உயிரைத் தொலைத்தேன் – 9
5083
0
அத்தியாயம் – 9
சாரலடித்ததால் மழைநீர் கேண்டீன் தரையை நனைத்திருக்க, அதைக் கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் நடந்துவந்த மதுமதி ஈரத்தில் கால் வைத்ததும் கிரிப் இல்லாத செருப்பு வழுக்கிவிட்டுவிட்டது. அவள் “அம்ம்ம்…மாடி…” என்றபடிக் கீழே விழுந்தாள்.
அவளுடைய குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த கார்முகிலன், வேறு யாரும் அவளை நெருங்குவதற்கு முன் நொடியில் பாய்ந்து சென்று அலேக்காகத் தூக்கிவிட்டான். கையில் இருந்த சுகமான சுமையை இறக்க மனமில்லாமல், கைகளில் ஏந்தியபடியே கேண்டீனில் ஓரமாகப் போடப்பட்டிருந்த கல் பெஞ்சை நோக்கி நடந்தான்.
‘கனவா இல்லை காற்றா…
கனவா நீ காற்றா…
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையா நீ…!
இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா…
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்…
சந்திர தரையில் பாய் இடவா…
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்… இன்று கண்டேனடி…!
அதைக் கண்டு கொண்டேனடி…!
காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது…
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன்மேல் ஒரு பூ விழுந்தால்… என்னால் தாங்க முடியாது…’
அவளைக் கைகளில் ஏந்தியபடி பத்தடி தூரம் நடந்து கல் பெஞ்சை அடைவதற்குள் அவன் மனம் பாடிட அது அவன் செவிகளுக்கு மட்டும் கேட்டது… மனம் காதலில் உருகித் ததும்ப… அவளை மிக மென்மையாக அந்தக் கல் பெஞ்சில் அமர வைத்தான்.
அதற்குப் பிறகுதான் அவனுக்கு நிதானம் வந்தது. ‘என்ன காரியம் செய்துவிட்டோம்…’ என்று மனம் பதறினான்.
“சாரி… மதுமதி… நீ கீழ விழுந்துட்ட பதட்டத்துல… வந்து… சாரி… சாரி மதுமதி…” என்றான் வார்த்தைகளைத் தேடிப் பிடித்து. காதலுக்கும், வாத்தியாரின் எல்லையைத் தாண்டக்கூடாது என்கிற உணர்விற்கும் இடையில் சிக்கித் தவித்தான்.
“ப… பரவால்ல… சார்…” அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்து தலை கவிழ்ந்தது.
அதற்குள் கேண்டீனில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் அவர்களை நெருங்கி,
“என்ன ஆச்சு சார்…? என்னம்மா… அடிகிடி பட்டுடுச்சா…? பார்த்து வரக் கூடாதாம்மா…?” என்று விசாரணையை ஆரம்பிக்க… அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
“இல்ல… நான் கவனிக்காம வந்துட்டேன்…” என்றாள் தயக்கத்துடன்.
“வலிக்குதா…?” என்றான் கார்முகிலன் கரிசனமாக.
“இல்ல…”
“எழுந்து நடந்து பார்…”
அவள் எழுந்தாள். வலதுகால் தரையில் பட்டவுடன் ‘சுளீர்’ என்று பாதத்தில் பாய்ந்த வலியில் நிலைகுலைந்து தடுமாறினாள். அவன், அவளைத் தாங்கிப் பிடித்து மீண்டும் அமர வைத்தான்.
“நடக்க முடியலையா…?”
“சுத்தமா முடியல…”
“ஐயையோ… வீட்டுக்கு எப்படிம்மா போவ…?” கேண்டீனில் டோக்கன் கொடுப்பவர் கேட்க, அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். காலில் வீக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
“வீட்டுக்குப் போறது இருக்கட்டும்… முதல்ல டாக்டர்கிட்ட போகணும்… கால்வீக்கம் அதிகமாகிக்கிட்டே இருக்குப் பாருங்க…” என்றாள் கேண்டீனில் வேலை செய்யும் ஒரு பெண்மணி.
“அட ஆமா… ஏம்மா… வீட்டுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடும்மா… சார்… நேரமாக்காம சீக்கிரம் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போங்க சார்…” என்றார் டோக்கன் கொடுப்பவர். ஆரம்பத்திலிருந்து அவர்களிருவரும் பேசிக் கொண்டிருந்ததால், மதுமதி அவனோடு வண்டியில் செல்லத் தயங்கமாட்டாள் என்று நினைத்திருப்பார் போலும்…
கார்முகிலனும் மதுமதியும் கண்ணில் ஒரு மின்னலுடன் சட்டென ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவள் பார்வையை உடனே விளக்கிக் கொண்டாள். அவனோ அவள் மீது பதித்த பார்வையை நீக்காமல் “போலாமா…? என்னோடு பைக்கில் வருவதற்கு உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே…” என்றான்.
‘இந்த வார்த்தை அவன் வாயிலிருந்து வருமா…?’ என்று உள்ளுக்குள் ரகசியமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மதுமதிக்கு மகிழ்ச்சி ஊற்றெடுத்தாலும்,
“உங்களுக்குச் சிரமமா இருக்குமே சார்…” என்றாள் தயக்கத்துடன்.
“எனக்கு என்ன சிரமம்…! உன் வீட்டிலிருந்து யாரையாவது ‘A.R’ ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொல்லு… நான் உன்னை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போறேன். இப்போ என் வண்டியை இங்குக் கொண்டு வர்றேன்… வாசல் வரைக்கும் என் கையைப் பிடித்தபடி வந்து அங்கே ஒரு பெஞ்சில் உட்கார்ந்து விடு… முடியுமா…?” என்றான்.
அவள் முயற்சி செய்து பார்த்தாள்… சிரமமாக இருந்தது. மிகுந்த சிரமத்துடன் வாசலுக்கு வந்து சேர்ந்தாள். வானம் வெளுத்து வெயிலடிக்க ஆரம்பித்திருந்தது… கார்முகிலன் மற்றும் மதுமதி மனதில் கார்மேகம் சூழ்ந்து மழையடிக்க ஆரம்பித்தது…
மதுமதிக்கு அடிப்பட்டது, நடக்கச் சிரமப்பட்டது, காலில் அசைவு ஏற்பட்டால் வலியில் முகம் சுளிப்பது எல்லாம் மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும்… இப்போது அவளோடு வண்டியில் ஜோடியாகச் செல்லும் இன்பத்தை அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை கார்முகிலனால்.
மதுமதிக்கு இன்பமிகுதியில் கால்வலி மரத்துப் போய்விட்டது போலும்… அவளும் அந்த பைக் பயணத்தை ஒவ்வொரு கணமும் அனுபவித்து ரசித்தாள்.
முதல் நெருக்கம்… மனம் கவர்ந்தவர்களின் பிரத்யேக மணம்… சுயபுத்தியுடன் பதட்டம் இல்லாமல் அனுபவிக்கும் முதல் ஸ்பரிசம்… இவையெல்லாம் அவர்களை இன்பமான அவஸ்தைக்கு உள்ளாக்கியது. அந்தப் பதினைந்து நிமிட பயணம் இருவருக்கும் உயிருள்ளவரை மறக்கமுடியாத அனுபவமானது.
மருத்துவர் மதுமதியின் காலுக்குச் சிறிதாக ஒரு கட்டுப் போட்டுவிட்டு “கால் சுளுக்கியிருக்கு… அதிகம் அசைவு இல்லாமல் இருந்தால் சரியாகிவிடும்… ரெண்டு நாள் கழித்து வந்து பாருங்க…” என்றார்.
வீரராகவன் ஒருவார பயணமாக பெங்களூர் சென்றுவிட்டதால்… கௌசல்யா மதுமதியை மருத்துவமனையிலிருந்து அழைத்துக் கொண்டுவர, காருடன் டிரைவரை அனுப்பியிருந்தாள்.
“பத்திரமா போ… கட்டைப் பிரித்துவிட்டுக் காலுக்கு மருந்தை மறக்காமல் போடு… மாத்திரையைச் சரியாகச் சாப்பிட்டு விடு… நாளைக்கு வகுப்பிற்கு வர வேண்டாம்… பிறகு ஒருநாள் நான் உனக்குத் தனியாக நாளைய பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன்… நன்றாகத் தூங்கு… வலியிருந்தால் உடனே டாக்டரை வந்து பார்த்துவிடு…” அது இது என்று ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லி அவளை காரில் ஏற்றி அனுப்பிவிட்ட பிறகு, தன்னைச் சுற்றி எதுவுமே இல்லாதது போல்… வெற்றிடமாக, வெறுமையாக, தனிமையாக… உலகமே அவனை விட்டுவிட்டுப் போய்விட்டது போல் ஒரு உணர்வு…
தூரத்தில் செல்லும் காரையே இமைக்காமல் பார்த்தபடி நினைத்தான் ‘இவள்தான் என் உலகமா…!’
மதுமதிக்கோ அவனை விட்டுவிலகி வந்த பிறகுதான் சுயநினைவே வந்தது போல் இருந்தது. அவன் பேசியதையும்… அவனுடைய கேள்விகளுக்கு அவள் சொன்ன பதில்களையும் மனதிற்குள் அசைப்போட்டு ரசித்தபடி காரில் அமர்ந்திருந்தவளுக்குத் திடீரென்று அந்த நினைவு வந்தது…
“கேண்டீனில் சார் என்னவோ சொல்ல வந்தாரே…!”
“மதி…” என்று அந்தக் கிசுகிசுக் குரலில் அவன் அழைத்ததை இப்போது நினைத்தாலும் தித்தித்தது… உடல் சிலிர்த்தது.
‘இதைத்தான் சொல்ல வந்திருப்பான்…’ என்று அவளுக்குள் ஓர் ஊகம் இருந்தாலும் அவன் அதைச் சொல்லவில்லையே என்கிற ஏக்கமும் இருந்தது. அடுத்த நாள் எப்போது வரும்… மீண்டும் எப்போது அவனைப் பார்ப்போம் என்று அந்த நொடியிலிருந்து அவள் மனம் தவிக்க ஆரம்பித்தது.
Comments are closed here.