Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 17
4771
0
அத்தியாயம் – 17
வீரராகவன் தந்தையிடம் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தபோது… அவரது சிரமத்தைக் குறைப்பது போல் பெரியவரே பேச்சை ஆரம்பித்தார்.
“என்னப்பா… கொஞ்சநாளா உன் முகமே சரியில்லையே… உனக்கும் உன் மனைவிக்கும் என்ன பிரச்சனை…?”
தந்தையின் நேரடித் தாக்குதலில் கொஞ்சம் தடுமாறினாலும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விபரத்தைச் சொல்லிவிட்டார்.
“என்னடா இது… பெண்ணை உன் தலையில் கட்டிவிட்டது பத்தாது என்று குடும்பமே உன்மேல ஏறி சவாரிச் செய்யப் பார்க்குதே…!” என்றார் பெரியவர் எரிச்சலாக.
“அப்பா… அவங்க நிலத்தை நான்தான் விற்றேன்… வீட்டைக் கூட அடமானம் வைத்துவிட்டேன்…” என்று உண்மையை ஒத்துக் கொண்டார்.
“அப்படியா…! ராகவா… நீ செஞ்சது தப்புடா. மாமியார் வீட்டு நிலத்துல கை வச்சிருக்கக் கூடாது… போனது போகட்டும்… நீ விற்ற நிலத்துக்கு ஈடா கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிடு… மத்தபடி மாசாமாசம் அவங்கள நீ தூக்கிச் சுமக்கிறது எல்லாம் சரியா வராது…”
“சரிப்பா…”
“எவ்வளவு கொடுக்கலாம் என்று நான் பிறகு சொல்றேன்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற பெரியவர், மனைவியைத் தனியாக அழைத்துப் பேசினார்.
“இதெல்லாம் ரொம்ப அநியாயங்க… இவ கஞ்ச புத்திய காமிக்கிறா பார்த்தீங்களா…! நம்ம மகன் இவ அம்மாகிட்ட பணம் வாங்கிட்டான்னு… அவனை இப்படிப் படுத்துறாளே. இவளுக்கு என்ன செஞ்சாங்க அவங்க வீட்டுல…?” என்று மருமகள் மீது இருக்கும் காட்டத்தைக் கணவரிடம் கொட்டித் தீர்த்தார்.
“அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல ரஞ்சிதம்…”
“சரிதாங்க… இவளை ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்ட என் பையன் நிம்மதியா இருந்தா பரவால்ல… இப்படித் தினமும் அவனைக் கொத்தித் திங்கறாளே…”
“அதுக்குதான் முடிவு கட்டணும்…”
“என்னத்த முடிவு கட்டறது… குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்… அந்தப் பிச்சைக்காரக் கூட்டத்துக் காசை ஒரு பைசா இல்லாமல் விட்டெறிங்க…”
பெற்றவர்கள் இருவரும் பேசி வீரராகவன் நிலத்தை எவ்வளவுக்கு விற்றாரோ, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்தார்கள். ஆனால் பணம் கையில் இல்லை…
“ரஞ்சிதம்… உன்னோட நகைகளைக் கொடு… அவங்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்…”
“என்னங்க… விளையாடறீங்களா…? அதெல்லாம் நான் கொடுக்க மாட்டேன். அதுதான் வாங்கினப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப்போறோமே… என்ன அவசரம்… மெதுவாக் கொடுத்துக்கலாம்…”
“அவங்க கஷ்டப்படறதா அந்தப் பொண்ணு சொல்லுது போலருக்கு…”
“அவ சும்மா சொல்லுவா… அவங்க அம்மாவோட பணம் நம்மகிட்ட இருக்கறது அவளுக்குப் பொறுக்கல.. அதான் எதையாவது சொல்லி வம்பு பண்ணிக்கிட்டு இருக்கா… இவ அங்க போயிட்டு வந்தாலே பிரச்சனைக் கிளம்பிடுது… பேசாம இவள அங்க போகவே கூடாதுன்னு சொல்லிட வேண்டியதுதான்…”
“ஆமாம்… அதுக்கும் ஒரு சண்டையைக் கிளப்பாத… பேசாம இரு…”
“ஆமாம்… நான்தான் பிரச்னையை ஆரம்பிக்கிறேன்… ஏங்க நீங்க வேற..” என்று ரஞ்சிதம் அலுத்துக் கொண்டார்.
பணத்தைத் திருப்பிக் கொடுப்பது என்று முடிவு செய்தவர்களால் உடனே கொடுக்க முடியவில்லை. ஒருவருடம் இழுத்தடித்தார்கள். ஒருவருடம் கழிந்தும் ரஞ்சிதத்தின் நகையை வைத்துதான் பணத்தைப் புரட்டினார்கள். அதில் ரஞ்சிதத்திற்குப் பயங்கரக் கோபம். அந்தக் கோபத்தை கௌசல்யாவின் தாயிடம் காட்டிவிட வேண்டும் என்கிற வேகத்தில், அனைவரையும் எப்படியோ சரிகட்டி… தானே பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சாக்கில் லக்ஷ்மிபுரத்திற்குச் சென்றார்.
தன்னுடைய நகை பணமாக மாறி கௌசல்யாவின் தாய் பர்வதத்தின் கைக்குப் போகிறது என்பதைப் பொறுக்கமுடியாத ரஞ்சிதம், பர்வதத்தைக் கண்டபடி பேசிவிட்டார். அதைப் பர்வதம் பொறுத்துக் கொண்டாலும் அருகிலிருந்த பதினைந்து வயது நிரம்பிய கார்முகிலனால் பொறுக்க முடியவில்லை. அவன் ரஞ்சிதத்தை எதிர்த்தான்.
“இங்க பாருங்க… என்ன ரொம்ப ஓவரா பேசுறீங்க…? யாருங்க உங்ககிட்ட பணம் கேட்டது… நாங்க கேட்டோமா…?”
“நீ கேட்கலப்பா.. ஆனா உன்னோட அக்கா, அங்க உட்கார்ந்துக்கிட்டு என் பையனைப் போட்டுத் துவைக்கிறாளே… அதிலேயும் உங்க வீட்டுக்கு வந்துட்டு வந்தான்னா… அடுத்த ஒரு மாசத்துக்கு, எங்க வீட்டு நிம்மதியைக் கெடுத்துடுவா. இதெல்லாம் உங்க அம்மா சொல்லிக் கொடுக்காமல்தான் நடந்ததாக்கும்…” ரஞ்சிதம் நொடித்துக் கொள்ள, அவன் பொறுமை இழந்துவிட்டான்.
“சரி… பணத்தைக் கொண்டு வந்துட்டீங்கல்ல… இப்ப நான் சொல்றேன்… இந்தப் பணத்தை நான் என் அக்காவுக்குக் கொடுக்குறேன். அதுக்கு நாங்க எதுவும் செய்யல, பண்ணலன்னு சொல்லி… இனி தொந்தரவு பண்ணாதீங்க. இப்போ கிளம்புங்க…” என்றான் கடுப்பாக.
“என்னது… என்ன… என்ன சொன்ன நீ…!” என்று கோபத்தில் மேல்மூச்சு வாங்க கண்களை உருட்டி, குரலை உயர்த்திக் கேட்ட ரஞ்சிதத்தை துச்சமாகப் பார்த்தவன்,
“என்ன புரியலையா…! பணத்தை எடுத்துக்கிட்டு இடத்தைக் காலிப் பண்ணுங்கன்னு சொன்னேன்…” என்று எடுத்தெறிந்து பேசினான்.
“ஏய்… என்னடா நீ… பெரியவங்ககிட்ட மரியாதை இல்லாமல் பேசிக்கிட்டு…” என்று பர்வதம் அதட்டினாலும், அவன் ரஞ்சிதத்தை முறைத்தபடிதான் நின்றான்.
“அம்மா… நீங்க தப்பா எடுத்துக்காதீங்க… அவன் சின்னப் பையன்… விபரம் புரியாமல் பேசுறான்…” என்று பர்வதம் பதறினார்.
ஆனால் கார்முகிலன் பேசிய வார்த்தைகளை ரஞ்சிதத்தால் ஜீரணிக்க முடியவில்லை.
அவனுக்கு வயது பதினைந்துதான் என்றாலும் ஆள் பார்க்க வாட்டசாட்டமாக இருப்பதால், அவன் பேசியதைச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசிவிட்டான் என்று நினைத்து மனதைச் சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை.
எரிமலையை உள்ளடக்கியபடி வீட்டிற்கு வந்த ரஞ்சிதம், கையில் வைத்திருந்த மஞ்சள் பையை ஒருபக்கம் விட்டெறிய அதிலிருந்து பணம் சிதறியது. வீட்டிலிருந்த அனைவரும் ரஞ்சிதத்தின் செயலை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
“ரஞ்சிதம்… என்னன்னு சொல்லு… சொன்னாதானே தெரியும்…” என்று கேட்ட கணவருக்கும், “என்னம்மா…? என்ன ஆச்சு…?” “என்ன ஆச்சு அத்த…?” என்று பதறிய மகனுக்கும் மருமகளுக்கும் லக்ஷ்மிபுரத்தில் நடந்ததை விளக்கிய ரஞ்சிதம், அநாகரிகமாக பர்வதத்தைத் தான் ஏசியதை மட்டும் மறைத்துவிட்டார்.
ரஞ்சிதத்தின் வாக்குமூலப்படி தவறு முழுக்க கார்முகிலன் மீதும், அவனைக் கண்டிக்காத பர்வதத்தின் மீதும்தான் இருந்தது. அதைக்கேட்ட தந்தையும் மகனும் கொதித்துப் போனார்கள். நல்லவேளை… அவர்களுடைய கோபம் கௌசல்யாவின் பக்கம் திரும்பவில்லை. ஆனால் அவள் லட்சுமிபுரம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
அவர்களின் கோபத்திற்கு கௌசல்யா மதிப்புக் கொடுத்தாள். காரணம்… அவளுக்குமே ‘இந்த முகிலன் ஏன் இப்படிப் பேசித் தொலைத்தான்…’ என்கிற எண்ணம் தான் இருந்தது.
கார்முகிலனுக்குக் கோபம் வரும்பொழுது, மூளை வேலை செய்யாமல் போய்விடுவதும், அதனால் அவன் சிலசமயம் இதுபோல் எதையாவது பேசி வைப்பதும் வழக்கம்தான் என்பதால் கௌசல்யாவின் கோபமும் கார்முகிலனின் மீதுதான் முழுமையாகத் திரும்பியது. அதோடு கெளசல்யாவிற்குத் தெரிந்து, ரஞ்சிதமும் பெரிய வில்லத்தனமெல்லாம் செய்யக்கூடிய பெண்ணில்லை என்பதால் ரஞ்சிதத்தின் மீது கெளசல்யாவிற்கு சிறிதும் சந்தேகம் வரவில்லை…
கௌசல்யா பிறந்த வீட்டிற்குச் செல்லாமல் இருந்தாலும், பாசம் விட்டுப் போகவில்லை. அவள் மாமியார் வீட்டிற்கும் தன் பிறந்த வீட்டிற்கும் சுமூகமான உறவை ஏற்படுத்த பலமுறை முயன்று பார்த்தாள். ஆனால் அவள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போதும் வீரராகவனின் கோபம் அதிகமாகுமே தவிர… அவள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
ஒருவர் கோபமாக இருக்கும்பொழுது மற்றொருவர் தழைந்து போவதுதானே தாம்பத்தியம். கௌசல்யாவும் விட்டுக்கொடுத்தபடி நல்லதோர் சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் வருவதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.
# # #
கார்முகிலன், பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவனாக வந்தான். அவனோடு படித்த மாணவர்கள் எல்லாம் நல்ல கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள்.
“முகிலா… இப்படியே உட்கார்ந்திருந்தால் கதை நடக்காதுடா…”
“என்னம்மா செய்யச் சொல்ற…? நானும் தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் கேட்டுப் பார்த்துட்டேன்… ஒண்ணும் நடக்கலையே…”
“யோசிக்காதடா… அத்தானைப் போய்ப் பாரு… அவர் உன் படிப்புக்கு உதவி செய்வாரு…”
“என்னால முடியாதும்மா… அந்த அம்மா அங்க இருக்கும்… அது கண்டபடிப் பேசும்…”
“அன்னைக்கு உன் மேலதாண்டா தப்பு… நீதான் இறங்கிப் போகணும்…”
“சும்மா இரும்மா… நான் என்ன தப்புப் பண்ணினேன். அவங்க உன்னைக் கண்டபடி பேசலையா…? அதனாலதானே நானும் பேசினேன்… என்னாலயெல்லாம் இறங்கிப் போக முடியாது…” என்றான் திட்டவட்டமாக.
‘இவன் பிடிவாதத்தை மாத்தவே முடியாதே…!’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்ட பர்வதம், ஒரு ஐடியா செய்தார்.
“முகிலா… நீ அந்த அம்மாகிட்ட இறங்கிப் போக வேண்டாம்… அவங்கள விட்டுத் தள்ளு… நீ போயி அத்தானை ஆஸ்பத்திரில பார்த்துப் பேசு… அவர் ரொம்ப நல்லவர்… நியாயமானவர்… அவங்க அம்மா மேல் இருக்கும் தப்பு அவருக்குப் புரிந்திருக்கும். அதனால உனக்கு அவர் கட்டாயம் படிக்க உதவி செய்வார்…” என்று கார்முகிலனைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்த நல்லவர்… நியாயமானவர்… கார்முகிலனிடம் வேறுவிதமாக நடந்துகொண்டார். உதவி என்று கேட்க வந்தவனை அவமானப்படுத்தினார்.
“எங்க வந்த…? அன்னிக்கு என் அம்மாவை வெளியே போ என்று சொல்லி விரட்டிவிட்டியாம்…! அவ்வளவு பெரிய சண்டியரா நீ…? இப்ப எதுக்கு இங்க வந்த…? ஓஹோ… இந்த வருஷம் காலேஜுல சேரணும் இல்ல…! காரியம் ஆகணும் என்றதும் காலைப் பிடிக்க வந்துட்டியோ…!” அவர் நக்கலாக கேட்க, பக்கத்திலிருந்த செவிலிய பெண் அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க… அவன் இறுகிப்போனான்.
“காசு… கீசு… கேட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல் பக்கமோ… வீட்டுப் பக்கமோ வந்த… அப்புறம் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்… மரியாதையா வெளிய போய்டு…” என்று கோபத்தில் கத்திவிட்டார்.
கார்முகிலனுக்கோ இளரத்தம்… ரோஷமும், வீம்பும் அதிகம்… அவன் பட்ட அவமானம் அவனை வேறுவிதமாக முடிவெடுக்க வைத்தது.
Comments are closed here.