உயிரைத் தொலைத்தேன் – 36
4473
0
அத்தியாயம் – 36
வியாழக்கிழமை காலை பதினொரு மணி… கார்முகிலன் கல்லூரிக்கும், மதுமதி கோவிலுக்கும், வேலைக்கார அம்மா கடைக்கும் சென்றுவிட்டார்கள். வீட்டில் நீலவேணி மட்டும் தனியாக இருந்தாள். அவளுடைய எண்ணங்கள் எங்கெங்கோ சென்று கொண்டிருந்தன.
கார்முகிலன் மதுமதியோடு மனவருத்தத்தில் இருப்பது அவளுக்குக் குதூகலமாக இருந்தது. அந்தக் குதூகலமும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக வேண்டும் என்று ஆசைமனம் அடித்துக் கொண்டது. ஆனால் தனக்குக் கிடைத்திருக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது தான் என்பதை அவளுடைய அறிவு எடுத்துச் சொன்னது.
ஆசைமனமும் அறிவும் போட்டிப் போட்டுக்கொண்டு அவளைச் சின்னாபின்னப் படுத்தும்போது, அவனை இழந்துவிட்ட வேதனையும் துக்கமும் அவளைப் பலகீனப்படுத்தியது. அவள் தன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார்முகிலனின் அறைக்குள் சென்றாள். ஹாங்கரில் மாட்டியிருந்த அவனுடைய சட்டையைத் தொட்டுப் பார்த்தாள். கண்களில் நீர் கோர்த்தது… கதறி அழ வேண்டும் போல் இருந்தது.
தனக்குள் எழுந்த ஆத்திரத்தை விழுங்கிக்கொண்டு, தொட்டுப் பார்த்த சட்டையைக் கையிலெடுத்து இதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். சிறிதுநேரத்தில் அந்தச் சட்டையை, தான் அணிந்திருந்த புடவைக்கு மேலேயே மாட்டிக் கொண்டாள். மேஜையில் முறைத்த முகத்துடன் புகைப்படமாக இருந்த கார்முகிலனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். உயிரற்றப் புகைப்படத்தை உயிரும் உணர்வும் உள்ள காதலனாகக் கற்பனைச் செய்துகொண்டு இதழ் பதித்தாள். அடுத்த நொடி…
“நீல…வேணி…” என்கிற கோபக்குரல் கேட்டுத் திகைத்து விரைத்தாள். இதயம் வேகமாக அடித்துக்கொள்ள, உடல் வியர்வையில் குளித்துவிட்டது. மெல்ல வாசல்பக்கம் தலையைத் திருப்பினாள். அறை வாசலில் கையில் பூஜைக் கூடையுடன் கோபமுகம் கொண்ட பத்ரகாளியாக நின்று கொண்டிருந்தாள் மதுமதி.
எதிர்பாராமல் சிக்கிக்கொண்ட படபடப்பில் “மது… நான்… வந்து…” என்று கோர்வையாகப் பேச முடியாமல் திணறினாள்.
மதுமதிக்கும் அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. அவளைத் திட்டித் தீர்க்க வேண்டும் போல் உள்ளம் கொந்தளித்தாலும்… சரியான வார்த்தைகள் கிடைக்காமல் மேல்மூச்சு வாங்கியபடி,
“என்ன… இங்க நீ என்ன செய்ற…? மாமா… மாமா ஷர்ட்ட நீ… நீ எப்படிப் போட்டிருக்க…? மா… மாமா… படத்துக்கு… எப்படி… நீ எப்படி… ச்ச்சீஈ…ஈ…” முகத்தில் அருவருப்பைக் காட்டினாள். இத்தனை நாள் காட்டிய போலி மரியாதை எல்லாம் பறந்துவிட்டது.
“மது… மன்னிச்சிடு… என்னை மன்னிச்சிடு மது… நான்… எனக்கு… முகிலன்… முகிலனை ரொம்பப் பிடிக்கும்…” நீலவேணி திடீரென்று புயலில் சிக்கிக் கொண்டவள் போல் தடுமாறினாள்.
“அதுக்காக…!!!” ஆவேகமாக வந்தது மதுமதியின் குரல்.
“இல்ல… வந்து… உனக்கும் முகிலனுக்கும் கல்யாணம் நடப்பதற்கு முன்பிருந்தே நான் அவரை விரும்புறேன் மது… என்னால அவர் இல்லாமல் வாழ முடியல… ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோ…” அவள் கண்களில் கண்ணீருடன் கெஞ்சினாள்.
“ச்சீ… இப்படிப் பேச உனக்கு அசிங்கமா இல்ல…? உன்னை நம்பி… வீட்டிற்குள் விட்ட மாமாவிற்கும் எனக்கும் துரோகம் செய்ய உன்னால் எப்படி முடிகிறது…?”
“மது… நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேள்… நீ முகிலனை விரும்புவதற்கு முன்பிருந்தே, நான் அவருக்கு என் மனதில் இடம் கொடுத்துவிட்டேன்… அவருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும்… நீ மட்டும் குறுக்கே வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு நான்தான் மனைவியாகியிருப்பேன்… நீதான் எல்லாவற்றையும் குழப்பி என் வாழ்க்கையை அழித்துவிட்டாய்…” ஒரே மூச்சில் சொல்லி முடித்தவள் தேம்பியழுதாள்.
அவளுடைய அழுகை மதுமதியைச் சிறிதும் பாதிக்கவில்லை. அவள் கோபத்துடன் சொன்னாள்…
“என்னது… நான் உன் வாழ்க்கையை அழித்துவிட்டேனா…! நீதான் என் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறாய்…”
“இல்லவே இல்லை… முகிலனுக்கு உன் மேல் காதல் துளியும் கிடையாது… அவர் உன் அப்பா மீதிருக்கும் கோபத்தில்தான் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டார். உன்னையும் உன் பெற்றோரையும் பிரிக்க நினைத்து அதைச் சாதித்தார்… உன் பிடிவாதத்திற்குப் பயந்து உன் அப்பா முகிலனிடம் கல்யாணம் பேச வராமல் இருந்திருந்தால், உங்கள் கல்யாணம் நடந்தே இருக்காது… எனக்கும் வாழ்க்கை சிக்கலாகியிருக்காது…” என்றாள் நீலவேணி அழுகையை நிறுத்திவிட்டுத் தெளிவாக… இப்போது அவளுக்கு ஆரம்பத்தில் இருந்த பயமும் படபடப்பும் இல்லை.
“நீ சொல்லும் கதையை எல்லாம் நம்புவதற்கு நான் பைத்தியக்காரி இல்லை… என் மாமாவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்… அவரால் என்னைத் தவிர வேறு யாரையும் காதலிக்க முடியாது… உன் முட்டாள்தனமான பேச்சையும் கற்பனையையும் நிறுத்திக்கொண்டு கிளம்பு முதலில் இங்கிருந்து…”
“கிளம்புறதா… என்னை இங்கிருந்து வெளியே போகச் சொல்றியா மது…?”
அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு சோகமாகக் கேட்பவளைப் பார்க்கும் போது, மதுமதிக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது… அதைச் சிறிதும் மறைக்காமல்,
“ஆமாம்…” என்றாள் கடுமையாக.
மதுமதியின் அழுத்தமான பதில், நீலவேணியின் கோபத்தைக் குத்திப் பார்த்தது. அவளுடைய முகபாவம் மாறியது…
“நீ வாழற வாழ்க்கை என்னுடையது மதுமதி… அதை மறந்துவிட்டுப் பேசாதே…”
“நீ ஒரு தெருவிளக்கு நீலவேணி… குத்துவிளக்காக மாற ஆசைப்பட்டிருக்கிறாய்… அதற்கான வாய்ப்பே இல்லை என்பது உனக்கு ஏன் புரியவில்லை…?” மதுமதியும் சளைக்காமல் பதிலடி கொடுத்தாள்.
“என்ன…! நான்… நான் தெருவிளக்கா…!” நீலவேணி மதுமதியின் வார்த்தையில் பலமாகக் காயமடைந்தாள்.
“ஆமாம்… நீ தெருவிளக்குத் தான்… பூஜையறைக்குள் நுழைய முடியாத தெருவிளக்கு…”
மதுமதியின் அழுத்தமான வார்த்தை, நீலவேணியின் ஈகோவைக் கிளப்பிவிட்டது.
தான் என்னும் அகங்காரம் மேலோங்க “தைரியம் இருந்தால்… நீ இப்போது சொன்னதை முகிலனுக்கு எதிரில் சொல்லிப்பார் தெரியும்…” என்றாள்.
மதுமதிக்கு இப்போது மனம் காயப்பட்டது. தன்னுடைய கணவன், தனக்கு ஆதரவாகப் பேசமாட்டான் என்பதை இன்னொருத்தி அடித்துச் சொல்லும்போது லேசாக வலிக்கத்தான் செய்தது. நீலவேணியைத் தவறாகப் பேச அவன் அனுமதிக்க மாட்டான் என்னும் உண்மை தந்த வலி அது… வலியை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“என் மாமாவிடம் நான் எதைப் பேச வேண்டும்… பேசக்கூடாது என்பதை நீ எனக்குச் சொல்லித்தரத் தேவையில்லை… இன்று இங்கு நடந்ததை நான் மாமாவிடம் சொன்னால், அவரே உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்… அதற்குமுன் மரியாதையாக நீயாகவே இங்கிருந்து கிளம்பிவிடு…”
நீலவேணிக்கும் பயம் வந்தது. என்னதான் மதுமதி மீது முகிலன் கோபமாக இருந்தாலும், அவளுடைய பேச்சை அவன் நம்பாமல் இருக்க மாட்டான்… வெளியில் முறைத்துக் கொண்டிருந்தாலும் அவன் ஒரு பொண்டாட்டிதாசன் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும் போது ‘மதுமதியைப் பேசவிட்டால் ஆபத்து… கார்முகிலன் தன்னை ஒதுக்கிவிடுவான் என்பது உறுதி…’ என்பதையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்ட நீலவேணி, அவசரமாகச் சில கணக்குகள் போட்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.
“பார்க்கலாம்… முகிலன் என்னை வெளியே துரத்துகிறாரா… இல்லை உன்னை வெளியே துரத்துகிறாரா என்று… இது என் கடைசி முயற்சி. இதில் நான் தோற்றுவிட்டால் இனி முகிலனுடைய வாழ்க்கையில் குறுக்கிடவே மாட்டேன். ஆனால் நீ தோற்றுவிட்டால்… அவர் உன்னை இந்த வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டால்… அவருக்கு உன்மீது துளியும் காதல் இல்லை என்பதை மட்டும் நீ மறந்துவிடாதே…” என்று சொல்லிவிட்டு முகிலனின் சட்டையை அவிழ்த்து எறிந்துவிட்டு, அவளுடைய அறைக்குச் சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள்.
# # #
பிற்பகல் இரண்டு மணி… நீலவேணி தேனியில் உள்ள தன்னுடைய வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். புழக்கம் இல்லாததால் தூசிப் படிந்திருந்த வீடு அவளுடைய மனதைப் பிரதிபலித்தது. தனிமையில் பத்துநிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தவள், பின் தன் கைப்பேசியை எடுத்து கார்முகிலனின் எண்ணை அழுத்தினாள். அந்தப் பக்கம் அவன் “ஹலோ…” என்றான்.
“முகிலன்…” நீலவேணியின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் கேட்டது.
“சொல்லு நீலா…”
“நான் என்ன தப்புப் பண்ணினேன் முகிலன்…? என்னை ஏன் இப்படிச் சித்ரவதைச் செய்றீங்க…?” வேதனையுடன் கேட்டாள்.
“நீலா… என்ன சொல்ற…? என்ன ஆச்சு உனக்கு…?”
“இனி என்ன ஆகணும் முகிலன்… நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னேனா இல்லையா…? என்னை எதுக்காக அங்க கூட்டிட்டுப் போனீங்க முகிலன்… என் மனதை உடைத்துச் சுக்குநூறாக்கவா… சொல்லுங்க முகிலன்… நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன்…” அவள் பொங்கி அழுதாள்.
நீலவேணியின் அடுக்கடுக்கான கேள்விகளும், அழுகையும் அவனைப் பதட்டமடைய வைத்தது.
“நீலா…! என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்லு… உனக்குப் பிடிக்காத எதையும் நான் செய்யலையே… வேற என்ன…! வீட்டில் எதுவும் பிரச்சனையா…? மதி எதுவும் சொன்னாளா…? அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாளே…! வேற என்ன…?”
“அதான் எல்லாம் நீங்களே சொல்லிட்டீங்களே…! உங்க மனைவி என்னை எதுவும் சொல்லியிருக்க மாட்டாங்க என்று… வேறு நான் என்ன சொல்ல முடியும்…”
“நீலா… மதி என்ன சொன்னா…?”
“இப்ச்… அதைத் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க முகிலன்… நான் ஒரு தெருவிளக்கு… குத்துவிளக்கு இருக்கும் உங்கள் வீட்டில் எனக்கு இடம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது என் துரதிஷ்டம்…” அவள் விரக்தியாகப் பேசினாள்.
தெருவிளக்கு, குத்துவிளக்கு என்று மதுமதி தான் பேசியிருக்கிறாள் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவ்வளவு சுலபமாக அவள் யாரையும் காயப்படுத்தி விடமாட்டாள் என்பதையும் அறிந்திருந்தான். ஆகையால்…
“நீலா… ஏன் இப்படிப் பேசுற…? நீ இப்போ எங்க இருக்க…?” என்று பேச்சுக் கொடுத்து விஷயத்தை வாங்கினான்.
“என் வீட்டில் இருக்கேன் முகிலன்..”
அவனுக்கு விஷயம் ஓரளவு புரிந்தது. மதுமதிக்கும் நீலவேணிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது… அதில் காயப்பட்ட நீலவேணி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டான்.
“நீலா… மதி எதாவது பேசியிருந்தால்… அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நீ அமைதியா இரு… சாயங்காலம் நான் வந்து உன்னைப் பார்க்கிறேன்…” என்றான் அவளைச் சமாதானம் செய்வது போல்.
“அமைதி…!!! ஹும்… அதைத் தேடித்தான் போகப்போகிறேன் முகிலன்… இந்த உலகிலுள்ள மனிதர்கள் உதிர்க்கும் கொடுஞ்சொற்கள் கேட்காத இடத்தைத் தேடி போகத்தான் போகிறேன்…” அவனுக்குப் புரிய வேண்டும் என்கிற எண்ணத்தோடு மறைமுகமாகப் பேசுவது போல் பேசினாள். அவள் எண்ணம் ஜெயித்தது, கார்முகிலன் நீலவேணியின் சூசகமான பேச்சிற்குப் பலியாகிவிட்டான்.
“ஹேய்… நீலா.. என்ன பேசுற நீ..? மதுமதி அப்படி என்ன சொல்லிட்டா… அவகிட்ட நான் பேசுறேன்… நீ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாத… நான் உடனே கிளம்பி வர்றேன்…” என்றான் படபடப்புடன்.
“இல்ல முகிலன்… நீங்க என்னைத் தேடி வர வேண்டாம்… வந்தாலும் பலன் இருக்காது… நான் போகிறேன்…” என்று சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைத்துவிட்டாள்.
“ஹேய்… நீலா… நீலா…” என்று பதறினான் அவன். மீண்டும் மீண்டும் அவளுடைய கைப்பேசிக்குத் தொடர்புகொள்ள முயன்றான்… பலன் இல்லை. நேரத்தை வீணாக்காமல் உடனடியாகக் கல்லூரியிலிருந்து புறப்பட்டு நீலவேணியைத் தேடி ஓடினான்.
Comments are closed here.