உயிரைத் தொலைத்தேன் – 48
6358
0
அத்தியாயம் – 48
கார்முகிலன் தினமும் வீரராகவன் வீட்டிற்கு வந்து போனான். அவனுக்கு யாரும் தடை போடவில்லை. மதுமதி உட்பட… குழந்தைக்குக் கிடைக்கும் தந்தையின் அன்பிற்குத் தான் தடையா இருக்கக்கூடாது என்று நினைத்து விட்டாளோ என்னவோ…! முதல்நாள் தயக்கத்துடன் வந்தவன், அடுத்தடுத்த நாட்களில் சகஜமாகிவிட்டான். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் குழந்தைக்குத் தேவையான பொருட்களைத் தேவைக்கு அதிகமாகவே அள்ளிக்கொண்டு வருவான்…
ஒவ்வொரு நாளும் வீட்டிற்குள் நுழைந்ததும்… கை கால் அலம்பிவிட்டு குழந்தையைத் தொட்டுத் தூக்குவதுதான் அவனுடைய முதல் வேலை. கடினமான உணர்வுகளுடன் போராடிக் களைத்துப் போயிருந்தவனை, பொட்டல் காட்டில் பெய்த மழையாக அந்தப் பிஞ்சுமேனியின் ஸ்பரிசம் குளிர்வித்தது.
குழந்தையுடன் மணிக்கணக்கில் நேரம் செலவிடுபவனால்… முதல் நாளுக்குப் பிறகு ஒருமுறை கூட மதுமதியின் முகத்தைப் பார்க்க முடிந்ததில்லை. சரியாக இவன் வரும் நேரம், அறைக்குள் அடைந்து கொள்பவள் மீண்டும் இவன் அங்கிருந்து கிளம்பும் வரை வெளியே வரமாட்டாள்.
பிஞ்சு குழந்தையின் பால்வடியும் முகமும், கள்ளமில்லா சிரிப்பும், களங்கமில்லா பளிங்கு கண்களும், உடன் பிறந்தவளின் பாசமும், அத்தானின் ஆதரவும் அவனுக்குப் புதிய பிறப்பைக் கொடுத்திருந்தாலும்… மதுமதியைக் கண்ணால் கூடப் பார்க்க முடியாத ஏக்கம் அவன் நெஞ்சை அரித்துக் கொண்டுதான் இருந்தது.
ஒரு மாதம் இப்படியே கழிந்துவிட்டது. அன்று குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தோடு வீட்டிற்குள் நுழைந்தவனின் கண்களில் மதுமதி பட்டாள். சமையலறையிலிருந்து அவளுடைய அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். தெய்வத்தை நேரில் கண்டுவிட்டவன் போல் அசைவற்று நின்றுவிட்டான்.
பத்துநொடி தான் பார்த்திருப்பான்… அதற்குள் உள்ளே சென்று மறைந்துவிட்டாள். அவன் தன்னைச் சுதாரித்துக் கொள்ளச் சில நிமிடங்களானது.
மெலிந்த உடல்தான் என்றாலும் தெளிவான முகத்தோடு, இளம் மஞ்சள் நிற நைட்டி அணிந்திருந்தாள். அன்று முழுவதும் அவன் மனம் மதுமதியை இன்னொரு முறை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று பயங்கரமாகப் போராடியது. கண்கள் ரகசியமாக அவளுடைய அறையை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தன. பாவம் பலன்தான் கிடைக்காமல் போய்விட்டது.
பார்க்காமலே இருந்தபோது கூடச் சமாளித்துவிட்டான். ஒருமுறை அவளைப் பார்த்துவிட்ட பிறகு மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆசையை அடக்க முடியாமல்… அன்றிரவு உறக்கத்தைத் துறந்தான்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. இப்போதெல்லாம் அவள் அடிக்கடி கார்முகிலனின் கண்ணில் படுகிறாள். அவனுடன் பேசுவதில்லையென்றாலும், அவனைக் கண்டு ஓடி ஒளிவதுமில்லை. அதுவே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. தினமும் ஒருமுறை அவள் முகத்தைப் பார்த்து விட்டாலே பிறவிப்பயன் அடைந்துவிட்டது போல் மகிழ்ந்து போனான்.
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மூன்றுமாதம் கழிந்தது…. மதுமதியின் உடலும் மனமும் நன்றாகவே தேறிவிட்டிருந்தது. அன்று கௌசல்யா மதுமதியிடம் அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசினாள்.
“மது… குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவை சிறப்பா பண்ண அப்பா ஆசைப்படறார்…”
“செஞ்சுடலாம்மா…”
“நம்ம சொந்தக்காரவங்க எல்லாரையும் கூப்பிடணும்…”
“சரிம்மா…”
“விழாவை இங்க நம்ம வீட்டுல கொண்டாட முடியாது… அது முறையில்ல… நாம எல்லாரும் லக்ஷ்மிபுரத்துக்குத் தான் போகணும்… அதோடு எல்லாருக்கும் முன்னாடி நீயும் முகிலனும் ஆளுக்கு ஒரு பக்கமா முறுக்கிக்கிட்டு நிற்காம, சேர்ந்து நின்னு விஷேசத்த நல்லபடியா முடிக்கணும்… அது ரொம்ப முக்கியம்…” கௌசல்யா சாவதானமாகச் சொல்லி முடிக்க, மதுமதி அதிர்ந்தாள்.
“அம்மா…!!!”
“என்னம்மா…?”
“லக்ஷ்மிபுரத்துக்கு நான் எப்படிம்மா…?”
“அது உன் வீடும்மா…”
“இல்லம்மா…” கசங்கிய முகத்துடன் பதில் வந்தது மதுமதியிடமிருந்து…
“மது… வாழ்க்கைல தப்பே செய்யாதவங்கன்னு யாருமே கிடையாது… எல்லாருமே ஏதாவது ஒரு சமயத்துல தப்புப் பண்ணினவங்க தான். செஞ்ச தப்ப உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறவங்களை மன்னிக்காமல் கோபத்த இழுத்துப் பிடிச்சுக்கறது யாருக்குமே நல்லது இல்லம்மா…”
“உன் அப்பா மேல எனக்குக் கோபம். அவரை ஒதுக்கி வச்சேன்… முகிலனுக்கு என்மேலயும் அப்பாமேலயும் கோபம் வீம்பு பிடிச்சுக்கிட்டு இருந்தான். கடைசில என்ன நடந்தது… எல்லாரும் இப்போ ஒன்னா சேர்ந்துட்டோம்… பதிமூணு வருஷம் கழிச்சு…! இந்தப் பதிமூணு வருஷத்த யாரால திருப்பிக் கொடுக்கமுடியும் சொல்லு…? நாம வாழறது ரொம்பச் சின்ன வாழ்க்கை மது… அதை எதுக்குச் சண்டையிலயும் கோபத்திலயும் கழிக்கணும்… சந்தோஷமா வாழ்ந்துட்டுப் போகலாமே…”
மதுமதி தாயின் பேச்சில் குறுக்கிடவே இல்லை. அமைதியாகக் கை நகத்தை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.
“மன்னிக்கிறது தான் சந்தோஷம் மது… உன் ஒருத்தியோட பெருந்தன்மை நம்ம குடும்பத்தோட சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்துடும் கண்ணு. ‘என்னடா அம்மா நம்ம மேல அக்கறை காட்டி பேசாம… குடும்பம் அது இதுன்னு சொல்றாளேன்னு’ நினைக்காதம்மா… நான் குடும்பம்னு சொன்னது உன்னையும் சேர்த்துதான். முகிலனைத் தண்டிக்கிறதால நீ மட்டும் சந்தோஷமாவா இருக்க…? சொல்லு… உனக்கும் வருத்தம் தானே…! எதுக்கு இதெல்லாம்…? எல்லாத்துக்கும் மேல… நீங்க ரெண்டுபேரும் ஒற்றுமையா சந்தோஷமா இருந்தால்தான் உங்க குழந்தை சந்தோஷமா வளரும்… இதையெல்லாம் மனசுல வச்சு ஒரு நல்ல முடிவா எடும்மா…” கௌசல்யா தனக்குச் சரியென்று பட்டதை மகளிடம் எடுத்துச் சொன்னாள்.
மதுமதி அதிகம் யோசிக்கவில்லை. கௌசல்யா பேசி முடித்த சில நிமிடங்களிலேயே தன் முடிவைச் சொல்லிவிட்டாள்.
“சரிம்மா…”
கெளசல்யாவிற்கு மதுமதி என்ன சொல்கிறாள் என்று ஒரு கணம் புரியவில்லை.
“என்னம்மா சொல்ற…? ”
“விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கம்மா… நான் லக்ஷ்மிபுரத்துக்குப் போறேன்…”
“மது…! என் கண்ணே…!” கௌசல்யா மதுமதியைக் கட்டிக் கொண்டாள். மகளின் வாழ்க்கை இவ்வளவு சுலபமாகச் சீராகிவிடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை… கணவனிடம் ஓடி விபரம் சொன்னாள். தம்பிக்கு ஃபோன் போட்டு உடனே வீட்டிற்கு வரும்படி சொன்னாள். குடும்பத்தலைவியின் மகிழ்ச்சி அந்த வீட்டையே பற்றிக் கொண்டது. அன்று வீரராகவன் வீட்டுச்சுவர் முதல், மரம் செடி கொடி வரை அனைத்தும் சந்தோஷத்தில் மினுமினுத்தன…
# # #
அன்று கல்லூரியிலிருந்து நேராக காம்காபட்டிக்கு வந்த கார்முகிலன், கௌசல்யா சொன்ன செய்தியை வியப்புடன் கேட்டான். அவனுடைய நெற்றி சிந்தனையில் சுருங்கியது.
“என்னடா தம்பி… என்ன யோசிக்கற?”
“நீ சொல்றத நம்பவே முடியலக்கா…”
“நிஜந்தான்… எனக்குமே அதிசயமா தான் இருந்தது. மது இவ்வளவு சீக்கிரம் மனசு மாறுவான்னு நான் நினைக்கவே இல்ல…”
“அக்கா… நான் மதிகிட்டப் பேசலாமா…?”
“என்னடா கேள்வி இது…? மது உன் பெண்டாட்டி… நீ அவகிட்டப் பேசுறதுக்கு என்கிட்ட கேட்கணுமா… உள்ளதான் இருக்கா… போய்ப் பேசு…”
முகிலன் சிறிதுநேர யோசனைக்குப் பிறகு மதுமதியின் அறைக்குள் நுழைந்தான். அவள் ஒரு காகிதத்தில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். ‘ஸ்ரீராமஜெய’மாகத்தான் இருக்க வேண்டும்… ஓய்வு நேரங்களில் அதைதான் எழுதிக் கொண்டிருப்பாள். கட்டிலுக்கு அருகில் மரத்தொட்டிலில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.
யாரோ உள்ளே வரும் அரவரம் கேட்டு, எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்த மதுமதி புருவம் சுருக்கினாள்.
“உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் மதி… பேசலாமா…?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
அவள் கையிலிருந்த காகிதத்தையும் பேனாவையும் அருகிலிருந்த மேஜை மீது வைத்துவிட்டு…
“வாங்க…” என்றாள் சகஜமாக.
வெகு நாட்களுக்குப் பிறகு அவனிடம் அவள் பேசிவிட்டாள்… இடையில் எத்தனையோ மோசமான சம்பவங்கள் நடந்து முடிந்திருந்தன. அதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை பேசாமல், சகஜமாக “வாங்க…” என்று அழைப்பவளை நினைத்து மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவனும் சகஜமாகவே உள்ளே வந்து ஒரு நாற்காலியில் அவளுக்கெதிரில் அமர்ந்தான்.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சிறிது தயங்கியவன், அவள் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பேச்சை ஆரம்பித்தான்.
“மதி… அக்காவுக்கும் அத்தானுக்கும் நம்ம குழந்தையின் பெயர் சூட்டு விழாவை பெரிய அளவில் கொண்டாடணும் என்று ஆசை…”
“ம்ம்ம்… ஆமாம்… அம்மா என்கிட்டே இதைப் பற்றிப் பேசினாங்க…”
“உனக்குச் சம்மதமா…?”
“ம்ம்ம்… சம்மதம்தான்…” அவள் சாதரணமாகச் சொன்னாள்.
“விழா நம்ம வீட்டுலதான் கொண்டாடப் போறோம்…”
“அதுதானே முறை… அங்கதான் செய்யணும்… அதுதானே பாப்பாவோட வீடு…” அவள் இயல்பாகச் சொன்னாள்.
அவன் முகத்தில் சட்டென வெளிச்சம் பரவியது. உதட்டோரம் புன்னகை எட்டி பார்த்தது,
“மதி… என்மேல… உனக்குக் கோபம் இல்லையா…?” அவன் சிறிது தயக்கத்துடன் கேட்டான்.
“இல்லை…” பளிச்சென்று வந்தது அவளிடமிருந்து பதில்.
“மதி…!!!” அவன் வியப்புடன் அவளைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள்.
“எப்படி…? எப்படி மதி…? என்னை ஒரு வார்த்தை கூடத் திட்டணும்… கேள்விக் கேட்கணும் என்று தோணலையா உனக்கு…”
அவள் இல்லையென்பது போல் தலையசைத்தாள்.
‘எப்படி… இது எப்படிச் சாத்தியம்…?’ அவன் பிரம்மிப்புடன் அவளைப் பார்த்தான். உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்துடன் கேட்டான்… “மதி… நீ என்னை மன்னிச்சுட்டியா…?”
அவள் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள்.
“மதி… நான்… நான்… எப்படி… நீ எப்படி என்னை… மதி… தேங்க்ஸ்… தேங்க்ஸ் மதி…” என்று எதையும் கோர்வையாகப் பேச முடியாமல், அவள் கையைப் பிடித்துத் தன் கண்களுக்குள் புதைத்துக் கொண்டான்.
“பழசை எல்லாம் விட்டுடலாமே ப்ளீஸ்… நானும் மறக்க முயற்சி செய்றேன்…” அவள் சிறிது கெஞ்சலாகக் கேட்டதும், நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன…
“மதி… சாரி மதி… நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தியிருக்கேன்… அதுக்கெல்லாம் சேர்த்து, இனி உன்னை ரொம்பச் சந்தோஷமா பார்த்துக்கப் போறேன் மதி… சத்தியம்…” அவன் உணர்ச்சித் ததும்ப உறுதியுடன் பேசினான்.
அவள் அவனை ஒருவிதமாகப் பார்த்தாள். ஒரே நொடிதான்… நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். ஆனால் கார்முகிலனின் கழுகு கண்கள் அவளுடைய பார்வை வித்தியாசத்தைக் கண்டுகொண்டன. அந்தப் பார்வை அவனைக் குழப்பிவிட்டது.
‘எதற்காக அப்படிப் பார்த்தாள்…? என்ன நினைக்கிறாள்…? ஒருவேளை அவள் சாதாரணமாகத்தான் பார்த்தாளோ…! நாம்தான் தவறாக நினைக்கிறோமோ…!’ என்றெல்லாம் குழம்பியபடி, எதையும் அவளிடம் விளக்கிக் கேட்க முடியாமல்… சிறிதுநேரம் அவளுடன் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான்.
Comments are closed here.