Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 35

அத்தியாயம் – 35

இரவு சரியான உறக்கம் இல்லாததால் விடிந்து வெகுநேரம் கழித்து எழுந்த கார்முகிலன், மதுமதியிடம் முகம் கொடுத்துப் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். முகத்தில் நேற்றிருந்த கடுமை இல்லை, அந்தத் தைரியத்தில் அவனிடம் காஃபியை நீட்டியபடிக் கேட்டாள்…

“என் ஆச்சு மாமா… நேற்று ரொம்ப லேட்டா வந்தீங்க… எங்க போயிருந்தீங்க…?”

அவன் அவள் நீட்டிய காஃபியைக் கையில் வாங்காமல் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.

“என்ன மாமா… ஏன் அப்படிப் பார்க்குறீங்க…?”

அவன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு “ம்ஹும்… ஒண்ணுமில்ல…” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.

“காஃபி மாமா…”

“வேண்டாம்…” ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்துவிட்டு, தோட்டத்துப் பக்கம் சென்றான்.

அவன் மதுமதியின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாலும், அவனுடைய மனம் முழுவதும் அவளைத்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. நேற்று அவள் ஜீவிதாவிடம் சொன்ன செய்தி, அவனை மிகவும் பாதித்துவிட்டது. ‘அவள் தன்னுடைய பெற்றோரின் வாழ்வைச் சீராக்கத்தான் தன்னைத் திருமணம் செய்து கொண்டாளோ’ என்கிற சந்தேகம் அவனை நிம்மதியிழக்கச் செய்தது. இந்த நேரத்தில் அவளிடம் பேசினால் வார்த்தைகள் எக்குதப்பாக விழுந்துவிடும் என்பதை உணர்ந்து ஒதுங்கி இருந்தான்.

‘அவளிடம் கோபத்தைக் காட்டி வருத்திவிட்டு… பிறகு அவளை வருத்திவிட்டோமே என்று நாமும் வருந்தி… எதற்கு இந்த வம்பு… பேசாமல் இரண்டு நாள் ஒதுங்கி இருக்க வேண்டியதுதான்… அதற்குப் பிறகு அவளுடைய பேச்சிற்கு விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்…’ என்று முடிவு செய்து அவளிடமிருந்து விலகிச் சென்றான்.

அது தெரியாத மதுமதி விடாப்பிடியாக அவனை நிறுத்தி பேச்சுக் கொடுத்தாள்.

“மாமா… என்ன மாமா ஆச்சு…? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…?”

“அதெல்லாம் எதுவும் இல்ல…” முகம் கொடுக்காமல் அவன் நகரும்போது, அவனுடைய கையைப் பிடித்து நிறுத்தி

“இல்ல மாமா… நீங்க பொய் சொல்றீங்க… ஏதோ இருக்கு… என்னன்னு சொல்லுங்க…” என்றாள்.

“இப்ச்… ஒண்ணும் இல்லன்னு சொன்னா விட்டுத் தொலையேன்…” என்று கையை உதறி அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டு “இவ என்னவோ பெருசா பொய்யே சொல்லாதவ மாதிரி கேள்விக் கேட்க வந்துட்டா…” என்று முணுமுணுத்தபடி நகர்ந்துவிட்டான்.

மதுமதிக்கு அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று புரியவில்லை. அவள் ஜீவிதாவுடன் பேசியதை இவன் கேட்டிருப்பான் என்கிற எண்ணம் அவளுக்குச் சிறிதும் வராததால் அவள் வெவ்வேறு கோணங்களில், அவனுடைய கோபத்திற்கான காரணத்தை யோசித்தபடி சமையலறை பக்கம் நகரும்போது எதிரில் நீலவேணி வந்து நின்றாள்.

“என்ன ஆச்சு… முகிலன் காஃபி சாப்பிடலையா மதுமதி…?” சாதாரணமாக விசாரித்தாள்.

“இல்லை… வேண்டாமாம்… ”

“வேண்டாமா…! ஏன்…? நைட் கூடச் சாப்பிடல போலிருக்கே…! இது முகிலனுக்குக் கொண்டு வந்த காஃபிதானே… கொடுங்க இப்படி…” என்று மதுமதியின் கையிலிருந்து கப்பைப் பறித்துக்கொண்டாள்.

“இல்ல… மாமா… வேண்டாம் என்று சொல்லிட்டாங்க… இந்த காஃபி கூட ஆறியிருக்கும்…” என்று மதுமதி தடுக்கும்போதே, நீலவேணி காஃபி கப்புடன் தோட்டத்துப் பக்கம் கார்முகிலனைத் தேடிச் சென்றாள்.

“ஹாய் முகிலன்…”

“வா நீலா…”

“காஃபி சாப்பிடாமல் வந்துட்டீங்க போலிருக்கே… இந்தாங்க…” என்று அவள் கொடுக்கும்போது தவிர்க்க முடியாமல் அவன் காஃபியைக் கையில் வாங்கிக் கொண்டான்.

அந்தக் காட்சியை ஹாலில் நின்றபடி மதுமதி உள்வாங்கிக் கொண்டிருக்க… அவளுக்குப் பின்னால் வந்து நின்ற வேலைக்கார அம்மா,

“இவ சரியில்லம்மா… நான்தான் சொல்லிக்கிட்டே இருக்கேனே… இவளை முதல்ல வீட்டிலிருந்து தொரத்தியடி…” என்று சொல்லி அவளுடைய அமைதிக்குத் தீ வைத்தாள்.

###

மூன்று மாதத்திற்குப் பிறகு, அன்று தர்மராஜ் கார்முகிலனின் வீட்டிற்கு வந்தார். எப்பொழுதும் கார்முகிலன் அவரை தேனியில் அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு வந்துவிடுதால், அவர் லக்ஷ்மிபுரம் வருவது குறைந்திருந்தது. நீலா இங்கு வந்ததற்குப் பிறகு இன்றுதான் அவர் வருகிறார்.

கணவனும் மனைவியும் அவரை இன்முகத்துடன் வரவேற்றார்கள். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள். பிறகு தர்மராஜ்,

“முகிலா… பொண்ணுங்க இந்த மாதிரி நேரத்துல சந்தோஷமா இருக்கணும்டா… உன்னோட கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு அவளோட அம்மா அப்பாவ வந்து பார்க்கச் சொல்லுடா… மதுவுக்குச் சந்தோஷமா இருக்கும்…” என்று தன்மையாக எடுத்துச் சொன்னார்.

“நீங்க சொல்றத பார்த்தா… மதி இப்போ சந்தோஷமா இல்லையோன்னு தோணுது…” அவன் குதர்க்கமாகக் கேட்டான்.

அவனுடைய உள்குத்து விவகாரமெல்லாம் புரியாதவர் எதார்த்தமாகப் பேசினார்…

“பெற்றவர்கள் இருந்தும் இல்லாமல் இருக்கும் பெண் எப்படிடா சந்தோஷமா இருக்க முடியும்…?”

கார்முகிலன் மதுமதியைக் கேள்வியாகப் பார்த்தான். ‘இவர் சொல்வது உண்மையா…?’ என்று கேட்டது அவனுடைய பார்வை. அவள் கணவனைத் திருப்திப்படுத்துவதற்காக அவசரமாகப் பேசினாள்.

“தாத்தா… அ… அதெல்லாம் ஒண்ணும் இல்ல தாத்தா… நான்… நான் சந்தோஷமா தான் இருக்கேன்…”

மதுமதி அந்தர் பல்ட்டி அடித்துவிட்டதில் கடுப்பானவர்…

“நீ ஏம்மா சந்தோஷமா இருக்கமாட்ட… பெத்தமனம் பித்துப் பிள்ளைமனம் கல்லுன்னு சொல்வது சரிதான் போல… நான் கூட நீ தாயாகப் போவதைப் பற்றி கெளசல்யாவிடம் சொல்லாமல் விட்டுவிட்டேன். உன் சிநேகிதி யாரோ சொல்லித் தெரிந்து கொண்டதாம். உடனே எனக்கு ஃபோன் போட்டு… நீ இங்க எப்படி இருக்கியோ என்று கண்ணீர் வடிக்குது… நீ என்னடான்னா சந்தோஷமா இருக்கேன்னு சொல்லுற… ஜாடிக்கு ஏத்த மூடி… புருஷனுக்கு ஏத்த பெண்டாட்டி…” என்று கோபத்தை மதுமதியிடமும் தயக்கமின்றிக் காட்டினார். அவள் தர்மச்சங்கடமாக நெளிந்தாள்.

கார்முகிலனோ ‘என்னமா நடிக்கிறா…! வீரராகவன் பொண்ணாச்சே…!’ என்று நினைத்தபடி அவளை முறைத்தான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நீலவேணி மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து வீட்டிற்குள் நுழைந்தாள். தர்மராஜ் வந்திருப்பது தெரியாமல் உள்ளே வந்தவள், அவரைப் பார்த்ததும் ஒருநொடி திகைத்துப் பின் சமாளித்துப் புன்னகைத்தாள்.

அவரும் ஆச்சர்யத்துடன் புருவம் சுருக்கினார்.

“எப்படி இருக்கீங்க சார்… நல்லா இருக்கீங்களா?”

அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் “நீ இங்க என்னம்மா செய்ற…?” என்று அவர் ஒரு கேள்வியை அவளிடம் கேட்டார்.

அதற்கு அவள் பதில் சொல்வதற்கு முன், கார்முகிலன் முந்திக் கொண்டான்.

“நீலாவோட பாட்டி இறந்துட்டாங்க சார்… அங்க தனியா இருக்க வேண்டாம் என்று நான்தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தேன்…”

அவர் கார்முகிலனைக் கூர்மையாகப் பார்த்தார். பிறகு மதுமதியைப் பார்த்தார். ‘நீயாவது இந்த மடையனுக்குச் சொல்லக் கூடாதா…?’ என்று கேட்டது அவருடைய பார்வை. அந்தப் பார்வைக்குப் பதில் சொல்லத் தெரியாமல் அவள் தடுமாறினாள். நீலவேணி நைசாக நழுவி உள்ளே சென்றுவிட்டாள். அவளுக்கு தர்மராஜைப் பார்த்தாலே பயம். ஏதாவது மனம் நோகப் பேசிவிடுவார் என்று பயந்து, அவர் அங்கிருந்து கிளம்பும்வரை அவளுடைய அறையிலிருந்து வெளியே வரவே இல்லை.

மதுமதி அளித்த விருந்தோம்பலை ஏற்று அனுபவித்துவிட்டு, அவளுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டுப் புறப்பட்டவர்… கார்முகிலனைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போனார். அவன் எதிர்பார்த்த மாதிரியே நீலவேணியை எதற்காக வீட்டிற்குள் வைத்திருக்கிறாய் என்று கேட்டு அவனைக் குடைந்ததோடு… அவளை அங்கிருந்து விரைவாகவே வேறு எங்காவது அனுப்பிவிடுமாறு சொல்லி ஏகப்பட்ட வசவுகளையும் வழங்கினார். பிறகு வழக்கம் போல, வீரராகவன் கௌசல்யாவை ஏற்றுக்கொள்ளும்படி அறிவுரைக் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

# # #

தர்மராஜ் வீட்டிற்கு வந்துவிட்டுச் சென்ற பிறகும், கார்முகிலனுக்கு மதுமதி மீதான கோபம் குறையவில்லை. எதற்கெடுத்தாலும் அவளிடம் எரிந்து விழுந்தான்… அவனுடைய தேவைகளை அவளிடம் தெரியப்படுத்துவதில்லை. வேலைக்கார அம்மா இருந்தால் அவர்களை அழைத்து எது வேண்டுமானாலும் கேட்பான். அவர்கள் இல்லை என்றால் நீலவேணியை அழைப்பான். அந்தச் செயல் மதுமதியை எவ்வளவு காயப்படுத்தியதோ அதே அளவு நீலவேணியை மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

இந்த வாய்ப்பை, அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள். கார்முகிலன் மதுமதியின் பெற்றோரை முழுவதும் வெறுக்கிறான் என்பதைத் தெரிந்துவைத்திருந்த நீலவேணி அடிக்கடி ஒரு காரியம் செய்தாள்.

“மதுமதி பாவம் முகிலன்… அம்மா அப்பா ஞாபகம் அதிகமா இருக்கற மாதிரித் தெரியுது… அவங்க உங்களுக்குச் செஞ்ச துரோகத்தை எல்லாம் நீங்க மறக்க முயற்சி பண்ணுங்களேன்…” என்று சொல்வாள்.

மேலோட்டமாகப் பார்த்தால் அவள் மதுமதிக்குச் சாதகமாகப் பேசுகிறாள் என்றுதான் தோன்றும். ஆனால் அவள் பயன்படுத்திய ‘அவர்கள் செய்த துரோகம்..’ என்கிற வார்த்தை அவன் மனதில் முள்ளாகக் குத்தும். பழைய நினைவுகள் அவனை ஆக்கிரமிப்பதை அவனால் தடுக்கமுடியாமல் போய்விடும்.

“எனக்கு என்னுடைய பாட்டி இந்த வயதில் இறந்ததைக் கூடத் தாங்க முடியவில்லை… நீங்கள் எப்படித்தான் அந்தச் சின்ன வயதில் தனிமையுடன் போராடினீர்களோ…!” என்று சொல்லி அனுதாபப்படுவாள்.

அவளுடைய அனுதாபம் அவனுடைய கடந்தகாலத் துயரங்களைக் கிளறிவிட்டு அவனை வேதனைப்படுத்தும். வேதனையைக் குறைக்கும் வழியாக, சமயம் கிடைக்கும் போது மதுமதி மீது பாய்ந்துவிடுவான். பிறகு அவளைக் காயப்படுத்திவிட்டோமே என்று வருந்தி முன்பைவிட அதிகமாக வேதனைப்படுவான்.

அன்று கார்முகிலனின் அன்னைப் படத்திற்குப் பூமாலையைச் சூட்டியபடி நீலவேணி, “சொந்த அத்தான் பெரிய டாக்டர்… பெரிய மருத்துவமனைக்குச் சொந்தகாரர். அந்த மருத்துவமனையைக் கட்ட உங்களுடைய பணம் பெரிதும் உதவியிருக்கிறது… அப்படியிருந்தும் உங்க அம்மாவைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே…! இன்று மட்டும் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் உங்களைப் பார்த்து எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார்கள்… அவர்களுடைய பேத்தியே மருமகளானதை நினைத்து எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்… அவர்களுக்கு ஒரு கொள்ளுப் பேரனோ… பேத்தியோ பிறக்கப் போவதை நினைத்து எவ்வளவு பூரித்திருப்பார்கள்…!” என்று அடுக்கிக்கொண்டே போக… தாய் மரணித்த நாளை விட அன்று அதிகமாக வலித்தது அவனுக்கு. ஆஜானுபாகுவான ஆண்மகனின் கண்கள் கலங்கின… மனம் பதைத்துப் போன மதுமதி,

“மாமா…” என்று ஆதரவாக அவனுடைய கரத்தைப் பிடித்தாள். அடுத்த நொடி அவனுடைய வலி ஆத்திரமாக வடிவெடுத்து, சட்டென்று அவளுடைய பிடியை உதறவைத்தது. அவன் அவளை அலட்சியம் செய்துவிட்டு தோட்டத்துப் பக்கம் சென்றுவிட்டான்.

மதுமதி, நீலவேணியை ‘உனக்கு இப்போது திருப்தியா…?’ என்று கேட்பது போல் முறைத்தாள். பதிலுக்கு நீலவேணியும் சளைக்காமல் அவள் கண்களைச் சந்தித்தாள்.

நாட்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. நீலவேணியை மதுமதியால் அடக்க முடியவில்லை. கார்முகிலனின் கோபத்தையும் குறைக்க முடியவில்லை. அவன் தினமும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு மதுமதியை “நீ வீரராகவன் பொண்ணுதானே… அப்படித்தான் இருப்ப…” என்று சொல்லிவிடுவான். அவள் மனம் வலித்தாலும் பொறுத்துக்கொண்டாள்.

‘எல்லாம் மாமாவிற்காக… மாமாவின் நிம்மதிக்காக… நம்மை வருத்துவதன் மூலம் அவருடைய மனக்காயம் ஆறும் என்றால்… வருத்தட்டும். இன்னும் கொஞ்சநாள்… நீலவேணி இங்கிருந்து சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்… அதுவரை பொறுத்துதான் ஆகவேண்டும்… பொறுத்துக் கொள்வோம்… மாமாவிற்காக…!!!’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் நீலவேணியை விரைவாக அங்கிருந்து கிளப்பிவிட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.

நீலவேணியின் குறுக்குப்புத்தியை கார்முகிலனிடம் அம்பலப்படுத்திவிட்டால் அவளை அந்த வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம். ஆனால் அதற்கான ஆதாரமோ, பிடியோ மதுமதியிடம் இல்லாததால் எதிரியைக் கையும் காலுமாகப் பிடிக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அந்தச் சந்தர்ப்பம் மறுநாளே அவளுக்குக் கிடைத்தது. நீலவேணி வசமாக அவளிடம் சிக்கினாள்.




Comments are closed here.

You cannot copy content of this page