உயிரைத் தொலைத்தேன் – 6
5154
0
அத்தியாயம் – 6
நீலவேணி மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடைய வீட்டிற்கு அவளுடைய கார்முகிலன் வந்துவிட்டான்.
“வாங்க முகிலன்… உள்ள வாங்க… பாட்டி… பாட்டி…” முகிலனை உள்ளே அழைத்தவள் உடனே பாட்டியையும் ஏலம் போட்டாள்.
“உக்காருங்க முகிலன்… பாட்டி உள்ள இருக்காங்க போலிருக்கு… இதோ வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டுப் பின்பக்கம் ஓடினாள். அவன் அவளுடைய வீட்டை எடைபோட்டான்.
பழைய வீடுதான்… ஆனால் பெரிய வீடு… உள்ளே இருக்கும் பொருட்களெல்லாம் தரமானதாகத் தெரிந்தது. அழகாகவும் இருந்தது. அவன் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே வீட்டைச் சுற்றிப் பார்க்கும் போது நீலவேணியைப் போலவே உருவம் கொண்ட ஒரு பெண்ணின் படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. இருபது… இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எடுத்த படம் என்று பார்க்கும் போதே தெரிந்தது. அந்தப் படத்திற்கு மாலை போட்டு பொட்டும் வைத்திருந்தார்கள்.
‘நீலவேணியின் தாய் உயிரோடு இல்லையோ…’ என்கிற சந்தேகம் அவனுக்கு வந்தது.
“வாங்க தம்பி…” என்ற குரலைக் கேட்டுத் திரும்பினான்… வெளுத்த நிறமும், பருமனான தோற்றமுமாக ஒரு முதியவள் வந்து கொண்டிருந்தாள். நீலவேணியும் கையில் ஒரு ட்ரேயுடன் வந்தாள்.
“வணக்கம் பாட்டி…” என்றான் எழுந்து மரியாதையாக.
“உக்காருங்கப்பா…”
“முகிலன்… இது என்னோட பாட்டி… பேரு வேதவல்லி…” என்றபடி அவனிடம் ட்ரேயை நீட்டினாள். அவன் அதிலிருந்து ஒரு கோப்பை பழசாற்றை எடுத்துக்கொண்டு “தேங்க் யூ…” என்று சொல்லிப் புன்னகைத்தான்.
“எல்லாம் ரெடியா இருக்கு போலிருக்கு…” என்றான்.
“வரும்போதே பாட்டிக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்…” என்று அவளும் புன்னகைத்தாள்.
பாட்டி அவன் எதிரில் அமர்ந்தபடி “அன்னிக்கு நீலாவுக்கு உதவி செஞ்சீங்களாம்… ரொம்ப நன்றி தம்பி…” என்றாள்.
“…….” அவன் எதுவும் சொல்லாமல் மீண்டும் புன்னகைத்தான்.
“எங்க தம்பி வேலை செய்றீங்க…?”
” ‘எஸ். டி. ஐ. டி’ காலேஜ்ல பாட்டி…”
“சம்பளம் என்ன வரும்…?”
பாட்டியின் கேள்வி அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘முதல்முறை பார்த்துப் பேசும் மனிதனிடம் அவனுடைய வருமானத்தைப் பற்றிக் கேட்காவிட்டால் என்ன…?’ என்று தோன்றியது. ‘அந்தக் காலத்து பெண்மணி… நாகரிகம் தெரியவில்லை…’ என்று நினைத்துக் கொண்டு,
“நாப்பத்தஞ்சாயிரம்…” என்றான்.
“செலவு போக என்ன மிச்சப்படும்…?” என்று அவள் அடுத்தக் கேள்விக் கேட்க அவனுக்குத் தாங்கமுடியவில்லை.
“எதுக்கு மிச்சப்படுத்தணும்… சம்பாதிக்கிறது செலவு செய்யத்தானே…” என்றான் கொஞ்சம் கடுப்பாக. நீலவேணிக்கு அவனுடைய கோபம் புரிந்துவிட்டது.
“பா…ட்டி…” என்றாள் கொஞ்சம் அழுத்தமாக.
அவள் குரலில் இருந்த அழுத்தம், பாட்டிக்கும் புரிந்தது… கார்முகிலனுக்கும் புரிந்தது.
“சரி தம்பி… நீங்க பேசிக்கிட்டு இருங்க… எனக்குக் கொஞ்சம் உள்ள வேலை இருக்கு…” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள் பாட்டி.
“சாரி முகிலன்… பாட்டி வயசானவங்க… என்ன பேசுறதுன்னே அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது…” என்றாள் வருத்தத்துடன்.
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் “அந்த போட்டோல இருக்கறது யார் நீலா…?” என்றான் பேச்சை மாற்றுவதற்காக.
“அம்மா…”
“ஓ… சாரி…” என்றான்.
“அம்மா போயி பத்து வருஷம் ஆச்சு… அந்த வருத்தமெல்லாம் இப்போ இல்லை முகிலன்… ”
“அப்பா என்ன செய்றார்…” என்றான். அவளுடைய முகம் வெளிறியது…
“அப்… அப்பா… அப்பாவும் இல்ல…” என்றாள் தடுமாற்றத்துடன். அவன் அவளுடைய தடுமாற்றத்தைக் கவனித்தாலும் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.
ஆனால் அவளும் தன்னைப் போல் பெற்றோர் இல்லாத பிள்ளை என்று தெரிந்த அந்த நொடி, அவள்மீது அவனுக்கு ஒரு ஒட்டுதல் ஏற்பட்டது.
இல்லாதவர்களைப் பற்றிக் கேட்டு அவளை மேலும் துன்பப்படுத்த விரும்பாதவனாக, தன்னைப் பற்றி அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.
“நீலா… என்னுடைய பெற்றோரும் உயிரோடு இல்ல… தர்மராஜ் என்கிற பெரிய மனுஷன்தான் என்னைப் படிக்க வச்சாரு… இப்போ நான் நல்ல வேலைல இருக்கேன்… படிக்கிறது ரொம்பப் பிடிக்கும்… ” என்று தொடங்கி அவனுடைய நண்பர்கள், கல்லூரி அனுபவங்கள், வேலையில் கிடைத்த சில சுவையான அனுபவங்கள்… என்று அவளோடு நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான். பேச்சினூடே அவன் அவளை ஒருமையில் அழைக்கப் பழகியிருந்தான். அதை அவன் உணரவில்லை. அவள் ரசித்தாள்.
நீலா தன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அதை அவன் கேட்கவும் இல்லை. பாட்டி வந்து,
“சமையல் தயாராகிவிட்டது… சாப்பிட வாங்க தம்பி…” என்று சொன்னதும் தான் மணியைப் பார்த்தான்… மணி இரண்டாகிவிட்டது.
“ஐயோ… டைம் ரெண்டாச்சா…!” என்றான் ஆச்சர்யமாக…
“எவ்வளவு பெரிய ராஜாதிராஜனா இருந்தாலும்… எங்க நீலாவோட பேசிக்கிட்டு இருந்தா, நேரத்த மறந்துடுவாங்க…” என்றார் பாட்டி பெருமையாக…
ஏனோ அவனுக்கு அந்தப் பாட்டியைப் பிடிக்கவில்லை. அவளுடைய வார்த்தைகளில் தரம் இல்லாதது போல் தோன்றியது.
நீலா எதுவும் சொல்லவில்லை. “வாங்க முகிலன்…” என்று அவனை ஆர்வமாக அழைத்தாள். அவளுடைய அழைப்பை மறுக்க முடியாமல் எழுந்து சென்றான்.
பாட்டி அசைவம் சமைத்திருந்தாள். சுவையாக இருந்தது. அவனுக்கு நீலவேணி பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.
“நீயும் சாப்பிடு நீலா…” என்றான்.
அவளும் அவனோடு அமர்ந்து சாப்பிட்டாள். அவள் நான்கு விரலால் நாசுக்காகச் சாப்பிடுவது அவனுக்குப் பிடித்திருந்தது.
‘இவள் எப்படி இந்தப் பாட்டியோடு காலத்தை ஓட்டுகிறாள்…!’ என்று நினைத்துக் கொண்டான்.
விருந்து முடிந்து மீண்டும் பேச்சுச் சபை ஆரம்பமானது. பேச்சும் சிரிப்புமாக நேரம் கழிந்தது… இறுதியில் கைப்பேசி எண்ணும் பரிமாறப்பட்டது…
“சரி நீலா… ரொம்ப நேரம் இங்க இருந்துட்டேன்… டைம் ஆச்சு… சார் எனக்காக வெயிட் பண்ணுவாரு… நான் கிளம்புறேன்…”
“சரி… பத்திரமா போயிட்டு வாங்க… வீட்டுக்குப் போயிட்டு கால் பண்ணுங்க…”
“எதுக்கு…?” அவன் புரியாமல் கேட்டான்.
“நீங்க பத்திரமா போய்ட்டீங்களான்னு எனக்குத் தெரிய வேண்டாமா…?” அவள் கொஞ்சம் பொய்க் கோபம் காட்டிப் பேச, அவனுக்கு அதுவொரு புது அனுபவமாக இருந்தது.
இதுவரை பெண்களோடு நெருங்கிப் பழகியதில்லை… தாய்க்குப் பிறகு இதுபோல் அக்கறையோடு யாரும் அவனிடம் பேசியதில்லை…
தர்மா சாரின் அக்கறை வேறு மாதிரி இருக்கும். அவர் அவனை ஓர் ஆண்மகனாகப் பார்ப்பார். அவனுடைய படிப்பில் கவனம் செலுத்துவார். இப்படிக் குழந்தை போல் ‘பத்திரமாகப் போ… நல்லா சாப்பிடு…’ என்றெல்லாம் அவர் அவனிடம் சொன்னதில்லை… அதனால் நீலாவின் புதுவித அக்கறை அவனை நெகிழ்த்தியது.
“சரி நீலா…” என்றான் குழைவான குரலில்.
‘அந்த நீலவேணி வீடு ஒரு புதைகுழி… உள்ளே செல்பவர்களை அப்படியே விழுங்கிவிடும்…’ என்று அக்கம்பக்கத்து வீட்டுகாரர்கள் பேசிக்கொள்வது உண்மைதான் போலும்… காலை பன்னிரண்டு மணிக்கு அவளுடைய வீட்டிற்குள் நுழைந்தவன் மாலை ஆறு மணிக்குதான் வெளியேறினான்.
தான் அவளுடன் எதையாவது பேசினால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்துதான் அவன் அவளிடம் பேச்சை ஆரம்பித்தான். ஆனால் அவனே ஆச்சர்யப்படும் விதமாக அந்த வீட்டிலிருந்து வெளியேறும்போது அவன் மனம் மிகுந்த ஆறுதலடைந்திருந்தது.
வீட்டுக்கு வந்த பிறகு மறக்காமல் அவளுக்கு ஃபோன் செய்தான்… பதிலுக்கு அவள் மறுநாள் அழைத்துப் பேசினாள். அடுத்தநாள் அவன் அவளுக்கு ஃபோன் செய்தான்… கைப்பேசியின் உதவியால் அவர்களுடைய நட்பு பலப்பட்டது.
Comments are closed here.