Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 13

அத்தியாயம் – 13

கார்முகிலனின் பிடிவாத குணம் நீலவேணியை அச்சுறுத்தியது. அவன் தன்னுடைய வாழ்க்கைக்கு ஒத்துவருவானா என்கிற சந்தேகம் வந்தாலும் அவனைக் கணவனாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை மட்டும் சிறிதும் குறையவில்லை.

அவளைப் பற்றிய உண்மைகளை மற்றவர் வாய்வழியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு விட்டான் என்றால்… பிறகு ஜென்மத்திற்கும் அவள் முகத்தில் விழிக்க மாட்டான் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் தானே அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி அவனுக்குப் புரியவைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

“சொல்லு நீலா… எதுக்காக என்னை இங்க வரச் சொன்ன…?” கோவில் மரத்தடியில் தன் எதிரில் தரையில் சிறு குச்சியைக் கொண்டு கிறுக்கல்கள் போட்டபடி அமர்ந்திருந்த நீலவேணியைப் பார்த்து கேட்டான் கார்முகிலன்.

அவள் தரையில் கிறுக்குவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். சோர்ந்த முகமும், கருவளையம் விழுந்த கண்களும், ஒரு வாரமாக மழிக்கப்படாத தாடியும்… அவளைக் குழப்பியது.

“உங்களுக்கு என்ன பிரச்சனை முகிலன்…?”

“அதெல்லாம் எதுவுமில்ல நீலா…”

“இப்போவெல்லாம் நீங்க என்கிட்ட எதையுமே சொல்றது இல்ல முகிலன்… நீங்க மாறிட்டீங்க…”

“ச்ச… ச்ச… அதெல்லாம் இல்ல நீலா.. உனக்கு ஏன் அப்படித் தோணுது…?”

“உங்களை எனக்குத் தெரியும் முகிலன்… உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு… ஆனால் அதை நீங்க என்னிடம் சொல்ல விரும்பல… பரவால்ல… உங்களுக்கு எப்பத் தோணுதோ அப்பச் சொல்லுங்க… அல்லது என்கிட்டச் சொல்லக் கூடிய விஷயம் இல்லன்னா சொல்லவே வேண்டாம். ஆனால் உங்களுடைய பிரச்னையை என்னால் தீர்க்க முடிந்தால் அதற்காக நான் என் உயிரைக் கூடக் கொடுப்பேன் முகிலன்… மறந்துடாதீங்க…” தீவிரமாகச் சொன்னாள்.

“நீலா…” அவன் அதிர்ந்தான்.

“நிஜம் முகிலன்… உங்களுக்காக நான் உயிரைக் கொடுக்கவும் தயாரா இருக்கேன்…” அவளுடைய குரலில் உறுதி இருந்தது.

திடுக்கிடலுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான். “ஏன் நீலா…?”

“ஏன்னா… நீங்க என் ஃபிரண்டு… என்னோட ஒரே உண்மையான ஃபிரண்டு…”

“உன்னுடைய நட்பு கிடைக்க நான் புண்ணியம் செஞ்சிருக்கேன் நீலா…”

“இல்ல முகிலன்… என்னைப் பற்றி உங்களுக்கு முழுசாத் தெரியாது… தெரிஞ்சா நீங்க இப்படிப் பேச மாட்டீங்க… என்னை வெறுத்து ஒதுக்கிடுவீங்க…”

அவன் அவளைக் குழப்பமாகப் பார்த்தான். “என்ன சொல்ற நீலா…? உன்னை நான் வெறுத்து விடுவேனா..!”

“ஆமாம்… வெறுத்துடுவீங்க…” அவள் கண்கள் கலங்கின.

“நீலா… ப்ளீஸ்… அழாத… உன்னை என்னால வெறுக்க முடியாது…”

அவள் அவனை நம்பாமல் பார்த்தாள்.

“என்னுடைய அப்பா யார் என்றே எனக்குத் தெரியாது முகிலன்…”

“எ… என்ன…!” அவன் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் இருக்க முயன்று தோற்றான். அவள் விரக்தியாகச் சிரித்துக் கொண்டாள்.

“எனக்கு மட்டும் இல்ல முகிலன்… எங்க அம்மாவுக்குமே அவங்களோட அப்பா யாருன்னு தெரியாது…”

“நீ…லா…” அவன் வெளிப்படையாகவே அதிர்ந்தான்.

சிறிதுநேரம் அமைதியாகக் கீழே குனிந்து கொண்டிருந்த நீலா, பிறகு சொன்னாள்…

“நாளைக்கு எனக்கொரு குழந்தைப் பிறந்தால் அதற்கும் அ…ப்… அ…ப்…ப…டி..த்..தான்…” அவள் வாயைக் கைகுட்டையால் மூடிக்கொண்டு விம்மினாள்.

இப்போது அவன் அதிர்ச்சியை வெளிக்காட்டவில்லை. அவளுடைய தாய், பாட்டியைப் பற்றி அவள் சொன்ன செய்தியிலிருந்தே… இது போல் எதையாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தான்.

“கவலைப்படாத நீலா… அப்படியெல்லாம் எதுவும் ஆகாது… நீ தைரியமா எதிர்த்து நின்றால் உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. உன்னால் ஒரு மரியாதையான வாழ்க்கையை வாழமுடியும்…”

“இப்ச்… எல்லாம் கைமீறிவிட்டது முகிலன்…”

“என்ன சொல்ற நீலா…!” இனி எவ்வளவு பெரிய அதிர்ச்சியை அவள் கொடுத்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற முடிவுடன் முழுமையாகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டான்.

“எனக்கு விபரம் தெரியறதுக்கு முன்னாடியே பாட்டி என்னை… என்னை…”

“உன்னை…” அவன் இதயம் வேகமாகத் துடித்தது.

“என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாங்க… முடிஞ்சுப் போச்சு… எல்லாமே… எல்லாமே…” அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். அவளே தொடர்ந்தாள். “விபரம் புரிகிற வரைக்கும் அந்தச் சகதியில்தான் புரண்டு கொண்டிருந்தேன். ஆனால் என்றைக்கு எனக்கு வாழ்க்கையைப் பற்றிப் புரிந்ததோ… அன்றே பாட்டியை எதிர்த்துவிட்டேன்…”

“…………….” அவன் அவள் சொன்ன செய்தியை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தான்.

“முகிலன்… நான் தெரிந்து எந்தத் தவறும் செய்யல… இனி செய்யவும் மாட்டேன். இருந்தாலும் மற்றவங்க என்னைப் பார்க்கும் பார்வை என் மனதைக் குத்திக் கிழிக்குது முகிலன். என்னுடைய பழைய வாழ்க்கை எனக்கே அருவருப்பா இருக்கு…” அவள் உடல் அழுகையில் குலுங்கியது.

அவனுக்கு இப்போதுதான் புரிந்தது… அவன் முதல்நாள் நீலவேணியைப் பார்த்தபோது கோவிலில், மூடிய கண்களில் கண்ணீர் வழிய கடவுளிடம் எதையோ வேண்டிக் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகும் சிலசமயம் அவள் முகம் வேதனையைப் பிரதிபலிக்கும். கேட்டால் எதுமே இல்லை என்று சமாளிப்பாள். ‘இவ்வளவு பெரிய சுமை இவள் மனதில் இருக்கிறதே…!’ அவனுடைய பலநாள் குழப்பத்திற்குக் கிடைத்த விடை அவனை வருத்தியது.

“நீலா… அழாத நீலா… இப்பவும் சொல்றேன்… உன்னை என் ஃபிரண்டுன்னு சொல்லிக்கிறதுக்கு நான் பெருமைப்படறேன்… நீ தெரிந்து எந்தத் தவறும் செய்யல… தவறான வழியில போயிட்டிருக்கோம் என்று தெரிந்தவுடன் உன் வழிய மாத்திக்கிட்டியே… அந்த மனப்பான்மை எனக்குப் பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் நடந்து முடிந்ததை மறந்துவிடு… உன் எதிர்காலம் நல்லவிதமா இருக்கும்…”

“எப்படி முகிலன் சொல்றீங்க… என்னோடு யாரும் சகஜமா பழகமாட்டாங்க… என்னை யாருக்குமே பிடிக்காது… அப்படியிருக்கும் போது… எனக்கு எதிர்காலமா…! அதுவும் நல்லவிதமாக…!” அவள் விரக்தியுடன் சொல்ல, அவன் அவசரமாக இடைபுகுந்தான்…

“எனக்குப் பிடிக்கும் நீலா… உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்… மனசளவுல நீ ரொம்ப நல்ல பொண்ணு நீலா… வருத்தப்படாத…” அவளுக்கு ஆறுதலளிக்க முயன்றான்.

“இப்பவும் உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா முகிலன்…?”

“எப்பவுமே பிடிக்கும் நீலா…” அவன் உறுதியளித்தான்.

அவனுடைய வார்த்தையில் அவள் மகிழ்ந்து போனாள். அவளுடைய மனப்பாரம் இறங்கிவிட்டது. “தேங்க்ஸ் முகிலன்…” என்றபடி புன்னகைத்தாள்

# # #

மதுமதிக்கு வாழ்க்கையே சூன்யமாகிப் போனது. கல்லூரி படிப்பைக் கூட முடித்திடாத அந்த இளம்பெண்ணுக்கு, தன் காதல் முளையிலேயே கருகிவிட்டதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளை விரக்தி ஆட்கொண்டுவிட்டது. குளிப்பது, உண்பது, உறங்குவது போன்ற மனிதனுடைய அன்றாட வேலைகளைக் கூடச் சரிவரச் செய்யமுடியாமல் திணறினாள்.

என்றைக்கு கார்முகிலன் ரத்தம் வழியும் தன் கையை அவளுடைய பிடியிலிருந்து வலுக்கட்டாயமாக உருவிக்கொண்டு போனானோ… அன்றே சிரிப்பை மறந்துவிட்டாள்.

யாரோடும் பேசாமல்… எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல், நாள் முழுக்கச் சூன்யத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பதே அவளுக்கு வழக்கமாகிவிட்டது.

‘காதல் தோல்வி… வாழ்க்கையின் தோல்வி…’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள். இன்னும் கொஞ்சநாள் இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளவும் துணிந்துவிடுவாள் என்று பெற்றோருக்குப் புரிந்தது.

தனிமையில் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த மகளைச் சகஜமாக்க முயன்று தோற்ற கௌசல்யா, தோட்டத்தில் அமர்ந்திருந்த வீரராகவனை நோக்கி வேகமாக வந்தாள்.

“என்னாச்சு என் பொண்ணுக்கு…?” கௌசல்யா ஆவேசமாக வீரராகவனிடம் கேட்டாள்.

அவர் மெளனமாக அமர்ந்திருந்தார்.

“உங்களைத்தான் கேட்கிறேன்… காதில விழல… என்ன ஆச்சு என் பொண்ணுக்கு…? அவ ஏன் இப்படி மரப்பாச்சி பொம்மை மாதிரியிருக்கா…? இப்படி எதுவும் தெரியாதவர் மாதிரி இருந்தே… என் கழுத்தை அறுத்து என்னை நடைபிணமா ஆக்கினது போதாதா…? என் பெண்ணையும் அழிக்கிறதா முடிவு பண்ணிட்டீங்களா…?” கௌசல்யா ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம், எதற்குத் திட்டுகிறோம் என்றே புரியாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லி அவரைக் காயப்படுத்தினாள்.

“கௌசி… விஷயம் தெரியாமல் பேசாத…” அவர் கோபப்படாமல் அமைதியாகச் சொன்னார்.

“எனக்கு விஷயம் தெரியாதுதான்… ஆனால் உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் தானே! சொல்லுங்க… நீங்க அடிக்கடி அவக்கிட்ட ரகசியம் பேசிக்கிட்டு இருப்பதைக் கவனிச்சுட்டுத் தான் கேட்குறேன்… சொல்லித் தொலைங்க…” தாய்ப்பாசத்தில் பதறினாள்.

“கௌசி… நம்ம பொண்ணுக்குக் காதல் வந்துடுச்சு…”

கௌசல்யா குறுக்கிடாமல் வீரராகவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அந்தப் பையனுக்கு இவளைப் பிடிக்கலப் போலருக்கு… அதான்…” அவர் இழுத்தார்.

“யார் அந்தப் பையன்…? விசாரிச்சீங்களா…?” கெளசல்யாவிடமிருந்து அடுத்தக் கேள்வி பறந்தது.

“ம்ம்ம்… அது… நம்ம… நம்ம முகிலன் தான்… ”

“முகிலனா…!” கெளசல்யாவிற்கு அவர் சொன்னதை நம்பவே முடியவில்லை. துக்கம், கோபம், ஆத்திரம், ஆனந்தம் எல்லாம் ஒருசேரத் தாக்க அவள் உடைந்து அழுதாள்.

“கௌசி… அழாத கௌசி… கௌசி ப்ளீஸ்…” அவர் தூரத்தில் நின்றிருந்தபடியே கெஞ்சினார். அருகில் சென்று மனைவியைத் தொட்டு அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தாலும், அதை அவர் செய்யவில்லை. அவருக்கு கௌசல்யாவைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருந்ததால், அவளை நெருங்கத் துணியவில்லை.

அழுதழுது சோர்ந்த கௌசல்யா, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வீரராகவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“அவனுக்கு மதுவைப் பிடிக்கலையா…? இல்ல வீரராகவன் கெளசல்யாவோட மகளைப் பிடிக்கலையா…?” என்றாள்.

அவர் தலைகுனிந்தார். “என்னை மதுவோடு பார்த்ததற்குப் பிறகுதான் அவளிடமிருந்து விலகிவிட்டான்…” என்றார் குரலே எழும்பாமல்.

“அன்றைக்கு ஒரே ஒருநாள் நான் சொன்னதை நீங்க கேட்டிருந்தால், இன்று என் மகள் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும்…” என்றாள். அவருடைய மனமும் அதைச் சொல்லித்தான் அவரைக் குத்திக் கொண்டிருந்தது.

“சரி… மதுவின் பிரச்சனைக்கு மூலக்காரணம் நீங்கதான். நீங்க என்ன செய்வீங்களோ… எப்படிச் செய்வீங்களோ… எனக்குத் தெரியாது… அவன் கையைக் காலைப் பிடித்தாவது என் பொண்ணோட வாழ்க்கையை மலர வைங்க… உங்களுக்குப் புண்ணியமா போகும்…” அவள் கையெடுத்துக் கும்பிட்டபடி சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

கௌசல்யா சொல்லிவிட்டுச் சென்றதை சாதிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. எந்தவித எதிர்பார்ப்புமே இல்லாமலே பலவருடங்களுக்கு முன்னரே அவனிடம் பலமுறை சமாதானத்திற்குச் சென்று மூக்குடைபட்டுத் திரும்பியிருக்கிறார். இப்போது ‘என் பெண்ணைத் திருமணம் செய்துகொள்…’ என்று கெஞ்சி அவன் காலில் விழுந்தால், அவன் எட்டித்தான் உதைப்பான் என்பது தெரிந்திருந்தும் அவன் காலில் விழத் தயாராகிவிட்டார். மகளைக் காப்பாற்ற வேண்டும் என்றால் மானம் மரியாதை எல்லாம் உடைப்பில் போட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற முடிவிற்கு வந்துவிட்டார்.




Comments are closed here.

You cannot copy content of this page