Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 42

அத்தியாயம் – 42

கார்முகிலனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான். அவனுக்கு இருப்பது ஒரே மனம் தான்… அந்த மனம் தான், தன் தோழியைக் கொன்ற அரக்கியை மன்னித்துவிடாதே என்று அழுத்தமாக அறிவுறுத்துகிறது. மீண்டும் அதே மனம், விஷ ஜந்துவாக மாறி தன் தோழியின் உயிரைக் குடித்த ராட்சசிக்கு ஒரு துன்பம் என்றதும் பதறுகிறது…

 

‘போகாதே…! அவளைப் பார்க்காதே…!’ என்று அவனைப் பின்னுக்குப் பிடித்திழுக்கும் அதே மனம், ‘ஓடு… ஓடு… ஓடிச்சென்று காப்பாற்று…’ என்று அவனை விரட்டுகிறது. ஒரே மனம் இருதுருவங்களாகப் பிரிந்து நின்று அவனை எதிரெதிர் திசைகளில் இழுக்கும் வலியைத் தாங்கமுடியாமல் துவண்டு போனான். அவளைப் பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் தவித்துப் போனான்.

 

எல்லா நினைவுகளையும் புறம் தள்ளிவிட்டு மனதை நிர்மலமாக வைத்துக்கொள்ள விரும்பி தியானத்தில் அமர்ந்தான். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் அமைதியடைந்தது.

 

மனம் அமைதியடைந்த பின் நிதானமாக யோசித்தான். மதுமதியின் தவறால் அவனை நம்பி வந்த ஓர் உயிர் போய்விட்டது என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவறு செய்தவள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று நினைத்தான். தனது சொந்த ஆசாபாசத்துக்கு இடம்கொடுத்து எந்தச் சூழ்நிலையிலும் அவளை மன்னித்துவிடக் கூடாது என்கிற முடிவை உறுதியாக எடுத்தான்.

 

மதுமதிக்கு உதவி செய்யும் உத்தேசம் இல்லையென்றாலும், காவல்நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினான். அதனால் தேனியிலிருக்கும் தன் நண்பனை அழைத்து, மதுமதியைக் காவல்நிலையத்தில் சென்று பார்க்கச் சொன்னான். அங்கு என்ன நிலவரம் என்பதைத் தனக்குத் தெரிவிக்கச் சொன்னான்.

 

ஒரு மணிநேரத்தில் அவனும் விபரம் சொன்னான்…

“மாப்ள… தங்கச்சிய கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்களாம்டா…”

 

“ஓ… சரி. நீ கோர்ட்டுக்குப் போ… அங்க என்ன நிலவரம் என்று எனக்குச் சொல்லு…”

 

“சரிடா மாப்ள…” அவன் நீதிமன்றத்திற்கு விரைந்தான். நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி அவ்வப்போது கார்முகிலனுக்குச் செய்தி தெரிவித்துக் கொண்டே இருந்தவன், இந்த வழக்கில் வீரராகவன் மதுமதிக்கு உதவுகிறார் என்பதை அறிந்து கொள்ளாததால்… அதை நண்பனுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டான்.

 

என்னதான் நியாயம், நேர்மை, நட்பு, குற்றம், தண்டனை என்று வெட்டி வேதாந்தம் பேசிக்கொண்டு வீட்டில் அமர்ந்திருந்தாலும்… நீதிபதியின் காலதாமதம் வயிற்றில் புளியைக் கரைப்பதையும், அவளுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்கிற செய்தியில் மனம் மகிழ்வதையும் தடுக்க முடியவில்லை கார்முகிலனுக்கு.

 

மதுமதிக்குக் கிடைத்த ஜாமீன் அவன் மனதிற்கு நிம்மதியைக் கொடுத்ததை வெறுப்புடன் உணர்ந்தான். அந்த அளவுக்குத் தன் மனம் அவளிடம் மயங்கிக்கிடப்பதை எண்ணி தன் மீதே மண்டிய வெறுப்பு அது…!

 

அன்று சனிக்கிழமை… மதுமதி, தர்மராஜ் சார் வீட்டில் இருக்கிறாள் என்கிற நினைப்பில் நீலவேணியின் இறுதிக் காரியங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகத் தன்னுடைய செலவில் முடித்தான் கார்முகிலன். காலையிலிருந்து மருத்துவமனை, காவல் நிலையம் என்று மாறி மாறி அலைந்து நீலவேணியின் உடலைக் கைபற்றி அடக்கம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அசதியாக வீடு திரும்பியவனைப் பூட்டியிருந்த வீடு வரவேற்றது. காலையில் வெளியே செல்லும்போது தான் பூட்டிய வீடுதான் என்றாலும், மனம் கொஞ்சம் சுனங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

பேன்ட் பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே சென்றான். வெறிச்சோடியிருந்த வீட்டின் அமைதி அவனை எரிச்சல்படுத்தியது. டிவியைச் சத்தமாக வைத்தான். மற்றொரு அறைக்குச் சென்று அங்கிருந்த கணினியை உயிர்ப்பித்து ஏதோ ஒரு பாடலைச் சத்தமாக ஓடவிட்டான். பிறகு குளித்துவிட்டு வந்தான். நன்றாகப் பசியெடுத்தது. உடல் அலுப்பை மன உறுதியால் வென்று, சமையலறைக்குள் நுழைந்து சமைத்தான். சமைத்த உணவை வஞ்சகமின்றி உண்டான். டிவியில் நியூஸ் பார்த்து நாட்டுநடப்பைப் பற்றிய தன்னுடைய அறிவை மேம்படுத்திக் கொண்டான். அன்றைய தினத்தை வெற்றிகரமாகக் கழித்துவிட்டு ஓய்வெடுக்கப் படுக்கையில் விழுந்தான். இமைகளை மூடவிடாமல் கண்களுக்குள் இருந்துகொண்டு மனதை உறுத்தினாள் அவன் மனைவி…

 

‘சரி… எப்பொழுதும் பக்கத்தில் படுத்திருப்பவள் இன்று இல்லை என்பதால்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறது…’ என்று படுக்கையறையை மாற்றினான். பலன் இல்லை…! எழுந்து வீட்டிற்குள்ளேயே நடை பயின்றான். மாலை வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து அதே வீட்டிற்குள் தான் இருந்தான். அப்போதெல்லாம் அவன் கண்ணில் படாத பொருட்கள் அனைத்தும், இப்போது அவன் கண்களை உறுத்தின. ஆம்.. அனைத்தும் மதுமதியின் பொருட்கள்… அவளுடைய கைப்பேசி, டிவிக்கு அருகிலிருந்து கண் சிமிட்டியது… அவள் பயன்படுத்தும் சீப்பு, டிரெஸ்ஸிங் மேஜை மீதிருந்து பல்லைக் காட்டியது… அவள் பயன்படுத்தும் துண்டு திண்ணையில் கட்டப்பட்டிருந்த கொடியில் இருந்தபடி, காற்றில் அசைந்தாடித் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொண்டது. அவள் விரும்பி படிக்கும் சில புத்தகங்கள் மேஜை மீது கிடந்தன.

 

அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் மதுமதி நிறைந்திருந்தாள். அவள் எந்தவிதத்திலும் தன்னைப் பாதிக்கக்கூடாது என்பதைக் குறியாகப் பிடித்துக் கொண்டவன், வீட்டில் ஆங்காங்கே இருந்த அவளுடைய அனைத்துப் பொருட்களையும்… அதாவது காலணி முதல் கைப்பேசி வரை அனைத்தையும் ஒரே பையில் போட்டு மூட்டையாகக் கட்டி தேவையில்லாத பழைய பொருட்களைப் போடும் அறையில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு உறங்க முயற்சித்தான். அவனுடைய முயற்சி ஓரளவு வெற்றிப் பெற்றது.

 

தன்னை முழுமையாக வேலையில் மூழ்கடித்துக் கொண்டான். ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காமல் தன் அறிவை மேம்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டான். தேவையில்லாத சிந்தனைகள் என்று அவன் நினைப்பவைகள் தன்னை நெருங்கிவிடாமல்… மனதைக் கட்டுக்குள் வைத்திருந்தான். ஒரு வாரம் வெற்றிகரமாக முடிந்தது. அவன் முயன்று ஓரளவு கொண்டுவந்திருந்த அமைதியைக் குலைப்பதற்காகவே அன்று அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்தார்.

 

“வாங்க சார்… வணக்கம்… என்ன இவ்வளவு தூரம்…?” காக்கிச்சட்டை அணியாமல் சாதாரண உடையில் தன்னைத் தேடிவந்த காவலரை வரவேற்றபடி விபரம் கேட்டான் கார்முகிலன்.

 

“உங்ககிட்ட ஒரு விஷயம் பேச வேண்டியிருந்தது… அதான் வந்தேன்…”

 

“அப்படியா… வாங்க உள்ள போய்ப் பேசலாம்…” என்று அவரை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று அமரச் சொன்னான். குடிப்பதற்குக் குளிர்பானம் கொண்டுவந்து கொடுத்தான். அவர் பேச்சை ஆரம்பித்தார்.

 

“நீலவேணி கேஸை விசாரிச்சுப் பார்த்தேன் சார்… அந்தப் பொண்ணு ஒண்ணும் யோக்கியமான பொண்ணா தெரியலை…” என்றார். கார்முகிலனின் முகம் அஷ்டக்கோணலாக மாறியது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

 

“போஸ்ட் மார்ட்டெம் ரிப்போர்ட் வந்தாச்சு… அந்தப் பொண்ணு உங்களை மிரட்ட செஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்… வேணுன்னா சொல்லுங்க… கேஸை உடைத்துவிடலாம்…” அவர் சாதரணமாகச் சொன்னார்.

 

“என்ன சொல்றீங்க…?” கார்முகிலன் ஆச்சர்யமாகக் கேட்டான்.

 

“இந்த கேஸ்ல உங்க மனைவிதான் சிக்கியிருக்காங்க… அவங்களுக்குப் பிரச்சனை வராமல் நான் பார்த்துக்குறேன்… ரெண்டு லட்ச ரூபாய் செலவாகும்… என்ன சொல்றீங்க…?” அவர் தூண்டிலைப் போட்டுப் பார்த்தார்.

 

அவனுக்குக் கோபம் ஜிவ்வென்று ஏறியது… “எந்திரிங்க சார் முதல்ல…’ கடுமையாகச் சொன்னான்.

 

அவனுடைய கோபத்தைச் சற்றும் எதிர்பார்க்காதவர் சட்டென எழுந்தார். அவர் முகமும் கோபத்தில் கறுத்துவிட்டது.

 

“குற்றவாளியைத் தண்டனையிலிருந்து தப்புவிக்க ஒத்தை பைசா கூட நான் செலவு செய்யமாட்டேன்… இனி இது சம்மந்தமா பேசுவதாக இருந்தால் என்னைப் பார்க்க வரவேண்டாம்… கிளம்புங்க…” என்று எடுத்தெறிந்து பேசினான். அவர் அவனை முறைத்துக் கொண்டே வாசலுக்குச் சென்று தன்னுடைய புல்லெட்டைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டார்.

 

அவனுக்குக் கோபம் அடங்கவே இல்லை… ‘என்ன மனிதர்கள் இவர்களெல்லாம்…! பணத்திற்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள்… ஒரு அப்பாவிப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய ஒருத்தியைக் காப்பாற்ற பேரம் பேசிக்கொண்டு வந்துவிட்டாரே இந்த அதிகாரி… ச்ச…’ என்று நினைத்து நொந்து போனான்.

 

மதுமதி மீது குற்றமில்லை என்பதை நீலவேணியின் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் நன்றாக உணர்ந்திருந்தார். எனவே அந்தப் பெண்ணுக்கு உதவுவதோடு தானும் லாபம் பார்க்கலாம் என்று எண்ணி வழக்கறிஞரைக் கழட்டி விட்டுவிட்டு, கார்முகிலனை நேரடியாகச் சந்திக்கச் சென்றார். ஆனால் பழம் பழுக்கவில்லை… வேறு வழியில்லாமல் அவர் மதுமதியின் வழக்கறிஞரிடம் பேசினார். பாதி லாபமாவது வர வேண்டுமே…! வழக்கறிஞர் தர்மராஜ்ஜிடம் பேசினார்…

 

“என்ன சார் சொல்றீங்க…?”

 

“உண்மையைத் தான் சார் சொல்றேன்… அந்தப் பெண் சாப்பிட்ட மாத்திரையின் அளவு மிகக்குறைவு என்று போஸ்ட் மார்ட்டெம் ரிப்போர்ட் சொல்லுது… சாதரணமாகத் தூக்கத்திற்கு எடுத்துக் கொள்வதைவிடக் கொஞ்சம்தான் அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள்”

 

“பிறகு எப்படி அந்தப் பெண் இறந்தாள்…?”

 

“இதைப்பற்றி நான் டாக்டரிடம் விசாரித்தேன்…”

 

“என்ன சொன்னாங்க…?”

 

“பொதுவாக… அந்தப் பெண் எடுத்துக் கொண்ட மாத்திரை மத்திய நரம்பு மண்டலத்தை அடக்கி, செயற்கையான முறையில் உயிர்வேதியியல் உஷார்நிலையைக் (விழிப்புநிலையை) குறைத்து ஆழ்ந்த உறக்கத்தில் தள்ளுமாம். இது சாதரணமான உடல்நிலையில் உள்ளவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதாம். ஆனால் அந்த நீலவேணிக்கு நரம்புமண்டலம் பலகீனமாக இருந்ததால்… இந்த மாத்திரையின் வீரியத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வலிப்பு ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி அடங்கியிருக்கிறது. அதன்பிறகு பதினெட்டு நிமிடத்தில் உயிர் பிரிந்திருக்கிறது…”

 

“என்ன சார் சொல்றீங்க…? அப்படின்னா அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லையா…?”

 

“நிச்சயமாக இல்லை… நடந்தது ஒரு விபத்து. அவள் யாரையோ மிரட்டுவதற்காக ஆடிய நாடகம் அவளுக்கே வினையாக முடிந்திருக்க வேண்டும்… அல்லது தன் உடல்நிலை பற்றித் தெரியாமல் உண்மையாகவே தூக்கத்திற்காக மாத்திரை எடுத்துக் கொண்டது ஆபத்தில் முடிந்திருக்க வேண்டும்…”

 

“அப்படின்னா மது மேல குற்றமில்லை என்று நிரூபணம் ஆகிவிடுமா…?” ஆர்வமாகக் கேட்டார்.

 

“வாய்ப்பு இருக்கு… நூறு சதம் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் போராடினால் ஜெயிக்கலாம்… கொஞ்சம் காலத்தாமதம் ஆகும்…”

 

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

 

“அந்தப் பெண் கைப்பட எழுதின லெட்டர் போலீஸ் கையில் இருக்கு… அது நமக்கு வீக் பாயிண்ட்…”

 

“ஓ…! என்ன செய்யலாம்…?”

 

“அந்த லெட்டர் நம்ம கைக்கு வந்துவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும்…”

 

“கிடைக்குமா…?”

 

“கிடைக்கும்… ஆனால் இரண்டு லட்சம் செலவாகும்…”

 

“சரி… ஒரு நிமிஷம் இருங்க… நான் வீரராகவன் சார்கிட்டப் பேசிட்டுச் சொல்றேன்…” என்று சொல்லிவிட்டு, வீரராகவனுக்குத் தொடர்பு கொண்டு விபரம் சொன்னார்.

 

நேர்மையான முறையில் தன் மகளை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும், மகள் வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விரும்பாமல் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.

 

“தர்மராஜ் சார்… செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்… என்ன செலவானாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்… என் மகள் இந்த கேசிலிருந்து வெளியே வந்தால் போதும்…”

 

தர்மராஜ் உற்சாகமாகிவிட்டார், வழக்கறிஞரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர் மகிழ்ச்சியுடன் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிக்கச் சென்றார்…




Comments are closed here.

You cannot copy content of this page