Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 14

அத்தியாயம் – 14

“வணக்கம் சார்… எப்படி இருக்கீங்க…?” என்றபடி உள்ளே வந்தார் வீரராகவன்.

“வாங்க சார்… நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க…? உட்காருங்க…” என்று உபசரித்தார் தர்மராஜ்.

“இருக்கேன் சார்… முகிலன் எப்படி இருக்கான்…?”

“அவனுக்கு என்ன சார்… ராஜா மாதிரி இருக்கான்… ஹாஸ்பிட்டல் எப்படி சார் போகுது…?” என்று தர்மராஜ் பொதுப்படையாகப் பேச்சை ஆரம்பிக்க, சிறிதுநேர பேச்சிற்குப் பிறகு விஷயத்திற்கு வந்தார் வீரராகவன்.

“நான் போன்ல சொன்னதைப் பற்றி யோசிச்சீங்களா சார்…?”

“யோசிச்சேன் சார்… உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லன்னு சொல்றீங்க… அப்புறம் எதுக்கு இந்தக் கல்யாணம் நடக்கணும்னு சொல்றீங்க…? அதுதான் எனக்குக் குழப்பமா இருக்கு…”

“மது என்னோட பொண்ணு… இந்தவொரு காரணத்தைப் பிடிச்சுக்கிட்டு முகிலன் என்னைப் பழிவாங்கறதா நினைத்து, என் மகளைக் கஷ்டப்படுத்தி விட்டான்னா என்னாலத் தாங்க முடியாது… அதனாலதான் யோசிச்சேன்…”

அவர் சொல்வது போலவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த தர்மராஜ் அமைதியாக இருந்தார்.

வீரராகவன் தொடர்ந்தார் “ஆனா எனக்கு இப்போ வேற வழியே இல்ல சார்… மது மனசுக்குள்ள கஷ்டப்பட்டு நொந்து போறா… கௌசியும் மதுவுக்குதான் சாதகமாப் பேசுறா… மது விரும்கிறபடி கல்யாணம் நடந்தால்தான் வீட்டில் ஓரளவாவது நிம்மதி இருக்கும்… அதன்பிறகு வர்ற பிரச்னையைச் சமாளிக்க வேண்டியதுதான்.”

“கவலைப்படாதீங்க சார்… எல்லாம் நல்லபடியா நடக்கும்…”

“அப்படிச் சொல்ல முடியாது சார்… முகிலன் கல்யாணத்துக்குச் சம்மதிக்கணுமே…”

“ம்ம்ம்… பேசிப் பார்க்கலாம் சார்…”

“நீங்கதான் சார் எடுத்துச் சொல்லி… அவனைச் சம்மதிக்க வைக்கணும்…” என்று வீரராகவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்முகிலன் உள்ளே நுழைந்தான்.

அவன் முகம் வீரராகவனைப் பார்த்ததும் கடுத்தாலும், காட்டிக் கொள்ளாமல் அவன் தங்கியிருக்கும் அறைக்குள் சென்றான். தர்மராஜ் வீரராகவனிடம் கண்ணால் சைகைக் காட்டிவிட்டு கார்முகிலனைத் தொடர்ந்து சென்றார். அவரால் இப்போது சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க முடிந்தது.

கார்முகிலனிடம் தர்மராஜ் என்ன பேசினாரோ… பத்துநிமிடம் கழித்து அவன் அறையிலிருந்து வெளியே வரும் போது அவனுடைய முகத்தில் கடுமை காணாமல் போய் ஒருவித தீவிரம் வந்திருந்தது. தர்மராஜ்ஜின் கையைப் பிடித்து அழைத்து வந்தவன், அவரை ஒரு சோபாவில் வசதியாக அமர வைத்துவிட்டு… மற்றொரு சோபாவில் வீரராகவனுக்கு எதிரில் அமர்ந்தான்.

“சொல்லுங்க… என்னைத்தான் பார்க்க வந்திருக்கீங்களாம்… என்ன விஷயம்…?” என்றான் வீரராகவனை நேருக்குநேர் பார்த்து.

ஒருநொடி தயங்கியவர் “எப்படி இருக்க முகிலா…?” என்றார்.

அவருடைய கேள்வியில் அவன் மனம் உள்ளுக்குள் கொதித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “நல்லா இருக்கேன்…” என்று பதில் சொன்னான்.

அவன் கோபப்பட்டுக் கத்துவான், கண்டபடித் திட்டுவான், முகத்தைத் திருப்பிக் கொண்டு போவான் என்றெல்லாம் எதிர்பார்த்து அமர்ந்திருந்தவருக்கு, அவன் அவருக்கு முன் வந்தமர்ந்து அமர்த்தலாகப் பேச ஆரம்பித்ததே வியப்பாக இருந்தது. அதிலும் அவருடைய கேள்விக்கு அவன் அமைதியாகப் பதில் சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.

“முகிலா… நம்ப மது கல்யாணத்த பற்றிப் பேசத்தான் இங்க வந்தேன்…”

“ஓ…ஹோ…” அவன் போட்ட ‘ஓஹோ’ அவரை எகத்தாளம் செய்தது.

அதை ஜீரணிக்கச் சிலநொடி அமைதியாக இருந்தவர், பிறகு பேச்சை ஆரம்பித்தார்…

“நீ விருப்பப்பட்டா அவளை உனக்கே கல்யாணம் செய்து கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்…” என்று அவனிடம் சொல்ல வந்ததை ஒருவழியாகச் சொல்லி முடித்தார்.

“நான் ஒரு அனாதை… உங்க அளவு பாரம்பரியமோ… பணவசதியோ… இல்லாதவன். படிப்புக்கூட ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன். ஆனா உங்களவுக்கு இல்ல. அப்படியிருக்கும் போது… நீங்க என்னைத் தேடி வந்து பொண்ணுக் கொடுக்கக் காத்திருப்பது ஆச்சர்யமா இருக்கே…!” என்றான் வியந்த குரலில்.

“முகிலா… என்னடா…!” என்றார் தர்மராஜ் அவன் பேசியதை ஆட்சேபிப்பவர் போல…

அவன் அவரைத் திரும்பியும் பார்க்காமல் வீரராகவனின் கண்களை நேருக்குநேர் பார்த்துப் பேசினான். “சொல்லுங்க சார்… என்ன விஷயம்…?”

அவர் தடுமாறினார்… “உன் அக்கா விருப்படறா… எனக்குக் கூட…” என்று சொல்லிக் கொண்டிருந்தவரை அவனுடைய குரல் தடுத்தது.

“என் அக்காவா…!” என்று ஆச்சர்யமாகக் கேட்டவன் “நான் ஒரு அனாதை சார்… எனக்கு அக்கா… சொக்காவெல்லாம் யாரும் கிடையாது…” என்றான்.

“முகிலா… பழச மறந்து தொலைடா… இன்னும் எத்தனை நாள்தான் இந்தப் பாட்டையே பாடிக்கிட்டு இருப்ப…?” என்றார் தர்மராஜ் எரிச்சலாக.

அவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளச் சிரமப்படுகிறான் என்பது அவனுடைய முஷ்டியும் தாடையும் இறுகுவதிலிருந்து தெரிந்தது. அங்குக் கனமான அமைதி நிலவியது…

தர்மராஜ் தான் அமைதியைக் களைந்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்…

“முகிலா… பழசையே நினைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லைடா… நடந்தது நடந்து போச்சு. அந்தமாதிரி நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. நடந்து முடிந்த விஷயத்தால கௌசல்யாவும் நிம்மதியா இல்ல… இவரும் நிம்மதியா இல்ல. நீயும் நிம்மதியா இல்ல… உங்களால மதுமதிக்கும் நிம்மதி இல்ல. உங்க எல்லோருடைய நிம்மதியையுமே உன் ஒருத்தனோட மன்னிப்பு மீட்டுக் கொடுத்துடும்டா… இளம்வயசுல பண்ணின தப்புக்காக இவர் இன்னமும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காரு. அதேமாதிரி நீயும், இப்ப தப்புப் பண்ணிவிட்டு பின்னாடி வருத்தப்படாத… அவசரப்படாம நிதானமா யோசி… யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு…” என்று அறிவுரைக் கூறினார்.

அவன் அமைதியாக இருந்தான், மனம் சமாதானமடைய மறுத்தது. தன் எதிரில் அமர்ந்திருக்கும் ஆளை எப்படியாவது பலமாகக் காயப்படுத்த வேண்டும் என்று மனம் துடித்தது. கண்களை மூடி யோசித்தான். சில நிமிடங்கள் தான்… உடனே கண்களைத் திறந்து வீரராகவனைப் பார்த்துச் சொன்னான்

“எனக்குக் கல்யாணத்தில் சம்மதம்… ஆனால் கல்யாணம் அடுத்த வாரமே… ஆடம்பரம் சிறிதும் இல்லாமல் நடக்கவேண்டும்…” என்றான்.

“அடுத்த வாரமேவா…!” என்று பெரியவர்கள் இருவரும் வியந்தார்கள். தர்மராஜ் மகிழ்ச்சியுடன் புன்னகைக்க, வீரராகவன் அவனைச் சந்தேகமாகப் பார்த்தார்.

“முகிலா… மது பாவம்… உன்னையே உயிரா நினைக்கிறா… என்மேல் இருக்கும் கோபத்தில் அவளைக் காயப்படுத்திவிடாதே… ப்ளீஸ்…” என்றபடி தழுதழுத்தார்.

“என்மேல நம்பிக்கை இல்லன்னா எதுக்கு என்னைத் தேடி வரணும்…?” என்றான் கடுப்பாக.

“இல்ல… அப்படியில்ல… சரி விடு… தெரியாமல் சொல்லிவிட்டேன்…” என்று பின்வாங்கினார் வீரராகவன்.

அவனுக்கு அவர் அப்படி சட்டெனப் பின்வாங்கியது உவப்பாக இருந்தது. ‘இனி உனக்கு வாழ்க்கை முழுக்க இந்தப் பயம் இருக்கணும்யா…’ என்று நினைத்துக் கொண்டான்.

“அது என்னடா… ஒரு வாரத்திலேயே கல்யாணம்… பார்க்கிறவன் என்ன சொல்வான்…?” என்றார் தர்மராஜ்.

“என்ன சொல்வான்…?” என்று அவரையே திருப்பிக் கேட்டான் கார்முகிலன்.

“‘அவசரக் கல்யாணம் பண்றாங்களே… என்னவா இருக்கும்…! கல்யாணச் செலவுக்குப் பயந்து கஞ்சத்தனம் பண்றாங்களோ…’ அப்படி இப்படின்னு வாய்க்கு வந்ததைப் பேசுவாங்கடா… ஒரு மாசம் டைம் குடுத்தன்னா விமர்சையா பண்ணலாமேடா…” என்றார் அவனுடைய மனம் புரியாமல் அப்பாவியாக.

‘இந்த ஆளைக் கண்டவனும் கண்டபடி கேள்விக் கேட்கட்டும்…’ என்று மனதிற்குள் குரூரமாக நினைத்தவன்

“என் விருப்பத்தைச் சொல்லிவிட்டேன் சார்… அதை மதிக்கிறதும் மதிக்காததும் இவரோட விருப்பம்…” என்று சொல்லிவிட்டுச் சட்டென உள்ளே எழுந்து சென்றுவிட்டான்.

வீரராகவன் அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார். அடுத்த வாரத்தில் இருந்த ஒரு நல்லநாளைத் திருமணத்திற்குக் குறித்து விட்டுதான் அங்கிருந்து சென்றார்.

கார்முகிலனை முழுமையாக வீரராகவனால் நம்பமுடியவில்லை. கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவானோ என்கிற பயம் அவரை ஆட்கொண்டது.

கார்முகிலனோடு திருமணம் நடக்கப் போகிறது என்கிற செய்தி கட்டாயம் மதுமதியைப் பழையபடி கலகலப்பாக்கிவிடும். ஆனால் ஏதாவது காரணத்தால் இந்தத் திருமணம் தடைபட்டால்… ‘ஐயையோ…’ அவரால் மகளின் நிலமையை நினைக்கக் கூட முடியவில்லை.

கார்முகிலன் எதிர்ப்பே தெரிவிக்காமல் திருமணத்திற்குச் சம்மதித்தது அவரது வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒருவித பீதியுடன் திருமண வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் பயத்தை மெய்யாக்குவது போல கார்முகிலனும் அவரைத் திருமணத்தன்று ஒரு கலக்குக் கலக்கத் தயாராக இருந்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page