உயிரைத் தொலைத்தேன் – 43
4958
0
அத்தியாயம் – 43
தந்தையுடன் மணிக்கணக்கில் பேசும் மதுமதி, இப்போது கேட்கப்படும் கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிரிப்பு என்கிற வார்த்தையைக் கூட மறந்துவிட்டவளாக மாறி பெற்றோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தாள். பசி தூக்கத்தை மறந்துவிட்டாள்… குளிக்க, தலை வார, சாப்பிட, உறங்க… எல்லாவற்றிற்கும் தாயின் உந்துதல் தார்க்குச்சியாக இருந்தால்தான் வேலை நடக்கும். அதுவும் அரைகுறையாக… ஒரே மாதத்தில் ஆள் பாதியாகிவிட்டாள். வயிற்றில் குழந்தை மட்டும் இல்லையென்றால், நிச்சயம் தற்கொலைக்கு முயன்றிருப்பாள் என்பது அவளது நடவடிக்கைகளில் அவ்வப்போது வெளிப்பட்டது…
வீரராகவன் சோர்ந்து போய்விடவில்லை. மகள் வெளிப்பார்வைக்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். தாயின் மனநிலை இப்படியே நீடிப்பது வயிற்றிலிருக்கும் சிசுவிற்கு நல்லதல்ல என்பதால்… உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
“கௌசி… மது மனதளவில் ரொம்பக் காயப்பட்டிருக்கா… அவள் மனம் அமைதியில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கு. என் கணிப்பு சரியென்றால் அவள் இரவில் உறங்குவதே இல்லை…”
“நீங்க சொல்றது சரிதான்… மது தூங்குவதே இல்லைதான்… நான் விழித்துப் பார்க்கும் போதெல்லாம் புரண்டு கொண்டிருக்கிறாள்…” என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கினாள் கௌசல்யா.
“சரி பண்ணிடலாம் கௌசி… நீ முதல்ல தைரியமா இருக்கணும்…”
“நான் தைரியமாத்தான் இருக்கேன்… மதுவ எப்படிச் சரி பண்ணப் போறீங்க…”
“எல்லாம் உடனே நடக்காது கௌசி… கொஞ்சம் கொஞ்சமாத்தான் சரி பண்ணனும். முதல்ல அவளை ஒரு நல்ல தியான வகுப்புக்கும், வாழும் கலை பயிற்சி வகுப்புக்கும் அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அவளுடைய மனம் அமைதியடைவதற்கு முதல் வழி… என்ன சொல்ற…?”
“ம்ம்ம்… சரி… எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல… ஆனா மதுக்கு விருப்பம் இருக்கணுமே…”
“அவளுடைய இப்போதைய மனநிலையில் நாம என்ன சொன்னாலும் கேட்பா… விருப்பு வெறுப்பைக் கடந்த விரக்தி நிலையில் இருக்கா நம்ம பொண்ணு…”
அவர் சொல்வதைக் கேட்டபோது கௌசல்யாவின் மனம் வெந்து போனது. ‘இப்படிப் பண்ணி விட்டாயேடா தம்பி… உனக்கு என் மேல் கோபம் என்றால் என்னிடம் மட்டும் காட்டியிருக்கலாமே… இந்தப் பிஞ்சு மனதைக் கொன்று விட்டாயேடா..’ என்று உள்ளுக்குள் அழுவதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“சரிங்க… நான் மதுகிட்ட பேசிவிடுகிறேன்… நீங்க வகுப்புக்கு ஏற்பாடு செய்யுங்க…” என்று முடிவு சொன்னாள்.
அவர்களிருவரும் முடிவு செய்தபடி… மதுமதி மறுநாளிலிருந்து தந்தையுடன் தேனியில் தியான வகுப்பிற்கும், வாழும் கலை பயிற்சி வகுப்பிற்கும் சென்றாள்.
ஆரம்பத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றாலும் போகப் போக மதுமதியிடம் மாறுதல் தெரிந்தது.
மனதிலிருக்கும் துக்கத்தையும் ஏமாற்றத்தையும் முழுவதுமாகக் களைந்து விடவில்லை என்றாலும், அவைகளையெல்லாம் மனதில் ஒரு பக்கமாக ஓரம் கட்டிவிட்டு, அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளும் பக்குவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வாழும் கலை பயிற்சி அவளுக்குக் கற்றுக் கொடுத்தது.
மதுமதிக்கு அமைதி திரும்பிக் கொண்டிருந்த அதேநேரம், கார்முகிலன் அமைதியைத் தொலைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தேனியில் மதுமதியை அவளுடைய தந்தையுடன் பார்த்தான். ‘அவள் வீரராகவனுடன் தொடர்பில்லாமல் தன்னுடைய வளர்ப்புத் தந்தையான தர்மராஜ்ஜின் பாதுகாப்பில் இருக்கிறாள்’ என்கிற அவனுடைய நம்பிக்கைப் பொய்த்துப் போன நாள் அது…
தன் மனைவி தன்னுடன் இல்லாவிட்டாலும் தனக்குச் சம்மந்தப்பட்டவரின் பாதுகாப்பில் இருக்கிறாள் என்கிற எண்ணம் தந்து கொண்டிருந்த நிம்மதியை… அவள் தனக்கு எதிரியான அவளுடைய தந்தையிடம் சென்றுவிட்டாள் என்கிற எண்ணம் நசுக்கிவிட்டது. அப்படியெதுவும் நடந்திருக்கக் கூடாது என்று மனம் தவித்தது. உடனே தர்மராஜ்ஜைக் கைப்பேசியில் அழைத்தான்.
“என்னப்பா… என் நினைவெல்லாம் உனக்கு வருதா…?”
“சார்… சும்மா எரிச்சல்படுத்தாதீங்க சார்… எங்க அவ…?” அலட்சியமாகக் கேட்பது போல் கேட்டான்.
“எவ…?” அவர் அவனை எகத்தாளம் செய்தார்.
“ஏற்கனவே நான் பயங்கர டென்ஷன்ல இருக்கேன்… வெறுப்பேத்தாம சொல்லுங்க சார்… எங்க அந்த மதுமதி…?”
“மதுமதியைப் பற்றி என்னிடம் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்…?”
“ஏன் தெரியாது…? அவ உங்க வீட்டில் தானே இருந்தா…?”
“ரெண்டு நாள் விருந்தாளியா தங்கி இருந்தா… அதுக்காக, நான் எப்பவும் கூடவே வச்சுப் பார்த்துக்க முடியுமா…?”
“என்ன சொல்றீங்க…?”
“மது இப்போ என் வீட்டுல இல்லைன்னு சொல்றேன்…”
“எங்க போய்ட்டா..?”
“அது எதுக்கு உனக்கு…?”
“சொல்லுங்க… எங்க போனா… அந்த வீரராகவன்கிட்டப் போயிட்டாளா…?”
“உனக்கும் அவளுக்கும் தான் ஒரு சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டியே… பிறகு எதுக்கு அவளைப் பற்றிய கவலை உனக்கு…? வேலைய பார்த்துக்கிட்டுப் போடா…”
“தெரியும்… என்னோடு இருந்தபோதே அம்மா… அப்பான்னு உருகி என்னை ஏமாற்றியவள் தானே…! இப்போ எப்படி அங்குப் போகாமல் இருப்பா… அவளைப் போய் ஆசைப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டேனே…! எல்லாம் என் தலைவிதி…” என்று நொந்து கொண்டே போனை அணைத்துவிட்டான். தப்பித்தான்… அந்தப் பக்கம் தர்மராஜ் பாடிய வசைகளைக் கேட்காமல் பிழைத்துக் கொண்டான்.
கார்முகிலனுக்குக் கோபமும் ஆத்திரமும் கட்டுக்கடங்காமல் எழுந்தது. தன்னுடைய பொருளை வேண்டாம் என்று வீட்டில் ஒரு மூலையில் போட்டுவைக்கும் குழந்தை, அதே பொருளை வேறு ஒரு குழந்தை எடுத்துவிட்டால் சீறி வந்து பிடுங்கிக் கொள்ளும். அதே வேகம்தான் அவனிடமும் அப்போது இருந்தது.
என்னுடையவள் எப்படி எனக்கு வேண்டாதவன் வீட்டில் இருக்கலாம் என்கிற ஆத்திரம் அவன் மூளையை மழுங்கச் செய்தது. வருகிற கோபத்திற்கு நேராக காம்காபட்டிக்குப் போய் நான்கு அடி போட்டு அவளை இழுத்துக் கொண்டு வந்துவிடலாமா என்று தோன்றியது. நல்லவேளை அப்போதும் நீலவேணியின் அழுத முகம் அவன் மனக்கண்ணில் தோன்றி, அவனை மதுவிடம் நெருங்கவிடாமல் செய்ததால் அந்த காட்டுமிராண்டித்தனத்தைச் செய்யாமல் விட்டான்.
விலக்கித் தள்ளியது அவனே என்றாலும், அவள் தன்னை விட்டு வெகுதூரம் போய்விட்டாளோ என்கிற எண்ணம் அப்போது தான் அவனுக்குத் தோன்றியது. அவளுடைய நினைவுகளைத் தன்னிடம் நெருங்கவிடாமல் தடுப்பதற்காகப் புகையை ஊதித் தள்ளினான்… மனபாரம் குறையவில்லை. தன்னையே மறந்துவிட்டால், மதுமதியை மறந்துவிடலாம் என்கிற எண்ணத்தில் மதுவை நாடினான். அந்தோ பரிதாபம்…! புதிதாகப் பழகுவதால் ஒரு பெக் அடிப்பதற்குள் குடலே வெளியேறிவிடும் அளவுக்கு வாந்தி பண்ணி வீட்டை அசுத்தப்படுத்தினான். மறுநாள் போதை தெளிந்ததும் வீட்டைச் சுத்தம் செய்வதற்குள் துரைக்கு மூச்சு முட்டிவிட்டது…
‘ச்சை… இந்தச் சனியனை இனி தொடவே கூடாது…’ என்று எண்ணிக் கொண்டான். எந்த மந்திரமும் மதுமதியை மறக்கடிக்க உதவில்லை…
அவள் தனக்கு வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தவன், தன்னுடைய உறுதியில் நிலைத்திருக்க முடியாமல் தள்ளாடினான். ஒரு மனம் தவித்தாலும்… இன்னொரு மனம் சொந்த ஆசாபாசத்திற்கு இடம் கொடுத்துவிடாதே என்று அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது. இந்த மனப் போராட்டத்திலிருந்து தப்பிக்க எண்ணி ஒரு வாரம் வெளியூர் பயணம் மேற்கொண்டான்.
ஒருவார பயணம் முடிந்து அவன் ஊர் திரும்பிய போது, மதுமதி நீலவேணி வழக்கிலிருந்து விடுபட்டிருந்தாள். நண்பன் மூலம் அவனுக்குச் செய்தி கிடைத்தது. விசாரித்தான்… நீலவேணி எழுதிய லெட்டர் கோர்ட்டில் காட்டப்படவில்லை என்பது தெரிந்தது. கொதித்துப் போனான். ஒருவாரமாக அவளுக்காக ஏங்கிய மனம் நொடியில் அவளைக் குதறிவிடத் துடித்தது… நேராக தர்மராஜ் வீட்டிற்குச் சென்றான். கோபத்தின் உச்சியிலிருந்தவன், சிவந்த விழிகளுடன் தர்மராஜ் முன் நின்றான்.
“நீலா கேஸிலிருந்து மது விடுதலையடைந்து விட்டாளா…?” சாதாரண வார்த்தைகள் தான்… ஆனால் அந்த வார்த்தைகளில், அவன் கொடுத்த அழுத்தம் அவனுடைய மனநிலையைக் காட்டியது.
அவனுடைய மிரட்டல் பார்வை அவரைப் பாதிக்கவில்லை… ‘உன்னோட பம்மாத்து வேலையை எங்கிட்டயே காட்றியா..? போடா டேய்…!’ என்று நினைத்தபடி,
“ஆமாம்… ” என்று பதில் கொடுத்தார் பெரியவர். அவர் காட்டிய அலட்சிய முகபாவம் அவனை இன்னும் உசுப்பேற்றியது.
“என்ன தில்லுமுல்லு பண்ணி கேஸை ஜெயிச்சீங்க…?” குரூரமாகக் கேட்டான்.
“நாங்க எதுக்குடா தில்லுமுல்லு பண்ணனும்… மது நிரபராதி… வெளிய வந்துட்டா… நீ எதுக்குக் குதிக்கிற…?”
“நான் குதிக்கிறது இருக்கட்டும்… அந்த அரக்கி நிரபராதின்னு சொல்றவர் எதுக்குக் குறுக்குவழில போனவங்களைத் தடுக்கவில்லை…?” அவன் கடுமையாகக் கேட்டான்.
“டேய்… முட்டாப்பயலே… நான்தான் சொல்றேனே… குறுக்குவழியெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு… அப்புறம் என்னடா கேள்விக் கேட்டு உயிரை எடுக்குற…?”
“உயிரை எடுக்கும் பழக்கம் எனக்கு இல்ல சார்… அதெல்லாம் அந்த வீரராகவன் குடும்பத்து வழக்கம்… அவங்ககிட்ட போய்ச் சொல்லுங்க உங்க புராணத்தை…” – அவர் எதுவும் பேசமுடியாமல் அவனை வெறித்துப் பார்த்தார்.
“நீலா எழுதின லெட்டர் திடீர்னு எப்படிக் காணாமப் போச்சு…? அந்த லெட்டரை போலீஸ் கோர்ட்டில் காட்டவில்லையாமே…!”
“அந்த லெட்டர்ல என்ன இருந்தா என்னடா…? அந்த நீலா பொண்ணு தற்கொலை பண்ணிக்கவில்லை என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது…”
அவர் முடிப்பதற்குள் இவன் ஆரம்பித்தான்,
“போதும் நிறுத்துங்க சார்… அந்தக் கூட்டத்தோட சேர்ந்து உங்களுக்கும் மனசாட்சி செத்துப் போச்சு… அந்த லெட்டர் என்ன ஆச்சுன்னு எனக்குத் தெரியும்… போலீஸ்காரனுக்குக் கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய்ல கரைஞ்சு காணாமப் போயிருக்கும்…” அவன் முறைத்தபடிச் சொன்னான்.
அவர் பதறிவிட்டார். இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்று தடுமாறினார்.
“முகிலா… என்னடா… என்ன சொல்ற… உனக்கு எப்படி…?”
“அந்த போலீஸ்காரன் முதல்ல பேரம் பேச என்கிட்டத்தான் வந்தான்… இதுக்கு மேலயும் இங்க என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியாதா…! எல்லாம் எனக்குத் தெரியும்…”
“டேய் முகிலா… அந்த லெட்டர் இருந்தாலும் மது நிரபராதின்னு நிரூபித்திருக்க முடியும்டா… ஆனால் கேஸ் முடிய தாமதமாகியிருக்கும். அந்தப் பொண்ணு உன் குழந்தையைச் சுமந்துகிட்டு இருக்காடா… அவளுக்கு மனக்குழப்பம் இருந்தால் உன் குழந்தைதானே பாதிக்கப்படும். கொஞ்சம் நினைத்துப் பாருடா…”
“இந்தக் குழந்தை சென்டிமெண்ட் எல்லாம் என்கிட்டே செல்லுபடி ஆகாது சார்… அந்த மதுமதி எனக்குப் பதில் சொல்லியே ஆகணும்…”
“என்னடா செய்யப் போற…?”
“பொறுத்திருந்து பாருங்க…” என்று அவருடைய இரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டு, தனக்குத் தெரிந்த ஒரு வழக்கறிஞரைத் தேடிச் சென்றான்.
Comments are closed here.