உயிரைத் தொலைத்தேன் – 44
5136
0
அத்தியாயம் – 44
காலை பலகாரத்தைக் கொறித்துவிட்டு, வீட்டுத் தோட்டத்தில் சாய்வு நாற்காலியில் அமைதியாக அமர்ந்து, மாமரக் கிளையில் கொஞ்சி விளையாடும் காதல் கிளிகளை ‘உங்களில் யார் யாரை ஏமாற்றப் போகிறீர்கள்…?’ என்கிற கேள்வியைக் கண்களில் தாங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமதி. அவளுடைய கவனத்தைத் தபால்காரரின் சைக்கிள் மணி ஒலி ஈர்த்தது.
“இங்கதான் இருக்கீங்களாம்மா… இந்தாங்க… உங்களுக்குத் தான் தபால் வந்திருக்கு… பதிவு தபால்… வந்து ஒரு கையெழுத்துப் போட்டுட்டு வாங்கிக்கங்க…” என்றார் தோட்டத்து நடைபாதையில் நின்றபடி.
மகப்பேறு காலம் நெருங்கிவிட்டதால், மதுமதி சிரமப்பட்டு எழுந்து இரண்டு எட்டு எடுத்து வைத்தாள்.
“எம்மா… எம்மா… இருங்கம்மா… நானே வர்றேன்… நீங்க சிரமப்பட வேண்டாம்…” என்றபடி சைக்கிளை நிறுத்திவிட்டு, மதுமதியை நோக்கி வேகமாகச் சென்றார் அந்தத் தபால்காரர்.
“நன்றிங்க…” மதுமதி கனிவுடன் சொன்னாள்.
“இந்தாங்கம்மா… இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க…” என்று ஒரு காகிதத்தை அவளிடம் நீட்டினார். அவள் கையெழுத்திட்ட பிறகு அவளுக்கு வந்த தபாலை அவளிடம் நீட்டினான்.
“இந்தாங்கம்மா… ஏதோ வக்கீல் நோட்டீஸ் மாதிரித் தெரியுது…” என்று கூறியபடி அவள் கையில் கொடுத்தார்.
கிட்டத்தட்ட நான்கு மாதமாகப் போலீஸ், கோர்ட், கேஸ் என்றே வாழ்ந்துவிட்டதால், வக்கீல் நோட்டீஸ் என்றதும் எந்தப் பரபரப்பும் இல்லாமல் நிதானமாக அவரிடமிருந்து வாங்கிப் பிரித்தாள்.
பழுக்கக் காய்ச்சிய கம்பியைக் கையில் பிடித்திருப்பது போல் தகித்தது அந்தக் காகிதம் அவளுக்கு. எவ்வளவு முயன்றும் கண்களில் கண்ணீர் முட்டுவதைத் தடுக்க முடியவில்லை. தலை கிறுகிறுத்தது… கண்கள் பூத்துப் போனது… சுற்றி இருந்த மரங்களும் செடிகளும் சுற்றுவது போல் பிரமை ஏற்பட்டது. அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் நாற்காலியில் சரிந்தாள்.
நிறைமாத கர்ப்பிணி மயங்கிச் சரிவதைக் கண்ட தபால்காரர் ஆடிப் போய்விட்டார்.
“ஐயோ… என்னம்மா…? என்ன ஆச்சு…? யாருங்க வீட்டுல… வேகமா ஓடிவாங்க… ஓடிவாங்க…” என்று கூச்சலிட்டார். அவருடைய சத்தத்தைக் கேட்ட வீரராகவனும் கௌசல்யாவும் வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்தார்கள்.
“மதும்மா… என்னடா ஆச்சு…? ஐயோ கடவுளே…!” என்று கௌசல்யா பதற… வீரராகவன் பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல் மகளின் கையைப் பிடித்து நாடி பார்த்தார். பின் மனைவியிடம் திரும்பி,
“கௌசி… மதுவை உடனே ஹாஸ்பிட்டல் கொண்டு போகணும்… நீ கார் சாவியை எடுத்துகிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு வேகமாக ஓடிவா…” என்று அவசரப்படுத்தினார்.
நிமிடத்தில் கௌசல்யா கார் சாவியுடன் வந்து நிற்க, அந்த தபால்காரரின் உதவியுடன் மதுமதியை அலுங்காமல் காரில் ஏற்றினார்கள். கௌசல்யா மதுமதிக்கு அருகில் அமர்ந்துகொள்ள, வீரராகவன் டிரைவர் சீட்டில் அமர்ந்தார்.
“இந்தாங்க சார்… இதைப் பார்த்துதான் இந்தப் பொண்ணு மயங்கி விழுந்துச்சு…” என்று தரையில் கிடந்த காகிதத்தை எடுத்து வீரராகவனிடம் கொடுத்தார் அந்த தபால்காரர்.
“ஓ… நன்றி சார்…” என்று சொல்லிவிட்டு அது என்ன காகிதம் என்று கவனிக்காமலேயே பையில் வைத்துக்கொண்டு காரைக் கிளப்பினார் அவர்.
வீரராகவன் தன்னிடம் இருக்கும் பணபலத்தால் சட்டத்தை வளைத்துவிட்டார், நீதியைச் சாகடித்துவிட்டார் என்று துள்ளிக் குதித்தான் கார்முகிலன். ‘ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா…!’ என்று அவரைக் கரித்துக் கொட்டினான்.
அவரை எப்படியாவது காயப்படுத்த வேண்டும் என்று குறி வைத்தான். அவருக்கு அவன் கொடுக்கும் அடி, மரண அடியாக இருக்கவேண்டும் என்று குரூரமாக நினைத்தான். எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று கணக்கிட்டான். நீலாவின் கடிதத்தை அவர்கள் கைப்பற்றிவிட்ட நிலையில், அந்த கேஸை மீண்டும் எடுத்து நடத்தினாலும் அவனால் வெற்றி பெற முடியாது என்பது உறுதி. அதனால்தான் குறுக்குவழி ஒன்றைக் கையாண்டான். மதுமதியை விவாகரத்துச் செய்யும் உத்தேசம் அவனுக்கு இல்லையென்றாலும்… அவர்களைக் கலங்கடிப்பதற்காக மதுமதிக்கு விவாகாரத்துக் கோரி வழக்கறிஞர் மூலமாக மனு அனுப்பினான். அவன் எதிர்பார்த்தபடி அந்த நோட்டீஸ் மதுமதியைக் கலங்கடித்துவிட்டது. அவளுடைய நிலையைப் பார்த்தப் பெற்றோரும் கலங்கிப் போனார்கள்.
# # #
இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய கட்டாயத்தினால், மருத்துவர் கணக்கிட்டுச் சொல்லியிருந்த பிரசவ தேதிக்கு இருபது நாட்கள் முன்னதாகவே மதுமதியின் குழந்தை கௌசல்யாவின் கையில் இருந்தது.
வெண் மேகத்தாலான பொம்மை போல், கையில் தவழும் குழந்தையின் ரோஜா இதழ் பொக்கை வாய்ச் சிரிப்பு கௌசல்யாவின் உயிரைத் தீண்டியது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது… தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்சனையும், வலியும் நொடியில் மறைந்து போன மாயம் புரியாமல் மழலையாளின் பளிங்கு கண்களில் புதைந்து போனாள் பாட்டி.
பேத்தியின் ‘ங்கா… ங்கா…’ என்னும் மழலை மொழியை மௌன புன்னகையுடன் ரசிக்கும் பாட்டியைத் தொல்லை செய்ய விரும்பாமல் சிறிதுநேரம் அமைதிகாத்த தாத்தா, ஒரு கட்டத்தில் வாய்த் திறந்தார்…
“பாப்பா… யாரு மாதிரி இருக்கு கௌசி…?” ஆசையுடன் கேட்டார்.
“என்ன மாதிரிதான் இருக்கு. என்னோட சின்ன வயசு போட்டோவை எடுத்துப் பாருங்களேன்…!” எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு, கௌசல்யாவின் குறும்புப் பேச்சு மீண்டிருந்தது அந்தக் குட்டி தேவதையின் உபயத்தால்.
தாத்தா பிரமித்துப் போனார். குழந்தையை மறந்துவிட்டு மனைவியை ரகசியமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.
“சார்… பேஷன்ட் கண் விழிச்சுட்டாங்க… ரூமுக்குக் கொண்டு வந்துட்டோம். நீங்க வந்து பார்க்கலாம்…” செவிலியப் பெண்ணின் குரல், வீரராகவனின் கவனத்தை மீட்டது.
“சரிம்மா… நாங்க வர்றோம்…” கணவனுக்கு முன் கௌசல்யா மகளுடைய அறைக்கு விரைந்தாள்… அவர் அவளைப் பின்தொடர்ந்தார்.
குழந்தை பிறந்த பிறகு அநேகமாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் மன அழுத்தத்தோடு, கூடுதலாக கார்முகிலன் கொடுத்திருந்த அதிர்ச்சியும் சேர்ந்துகொள்ள… மயக்கம் தெளிந்தும் யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடியபடி படுத்திருந்தாள் மதுமதி.
ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டோம் என்கிற மகிழ்ச்சி சுத்தமாக இல்லை. மாறாக, குழந்தையின் தந்தை பற்றிய நினைவுகள், நல்லவிதமான நடவடக்கைகள், மோசமான நடவடிக்கைகள்… என்று அத்தனையும் அவளை அலைகழித்தன. மூடியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் கோடாக வழிந்து வந்து செவியைச் சுட்டது.
“மது…” கௌசல்யா மென்மையாக அழைத்தாள்.
“…………………….” பதில் இல்லை.
“மதும்மா…” மீண்டும் கனிவுடன் அழைத்தாள்.
“…………………….”
“மது கண்ணு…” கனிவும் மென்மையும் கலந்த தாயின் பாசக்குரல் அவளைக் கரைக்கவில்லை. இறுக்கமாக மூடிய கண்களைத் திறக்காமல் பிடிவாதம் பிடித்தாள்.
“ங்கா… ங்ங்கா…” குழந்தையின் குரல் அவள் உடலைச் சிலிர்க்கச் செய்தது. அவளுடைய பிடிவாதம் காற்றில் கரைந்த கற்பூரமாகக் காணாமல் போய்விட மெல்லக் கண்விழித்துப் பார்த்தாள்.
பாட்டியின் கையில் ரோஜா இதழ் மேனியாள் அசைந்து கொண்டிருந்தாள். அந்தச் சிறு குழந்தை தன் தாயின் மன அழுத்தத்திற்கும், புழுக்கத்திற்கும் அருமருந்தாக மாறினாள்.
“தொட்டுப் பாரும்மா…” மகளின் மனநிலையைப் புரிந்த கௌசல்யா குனிந்து கையிலிருக்கும் குழந்தையை மகளுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றாள். மதுமதி நடுங்கும் விரல்களால் பட்டுமேனியைத் தொட்டுப் பார்த்தாள். பரவசமடைந்து, எடை இழந்து காற்றில் பறக்கும் சிறகானாள்…
கௌசல்யா குழந்தையை மகளுக்கு அருகிலேயே படுக்க வைத்துவிட்டு நகர்ந்து நின்று, மகளிடம் பேத்தி உறவாடுவதை ரசித்தாள். பெண்களின் உணர்வு நாடகத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வீரராகவனுக்கு எதுவும் புரியவில்லை. அவர் சாதாரணமாக மனைவிக்குக் குழந்தையை எப்படிக் கையாள வேண்டும் என்று ஒரு மருத்துவராக மாறி அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.
# # #
மதுமதிக்கு குழந்தை பிறந்துவிட்ட செய்தியை தர்மராஜ்ஜிடம் தெரிவிப்பதற்குக் கைப்பேசியை எடுத்த வீரராகவன், கைப்பேசியோடு சேர்ந்து பையிலிருந்து வெளிப்பட்ட காகிதத்தைப் பிரித்துப் பார்த்தார். கார்முகிலன் போட்ட வெடிகுண்டு அவரையும் ஆட்டி வைத்தது…. தர்மராஜ்ஜிடம் குழந்தை பிறந்த நல்ல செய்தியையும், கார்முகிலன் அனுப்பியிருந்த வெடிகுண்டு பற்றிய செய்தியையும் சேர்த்தே சொன்னார்.
தர்மராஜ்ஜிற்குக் கடுமையான கோபம் வந்தது… என்ன கோபம் வந்தாலும் என்ன செய்ய முடியும்…? தெரிந்தே தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்பவனை என்ன சொல்லித் திருத்த முடியும் என்று அலுத்துக் கொண்டார்.
மதுமதியையும் குழந்தையையும் வந்து பார்த்தார். சந்தோஷம் ஒரு மடங்கு என்றால்… துக்கம் இரண்டு மடங்காக அவரைத் தாக்கியது.
‘இந்த அருமையான பெண்ணையும்… குழந்தையையும் பிரிய துணிந்துவிட்டானே மடையன்…’ என்று வளர்ப்பு மகனுக்காகப் பரிதாபப்பட்டார்.
மனம் கேட்காமல் கைப்பேசியை எடுத்து கார்முகிலனின் எண்ணை அழுத்தினார்… குழந்தை பிறந்துவிட்ட செய்தியை தெரிவிக்க வேண்டுமே…! அப்போதாவது நல்லபுத்தி வருகிறதா பார்க்கலாம் என்கிற நப்பாசை அவருக்கு…
“ஹலோ…” முகிலனின் குரல் கேட்டது.
“முகிலா… உனக்குப் பெண்குழந்தை பிறந்திருக்குடா…”
“எ… என்ன… சார்…! எனக்கா…! மதிக்குக் குழந்தை பிறந்துடுச்சா…!” அவன் உடம்பெல்லாம் புது இரத்தம் பாய்ந்தது போல் உற்சாகமானான்… மனம் துள்ளிக் குதித்தது. அந்த நொடி… அவனுடைய கர்வம், கோபம், வீம்பு எல்லாம் காற்றோடு கரைந்துவிட்டது.
“மதி எப்படி இருக்கா…?” என்றான் முதல் கேள்வியாக.
அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவன் ஒரு பலாபழ குணக்காரன் என்பது தெரிந்திருந்தாலும், அவனுடைய உடனடி மாற்றம் அவரை ஆச்சர்யப்பட வைத்ததோடு கோபமும் வந்தது. ‘அந்தப் பெண்ணை ஒரு வழி பண்ணிவிட்டு… கேள்வி என்ன வேண்டிக் கிடக்கு… கேள்வி…?’ என்று ஆங்காரப்பட்டார்.
“அந்தப் பெண்ணைப் பற்றி உனக்கென்னடா கவலை…? அதான் நோட்டீஸ் அனுப்பிவிட்டியாமே…! அப்புறம் என்ன கேள்வி வேண்டிக் கிடக்கு…?” கோபமாகக் கேட்டார்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவன், அவரைச் சீண்டி பார்த்தான்.
“சரியா சொன்னீங்க… அவளைப் பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை தான்… ஆனால் என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் அளவுக்குத் தெம்போடு இருக்கிறாளா என்றுதான் கேட்டேன். அவளுக்கு முடியவில்லை என்றால், என் குழந்தையை நானே வளர்த்துக் கொள்ளலாமே என்கிற எண்ணம்தான்…” என்றான்.
அவர் கோபத்தில் வெடித்தார்…
“பாவி… பாவி… உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா…? நீ அடிச்சு வச்ச கூத்தில் தான் சுகப்பிரசவம் ஆக வேண்டிய பெண், அறுவை சிகிச்சை செய்துகொண்டு கிழிந்த நாராகக் கிடக்கிறாள்… இன்னும் அவளைக் கொடுமை செய்ய நினைத்தாய் என்றால் உன்னை நானே கொன்றுவிடுவேன்… படவா ராஸ்கல்…”
“என்ன சொல்றீங்க… சிசேரியனா…? ஏன்… என்ன ஆச்சு…?”
“ம்ம்ம்… மண்ணாங்கட்டி ஆச்சு. நீ அனுப்பின நோட்டீஸைப் பார்த்துட்டு மயங்கி விழுந்துட்டா… இரத்த அழுத்தம் கூடிப் போச்சு… குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டிய கட்டாயம்… சிசேரியன் பண்ணியாச்சு… உனக்குத் திருப்திதானே…!” கடுமையாகக் கேட்டார்.
மதுமதிக்கு அறுவை சிகிச்சை ஆகிவிட்டது என்கிற செய்தி, அவனைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. காரணம்… ‘சுகப்பிரசவம் என்றால் பெண்கள் பயங்கரமான வலியைத் தாங்கி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே அறுவை சிகிச்சை என்றால் வலிக்காமல் சுலபமாகக் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்கிற அளவில் தான் அவனுடைய அறிவு இருந்தது. அதனால் அறுவை சிகிச்சையைப் பற்றி அவன் கண்டு கொள்ளவில்லை.
ஆனால், அவன் அனுப்பிய நோட்டீஸைப் பார்த்துவிட்டு மதுமதி மயங்கிவிட்டாள் என்கிற செய்தி அவனுக்கு முழுத் திருப்தியைக் கொடுத்தது… அவன் எதிர்பார்த்ததும் அதைத் தானே…! தன்னிடமிருந்து நிரந்தரமாக விவாகரத்து பெற்றுப் பிரிவதை மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது அவனை மகிழச் செய்தது. தான் இல்லாமல் அவளால் வாழமுடியாது என்பதை எண்ணி கர்வப்பட்டான்.
குழந்தையை உடனே ஓடிச் சென்று பார்க்கவேண்டும் போல் மனம் உந்தினாலும்… வீரராகவனையும், கௌசல்யாவையும், மதுமதியையும் இன்னும் வாட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவனுடைய ஆர்வத்திற்குத் தடை போட்டது.
‘அவர்கள் செய்த பாவத்திற்கு இன்னும் கொஞ்சம் அனுபவிக்கட்டும்… ஒரு பத்து நாள் கழித்துச் சென்று குழந்தையைப் பார்த்துக் கொள்ளலாம்… அப்போது கூடக் குழந்தையை மட்டும்தான் பார்க்கவேண்டும்… அவளைப் பார்க்கவே கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.’
நாளை என்ன நடக்கும் என்பதையே உறுதியாகச் சொல்லமுடியாத உண்மை புரியாமல், பத்து நாட்களுக்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என்பதை இன்றைக்கே முடிவு செய்தான் கார்முகிலன்.
Comments are closed here.