Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 34

அத்தியாயம் – 34

மன உறுதியை வரவழைத்துக் கொண்டதாலோ… அல்லது கருவுற்று மூன்று மாதங்கள் முடிந்து நான்காவது மாதம் தொடங்கிவிட்டதாலோ… மதுமதிக்கு முன்பிருந்த உடல் உபாதைகள் இல்லை. வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாவிட்டாலும், நீலவேணியை எல்லா இடங்களிலும் நுழையவிடாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது. அதற்குப் பெரிதும் உதவியது வேலைக்கார அம்மா என்பதை மறுக்க முடியாது.

பக்கத்துத் தெருவில் வசிக்கும் அந்தப் பெண்மணிக்கு இப்போதெல்லாம் பொழுது விடிவது மதுமதியின் வீட்டில்தான். காலை எழுந்ததும் அவளுக்கு உதவுவதற்காக ஓடி வந்துவிடுவாள். முன்பு பார்த்ததைவிட இரண்டு மடங்கு அதிக வேலைதான் என்றாலும், மதுமதியின் குணத்திற்காக முகம் சுளிக்காமல் செய்வாள்.

சமையலறையிலிருந்து பூஜையறை வரை மதுமதியின் கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் வந்துவிட்டதில் நீலவேணிக்கு ஏகப்பட்ட எரிச்சல். அவள் பொறுமையிழந்து நண்பனிடம் ஒருநாள் முறையிட்டாள்.

“பாருங்க முகிலன்… மதுமதி காலை எழுந்ததிலிருந்து தொடர்ந்து வேலை செய்துட்டே இருக்காங்க. இந்த மாதிரி நேரத்துல ரெஸ்ட் எடுக்காமல் இப்படி உடம்பை வருத்திக்கணுமா…? நீங்களாவது கொஞ்சம் சொல்லக் கூடாதா…?” கல்லூரியிலிருந்து வந்த பிறகு நியூஸ் பார்ப்பதற்காக டிவி முன் அமர்ந்த கார்முகிலனிடம் கேட்டாள்.

சமையலறையில் காஃபி கலந்துகொண்டிருந்த மதுமதிக்கும் அவள் பேசியது கேட்டது. இரவு உணவைத் தயார் செய்து கொண்டிருந்த வேலைக்கார அம்மா,

“அம்மாடி… காஃபியை எடுத்துக்கிட்டு அங்க போ… நீ அங்க இல்லன்னா அந்தப் பொண்ணு ஏடாகூடமா எதாவது தம்பிக்கிட்டப் பேசும்… போ… போ…” என்று விரட்டினாள்.

கணவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று யோசித்தபடி காஃபியைக் கொண்டு வந்தாள்.

“அதனால என்ன நீலா… அவளால முடியும்போது வேலை செய்யலாம் என்று டாக்டர் சொன்னாங்களே…! ”

“அதுக்காக நாள் முழுக்கச் செய்யணுமா… நான் இங்க அவங்களுக்கு உதவிக்குத் தானே வந்திருக்கேன். நான் பார்த்துக்க மாட்டேனா…?”

“அவளால் முடியாதபோது நீ பார்த்துக்க நீலா… முடியும்போது அவ செய்யட்டும். அது அவள் உடலுக்கும் நல்லதுதான்…” என்று முடித்துவிட்டான்.

மதுமதி காஃபியை கார்முகிலனிடம் நீட்டியபடி, நீலவேணியின் கண்களைச் சந்தித்தாள். சத்தமில்லாமல் இரு மின்னல்கள் மோதிக்கொண்டன. கண்களுக்குப் புலப்படாத தீப்பொறிப் பறந்தது.

# # #

நீலவேணியை விரைவில் வெளியேற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை துளிர்விட்டது மதுமதிக்கு. அந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு, அன்றிரவு தனிமையில் கணவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

“மாமா… அந்தப் பெண் இங்க சும்மாத்தானே இருக்கா… ஏதாவது படிக்கச் சொல்லலாமே…”

“நீலாவுக்குப் படிப்புல இன்ட்ரெஸ்ட் இல்ல மதி… பியூட்டிஷியன் கோர்ஸ் பண்ணியிருக்கா… எதாவது பார்லர்ல வேலைக்குப் போகணும் என்று சொல்லிட்டு இருந்தா… அதற்குள் அந்தப் பாட்டி இறந்துட்டாங்க… எல்லாம் மாறிப் போச்சு…”

“அதனால என்ன மாமா… இப்ப முயற்சி செய்து பார்க்கலாமே… எவ்வளவு நாள் வீட்டிலேயே இருக்கமுடியும். போரடிக்குமே…!”

“நீ சொல்றதும் சரிதான் மதி… ஆனால் லக்ஷ்மிபுரத்துல எந்த பியூட்டி பார்லர் இருக்கு…”

“இங்க இல்லன்னா என்ன மாமா… தேனில… மதுரைலயெல்லாம் நிறைய இருக்கே…” சொல்லி முடிக்கும்போது ஏனோ அவன் கண்களைச் சந்திக்காமல் தலைகுனிந்தாள்.

அவன் யோசனையுடன் மனைவியைப் பார்த்தான்…

“நீலா இங்க இருப்பது உனக்குப் பிடிக்கலையா மதி…”

“இ… இல்ல… அப்படியில்ல மாமா…” அவள் தடுமாறினாள்.

“சரி… இதைப்பற்றி யோசிக்கிறேன்…” அவன் பேச்சை முடித்துக்கொண்டான்.

இனி நீலவேணி சுமூகமாகவே இங்கிருந்து போய்விடுவாள் என்று நினைத்தபடி நிம்மதியாக மதுமதி கண் உறங்கினாள். அடுத்த நாளே அவள் நிம்மதி, நம்பிக்கை எல்லாம் ஆட்டம் கண்டது.

# # #

அன்று சனிக்கிழமை… கார்முகிலன் வீட்டில் அவனுடைய அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். நீலவேணி ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றுவிட்டாள். மதுமதி வேலைக்கார அம்மாவின் துணையுடன் சமையலறையில் இருந்தாள். தொலைபேசி அழைத்தது… சமையலறையிலிருந்து வெளிப்பட்டுத் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்து “ஹலோ…” என்றாள்.

“ஹலோ மது… காம்காபட்டிக்குப் போய் உன் அம்மா அப்பாவைப் பார்த்தேன்டி…” ஜீவிதாவின் குரல் உற்சாகமாக ஒலித்தது.

“ஹேய்… ஜீவி… நிஜமாவா…!” என்று மகிழ்ச்சிப் பெருக்கில் கத்திவிட்டவள், உள் அறையில் கணவன் இருப்பதை நினைவுக் கூர்ந்து குரலைத் தாழ்த்திப் பேசினாள்…

“எப்படி இருக்காங்க…? நல்லா இருக்காங்களா ஜீவி…?” என்று பரபரத்தாள்.

“நல்லா இருக்காங்கடி… நீ கவலைப்படாத… ஆன்ட்டிகிட்ட அவங்க பாட்டி ஆகப் போறாங்கன்னு சொன்னதும் கண்கலங்கிட்டாங்க…” தோழி சொல்வதைக் கேட்ட மதுமதியும் இங்குக் கண்கலங்கினாள்.

“வேற என்னடிச் சொன்னாங்க…?” என்று தோழியைத் துருவினாள்.

“நீதான் என்னை அனுப்பினேன்னு சொன்னதும் ரொம்பச் சந்தோஷப்பட்டாங்க மது…”

“அப்படியா… வேற என்ன சொன்னாங்க… அம்மா முன்னாடி மாதிரியே வீக்காத்தான் இருக்காங்களா…? இல்ல நல்லா இருக்காங்களா…?”

“எனக்கு ஒண்ணும் தெரியல மது… முன்னாடி இருந்த மாதிரித்தான் இருக்காங்க…”

“அப்பாவும் அம்மாவும் நல்லா பேசிக்கிட்டங்களாடி…?”

“இல்லடி… ஆன்ட்டி அங்கிள்கிட்ட சரியா பேசற மாதிரித் தெரியல… அவங்க ரெண்டுபேரும் சகஜமா பேசிக்காதது மாதிரிதான் எனக்குத் தெரிந்தது…” என்றாள்.

“என்ன ஜீவி சொல்ற…? நான் மாமாவைக் கல்யாணம் செய்து கொண்டால் அம்மாவின் கோபம் குறையும்… அப்பாவோடு சமாதனமாகி விடுவார்கள் என்று நினைத்தேனே…! நீ இப்படிச் சொல்றியே…!” மதுமதி வேதனையுடன் கேட்டாள்.

அவளுடைய வேதனையைவிட லட்சம் மடங்கு அதிகமான வேதனையை உள் அறையிலிருந்து தொலைபேசியின் மற்றொரு இணைப்பில் இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தவன் அனுபவித்தான்.

தொலைபேசி மணியடித்ததும் ஹாலில் இருந்த தொலைபேசி இணைப்பில் மதுமதி எடுத்த அதேநேரத்தில் கார்முகிலனும் உள் அறையிலிருந்த இணைப்பை எடுத்தான்.

மதுமதி ‘ஹலோ’ என்று சொன்னதும்… ‘அந்தப் பக்கத்தில் அழைப்பது யார்…? நமக்கான அழைப்பாக இருந்தால் நாமே பேசிவிடலாம்’ என்கிற எண்ணத்தில் காத்திருந்தவனின் காதில்…

‘ஹலோ மது… காம்காபட்டிக்குப் போய் உன் அம்மா அப்பாவைப் பார்த்தேன்டி…’ என்கிற வார்த்தைகள் விழுந்து அவனை ஸ்தம்பிக்க வைத்தது. தொலைபேசியில் ஒட்டுக் கேட்கும் எண்ணம் இல்லையென்றாலும், அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் அவனைக் கட்டிபோட… அவன் தொடர்ந்து அவர்களுடைய உரையாடலை கேட்க வேண்டியதாகிவிட்டது. மதுமதி அடுத்தடுத்துப் பேசிய வார்த்தைகளில் இறுகி நின்றவன்… அவள் கடைசியாகச் சொன்ன செய்தியில் எரிமலையாகி விட்டான். ஆனால் எரிமலை வெடிக்காமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது.

இது எதையும் அறியாத மதுமதி, ஜீவிதாவிடம் பேசி முடித்தபிறகு பழையபடி சமையலறையில் நுழைந்து கொண்டாள்.

ஒரு மணிநேரம் கழித்துச் சமையல் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கார்முகிலனைத் தேடி வந்தாள்.

“சாப்பிட வாங்க மாமா…” என்று அழைத்தபடி அவர்களுடைய அறைக்குள் நுழைந்தவள்… அங்குக் காலையில் சுத்தம் செய்யப் போவதாகச் சொல்லி அவன் கலைத்துப் போட்ட புத்தகங்களும் மற்றப் பொருட்களும் அடுக்கப்படாமல் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டு வியந்தாள். அந்த அலங்கோலத்திற்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பது போல் தலையைக் கைகளில் தாங்கியபடிக் கட்டிலில் குனிந்து அமர்ந்திருந்தான் கார்முகிலன்.

“என்ன மாமா… எல்லாத்தையும் கலைச்சுப் போட்டுட்டு இப்படிக் கப்பல் கவிழ்ந்தமாதிரி உட்கார்ந்துட்டீங்க…” என்று கேட்டபடி அவனருகில் சென்று அவன் முகத்தை நிமிர்த்தினாள். கோவைப்பழம் போல் சிவந்திருந்த கண்கள் அவளை வேறுவிதமாக மிரட்ட…

“ஐயோ… என்ன மாமா ஆச்சு… உடம்பு ஏதும் சரியில்லையா…? ஏன் இப்படிக் கண்ணெல்லாம் சிவப்பா இருக்கு…!” என்று பதறியபடி அவன் நெற்றியில் கை வைத்துப் பார்க்க முனைந்தாள். அவளுடைய கையை பட்டென்று தட்டிவிட்டான்

வியப்பும் குழப்பமுமாக “மாமா…!” என்றாள்.

அவளுடைய பேச்சைக் கேட்க விரும்பாதவன் போல முகத்தைச் சுழித்துக் கொண்டு சட்டென எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் அவனுக்கு அருகில் நெருக்கமாக நின்றவள் தடுமாறினாள்.

“எ… என்ன ஆச்சு மாமா…?” அவள் திகைப்பும் குழப்பமுமாகக் கேட்டாள்.

அவளை அலட்சியம் செய்துவிட்டு, வார்ட்ரோபில் அடுக்கியிருந்த துணிகளைக் கண்டபடி கலைத்துக் கையில் கிடைத்த ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே சென்றான்.

அந்த நிமிடத்திலிருந்து மதுமதிக்குச் சோதனைக்காலம் ஆரம்பித்தது. வெளியே சென்றவன் நள்ளிரவு கடந்தும் வீட்டிற்கு வரவில்லை. கைப்பேசியில் முயன்று பார்த்தவள் சோர்ந்து போனதுதான் மிச்சம். தவிப்பும் குழப்பமுமாக நின்றவளிடம், “என்ன ஆச்சு… முகிலன் இன்னும் வரலையா…?” என்று விசாரணை செய்தாள் நீலவேணி.

“ம்ம்ம்…” என்று முகம் கொடுக்காமல் பதில் சொன்னாள் மதுமதி.

“ஃபோன் பண்ணிப் பார்க்க வேண்டியதுதானே…”

அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லப் பிடிக்கவில்லையென்றாலும் தவிர்க்க முடியாமல் “பண்ணிப் பார்த்துட்டேன். சார்ஜ் இல்ல போலிருக்கு… சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கு…” என்று பதில் சொன்னாள்.

“ஓ… சரி நான் என் போனிலிருந்து முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்…” என்று சொல்லிவிட்டு, அவளுடைய கைப்பேசியில் முயன்றாள். பலன் இல்லை…! இரு பெண்களும் விடிய விடிய காத்திருந்தார்கள். இரவின் நிசப்தத்தில் தூரத்தில் அவனுடைய வண்டி வரும் சத்தம் கேட்டது.

இறுக்கமான முகத்துடன் நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்கு வந்த கார்முகிலன், ஹாலில் காத்திருந்த இரு பெண்களையும் கவனியாதவன் போல் படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான். அவனுடைய கடுமையான முகம் மதுமதியை அவனிடம் நெருங்கவிடாமல் அச்சுறுத்த… அவள் மிகுந்த தயக்கத்துடன் கணவனைப் பின் தொடர்ந்தாள். அவளுடைய தயக்கமும் அவனுடைய பாராமுகமும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை என்பதை நீலவேணிக்குக் காட்டிக் கொடுத்தது. அவள் சிந்தனையுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.




Comments are closed here.

You cannot copy content of this page