உயிரைத் தொலைத்தேன் – 7
5143
1
அத்தியாயம் – 7
மதுமதிக்கு ஒரு வாரமாக எதுவும் ஓடவில்லை. பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அடிக்கடி விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்துவிடுவாள். சாப்பிடும் போது சாப்பிடவிடாமல், தூங்கும் போது தூங்கவிடாமல் அவன் முகம் அவளை இம்சை செய்தது. ஏதோ ஒரு பந்தம் அவனுக்கும் அவளுக்கும் இருப்பது போல் அவளுடைய உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. எப்போது சனிக்கிழமை வரும் என்று அவள் மனம் தவிக்க ஆரம்பித்துவிட்டது. பெரிதாக எந்தக் காரணமுமே இல்லாமல் அவளுடைய மனதிற்கு அவனைப் பிடிக்க ஆரம்பித்து விட்டதுதான் சமாச்சாரம்…
கார்முகிலன் விறுவிறுப்பாகப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு பாயிண்ட்டையும் அவன் சொல்லி முடிக்கும் போது, அவனையும் மீறி பார்வை மதுமதியின் முகத்தில் மோதும்… அவளோ அவனுடைய கண்களைச் சந்திக்காமல் பார்வையைத் தாழ்த்திக் கொள்வாள். முதல் இரண்டுமுறை அதைக் கவனிக்காதவன் மூன்றாவது முறை உன்னிப்பாகக் கவனித்தான்.
தொடர்ந்து அவளுடைய பார்வை… அவன் பார்க்காத போது பார்த்து, பார்க்கிற போது தாழ்ந்து அவனிடம் விளையாடியது. அந்த விளையாட்டு அவனுக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான் ஒருமுறை அவன், அவள் மீது பதித்த பார்வையை விளக்கிக் கொள்ளாமல், அவளைப் பார்த்தபடியே பாடத்தை விளக்கிக் கொண்டிருந்தான்.
அதை எதிர்பார்க்காத மதுமதி அவனை நிமிர்ந்து பார்த்து அவன் கண்களைச் சந்தித்துவிட்டாள். குப்பென முகம் சிவக்க, மீண்டும் பாடபுத்தகத்தைப் பார்ப்பது போல் தலையைக் குனிந்து கொண்டாள்.
‘இந்தப் பெண் என்னைப் பார்த்து எதற்கு இப்படி வெட்கப்பட்டுது…?’ என்று அவனுக்குள் ஒரு குறுகுறுப்பு எழுந்தது. அதைத் தாண்டி அவளுடைய முகச்சிவப்பு, நாணம், நடுக்கம் எல்லாம் பிடித்த மாதிரி… ஏதோ உள்ளுக்குள் ஜிவ்வென்று இருந்தது.
ஒரு நிமிடத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் ‘இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…’ என்று நினைத்துக் கொண்டான்.
அடுத்த நாள் வகுப்பறைக்குள் நுழையும்போதே, ‘இன்றைக்கு அந்தப் பெண்ணைப் பார்த்துப் பாடம் நடத்தக் கூடாது…’ என்று முடிவெடுத்தான்.
பத்து நிமிடம் அவளைப் பார்க்காமலே பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவள் தன்னைப் பார்க்கிறாளா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட, அவனுடைய உறுதி தளர்ந்தது. அவன் பார்வையை அவள் பக்கம் திருப்ப, அவளோ தடுமாறித் தலை கவிழ்ந்தாள். அவனுக்குள் உற்சாகம் பிறந்தது. அவள் காட்டிய விளையாட்டை அவனும் காட்டினான். அவள் எதிர்பார்க்காத போது அவளைப் பார்த்து, எதிர்பார்த்த போது பார்வையைத் திருப்பி… அவளோடு வம்புக்கு நின்றான்.
‘ஸ்ஸ்ஸ்… ஐயோ…’ என்றிருந்தது அவளுக்கு. வெட்கத்தில் உதடு கடித்தாள்.
அவளுடைய செயல்கள் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் அவனைக் கடைக்கண்ணால் பார்க்கும்போது அவனுக்குச் சிலிர்த்தது. மனதிற்குள் சாரலடித்தது. ஆனால் அவன் ஓர் ஆசிரியர்… அவள் அவனுடைய மாணவி என்கிற எண்ணம் தோன்றிய அடுத்தநொடி அவனுடைய உணர்ச்சிள் வடிந்துவிடும். அந்த நேரம் அவன் சபதம் எடுப்பான்,
‘ச்ச… இனி இந்தப் பொண்ணு இருக்கிற திசைப் பக்கமே தலையைத் திருப்பக் கூடாது…’ என்று. ஆனால் சபதத்தின் ஆயுள் எல்லாம் சில நிமிடங்கள்தான். அவனுடைய கண்கள் அவன் அனுமதி இல்லாமலே அவளைப் பார்த்துவிடும், அவன் உடலும் சிலிர்த்துவிடும், சாரல் மழையும் மனதிற்குள் அடித்துவிடும். அதன்பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வரும் அவன் ஓர் ஆசிரியர் என்று…!
###
கார்முகிலன், தன் மனதில் ஓர் உயர்ந்த இடத்தை நீலவேணிக்குக் கொடுத்திருந்தான். அவனுடைய சுகதுக்கங்களை வெளிப்படையாக அவளிடம் பகிர்ந்து கொண்டான். அவனுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அவளிடம் பேசவில்லை என்றாலும் இன்று நடக்கும் சம்பவங்கள் எதையும் மறைப்பதில்லை.
அப்படித்தான் அந்தச் சந்தோஷமான விஷயத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ள, அவள் வீடு தேடி வந்திருந்தான்.
“நீலா… இந்தா… ஸ்வீட் எடுத்துக்க… பாட்டிக்கும் கொடு…”
“என்ன விஷயம்… எதுக்கு ஸ்வீட்…?” நீலா மலர்ந்த முகத்துடன் முகிலன் கொடுத்த ஸ்வீட்டை கையில் எடுத்தபடி கேட்டாள்.
“எங்களோட சொந்த ஊர்ல பழைய வீடு இருக்குன்னு சொன்னேல்ல…”
“ஆமாம்… லக்ஷ்மிபுரத்துல உங்களோட சொந்த வீடு மோசமான நிலைமைல இருக்குன்னு சொன்னீங்க… அதுக்கு என்ன…?”
“அந்த வீட்டை இடிச்சிட்டு அந்த இடத்துல ஒரு பெரிய மாடிவீடு கட்டப் போறேன்…”
“என்ன சொல்றீங்க… இப்போதானே பூர்வீக நிலத்தை வாங்கினதா சொன்னீங்க… திரும்ப இப்போ எப்படி…?” அவள் புரியாமல் கேட்க…
“லோன் சாங்க்ஷன் ஆகியிருக்கு… இன்னும் ரெண்டு வாரத்துல வேலை ஸ்டார்ட் ஆகிவிடும்… தேனியில இருக்கிற பெரிய பில்டர்கிட்ட அக்ரிமெண்ட் போட்டுட்டேன்… அதுதான் ஸ்வீட்டோட வந்தேன்…” என்றான் மகிழ்ச்சி பொங்க.
நிலம் வாங்கிய அன்று இருந்த சலனம் எல்லாம் இன்று இல்லை… சந்தோஷம் மட்டுதான் மனதில் நிறைந்திருந்தது.
“ஏன் தம்பி… என்ன பட்ஜெட்டு…?”
“முப்பது லட்சம் பாட்டி..”
“முப்பதும் லோனா…?”
“இல்ல… இல்ல… முப்பது பர்சன்ட் நான் கட்டணும்…”
“அப்படியா…!” பாட்டி மனதிற்குள் கணக்குப் போட்டார்.
அதைப் புரிந்துகொள்ள முடியாத கார்முகிலன் நீலாவிடம் இன்னும் பல விபரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
# # #
அன்று சனிக்கிழமை, காலை பதினொரு மணியிருக்கும்… மதுமதி கல்லூரிக்குச் சென்றுவிட்டாள். கௌசல்யா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் ஓய்வாக இருந்த வீரராகவன் கௌசல்யாவைத் தேடி தோட்டத்திற்கு வந்தார். அவர் வந்திருப்பது தெரிந்தும் கௌசல்யா அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை.
“கௌசி…” கரகரப்பாக வந்தது அவருடைய குரல்.
வெண்டைக்காய் செடிக்குக் களையெடுத்துக் கொண்டிருந்த கௌசல்யாவின் கைகள் வேலைநிறுத்தம் செய்தன. அவள் குனிந்தபடி அசையாமல் நின்றாள்.
“கௌசி… நான் உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்…”
கௌசல்யா இப்போது மீண்டும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் அங்கிருந்து நகர்ந்து போகாமல், தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்ததே அவருக்குப் பேச அனுமதி கிடைத்தது போல் அவர் பேச்சை ஆரம்பித்தார்…
“கௌசி… நான் மதுக்குக் கல்யாணம் செய்து வச்சிடலாம் என்று நினைக்கிறேன்… நீ என்ன சொல்ற…?”
“அவ இன்னும் படிப்பை முடிக்கல…” என்றாள் நிமிராமலே.
“எனக்கும் தெரியுது… ஆனா படிப்பு இன்னும் இரண்டு மாசம் தானே… கல்யாணத்தை இரண்டு மாதத்திற்குப் பிறகு வச்சிக்கலாம். இப்போ மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு பண்ணிவிடலாமே…” என்றார்.
கௌசல்யா எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள்.
“கௌசி… நில்லு… நான் பேசிக்கிட்டு இருப்பது உன்னைப் பற்றியோ… அல்லது என்னைப் பற்றியோ இல்ல… நம்ம பொண்ணு மதுவைப் பற்றி… உன் கருத்து என்னன்னு நீ சொல்லு… அதுக்குத் தகுந்த மாதிரி நாம முடிவு செய்யலாம்…”
“என்னுடைய கருத்தா…!!!” – ஆச்சர்யமாய்க் கேட்டவளைச் சங்கடத்துடன் பார்த்தார்.
“ஹும்…” என்று ஒரு பெருமூச்சுடன் “உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் பண்ணப் போறீங்க… இதுல நான் சொல்ல என்ன இருக்கு…?” என்றாள்.
“அவ உனக்கும் பொண்ணுதான்… உன்னுடைய விருப்பமும் இப்போ முக்கியம்…”
“இந்த வீட்டைப் பொருத்தவரை என்னுடைய விருப்பு வெறுப்பெல்லாம் செத்துப் போய்ப் பன்னிரண்டு வருஷம் ஆச்சு… இப்போ என் பொண்ணுக்கு என்ன விருப்பமோ அதுதான் என் விருப்பமும்…” என்று சொன்னவள் அதற்குமேல் அங்கு நிற்காமல் உள்ளே சென்றுவிட்டாள்.
‘இந்தப் பிடிவாதத்திலிருந்து கொஞ்சம் கூட இறங்கி வராமல் எப்படித்தான் இத்தனை வருஷமா ஒரே நிலையில் நிற்கிறாளோ..!’ அவரும் ஒரு பெருமூச்சுடன் வீட்டிற்குள் சென்றார்.
###
“குட் ஈவ்னிங் சார்… ரெடியா…?”
“நான் எப்பவோ ரெடிடா… நீ தான் லேட்… வா சீக்கிரம் போகலாம்… விநாயகர் கோவிச்சுக்கப் போறார்…”
“ஓகே… ஓகே…” என்று சொல்லியபடி தர்மராஜ்ஜை தூக்கிக் கொண்டு வந்து காரில் அமரவைத்தான் கார்முகிலன்.
அவர்கள் இருவரும் சித்திவிநாயகர் கோவிலுக்குச் சென்றார்கள். கோவில் எப்பவும் போல் மிதமாகக் கூட்டத்துடன் அமைதியாக இருந்தது. சுவாமி தரிசனம் முடிந்ததும் கார்முகிலன் சக்கரநாற்காலியைத் தள்ளிக்கொண்டு பிரகாரத்தைச் சுற்றிவந்தான்.
“என்னடா முகிலா… அமைதியா வர்ற…?”
“இல்ல சார்… என்னோட ஃபிரண்டு கோவிலுக்கு வர்றதா சொல்லியிருந்தாங்க… காணோம்… அதுதான் பார்க்கிறேன்…” என்று சொல்லி அவன் வெளிப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்க…
“ஹாய்… முகிலன்…” என்றபடி உள்பக்கத்திலிருந்து அங்கு வந்தாள் நீலவேணி.
“ஹேய்… நீலா… என்ன நீ… உன்னை நான் இந்தப் பக்கம் பார்த்திட்டு இருக்கேன்… நீ இந்தப் பக்கத்துல இருந்து வர்ற…?”
“முன்னாடியே வந்துட்டேன் முகிலன்… நீங்க வந்ததைப் பார்த்தேன்… சுவாமி தரிசனம் முடிக்கட்டும் என்று அந்தப் பக்கம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…”
“ஓ… அதுதானே பார்த்தேன்… நீ லேட் பண்ணமாட்டியே…! ஓகே… இவர்தான்… தர்மா சார்…” என்றான். அவர் பெயரைச் சொல்லும் போது அவன் குரலில் கொஞ்சம் பெருமை கலந்திருந்தது.
“சார்… இது என்னோட ஃபிரண்டு… நீலவேணி…”
“வணக்கம் சார்…” என்றாள் நீலவேணி…
“வணக்கம்மா…” என்றபடி அந்தப் பெண்ணின் மீது ஒரு நொடி பார்வையை ஓட்டினார்.
எரிக்கிற கலரில் ஆடையும், விரித்துவிட்ட கூந்தலும், அளவுக்கு அதிகமாய்ச் சூடியிருந்த பூவும், பெரிய பொட்டும், கண்ணை உறுத்துமளவு கண்மையும், உதட்டில் சாயமும்… அவருக்கு என்னவோ அந்தப் பெண்ணைப் பார்த்ததும் பிடிக்கவில்லை.
‘கொஞ்சம் ஆடம்பரமான கேசா இருக்கும் போலிருக்கே..’ என்று நினைத்துக் கொண்டார்.
“எப்படி இருக்கீங்க சார்…?”
“இப்போ பரவால்லம்மா… ” என்றவர் தொடர்ந்து
“நீ என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க…?” என்று சாதாரணமாகக் கேட்டார். ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக…
“சும்மாதான் சார் இருக்கேன்…” அவள் இயல்பாகச் சொன்னாள்.
“சும்மா இருக்கியா…?” என்றார் ஆச்சர்யமாக. பின் “சும்மாவெல்லாம் இருக்கக் கூடாதும்மா… ஏதாவது செய்துகிட்டே இருக்கணும்…” என்றார் ஓர் ஆசிரியராக மாறி.
அவள் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள்.
‘இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு…?’ என்று அவர் நினைத்துக் கொண்டார்.
‘நீலாவுக்கு எப்பவுமே ஸ்மைலிங் ஃபேஸ்’ என்று கார்முகிலன் நினைத்துக் கொண்டான்.
ஒரே விஷயத்தை இளையவன் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க… முதியவர் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தார்.
“என்னம்மா படிச்சிருக்க…?”
“அது… வந்து… படிப்பு அதிகம் இல்ல சார்…” அவள் தயக்கத்துடன் சொன்னாள்.
அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘படிப்பே வரவில்லை என்றாலும்… தட்டுத் தடுமாறி ஒரு டிகிரியையாவது வாங்கிவிடுதுகள் இந்தக் காலத்துப் பிள்ளைகள். இந்தப் பொண்ணு என்ன படிப்பு அதிகம் இல்லைன்னு சொல்லுது… அதிகம் இல்லையா…? அல்லது… இல்லவே இல்லையா…?’ என்று கொஞ்சம் கோபமாகவே நினைத்தார். அவர் ஓர் ஆசிரியராயிற்றே.
“படிப்புக்கு வயசு கிடையாதும்மா… வாழ்க்கைக்குப் படிப்பு ரொம்ப முக்கியம்… இதுவரை படிக்கலன்னா பரவால்ல… இனி படி… முயற்சியாவது செய்…” என்றார். அவருடைய பேச்சு அவளைத் தாக்கிவிட்டது. கார்முகிலனுக்குக் கூடக் கொஞ்சம் சங்கடமாகிவிட்டது.
‘இவர் ஏன் இப்படிப் பேசுகிறார்… பாவம் நீலா… அவளுக்கு முகமே செத்துப் போச்சே…’ என்று நினைத்தவனாக…
“நீலா… நீ கிளம்பு… நேரமாச்சு…” என்றான் ‘தனக்கு விருப்பமான இருவர்… ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும் என்று நினைத்து அவளை இங்கு வரச் சொன்னது தவறோ…!’ என்கிற வருத்தத்துடன்.
“சரி முகிலன்… வர்றேன் சார்…” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் அந்தப் பக்கம் சென்றதும், “யாருடா இந்தப் பொண்ணு…?” என்றார் தர்மராஜ்.
அவன் விழித்தான். “என் ஃபிரண்டுன்னு சொன்னேனே சார்…” என்றான்.
“ஆமா… சொன்ன…! கிழிச்ச… அந்தப் பொண்ண உனக்கு எப்படிடா தெரியும்…? அதைச் சொல்லு முதல்ல..” என்றார் கடுப்பாக.
அவன் அவளை வழியில் சந்தித்ததையும், அதன்பிறகு அவளுடைய வீட்டிற்கு ஒருமுறை சென்றதையும் மேலோட்டமாகச் சொன்னான்.
“அவளுக்கு அப்பா அம்மா இல்லைன்னதும் உனக்கு இரக்கம் பொங்கிடுச்சாக்கும்…?” என்றார் குரலில் இகழ்ச்சியைக் காட்டி.
“என்ன சார் இப்படிச் சொல்றீங்க… பாவம் சார். அவளும் என்னை மாதிரிதானே… உங்களுக்கு நீலாவைப் பிடிக்கைலையா…?” என்றான்.
அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. “டேய்… என்னடா சொல்ற…? எனக்குப் பிடிச்சா… அடுத்து என்ன செய்றதா உத்தேசம்…?” என்றார் படபடப்பாக.
எங்கே ‘இவளைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிவிடுவானோ…’ என்று பயந்தார்.
“ஒரு உத்தேசமும் இல்ல சார்… என்னோட ஃபிரண்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையோன்னு கவலைல கேட்டுட்டேன்… அவ்வளவுதான்…” என்றான்.
“ஏதாவது உன் மனசுல அந்தப் பெண்ணைப் பற்றி அபிப்ராயம் இருந்தா… இந்த நிமிஷமே மாத்திக்கோடா! அவளைப் பார்த்தால் எனக்கு நல்லவிதமா படல… முடிஞ்சா அந்தப் பெண்ணோட பழக்கத்தையே கட் பண்ணிவிடு…” என்று அறிவுரை கூறினார்.
அவன், அவர் பேசியதைப் பொருட்படுத்தவில்லை… அவனுடைய எண்ணப்படி நடந்து கொண்டான்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nachiar says:
Nithya karthigan no one can touch your height.unbelivable interesting writer