Share Us On
[Sassy_Social_Share]உயிரைத் தொலைத்தேன் – 24
4837
0
அத்தியாயம் – 24
“எங்க மாமா கிளம்புறீங்க…? ”
“தேனிக்கு மதி…”
“தேனிக்கா…? இன்னிக்கு லீவ் தானே…”
“ம்ம்ம்… ஆமாம்… லீவ்தான். தேனிக்கு என் ஃபிரண்டைப் பார்க்கப் போறேன்…”
“ஓ… அப்படியா… எத்தனை மணிக்கு மாமா திரும்பி வருவீங்க…?”
“தர்மராஜ் சாரையும் பார்க்கணும். ரெண்டு பேரையும் பார்த்துட்டுச் சாயந்திரம் தான் வருவேன்… நீ சமைத்துச் சாப்பிடு… போர் அடித்தால் டிவி பார். புக்ஸ் அந்த கப்போர்ட்ல நிறைய இருக்கு… வேணுன்னா படி…” என்று சொல்லிவிட்டு, லக்ஷ்மிபுரத்திலிருந்து கிளம்பிய கார்முகிலன் சரியாகப் பத்து மணிக்குத் தேனியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நீலவேணியின் முன் நின்றான்.
“எப்படி இருக்க நீலா…?”
“இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க… உங்க மனைவி எப்படி இருக்காங்க…?” ஒப்புக்குக் கேட்டாள்.
அவள் அவனுடைய மனைவியைப் பற்றிக் கேட்டதும், அவனுடைய முகம் மென்மையானதை அவள் கவனித்தாள். உள்ளுக்குள் பொறாமை ‘தீ’ பற்றி எரிந்தது.
“நல்லா இருக்கேன் நீலா… மதி என் வாழ்க்கைல வரமாட்டாள் என்று நினைத்துப் பயந்து போய் இருந்தேன்… ஆனால் அவள் என் மீது உயிரையே வச்சிருக்கா. பிடிவாதமா என்னைக் கல்யாணம் செய்திருக்கா. அதுமட்டும் இல்ல நீலா… அவளுக்கு அவளோட அம்மா அப்பாவைவிட நான்தான் முக்கியம் தெரியுமா…? நான் ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் நீலா… எல்லாத்துக்கும் மதி ஒருத்திதான் காரணம்…”
‘இதே கார்முகிலன்தான் ஆறு மாதத்திற்கு முன், அவனுடைய மனம் நிம்மதி அடைந்ததற்கு நீலா ஒருத்திதான் காரணம் என்று சொல்லி அவளைத் தலையில் தூக்கி வைத்திருந்தான். இப்போது இன்னொருத்தி வந்ததும் அவளைப்பற்றி நினைக்கக் கூட மறுக்கிறான். இவனும் ஒரு ஆண் தானே… இவனுக்கு மட்டும் நிலையான புத்தி எங்கிருந்து வரும்…’ நீலவேணி மனதிற்குள் பொருமினாள்.
“நீலா… நீ மதியைப் பார்த்தது இல்லைல்ல… அவ ரொம்பச் சின்னப்பொண்ணு நீலா… அவளுக்கு இன்னும் குழந்தைமனம் மாறவே இல்லை தெரியுமா… சில விஷயங்களுக்குக் குழந்தை மாதிரி அடம்பிடிப்பா… எனக்குச் சிரிப்புதான் வரும். என்னதான் சின்னப்பொண்ணா இருந்தாலும் சில சமயம் ரொம்பப் பக்குவமாவும் பொறுப்பாவும் நடந்துப்பா…” அவன் மதுமதியின் புராணத்தைப் பாடிக் கொண்டிருந்தான். அவளுக்குக் கடுப்பானது.
‘இதுக்குத் தான் உன்னை வரச் சொன்னேனா…?’ என்று அவனை நேரடியாகக் கேட்க முடியாமல் திணறினாள்.
“நீலா… இங்க பார் இதுதான் மதி… எப்படி இருக்கா…?” என்று ஆவலாகக் கேட்டபடி, தன் கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த மதுமதியின் படத்தை எடுத்துக் காட்டினான்.
அதை அசட்டையாக வாங்கிப் பார்த்த நீலா, கண்களை நன்றாக விரித்து மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தாள். பின் குழப்பத்துடன் கார்முகிலனைப் பார்த்தவள்,
“முகிலன்… இந்தப் பெண்ணையா நீங்க காதலித்துத் திருமணம் செஞ்சுக்கிட்டீங்க…?” என்றாள்.
“ஆமாம்… ஏன்…?” என்றான் கார்முகிலனும் புரியாமல். படத்தைப் பார்த்ததும், எல்லோரும் சொல்வது போல் ‘உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க முகிலன்…’ என்றுதான் அவள் சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் ஒரு மாதிரிக் குழப்பத்துடன் அவனைக் கேள்வி கேட்டதில், அவன் குழம்பிவிட்டான்.
அதனால் தான் அவன் நீலாவிடம் “ஏன் அப்படிக் கேக்குற நீலா…?” என்று பதில் கேள்வியும் கேட்டான்.
“இல்ல… இந்தப் பெண் ரொம்பச் சுமாராத் தானே இருக்கு… இந்தப் பெண்ணையா நீங்க காதலிச்சீங்க… அப்படி என்ன இருக்கு இந்தப் பெண்கிட்ட…?” அவள் பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டாள்.
உண்மையில்… கார்முகிலன் நீலவேணியிடம் காட்டிய படத்தில் இருந்த மதுமதியின் அழகு, நீலவேணியின் அழகுக்கு முன் பூஜ்ஜியமாகத்தான் தெரியும்.
‘மாநிற மேனியும், ஒல்லியான உருவமும், பெரிய முட்டைக்கண்ணும், குட்டையாக வெட்டிவிடப்பட்ட முடியோ… அல்லது அதற்குமேல் முடி வளரவே இல்லையோ தெரியவில்லை… இந்த மூஞ்சியிடம் என்ன இருக்கிறது என்று இவன் இப்படி மயங்கிக் கிடக்கிறான்… இந்த அழகைப் பற்றியா இவ்வளவு நேரம் இவன் புலம்பிக் கொண்டிருந்தான்…’ அவள் ஏளனமாக நினைத்தாள். ஆனால் கார்முகிலனின் பதில் வேறு மாதிரி இருந்தது.
“நீலா… மதி உன் அளவு கலராக இல்லாமல் இருக்கலாம்… உலகத்தில் எத்தனையோ பெண்கள் மதியை விட அழகாக இருக்கலாம்… ஆனால் எனக்கு என் மதி மட்டும் தான் அழகு…! மதியைத் தவிர வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது. ஏன் தெரியுமா…? என்னைப் பார்த்ததும் அவளுடைய கண்களில் வழியும் காதலை வேறு யாரிடமும் என்னால் காண முடியாது… அதெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது நீலா. அனுபவித்தால் தான் தெரியும்… நீயும் யாரையாவது காதலித்துப் பார் தெரியும்… நீ காதலிப்பவனை விட வேறு எந்த மன்மதனும் உன் கண்களுக்கு அழகாகத் தெரியமாட்டான்” அவன் உணர்ச்சி பூர்வமாகப் பேசினான்.
கார்முகிலனின் ஒவ்வொரு வார்த்தையும் நீலவேணியைப் பலமாகக் காயப்படுத்தியது.
‘நான் உன்னைக் காதலிக்கவில்லையா… என் மனதில் காதல் இல்லையா… என்னுடைய காதல் மட்டும் உனக்கு எப்படிப் புரியாமல் போனது… ஓஹோ… காதலை கண்களில் வழிய விட வேண்டுமோ…? அந்த வித்தையெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விட்டதே… இந்த லட்சணத்தில் நான் ஒருவனைக் காதலித்துப் பார்க்க வேண்டுமாம்… அதுதான் உன்னைக் காதலித்துவிட்டுத் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேனே… அது போதாதா…’ அவள் மனம் வசைபாடியது…
‘முட்டாள்… மடையா…’ என்று அவனைத் திட்டித் தீர்க்க வேண்டும் போல் இருந்தது… அழுகைப் பொங்கியது. தன்னைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
‘இனி இவன் தனக்குக் கிடைக்க மாட்டான்… இவனோடு பேசிக் கொண்டிருந்தால் தன் மன அமைதி தான் மேலும் கெட்டுப்போகும்’ என்று தெளிவாகப் புரிந்துகொண்டாள்.
மனம் ஆரம்பக்கட்ட அதிர்ச்சியைத் தாண்டிவிட்டாலும், வலிக்கத்தான் செய்தது. அதோடு, அவளுக்குள் மதுமதியின் மீதான பொறாமை புகைந்து கொண்டிருக்கும் போது… கார்முகிலன் ‘மதி… மதி…’ என்று அவளைப் பற்றியே பேசி, புகைந்து கொண்டிருக்கும் பொறாமையை ஊதி நெருப்பாக்கினான். அதைத் தாங்கமுடியாத நீலவேணி அவனுடைய ‘மதி…’ புராணத்திலிருந்து தப்பிக்க நினைத்து ஓடப் பார்த்தாள்.
“சாரி முகிலன்… நான் எனக்குத் தோன்றியதைப் பேசிவிட்டேன். தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் கிளம்புறேன்…” என்றாள்.
உடனே தன்னிலைக்கு வந்த கார்முகிலன் “ஹேய்… என்ன…? என்னை ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் என்று வரச் சொல்லிட்டு எதுவுமே பேசாமல் கிளம்புற…?” என்று கேட்டான்.
“ஓ… அதுவா… மறந்தே போயிட்டேன் பாருங்க… என்னோட பியூட்டிசியன் கோர்ஸ் முடிஞ்சிடுச்சு… பார்லர் ஒண்ணு ஆரம்பிக்கணும்…” என்றாள்.
“இப்போ வேண்டாம் நீலா… இப்ப தான் கோர்ஸ் முடிச்சிருக்க. அதனால் உடனே பார்லர் ஆரம்பிக்காமல்… கொஞ்சநாள் வேற பார்லர்ல வேலை பார்த்துவிட்டுத் தொழிலை நன்றாகக் கற்றுக்கொண்டு அதன்பிறகு ஆரம்பிக்கலாம்…” என்று அறிவுரைக் கூறினான்.
“சரி முகிலன்…” அவள் உடனே ஏற்றுக் கொண்டாள்.
“சரி நீலா… வேற என்ன…?”
“வேற எதுவும் இல்ல முகிலன்… நான் கிளம்புறேன்…”
“ஒருநாள் வீட்டுக்கு வா நீலா… உன்னை மதிக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்… மதி எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லா பழகுவா…” என்றான்.
‘சத்தியமா அந்த முட்டைக்கண்ணி இருக்கிற பக்கமே நான் வரமாட்டேன்…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே,
“கட்டாயம் வர்றேன் முகிலன்… கிளம்புறேன்… நேரமாச்சு…” என்று சொல்லிவிட்டு கோவிலிலிருந்து வீட்டிற்குக் கிளம்பினாள்.
அவர்களிருவரும் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஜீவிதா தூரத்திலிருந்து நன்றாகக் கவனித்தாள். அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரியவில்லை. ஆனால் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் உறுத்தியது.
‘இந்தக் கிராதகியோடு முகில் சார் எதற்குப் பேசிக் கொண்டிருக்கிறார்…! இவள் சரியில்லாத கேசாயிற்றே…!” என்று நினைத்துக் குழம்பினாள்.
ஜீவிதாவின் வீடு நீலவேணியின் தெருவில்தான் உள்ளது. நீலவேணியின் அழகும், லீலைகளும் அந்தத் தெருவில் பிரசித்திப் பெற்ற விஷயங்கள்… அதனால் கார்முகிலன் நீலவேணியோடு பழகுவது சரியில்லை என்று அவளுக்குப் பட்டது. ‘இதைப்பற்றி மதுமதியிடம் பேசிவிடலாமா…’ என்று யோசித்தாள். ஆனால் அடுத்த நொடியே தன் சிந்தனையை மாற்றிக் கொண்டாள்.
உண்மை என்ன என்று தெரியாத ஒரு விஷயத்தைத் தோழியிடம் சொல்லி அவள் நிம்மதியைக் கெடுக்க விரும்பாமல், இனி தொடர்ந்து நீலவேணியைக் கவனமாகக் கவனிப்பது என்றும்… அவள் கார்முகிலனோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தால்… தாமதிக்காமல் மதுமதியிடம் விஷயத்தைப் போட்டு உடைத்துவிட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள்.
# # #
நீலவேணி கார்முகிலனின் சவகாசமே வேண்டாம் என்று முடிவு செய்து ஒதுங்கியிருக்க நினைத்தாள். ஆனால் அவள் எவ்வளவு தூரம் விலகிப் போகிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் மனம் அவன் மீது பைத்தியமாக ஆரம்பித்தது… அவள் அவனிடமிருந்து விலக நினைத்தும் முடியாமல், அவனோடு கைப்பேசியில் அழைத்துப் பேசுவாள். ஆரம்பத்தில் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தவள்… இப்போது தினமுமே அவனை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். முடிந்த அளவு மதுமதியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடுவாள். அவர்களுடைய நட்பு பழையபடி தொடர்ந்தது… நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
கார்முகிலன் மதுமதியின் வாழ்க்கை இன்பமாகக் கழிந்து கொண்டிருந்தது. கார்முகிலன் கோபப்படும்படி மதுமதி நடந்துகொள்ள மாட்டாள். மதுமதியின் மனதைப் பாதிக்கும்படி கார்முகிலன் நடந்துகொள்ள மாட்டான். அவர்களிருவரும் ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்தார்கள்.
இதில் கார்முகிலன் செய்த தவறு, வீட்டிற்கு வெளியில் நடப்பதை மதுமதியோடு பகிர்ந்து கொள்ளாததுதான். அவனுடைய வேலை சம்மந்தமான விஷயங்கள், நட்பு வட்டாரங்கள் என்று அவன் மதுமதியோடு எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டான். அப்படித்தான் அவன் நீலாவைப் பற்றியும் அவளிடம் சொல்லவில்லை. அதுதான் மதுமதி மற்றும் கார்முகிலனின் இன்பமான வாழ்க்கையை அசைத்துப் பார்த்த முதல் விஷயம்.
# # #
அதிகாலை மூன்று மணி, கார்முகிலன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனுடைய கைப்பேசி சிணுங்கியது… ஒருமுறை முழுவதுமாக அடித்து ஓய்ந்து மீண்டும் சத்தமிட்டது. கைப்பேசிச் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த மதுமதி, கார்முகிலனின் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
திரையில் ‘நீலா காலிங்…’ என்று வந்தது. ‘யார் இந்த நீலா…? இந்த நேரத்துல எதுக்கு மாமாவைக் கூப்பிடறா…?’ என்று மனதில் பல கேள்விகள் எழுந்தாலும், தூக்கக் கலக்கத்தில் அதிகம் யோசிக்க முடியாமல்…
“மாமா… மாமா… ஃபோன் வருது பாருங்க…” என்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கார்முகிலனைத் தட்டி எழுப்பினாள்.
“ச்சு… யாரு இந்த நேரத்துல…” என்று முனகிக்கொண்டே எழுந்தவன்…
“பேர் நீலான்னு வருது மாமா…” என்று மதுமதி சொன்னதும், “நீலாவா…!” என்று பரபரப்புடன் எழுந்து அமர்ந்தான்.
மதுமதியிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் காதில் வைத்து “நீலா… என்ன ஆச்சு…?” என்று கேட்டபடி படுக்கையறையிலிருந்து பேசிக்கொண்டே ஹாலுக்குச் சென்றுவிட்டான். கார்முகிலன் மீது மதுமதிக்குச் சிறிதும் சந்தேகம் இல்லாததால் அவள் மீண்டும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
Comments are closed here.