணியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். உள்ள கொதிப்பால் சிவந்திருந்த முகம் தணல் போல் தகிக்க, உணவு மேஜைக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள். கார்முகிலனுக்கு உணவு பரிமாறத் தயாராக நிற்கிறாள் என்பது புரிந்தது.

‘இவள்தான் தினமும் மாமாவிற்குப் பரிமாறுகிறாளா…! மாமா தானாகச் சாப்பிட்டுக் கொள்வாரே… இவள் எதற்கு இந்த வேலைகளையெல்லாம் செய்கிறாள்…!’

மதுமதி கருவுற்றதிலிருந்து கார்முகிலன் அவளை எந்த வேலையும் செய்ய அனுமதிப்பதில்லை. வேலைக்கார அம்மாவின் உதவியுடன் அவனே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்வான்.

நீலவேணி வந்ததற்குப் பிறகு அவள் சமையல் வேலையைப் பார்த்துக் கொள்கிறாள். மற்றதெல்லாம் பழையபடி மாமாவும் வேலைக்கார அம்மாவும் கவனித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் வீட்டில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. இன்றுதான் நீலவேணியின் லீலைகளைக் கவனிக்கிறாள்.

மதுமதி உணவை முடித்ததும், கார்முகிலன் உணவு மேஜைக்குச் சென்றான். அங்கு நீலவேணி பரிமாற அவசரமாகக் காலை உணவை உண்டவன், உள் அறைக்குச் சென்று பத்து நிமிடத்தில் கல்லூரிக்குச் செல்லத் தயாராகி வந்தான். ஹாலில் அமர்ந்தபடியே வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மதுமதியிடம் “வர்றேன் மதி… நல்லா ரெஸ்ட் எடு…” என்று சொல்லிவிட்டு “நீலா…” என்று குரல் கொடுத்தான்.

“இதோ வந்துட்டேன் முகிலன்…” என்று கூவிக்கொண்டே ஓடி வந்த நீலவேணி, சிரித்த முகத்துடன் மதிய உணவு பையை அவன் கையில் கொடுக்க… மதுமதிக்கு ‘பகீர்’ என்றது.

“தேங்க்ஸ் நீலா…” என்று வாங்கிக் கொண்டவன், வெளியே நடந்தபடியே “வர்றேன் நீலா…” என்று சொல்ல… அவனோடு நடந்தபடியே வாசலுக்குச் சென்றுவிட்ட நீலவேணி,

“பத்திரமா போயிட்டு வாங்க…” என்றபடி டாட்டா சொல்லி வழியனுப்பினாள்.

மயக்கம், வாந்தி, சோர்வெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட… மதுமதி அன்று முழுவதும் நீலவேணியின் நடத்தையை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

சமையலறையிலிருந்து பூஜையறை வரை எல்லா இடங்களுக்கும் உரிமையோடு சென்று வேலை செய்து கொண்டிருந்தவளைப் பார்க்கும் பொழுது மதுமதிக்கு இரத்த அழுத்தம் கூடியது. வேலைக்கார அம்மா வந்ததும், அவளுக்கு அன்பொழுகும் குரலில் வேலைகளை ஏவிய போதும்… சமைத்திருந்த உணவில் கொஞ்சம் அந்த அம்மாவிற்குக் கொடுத்து அனுப்பிய போதும்… நீலவேணிதான் அந்த வீட்டின் எஜமானி என்கிற பிரமை மதுமதிக்கே தோன்றியது. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் வேலைக்கார அம்மா துவைத்துத் தோட்டத்தில் காய வைத்துவிட்டுப் போயிருந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு வந்த நீலவேணி, எல்லா ஆடைகளையும் தனித்தனியாக மடித்து வைத்ததோடு… கார்முகிலனின் ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வந்து அயர்ன் செய்தது மதுமதியைக் கொதித்தெழ வைத்தது.

வேகமாக நீலவேணியை நெருங்கியவள் அவள் கையிலிருந்த கணவனின் ஆடைகளைப் பிடுங்கி “இதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க…?” என்றாள்.

“ஏன் செஞ்சா என்ன…? எல்லா டிரஸ்சையும் எடுத்துட்டு வந்து மடிக்கும் போது… இந்த டிரெஸ்ஸை மட்டும் ஒதுக்கிவிட்டு வர முடியுமா…?” நீலவேணி நியாயம் பேசினாள்.

“எப்பவும் வேலைக்கார அம்மா வந்ததும், முதலில் துணியைத் துவைத்துக் காய வைத்துவிட்டு… மற்ற வேலைகளைப் பார்த்துவிட்டு, கடைசியாகத் துணியையும் மடித்து வைத்துவிட்டுப் போய்விடுவார்களே… இது என்ன புதுப் பழக்கம்…?” கடுமையாக வந்தது மதுமதியின் வார்த்தைகள்.

அதையெல்லாம் சட்டைச் செய்யாமல் “இப்போது வீட்டை முழுவதும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்… என் வசதிபடி வேலைக்கார அம்மாவைக் கடைசியாகத் துணிகளைத் துவைக்கச் சொன்னது நான்தான்… அதற்கு என்ன…?” அலட்சியமாகக் கேட்டாள்.

“அதற்கு என்னவா…!” மதுமதி விக்கித்தாள்.

“ஆமாம்… அதற்கு என்ன என்றுதான் கேட்டேன்… உங்கள் துணியையும் என் துணியையும் மடிக்கும்போது கோபம் வராத உங்களுக்கு… முகிலனின் துணிகளை நான் தொட்டதும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது…? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…? உங்கள் வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று அடம்பிடித்த என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தது முகிலன் தான்…”

“நான் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து, என்னைச் சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் என்றால்… நான் இப்பொழுதே இங்கிருந்து போய் விடுகிறேன். முகிலன் வந்ததும் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்…” என்று படபடவென்று பேசிவிட்டு வெளியே செல்ல எத்தனித்த நீலவேணியின் வேகத்தைப் பார்த்து, மதுமதி அரண்டுவிட்டாள்.

‘மாமாவின் விருந்தாளியை நாம் சண்டை பிடித்து வெளியே அனுப்பிவிட்டோம் என்று மாமாவிற்குத் தெரிந்தால் என்ன ஆகும்…! ஐயையோ…!’ என்று உள்ளுக்குள் மிரண்டவள்,

“ஐயையோ… சாரீங்க… தப்பா எடுத்துக்காதீங்க… உங்களுக்கு எதுக்குச் சிரமம் என்று நினைத்துத் தான் கேட்டேன்… மற்றபடி உங்கள் மேல் எனக்குச் சந்தேகமெல்லாம் இல்லைங்க…” என்று தணிந்து பேசினாள்.

அவளை வெறுப்புடன் பார்த்த நீலவேணி, அவள் கண்ணெதிரிலேயே கார்முகிலனின் துணிகளை அள்ளிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்… மதுமதியின் மனம் கொந்தளித்தது. ‘நீலவேணி திருந்தி வாழும் பெண்ணல்ல… அவளுக்குள் ஒரு சைத்தான் இருக்கிறான்’ என்று அவள் மனம் அடித்துச் சொன்னது. அதை கார்முகிலன் புரிந்து கொள்ளவில்லையே என்கிற வருத்தம் மேலிட்டது…

மதுமதியின் எண்ணம் சரிதான். நீலவேணிக்குள் ஒரு சைத்தான் இருப்பது நிஜம் தான். கார்முகிலனுக்குத் திருமணம் ஆன புதிதில் நீலவேணி துன்பப்பட்டு அழுதபோதும், பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு அவனோடு பழைய நட்பைத் தொடர்ந்த போதும்… பாட்டி தவறி, தனிமையில் துவண்ட போதும்… கார்முகிலனின் மனைவியான மதுமதியைக் கறுவித் தீர்த்தாளே தவிர, நண்பன் மனதார விரும்பி அமைத்துக் கொண்ட வாழ்க்கையைச் சிதைத்து… அதில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்ததில்லை. அதெல்லாம் பழைய கதை…!

என்றைக்கு கார்முகிலனின் வீட்டிற்குள் நுழைந்து, கிட்டத்தட்ட அவனுடைய மனைவி செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்தாளோ… அன்றே மனதளவில் அவனுடைய மனைவியாகத் தன்னைக் கற்பனைச் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டாள். அந்தக் கற்பனை உலகில் இதுவரை கிடைக்காத ஒரு புதுச் சுகம் அவளுக்குக் கிடைத்தது.

அந்தச் சுகத்தை முழுமையாக அனுபவிக்கவிடாமல் இன்று அடிக்கடி மதுமதி குறுக்கிடுகிறாள். கற்பனையில் கூடத் தன்னைச் சந்தோஷமாக இருக்கவிடாத மதுமதி மீது கட்டுக்கடங்காமல் கோபம் பொங்க… வெடித்துவிட்டாள்.

எதிர்த்து நிற்க வேண்டிய மதுமதி, சட்டெனப் பின்வாங்கிய அந்த நொடிதான் நீலவேணியின் மூளையில் மின்னல் வெட்டியது…

‘கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை நிஜமாக்கிக் கொண்டால் என்ன…? ஓர் அதட்டலுக்குப் பயந்து நடுங்கும் இந்தக் கோழையை ஏமாற்றி, அவளுடைய வாழ்க்கையைப் பிடுங்கிக் கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கப் போவதில்லை…’ என்று அவளுக்குள் பதுங்கியிருந்த சைத்தான் மேலெழுந்து அறிவுரைக் கூற, நீலவேணி கார்முகிலனைத் தன்னவனாக்கிக் கொள்ள எதையும் செய்யத் துணிந்துவிட்டாள்.




Comments are closed here.

You cannot copy content of this page