Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 18
4728
0
அத்தியாயம் – 18
வீரராகவன் உதவி கேட்டுச் சென்ற கார்முகிலனின் மூக்கை உடைத்து அனுப்பிவிட்டார். அந்தக் காயம் அவன் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அவன் முன்பின் யோசிக்காமல்…
‘இனி படிப்புக்காக எவன்கிட்டயும் கையேந்தி நிற்கக் கூடாது…’ என்று முடிவு செய்தான். அவனைக் கல்லூரியில் சேர்க்க பர்வதத்திற்கு என்ன முயன்றும் வெளியில் பணம் புரட்ட முடியவில்லை. கடைசியில் அவன் ஒரு மெக்கானிக் கடையில் உதவியாளாகச் சேர்ந்துவிட்டான்.
நன்றாகப் படிக்கக்கூடிய மகனைப் படிக்க வைக்க முடியாத வருத்தம், மகளைப் பார்க்க முடியாத ஏக்கம்… மாப்பிள்ளையின் கோபத்திற்கு ஆளாகிவிட்ட தவிப்பு… இவையெல்லாம் பர்வதத்தை அமைதியிழக்கச் செய்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டது… உயிருக்கு ஆபத்து என்று அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
கார்முகிலன் பயந்தான்… தனிமையில் அழுதான்… தாயை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவித்தான்… ஆனால் வழி கிடைக்கவில்லை…
அப்போது அவனுடைய நண்பன் ஒருவன் சொன்னான்… “என்னடா முகிலா… சொந்த அத்தான் பெரிய டாக்டர்… பெரிய ஆஸ்பத்திரி வச்சிருக்காரு. ஆனா… உங்க அம்மா இந்த கவர்மெண்ட் ஆஸ்பத்திரில உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காங்க… விசித்திரமா இருக்குடா…”
கார்முகிலனுக்கு அவனுடைய வார்த்தையில் ஒரு பலம் கிடைத்தது, அவன் திரும்ப நண்பனின் வார்த்தையைத் தனக்குள் சொல்லிப் பார்த்தான்…
‘சொந்த அத்தான் பெரிய டாக்டர்… பெரிய ஆஸ்பத்திரி வச்சிருக்கார்…’
‘ஒருவேளை அத்தானுக்குத் தெரிந்தால் அம்மாவைக் காப்பாற்றுவாரோ…!’ என்கிற கேள்வி பிறந்தது. ‘நிச்சயமாகக் காப்பாற்றுவார்…’ என்று அவன் மனம் பதில் சொன்னது.
தாயை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற எண்ணம் உந்த… மான ரோஷத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, காம்காபட்டியிலிருக்கும் தன் அக்காவின் வீட்டிற்குச் சென்றான். அந்த நேரம் வீரராகவன் வீட்டில் இல்லை. வீட்டிலிருந்த பெரியவர்களும் அவன் வரவைக் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டதால், அவன் கௌசல்யாவைப் பார்த்துப் பேச முடிந்தது.
நீண்ட நாள் தமக்கையைப் பிரிந்திருந்த ஏக்கமும், தாயின் உடல்நிலையால் ஏற்பட்ட அச்சமும் அவனைப் பலவீனமாக்க… அவன் கௌசல்யாவைப் பார்த்ததும் அவள் கையைப் பிடித்துக் கொண்டு அழுதுவிட்டான்.
தம்பியைப் பார்த்த சந்தோஷத்தில் கௌசல்யாவிற்கும் கண்களில் நீர் நிறைந்தது.
“அக்கா… அக்கா…” அவன் தவித்தான்…
அவன் தவிப்பைச் சிலநொடிகளில் புரிந்து கொண்டுவிட்ட கௌசல்யா கேட்டாள்…
“என்னடா தம்பி… சொல்லு… என்ன ஆச்சு…?”
“அக்கா… அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைக்கா…”
“ஐயையோ… என்ன ஆச்சு அம்மாவுக்கு…?”
“இப்ச்… சரியா புரியல… என்னென்னவோ சொல்றாங்க… நீ வந்து பாருக்கா.. அத்தானையும் கூட்டிகிட்டு வர்றயா…? எனக்கு ரொம்பப் பயமா இருக்குக்கா…”
“நான் நிச்சயமா வர்றேண்டா… அம்மாவுக்கு எதுவும் ஆகாது. நீ பயப்படாத… இப்ப ஏதாவது சாப்பிடு…”
“அதெல்லாம் எதுவும் வேண்டாம்… அம்மா தனியா இருப்பாங்க… நான் கிளம்புறேன். நீ மறக்காம அத்தான் வீட்டுக்கு வந்ததும்… உடனே கிளம்பி வந்து பாருக்கா… அம்மாவோட உயிரே உன் கையிலயும், அத்தான் கையிலயும் தான் இருக்கு… அம்மாவை அத்தானோட ஹாஸ்பிட்டலுக்கு மாத்தி நல்லா வைத்தியம் செஞ்சா எதுவும் ஆகாதுன்னு நினைக்கிறேன்… ஆனா அத்தானை நீதான் எப்படியாவது சமாதானம் செஞ்சு கூட்டிக்கிட்டு வரணும்… ப்ளீஸ்க்கா”
“ச்சீ… என்னடா ப்ளீஸ் அது இதுன்னு… அது சரி… நீ ஏன் முதலிலேயே எனக்குத் தகவல் சொல்லல…?”
“அது வந்து… அக்கா… இங்க… அவங்க…” என்று தடுமாறினான்.
“சரி… சரி விடு… இப்பவாவது சொல்லனுன்னு தோணிச்சே…” அவள் தம்பியைச் சங்கடப்படுத்தாமல் அந்தப் பேச்சை வெட்டிவிட்டாள்
“நான் கிளம்புறேன்..கா… நீ மறக்காம வந்துடு…”
“சரிடா… சாயங்காலம் நாங்க கண்டிப்பா வந்துடறோம்… நீ பயப்படாம இரு…”
“மறந்துடாதக்கா… மறந்துடாத…” என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுச் சென்றான்.
என்னதான் தம்பிக்குத் தைரியம் சொல்லி அனுப்பிவிட்டாலும் அவளுக்குள் பயம் துளிர்விட்டது. அவள் நிலைக்கொள்ளாமல் தவித்தபடி கணவனின் வரவுக்காக காத்திருந்தாள்.
# # #
“என்னங்க… முகிலன் வந்திருந்தான்…” கௌசல்யா வீரராகவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.
பிரச்சனை நடந்து முழுதாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டதால், வீரராகவனுக்கு ஆரம்பத்தில் இருந்த கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது. அதனால் கொஞ்சம் அமைதியாகவும், கொஞ்சம் முகத்தைச் சுளித்துக் கொண்டும் ஒரு வித்தியாசமான ரியாக்க்ஷன் கொடுத்தபடி கேட்டார் “என்னவாம்…? எதுக்கு இங்க வந்தான்…?”
கௌசல்யா கலங்கிவிட்ட விழிகளுடன் விளக்கம் சொன்னாள். அவருக்கும் பதட்டம் வந்தது…
“என்னவாம்… ஏதாவது விபரம் சொன்னானா…?”
“அவனுக்கு எதுவும் தெரியலங்க…”
“சரி சரி… பயப்படாத… ஒண்ணும் இருக்காது… நாம போய்ப் பார்க்கலாம்…” என்று ஆறுதல் சொன்னவர், தந்தையைத் தேடிப் போனார்.
அங்குத் தாயும் இருந்ததால் இருவரிடமும் விபரம் சொன்னார். இருவருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
“ஓஹோ… அப்படியா…?” என்று கேட்டதோடு சரி.
“சரிப்பா… நான் கௌசல்யாவைக் கூட்டிட்டுப் போய்ப் பார்த்துட்டு வர்றேன்.. அப்படியே அவங்களை நம்ம ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிடறேன்.” என்றார்.
“சரி… சரி…” என்றார் தந்தை அலட்சியமாக.
“ராகவா… நீ அந்த அம்மாவைப் போய்ப் பார்க்கிறது இருக்கட்டும்… முதல்ல குடும்பத்தோட திருப்பதிக்குப் போய் ஏழுமலையானைத் தரிசிச்சிட்டு வா…” என்றார் ரஞ்சிதம்.
“அதுக்கு இப்ப என்னம்மா அவசரம்…?”
“அவசரம்தான்… பிரிஞ்ச உறவு ஒண்ணு சேரப்போகுது… இனிமேலாவது பிரச்சனை வராமல் இருக்கணும்… கிளம்பு..” என்றார்.
“அவங்க இருக்கிற ஹாஸ்பிட்டல்ல சரியான சிகிச்சை கிடைக்காதும்மா… நான் இன்னக்கே போய்ப் பார்க்கணும்…” என்றார் பிடிவாதமாக.
“அப்பா போய்ப் பார்த்து அவங்களை நம்ம ஆஸ்பத்திரிக்கு மாத்தட்டும்… நீ கோவிலுக்குக் கிளம்புற வழியைப் பாரு…” என்று சொல்லிவிட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த வீரராகவனை “முதல்ல தான் என் சொல்பேச்சுக் கேட்காமல் உன் இஷ்டத்துக்குக் கல்யாணம் செய்துகிட்டுப் போய் எக்கசக்க கடனோட வந்த… இப்ப என்ன செய்றதா உத்தேசம்…” என்று சொல்லி வாயடைத்துவிட்டார்.
மறுநாள் வீரராகவன் குடும்பத்துடன் திருப்பதிக்குக் கிளம்பினார். அந்த நேரம் அவரிடம் ஒரு பெரிய கோவில்களின் பெயர்ப்பட்டியலைக் கொடுத்த ரஞ்சிதம், “அப்படியே இந்தக் கோவில்களுக்கெல்லாம் போய்விட்டு வா…” என்று சொல்லி அவர்களது இரண்டு நாள் பயணத்தை ஒரு வாரப் பயணமாக மாற்றிவிட்டார்.
ரஞ்சிதத்தின் எண்ணப்படி ‘பர்வதம் நடிக்கிறார். எப்படியாவது மகளையும் மருமகனையும் வரவழைத்துப் பேசி, மகனைப் படிக்க வைக்கச் சொல்லப் போகிறாள்’ என்று நினைத்தார். அதனால் மகன் அங்குப் போவதை முடிந்த அளவு தடுக்க நினைத்தார்.
கௌசல்யா குமுறினாள்… கணவனிடம் கெஞ்சினாள், அழுதாள், வெடித்தாள், தன்னால் வரமுடியாது என்று தர்க்கம் செய்தாள்… ஆனால் வீரராகவனிடம் எதுவும் நடக்கவில்லை. அவருடைய வீக் பாயிண்ட்டில் ரஞ்சிதம் குறிபார்த்து அடித்துவிட்டதால் அவர் கட்டாயம் குடும்பத்தோடு திருப்பதி சென்றே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருந்தார்.
அதனால் கௌசல்யா வரமாட்டேன் என்று தர்க்கம் செய்ததில் எரிச்சலானார்.
“என்னடி… திமிரா… கிளம்பப் போறியா இல்லையா…?” என்று மிரட்டினார்.
“அம்மாவைப் பார்க்காமல் எங்கேயும் கிளம்புறதா இல்லை…” அழுத்தமாக வந்தது பதில்.
அவர் சிறிதுநேரம் அமைதியாக அவளை முறைத்துப் பார்த்தார்… பிறகு சொன்னார் “கௌசி… என் கோபத்தைக் கிளப்பாமல் மரியாதையா கிளம்பு…”
“என்ன மிரட்டுறீங்க… உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னாலும் இப்படித்தான் நடந்துக்குவீங்களா…?” என்றாள் கடுமையாக.
அவள் கேட்ட கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. அதனால் “அப்படி என்னடி உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல… நாம இங்க இருக்கிற திருப்பதிக்குப் போய்விட்டு வர்றதுக்குள்ள செத்தா போய்ட போறாங்க… ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணுற… ச்சை…” என்றார் கடுப்புடன்.
அவர் சொன்ன வார்த்தை கௌசல்யாவைப் பலமாகக் காயப்படுத்தியது. அவர் உண்மையில் மாமியார் சாக வேண்டும் என்றெல்லாம் நினைத்துச் சொல்லவில்லை. இருபக்கமும் அடிவாங்கிய மத்தளமாக இருந்தவர் அடிதாங்காமல் கொஞ்சம் குரல் கொடுத்துவிட்டார். அதில் வார்த்தைகள் எக்குத்தப்பாக விழுந்து கௌசல்யாவின் மனதை ரணப்படுத்திவிட்டது…
அவள் அழுதுகொண்டே கோவிலுக்குக் கிளம்பினாள். ‘தம்பி தவிப்பானே…!’ என்று அவள் உள்ளம் தவித்தது… ‘அம்மா உயிருக்குப் போராடுகிறாளே…!’ என்று அவள் உயிர் இங்குப் போராடியது. அவளுடைய தவிப்பும் போராட்டமும் அவருக்குப் புரியவில்லை. அவர் கௌசல்யாவைக் கோவிலுக்குக் கிளப்பிவிட்டோம் என்கிற நிம்மதியில் பயணம் செய்தார்.
# # #
வீரராகவன் ஒருவார பயணமாக ஆந்திராவிற்குச் சென்றுவிட்டு காம்காபட்டிக்குத் திரும்பும்போது… லக்ஷ்மிபுரத்தில் எல்லாம் முடிந்து ஐந்து நாட்கள் ஓடி மறைந்துவிட்டன.
செய்தியைக் கேள்விப்பட்ட கௌசல்யா தரையில் விழுந்த மீனாகத் துடித்தாள்… கடைசிவரை தாயின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லையே என்று வெடித்து அழுதாள். யாராலும் அவளை அமைதிப்படுத்த முடியவில்லை.
தம்பியைப் பார்க்க ஓடினாள்… அவளுக்குப் பின்னாடியே வீரராகவனும் ஓடினார். கார்முகிலனோ அவர்களைச் சட்டைச் செய்யவில்லை. அவன் வீட்டிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்களை மூட்டைக்கட்டி பரணியில் போட்டுக் கொண்டிருந்தான்.
“தம்பி… தம்பி…” என்று அவனை நோக்கி ஓடிய கௌசல்யாவை, கனல் பார்வையால் தடுத்து நிறுத்தினான்.
அதிர்ச்சியுடன் நின்றவளை “வெளியே போ…” என்றான். அவள் கண்களில் கண்ணீருடன் அசையாமல் நின்றாள். அவன் வெளியே வந்துவிட்டான்… அவளும் வெளியே வந்தாள். அவன் வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துச் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு வெளியே நடந்தான்.
இறுகிப் போனவளாய் கௌசல்யா வீடு திரும்பினாள். மனைவியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் குற்ற உணர்வுடன் தவித்த வீரராகவன் மைத்துனனை சந்திக்க முயன்றார். அவன் வீட்டைக் காலி செய்துவிட்டு, சாவியை வீடு அடகு பிடித்திருந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, எங்கோ சென்று விட்டான் என்று தெரியவந்தது. அவர் விடாமல் தேடி அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.
தேனியில் ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தவனிடம் சென்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்… அவனைச் சமாதானம் செய்ய முயன்றார். பிறகு அவன் தர்மராஜ்ஜிடம் அடைக்கலமானதைக் கேள்விப்பட்டு, அவர் மூலம் சமாதானத் தூதுவிட்டார்… ஆனால் அவன் மனம் இறுகியிருந்தது. அவன் தன் பிடிவாதத்திலிருந்து ஓர் இம்மிக் கூட இறங்கவில்லை. கௌசல்யாவையும் வீரராகவனையும் மன்னிக்கவே இல்லை.
வீரராகவன் மனைவியின் முன் குற்றவாளியாக நின்றார். கௌசல்யா அவரைச் சுத்தமாக ஒதுக்கிவிட்டாள். அவள் அவரிடம் கடைசியாக பேசிய வார்த்தை இதுதான்…
“உங்களைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு… ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்ட பாவத்திற்குத் தண்டனையாக… இனியும் இந்த வீட்டில் நான் இருக்கத்தான் போகிறேன். ஆனால் உங்களுடைய மனைவியாக அல்ல… என் மகளுக்குத் தாயாக மட்டும் தான் என்பது உங்கள் நினைவில் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஒருநொடி அதை நீங்கள் மறந்தாலும் அடுத்த நொடி நான் பிணமாவேன் என்பது சத்தியம்…”
பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கணவனிடம் பாராமுகம் காட்டிப் பேசாமலிருந்த கௌசல்யா இப்போதுதான் மகளுக்காகப் பேச ஆரம்பித்திருக்கிறாள். அதுவும் கூட அவருடைய மனைவியாக அல்ல… அவருடைய மகளின் தாயாக.
Comments are closed here.