Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 37
4419
0
அத்தியாயம் – 37
மாலை ஆறு மணி… மதுமதி கையிலிருந்த டைரியை பீரோவில் வைத்துப் பூட்டும்பொழுது, வாசலில் கார்முகிலனின் கார் சத்தம் கேட்டது. நெஞ்சில் ஏதோ ஒருவித படபடப்பு… வலுக்கட்டாயமாக நிதானத்தை வரவழைத்துக் கொண்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள்.
கார்முகிலன் காரை அதனிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். அவனுடைய முகத்தில் இதுநாள் வரை காணப்படாத ஒரு பயங்கரம் தெரிந்தது. கருமையான முகம் இன்னும் கருத்திருக்க… கூர்மையான விழிகள் இரத்தமாகச் சிவந்திருந்தன. நிதானமான நடையுடன் ஹாலில் நிற்கும் மதுமதியைக் குறிவைத்து அவன் வருவது, வெறியில் உறுமியபடி ஒரு காட்டு மிருகம் வருவது போல் பிரமையை ஏற்படுத்தியது அவளுக்கு. அவள் மிரண்ட விழிகளுடன் பின்வாங்கினாள்…
அவள் மிரட்சியை ஏளனமாகப் பார்த்தவன் “இன்னும் எத்தனை நாள் இந்த வேஷத்தைத் தொடர்வதாக உத்தேசம்…?” என்றான்.
“எ… என்ன ஆச்சு மாமா… ஏன் ஒரு மாதிரிப் பேசுறீங்க…?”
“ஆஹா… ஒன்றுமே தெரியாத பாப்பா நீ… என்னைக் கேட்கிறாயா…? நீலா எங்கே…?” அவனுடைய வார்த்தைகளில் அழுத்தம் மட்டும் இருந்தது.
“வந்து… மாமா… அந்த நீலாவின் நடவடிக்கை எதுவும் சரியில்லை மாமா…”
“அதனால் தான் அவளைத் தரக்குறைவாகப் பேசினாயா…?”
“இல்ல மாமா… அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் என்னைக் கோபப்பட வைத்துவிட்டது மாமா… அவள் நான் இல்லாதபோது நம் அறைக்குள் வந்து…” அவள் பேசி முடிப்பதற்குள், அவன் குறுக்கிட்டான்.
“ச்சீ… பேச்சை நிறுத்து… நீலா என்ன செய்திருந்தாலும் அதைப்பற்றி நீ என்னிடம்தான் சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நான் விருந்தாளியாக அழைத்துக் கொண்டு வந்த பெண்ணை அவமானப்படுத்த உனக்கு என்ன துணிச்சல் இருந்திருக்க வேண்டும்…! வீரராகவனின் மகள் என்கிற துணிச்சல்… அப்படித்தானே…?”
அவன் அவளுடைய பேச்சை இடையில் தடுத்து நிறுத்திய விதத்தில் அவள் முகம் அவமானத்தில் சுருங்கியது.
“என்னடி முகத்தைச் சுளிக்கிற…? உன்னிடம் எத்தனை முறை படித்துப் படித்துச் சொன்னேன்… வீரராகவனின் வாரிசாக இருக்காதே… கார்முகிலனின் மனைவியாக இரு… கார்முகிலனின் மனைவியாக இரு என்று… என் பேச்சிற்குச் சிறிதும் மதிப்புக் கொடுக்காமல் உன் பரம்பரைப் புத்தியைக் காட்டிவிட்டியேடி…”
“அப்பாவை நம்ம பிரச்சனைல எதுக்கு மாமா இழுக்குறீங்க..?”
“அப்பாவா…? அவனைப் பற்றி என்னிடம் பேசினால் உன்னைக் கொலையே செய்துவிடுவேன்… ஸ்கௌன்ட்ரல்…” அவன் ஆவேசமாகப் பேசினான். அவனுடைய ஆவேசம் அவளை வாயடைக்கச் செய்தது.
“உன்னோட சுயநலத்துக்காக அடுத்தவங்களை எந்தளவு வேண்டுமானாலும் காயப்படுத்தலாம் என்று உனக்கு உன் அப்பன்தானே பாடம் எடுத்தான்…? அவனுக்கு நீ கொஞ்சமும் சளைத்தவள் இல்லை என்று நிரூபித்து விட்டாயேடி…”
“என்ன மாமா சொல்றீங்க…?”
“என்னடி இன்னும் நடிக்கிற…? உன் அப்பன்… என் அம்மாவை வேதனைப்படுத்திக் கொன்றான்… நீ நீலாவை வேதனைப்படுத்திக் கொன்றுவிட்டாய்… அப்பனுக்குத் தப்பாத பிள்ளை என்று காட்டிவிட்டாய்… இன்னும் என்னடி உனக்கு வேண்டும்… எதற்காக இன்னும் நடிக்கிறாய்…?”
“ஐயையோ… என்ன மாமா சொல்றீங்க… நீலாவுக்கு என்ன ஆச்சு…?”
“என்ன ஆச்சா…? உன்னைப் போல் ஒரு ராட்சசி இருக்கும் உலகத்தில் இருக்கப்பிடிக்காமல் போய்விட்டாள்… உன்னுடைய விஷ வார்த்தைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள்… இப்போது உனக்குத் திருப்திதானே…!”
“மாமா…!!!” மதுமதிக்கு அதிர்ச்சியில் மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது, தன்னையும் அறியாமல் நீலவேணிக்காக அவளுடைய கண்கள் கண்ணீரை சிந்தின…
அவளுடைய கண்ணீரும் ‘மாமா..’ என்கிற அழைப்பும் அவனை வெறியனாக்க, அவன் சுட்டுவிரல் நீட்டி அவளை எச்சரித்தான்.
“ஏய்… இன்னொரு முறை என்னை ‘மாமா… கீமா…’ என்று அழைத்தாய் என்றால் உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது… என் பொறுமையைச் சோதிக்காமல் ஓடிப் போய்விடு…”
“எங்க மாமா…?” அழுகையினூடே அவள் கேட்ட விதம், அந்த நேரத்திலும் அவன் மனதை அசைத்துப் பார்த்தது…
“எங்கேயோ போய்த் தொலை… உன் முகத்தைப் பார்க்க கூட எனக்குப் பிடிக்கவில்லை… என் கண்ணில்படாத தூரத்திற்கு எங்காவது போய்விடு… இனி உன்னை என் வாழ்க்கையில் நான் சந்திக்கவே கூடாது என்று விரும்புகிறேன். போ… இங்கிருந்து போய்விடு…” அவன் அவளைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறைதான். இன்னும் சிறிதுநேரம் அங்கே நின்றிருந்தால் அதுவும் நடந்திருக்கலாம்… ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் மதுமதி கனத்த மனதுடன் வாசலை நோக்கி நடந்தாள்.
சில மணிநேரத்திற்கு முன் தன்னிடம் சவால் விட்ட ஒரு பெண் இப்போது உயிரோடு இல்லை என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. கணவன் அவளைத் தவறாக நினைத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டது, ஒரு பக்கம் மனதைப் பிழிந்தாலும்… எதிரியே என்றாலும் தன்னோடு ஒரே வீட்டில் சிலகாலம் வாழ்ந்த பெண் இப்போது உயிரோடு இல்லை என்கிற அதிர்ச்சி மற்றொரு பக்கம் மனதைப் பதற வைத்தது.
இரவு ஏழரை மணிக்கு… மேடிட்ட வயிறும் கவலையும் குழப்பமும் படர்ந்த முகமுமாகத் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தவளின் எண்ணங்கள் முழுவதும் நீலவேணியைதான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.
‘எதற்காக இப்படிச் செய்தாள்…? நம்மிடம் அப்படிச் சவால் விட்டுவிட்டுப் போனாளே… ஒரு சவாலில் ஜெயிப்பதற்காக யாராவது உயிரை விடுவார்களா…! அது எப்படி முடியும்…? ஒருவேளை நீலவேணியை யாராவது கொலை செய்திருப்பார்களோ…? அல்லது விபத்தாக இருக்குமோ…! மாமா சரியாக விசாரிக்கவில்லையோ…! எப்படி இது நடந்தது…?’ அவளுக்குக் குழப்பத்தில் தலையே வெடித்துவிடும் போல் ஆனது.
எங்கே போகிறோம் என்கிற இலக்கே இல்லாமல் வெகுதூரம் நடந்து வந்துவிட்டாள்.
“என்னமா மது… எங்க இந்த நேரத்துல இந்தப் பக்கம்…?” என்று எதிரில் வந்தவர் கேட்ட பொழுது தான் சுயநினைவிற்கு வந்து சுற்றத்தைக் கவனித்தாள். இருள் சூழ்ந்து விட்டிருந்தது…
“பஸ் ஸ்டாண்ட் போறேன் பெரியப்பா…” என்று சொல்லிச் சமாளித்துவிட்டு அவரிடம் பிடி கொடுத்துப் பேசாமல், பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.
காம்காபட்டி பேருந்து ஒன்று நிறுத்தத்தில் வந்து நின்றது. அதில் ஏறினால் பெற்றோரிடம் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் ஏனோ அவளால் அந்தப் பேருந்தில் ஏற முடியவில்லை. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மாமனுக்குப் பிடிக்காத ஒன்றை செய்ய முடியவில்லை. அவள் அந்தப் பேருந்து தன்னைக் கடந்து போகும்வரை சிலையாக நின்றாள். பேருந்து போய்விட்டது. இரவு ஒன்பது மணியானது. இதற்குமேல் லக்ஷ்மிபுரத்திலிருந்து காம்காபட்டிக்குச் செல்ல பேருந்து கிடையாது.
வேறு எங்குச் செல்வது…? யாரிடம் தஞ்சம் புகுவது…? தன்னுடைய நிராதரவான நிலை அப்போதுதான் அவளுக்கு முழுமையாக உரைத்தது. யாரை நம்பி தன் பெற்றோர், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்ந்தாளோ… அவனே அவளை இன்று நடுத்தெருவில் நிறுத்திவிட்டான். அப்போது கூட அவள் தன் விதியை நொந்து கொண்டாளே தவிர, கட்டியவன் மீது கோபம் கொள்ளவில்லை.
அவளுடைய சிந்தனைகளை ஹாரன் ஒலி கலைத்தது. ‘தேனி’ என்று பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையைத் தாங்கிய பேருந்து, நிறுத்தத்தில் வந்து நின்றது. மதுமதி ஏறினாள்… பேருந்தில் கூட்டம் அதிகமில்லை. லக்ஷ்மிபுரத்திலிருந்து பேருந்து வெளியே வந்ததும் நடத்துனர் மதுமதியை நெருங்கி,
“டிக்கெட்… டிக்கெட்…” என்றார்.
தலையில் ஓங்கி யாரோ படாரென்று அடித்தது போல் கலங்கிக் போனாள் அவள்.
‘ஐயோ… டிக்கெட் எடுக்கக் காசு…! பர்ஸ் எடுத்துட்டு வரலையே…!’ அவள் திகைத்து விழித்தாள்.
“என்னம்மா பார்க்குற… எங்க போகணும்…? சட்டுன்னு சில்லறை எடு…” அவர் எரிந்து விழுந்தபடி பேசினார்.
“அது… வந்து…” அவள் தடுமாறினாள். குழப்பத்திலும் வருத்தத்திலும் வீட்டிலிருந்து வெளியேறியவள் கையில் எதையும் எடுக்காமல் வெறுங்கையோடு வந்தது மட்டுமல்லாமல், ‘எதைப்பற்றியும் யோசிக்காமல் பேருந்தில் ஏறியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்…!’ அவளுக்கு உதறலெடுத்தது.
“என்னம்மா… வந்து போயி…! பணத்தை எடும்மா… எங்க போகணும் சொல்லு…”
“தே…தேனி…”
அவள் சொல்லி முடிப்பதற்குள் பயணச்சீட்டைக் கிழித்து அவளிடம் நீட்டினார். அவள் அதை வாங்காமல்,
“சார்… நான்… வந்து… மன்னிச்சிடுங்க சார்… பணம் கொண்டுவர மறந்துட்டேன்…” அவள் சொல்லி முடிப்பதற்குள் அந்த நடத்துனர் அவளிடம் பாய்ந்தார்… கண்டபடி ஏசினார். அவளுக்குப் பெருத்த அவமானமாகிப் போனது. அவளுடைய அப்போதைய மனநிலைக்கு அப்பொழுதே ஓடும் பேருந்திலிருந்து குதித்துவிடலாமா என்றிருந்தது… ஆனால் அதற்கும் வழியில்லாமல் அந்த நடத்துனர் அவளுடைய இருக்கையிலிருந்து வெளியே வரும் வழியை அடைத்தபடி நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தார்.
திட்டுவதெல்லாம் திட்டிவிட்டு விசிலடித்துப் பேருந்தை நிறுத்தி… அவளைக் கீழே இறங்கச் சொன்னார். ஆள் ஆரவரம் இல்லாத நடு வழியில், சுற்றிலும் காரிருள் சூழ்ந்திருந்த இரவு நேரத்தில் அவளைத் தன்னந்தனியாகப் பேருந்திலிருந்து இறக்கி விட்டுவிட்டுப் போகத் துணிந்த அந்த நடத்துனரை எதிர்த்துப் பேசும் துணிவு சிறிதுமின்றி… படபடக்கும் நெஞ்சோடு கீழே இறங்க எத்தனித்தாள்.
“அம்மாடி… கொஞ்சம் இரும்மா… ஏங்க… கண்டக்டரு… அந்தப் பொண்ண பார்த்தா பாவமா இருக்கு… கர்ப்பமா இருக்குப் போலருக்கு… இந்த நேரத்துல நடுவழில இறங்கச் சொல்றீங்களே…!” பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி கேட்டார்.
“டிக்கெட் எடுக்காதவங்களுக்கு எல்லாம் பஸ்சுல இடம் இல்லம்மா… அவ்வளவு அக்கறை இருந்தா நீயே இந்தப் பொண்ணுக்கும் சேர்த்து டிக்கெட் எடு…” அவர் அலட்சியமாகச் சொன்னார்.
“சரி ஒரு டிக்கெட்ட அந்தப் பொண்ணுகிட்டக் கொடுங்க… இந்தாங்க காசு…” அந்தப் பெண்மணியின் தாராள உள்ளம் மதுமதியை அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றியது. தேனி வரை அவளது பயணம் தொடர்ந்தது…
Comments are closed here.