உயிரைத் தொலைத்தேன் – 33
4297
0
அத்தியாயம் – 33
அன்று கல்லூரி முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்த கார்முகிலன் எப்பொழுதும் போல் அவனுடைய வண்டியில் வராமல், பளபளக்கும் புத்தம் புது காரில் வந்தது வீட்டிலிருந்த இரு பெண்களையும் விழிவிரிக்க வைத்தது.
‘என்ன மாமா புது கார்…! உங்க வண்டி எங்க…?’ என்று மதுமதி கேட்பதற்குள்… அவளை முந்திக்கொண்டு வாசலுக்கு ஓடி வந்த நீலவேணி,
“ஹை… முகிலன்… என்ன இது புது கார்…! யாருடையது…?” என்று ஆர்ப்பரித்தாள்.
“எப்படி இருக்கு நீலா…? ஒரு மாதமா பிளான் பண்ணி இன்னிக்குதான் ‘ஷோரூமிலிருந்து எடுத்துட்டு வர்றேன்…”
“ஹோ… வாழ்த்துக்கள் முகிலன்…!!!” என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்துச் சொன்னாள்.
‘புது கார் வாங்கிக் கொண்டு வந்துவிட்டு… அதை முதலில் அவளிடம்தான் சொல்ல வேண்டுமா…? உங்களுக்கு மூளையே இல்லாமல் போய்விட்டது மாமா…’ என்று மதுமதி தனக்குள் வசைப்பாடினாள்.
“என்ன திடீர்ன்னு… கார் வாங்கிட்டு வந்து நிக்கிறீங்க… எதுவுமே சொல்லவே இல்லையே…!” என்று மகிழ்ச்சியுடன் காரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தபடிக் கேட்டாள் நீலவேணி.
“மதியை இனி மருத்துவமனைக்கு வண்டியில கூட்டிட்டுப் போகமுடியாது. வாடகை காருக்குக் கொடுக்கும் பணத்தோடு… இன்னும் கொஞ்சம் பணம் போட்டால், புதிதாக வாங்கும் காருக்கு மாதா மாதம் தவணைக் கட்டிவிடலாம் என்கிற தைரியத்தில், லோன் போட்டு கார் வாங்கிவிட்டேன்” என்று விளக்கம் சொன்னான்.
நீலவேணியின் உற்சாகமெல்லாம் வடிந்துவிட்டது.
‘மதிக்காகவா…!’ என்று வியந்தவளின் உற்சாகமெல்லாம் வடிந்துவிட, சிரமப்பட்டுச் சிரிப்பை வரவழைத்து “அப்படியா… நல்லது முகிலன்…” என்று சொல்லி வைத்தாள்.
கணவன் கடைசியாகச் சொன்ன வார்த்தை மதுமதிக்குப் புதுத் தெம்பைக் கொடுக்க, அவள் மலர்ந்த முகத்துடன் ஹாலிலிருந்து வெளிப்பட்டாள்.
“மதி… எங்க போன இவ்வளவு நேரம்…? இங்க வா… கார் பார்த்தியா…? எப்படி இருக்குச் சொல்லு…” என்று அவளை வாசலுக்கு அழைத்தான். அவள் வெளியே வந்ததும் அவள் கையைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு,
“பிடிச்சிருக்கா…?” என்றான்… அந்தநொடி, நீலவேணி என்கிற பெண் அங்கு இருக்கிறாள் என்பதையே சுத்தமாக மறந்துவிட்டான் என்பதை அவனுடைய கிறக்கமான குரலும், காதல் வழியும் கண்களும் காட்டிக் கொடுத்தன.
மகிழ்ச்சியில் உருகிவிட்ட மதுமதி, “ம்ம்ம்… பிடிச்சிருக்கு மாமா…” என்றாள் முகம் சிவக்க.
நிலா வெளிச்சத்தில் தாய்மையின் மினுமினுப்பும், சிவந்த முகமுமாக வசீகரித்தவளை மாமனின் பார்வை விழுங்கியது. பஞ்சமாகிப் போன வார்த்தைகளை விடுத்துப் பார்வை மொழி பேசி, உயிர் காதலை மேலும் வளர்க்க முனைந்த தலைவனுக்கு ஈடுகொடுத்து நாணமொழிப் பேசினாள் தலைவி.
காதலர்களுக்கு இனிமையாக இருந்த அந்தச் சிலநிமிட நேரம், நீலவேணிக்குக் கசந்தது. பொறுக்கமுடியாமல் அவர்களின் இனிமையைக் குலைக்க எண்ணி, வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட தும்மல் இரண்டை “ஹா..ச்… ஹா..ச்…” என்று போட்டாள்.
அதில் விழித்துக் கொண்ட கார்முகிலன் “வா நீலா ஒரு ரௌண்ட் போயிட்டு வரலாம்…” என்று மதுமதியின் கையைப் பிடித்து முன் இருக்கையில் அமர வைத்தபடி நீலவேணியிடம் சொன்னான்.
‘அந்த ராட்சசி உன்னோடு ஜோடியாக முன் இருக்கையில் அமர்ந்து வருவதை… பின் இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து வயிறெரிந்து சாவதற்கு தான் என்னை அழைக்கிறாயா…?’ என்று கறுவியவள்,
“இல்ல முகிலன்… புது கார்ல முதல்முதல்ல வெளிய போறீங்க… நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க. நான் வரல…” பெருந்தன்மையாகச் சொல்வது போல் பாவனைச் செய்தாள்.
“ச்ச… ச்ச… தனியா என்ன போறது…! நாங்க என்ன புதுசா கல்யாணம் ஆனவங்களா…? நீ வா நீலா…” அவன் தோழியைக் கட்டாயப்படுத்தினான்.
‘தெரியும்டா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளை என்ன பார்வைப் பார்த்த நீ…! இப்போ… இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நடிக்கிறாயா…? உன் ஆம்பளைப்புத்தி எனக்குத் தெரியாதா…!’ அவன் மீது கடுமையான கோபத்தில் இருந்தாள்… ஆனால் வெளிக்காட்ட முடியாத கட்டாயம்.
“இல்ல முகிலன்… எனக்குக் கொஞ்சம் தலைவலியா இருக்கு… நான் ரெஸ்ட் எடுக்குறேன். நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க. எதாவது கோவிலுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா நல்லது…” உள்ளே இருக்கும் குட்டு வெளிப்பட்டுவிடாமல் பூசி மெழுகிப் பேசி அனுப்பிவைத்தாள்.
மதுமதிக்கும் ஆச்சர்யம்தான்… தங்களுடைய தனிமையைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே, அவள் தங்களோடு ஒட்டிக்கொண்டு வருவாள் என்று எதிர் பார்த்திருந்தாள். ஆனால் அவளோ நாகரிகமாகக் கழண்டு கொண்டதோடு, அக்கறையாகவும் பேசுகிறாளே…
‘ஒருவேளை நாம்தான் அவளைத் தவறாக நினைக்கிறோமோ…’ என்கிற சந்தேகம் கூட வந்தது மதுமதிக்கு. மறுநாளே அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள் நீலவேணி.
# # #
அன்று காலை எழுந்ததிலிருந்து நீலவேணியை கார்முகிலனிடம் நெருங்க விடக் கூடாது என்ற முடிவோடு இருந்த மதுமதி, காஃபி கொடுப்பது… செய்தித்தாள் எடுத்துக் கொடுப்பது… கல்லூரிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை எடுத்து வைப்பது என்று தானே கார்முகிலனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். பழையபடி காலைச் சுற்றும் செல்ல நாய்குட்டி போல் அவனையே சுற்றிச் சுற்றிவரும் மதுமதியைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது கார்முகிலனுக்கு.
“என்ன இன்னிக்கு அங்கேயும் இங்கேயும் சுத்திக்கிட்டே இருக்க…?” என்று சிரிப்புடன் கேட்டான்.
“உடம்பு நல்லா இருக்கு மாமா… அதான்…” என்று பதில் சொன்னாள்.
‘உன்னை நீலவேணி என்கிற பேயிடமிருந்து பாதுகாக்கப் போராடுகிறேன்…’ என்று சொல்லவா முடியும்.
அவன் அசைந்தால் கூட “என்ன மாமா வேணும்…?” என்று கேட்டபடி எழுந்துகொள்ளும் மதுமதி மீது நீலவேணிக்குக் கொலைவெறி உண்டானாலும்… அவளுடைய நடவடிக்கைக்கு எந்த விதத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒதுங்கி அமைதியாக இருந்தாள். அதற்கான காரணம் அடுத்தச் சில நிமிடங்களிலேயே விளங்கியது மதுமதிக்கு…
கார்முகிலன் கல்லூரிக்குச் செல்லத் தயாராகி வெளியே வரும்பொழுது, நீலவேணியும் வெளியே செல்லத் தயாராகி வந்தாள்.
“முகிலன் என்னைக் கொஞ்சம் தேனியில ட்ராப் பண்ணிடறீங்களா…? எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு… வரும்பொழுது பஸ்ஸில் வந்துடறேன். என் வண்டி பஞ்சர் ஆகிவிட்டது…” என்றாள்.
“சரி வா நீலா…” என்றான் முகிலன் தயங்காமல்.
அவன் மனைவியிடம் விடைபெற்று வெளியே சென்றான். அமைதியாக வெளியே சென்ற நீலவேணி, காரின் முன்பக்கக் கதவைத் திறந்து கார்முகிலனுக்கு அருகில் அமரும்போது மதுமதியை ஒரு வெற்றிப் பார்வைப் பார்த்தாள்.
அந்த ஒரு பார்வையில் மதுமதியின் உடல் சில்லிட்டு நடுங்கியது…
‘இவள் எதையும் செய்யத் துணியும் பழிகாரி… இவளை வீட்டிற்குள் வைத்திருப்பது பேராபத்தானது…’ என்று பரிபூரணமாக உணர்ந்தாள். கார் மதில்சுவருக்கு வெளியே சென்ற பிறகும் அசைவற்று வாசல்படியிலேயே நின்று கொண்டிருந்தவளின் தோளில் ஆதரவாக ஒரு கரம் படிந்தது. திரும்பி பார்த்தாள். வேலைக்கார அம்மா நின்று கொண்டிருந்தாள்.
“அம்மாடி நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதம்மா… ஆம்பளைங்கள முழுசா நம்பவே முடியாது. அவங்கல்லாம் முழங்கால்ல வைக்கிற வெண்ணை மாதிரி… எந்த நேரமும் வழுக்கிக்கிட்டுப் போய்டுவாங்க. நாமதான் சமத்தா இருந்துக்கணும்…”
“…………………” மதுமதி வியப்புடன் அந்தப் பெண்மணியைப் பார்த்தாள்.
“இப்ப கார்ல ஏறிப் போறாளே… அவளும், அவ முழியும்… மூஞ்சியும்… அவளை எப்படிம்மா நீ நம்பி வீட்டுக்குள்ள விட்ட…? தம்பி ஒழுங்கா இருந்தாலும் இவ விடமாட்டா… ஆம்பிளைங்க சுயபுத்தி இழந்து ஒரு நிமிஷம் தப்புப் பண்ணிவிட்டாலும்… நாமதான் கடைசிவரைக்கும் கண்ணீர் வடிக்கணும். நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ… முதல்ல இந்தப் பிசாச வீட்டைவிட்டு அடிச்சுத் தொரத்து… அவ்வளவுதான் நான் சொல்லுவேன்…” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட மதுமதி இன்னும் ஆடிப் போனாள்.
அப்போதுகூட கார்முகிலன் எந்தச் சூழ்நிலையிலும் தவறு செய்வான் என்று அவள் நினைக்கவில்லை. அவன் நிச்சயம் எந்தத் தவறும் செய்ய மாட்டான். நீலவேணி ஏதாவது கீழ்த்தரமாக முயற்சி செய்தால் கூட… அவள் மீதான நல்ல அபிப்பிராயத்தைத் தான் துறப்பானே தவிர… தவறு செய்ய மாட்டான் என்று முழுமனதாக நம்பினாள்.
ஆனால் இப்போதைய பிரச்சனை வேறு… நீலவேணி சரியில்லாதவள் என்பது அவளைத் தவிர வேலைக்கார அம்மாவிற்கும் தெரிந்திருக்கிறது. அவளைப் பற்றி இன்னும் பலருக்கும் தெரிந்து அக்கம்பக்கத்தில் நான்கு பேர் கார்முகிலனைத் தவறாகச் சித்தரித்துப் பேசுவதற்கு முன், இவளை வீட்டிலிருந்து அனுப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.
‘நீலவேணியைப் பற்றி மாமாவிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது…? எப்படி அவளை வெளியே அனுப்புவது…?’ என்கிற சிந்தனைக்கு விடை கிடைக்காமல் களைத்துப் போன மதுமதிக்கு இளைப்பாறத் தாயின் அருகாமை தேவைப்பட்டது. தாயைப் பார்க்கவேண்டும் போல் மனம் மீண்டும் முரண்டு செய்ய ஆரம்பித்தது… ஆனால் கணவனுடைய விருப்பத்தை மதிக்காமல், அவனிடம் மறைத்து எதையும் செய்ய விரும்பாமல் பெற்றோரைச் சந்திக்க வேண்டும்…. அவர்களோடு பேச வேண்டும் என்கிற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, குறைந்தபட்சம் அவர்களுடைய நலத்தை அறிந்தால் மனம் நிம்மதியடையும் என்று நினைத்து ஜீவிதாவை அழைத்தாள்.
நலவிசாரிப்புகளுடன் ஆரம்பித்தது தோழிகளின் பேச்சு. அதைத் தொடர்ந்து மதுமதி தான் கருவுற்றிருப்பதையும்… தன்னுடைய பெற்றோரின் நினைவு, தன்னை வெகுவாக வாட்டுவதையும் தோழியிடம் பகிர்ந்து கொண்டாள். தனக்காக காம்காபட்டிக்குச் சென்று தன்னுடைய தாய்தந்தையைப் பார்த்துவிட்டு வரும்படி கூறினாள். அப்படியே அவர்கள் இருவருக்குமான பேச்சுவார்த்தை எந்த அளவு இருக்கிறது என்பதையும் நோட்டம் விட்டுக்கொண்டு வரும்படி கூறினாள். ஜீவிதாவும் விரைவில் காம்காபட்டிக்குச் சென்று வருவதாக உறுதியளித்தாள். எல்லாவற்றையும் பேசிய மதுமதி, ஏனோ நீலவேணி தன் வீட்டில் இருப்பதைத் தோழியிடம் சொல்லமல் விட்டுவிட்டாள்.
Comments are closed here.