Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 39

அத்தியாயம் – 39

கார்முகிலன், நீலவேணி மனமுடைந்து பேசியதில் பதட்டமாகி அவளைத் தேடி வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்தே இருக்க… அவளோ சுயநினைவை இழந்து படுக்கையறையில் தரையில் கிடந்தாள்.

“நீலா…” என்று சத்தமிட்டுக் கொண்டே பாய்ந்து சென்று அவளை ஆராய்ந்தான். கடைவாயில் நுரைத் தள்ளியிருந்தது. அனிச்சையாக உயிர் இருக்கிறதா என்று ஆராய்ந்தான். இதயத்துடிப்பு இருந்தது. அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். போகும்போதே கைப்பேசியில் தொடர்புகொண்டு மருத்துவமனைக்குப் பேசினான்.

போலீஸ் கம்ப்ளைண்ட் இருந்தால்தான் மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என்று செய்தி கிடைத்தது. நண்பனுக்குத் தொடர்புகொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்லும்படி சொன்னான். அவன் எஃ-ஐ-ஆர் நகலுடன் வருவதற்கும் இவன் நீலவேணியுடன் மருத்துவமனையை அடைவதற்கும் சரியாக இருந்தது. நீலவேணியை அட்மிட் செய்துவிட்டான். ஆனால் துரதிஷ்டவசமாக அவளுக்குச் சிகிச்சைத் துவங்குவதற்கு முன்பே உயிர் பிரிந்துவிட்டது. நீலவேணியின் மரணம் முகிலனை மூர்க்கனாக்கியது.

கார்முகிலன் நீலவேணிக்கு நல்ல நண்பன். அவனைப் பொறுத்தவரை நீலவேணியும் கார்முகிலனுக்கு உண்மையான தோழி. அவளுடைய நலன் கருதி அவளைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஆனால் ஆரம்பத்திலிருந்தே அது மதுமதிக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவளைப் பொறுத்தவரை நீலவேணியின் தரம் குறைவு…

‘என்ன பெரிய தரம்… மனதிற்குத்தான் தரம் வேண்டும்…! அந்தத் தரம் வீரராகவனின் மகளுக்குச் சிறிதும் இல்லை…” அவன் மதுமதியின் மீது காண்டானான்.

நீலவேணி தனியார் மருத்துவமனையில் இறந்ததால் அவளுடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காவலர்கள் சம்பிரதாயமாக விசாரணையை ஆரம்பித்த போது… உறவினர்கள் யாரும் இல்லாமல், இரண்டு வாலிபர்கள் நண்பர்கள் என்கிற பெயரில் அந்த இளம் பெண்ணை மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்ததால் விசாரணையைக் கொஞ்சம் விழிப்புடன் செய்தார்கள்.

நீலவேணியின் வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் காவலர்களுக்குத் தாமதமாகக் கிடைத்த தகவல்… நீலவேணி கார்முகிலனின் வீட்டில் வசித்து வந்தாள் என்பதும், தற்கொலை செய்துகொண்ட அன்றுதான் அவளுடைய வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்பதும் தான். அதை உறுதி செய்வதற்காகத்தான் அன்றிரவே கார்முகிலனை விரட்டிக் கொண்டு லக்ஷ்மிபுரத்திற்கு வந்தார்கள். வந்த இடத்தில் அவர்களுடைய சந்தேகம் இன்னும் வலுப்பெற்றது. காரணம்… நீலவேணி வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்ட அன்றே, மதுமதிக்கும் கார்முகிலனுக்கும் தகராறு ஏற்பட்டு அவள் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டாள் என்பதுதான்.

இரவு பதினொரு மணிக்கு அவர்கள் விசாரணையை முடித்துக்கொண்டு கார்முகிலனின் வீட்டிலிருந்து வெளியேறி தெருவில் நின்ற அவர்களின் வாகனத்தை நெருங்கும் போது, தூக்கம் வராமல் கையில் துண்டு பீடியுடன் எதிர்ப்பட்ட ஒரு பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தபோது… அவர் கார்முகிலன் – மதுமதியைப் பற்றி அளந்து விட்டார். அதே பேச்சுவாக்கில் இன்று மதுமதி தேனி பேருந்தில் ஏறியதைப் பார்த்ததாகச் சொன்னார். கூடுதல் விபரமாக தர்மராஜ் பற்றியும் சொல்லிவைத்தார்.

அவர்களிருவரும் காக்கி உடையில் இல்லாததால் போலீஸ்காரர்கள் என்கிற பயமோ தயக்கமோ இல்லாமல்… தூக்கம் வராத இரவில் சிறிதுநேரத்தை பேச்சில் கழிக்க நினைத்துச் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.. ஆனால், தேவையான தகவல் கிடைத்தவுடன் பேச்சைக் கத்தரித்துவிட்டுக் காவலர்கள் சென்றுவிட்டார்கள். பெரியவர் தெருவை மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தார்.

# # #

வெள்ளிக்கிழமை காலை விடிவதற்காகவே காத்திருந்தவள் போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்ட மதுமதி ஆறு மணிக்கெல்லாம் வெளியே செல்லத் தயாராகிவிட்டாள். நேற்று ஒரே நாளில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்கிற பிரமிப்பு அவளிடமிருந்து அகலவில்லை.

“என்னம்மா மது… இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்ட…?” தர்மராஜ் கேட்டார்.

“ஜீவிதா வீட்டுக்குத் தாத்தா… நீலவேணியைப் பற்றி விசாரிக்கணுமே…!”

“சரிம்மா… முதல்ல நான் முகிலனுக்கு ஃபோன் போட்டுப் பேசுறேன். அதற்குப் பிறகு, நாம ரெண்டு பேருமே அங்க போய் விசாரிக்கலாம்…”

“மாமாவுக்கு ஃபோன் பண்ண வேண்டாம் தாத்தா. அவர் என்மேல பயங்கரக் கோபத்துல இருக்கார். நீலாவைப் பற்றித் தெரிந்தால்தான் மாமாவிடம் பேசமுடியும்…” என்று மதுமதி தர்மராஜ்ஜைத் தடுக்கும்போதே அவர் கார்முகிலனுக்கு ஃபோன் செய்துவிட்டார்.

“ஹலோ…” கார்முகிலனின் குரல் கரகரப்பாகக் கேட்டது. இரவெல்லாம் தூங்கவில்லை என்பது தெரிந்தது.

“என்னடா பிரச்சனை…?” நேரடியாகக் கேட்டார்.

“என்ன… என்னடா பிரச்சனை…?” அவன் எரிச்சலுடன் கேட்டான்.

“ஏய்… மது எங்கடா…?”

“ஓஹோ.. அந்தாள் ஃபோன் பண்ணிவிட்டாரா…? அதான் எல்லாம் சொல்லியிருப்பாரே… அப்புறம் எதுக்கு என்கிட்டக் கேட்கறீங்க…?”

“என்னடா சொல்ற? எந்த ஆள்…?”

“உங்களுக்கு எந்த ஆள் ஃபோன் பண்ணினாரோ… அந்த ஆளைத்தான் சொல்கிறேன்…”

“ஃபோனாவது… காடாத்தாவது… மது எங்கடான்னு கேட்டால், என்னடா சம்மந்தம் இல்லாமல் பேசுற…?” அவர் கோபத்தைக் காட்டினார்.

“இப்ச்… இப்போ என்ன சார் உங்களுக்கு வேணும்… அவ எங்க இருக்கான்னு என் வாய்வழியாத் தெரிஞ்சுக்கணும்… அதானே…? சொல்றேன் கேட்டுக்கோங்க… அவ அவளோட அப்பா வீட்டுக்குப் போய்ட்டா… இனிமே எனக்கும் அவளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை… உறவும் இல்லை… போதுமா…”

“சபாஷ்… ராத்திரி நேரத்துல கட்டிய மனைவியை வீட்டிலிருந்து துரத்தி விட்டுட்டு… அவள் எங்குப் போனாள்…? என்ன ஆனாள் என்று தெரியாமல் இருக்கும்… உன்னைப் போல் ஒரு பொறுப்பற்றவனுக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, உறவுமில்லை என்று அந்தப் பெண்தான் சொல்லவேண்டும்… அதை நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய்…”

“ராத்திரி நேரத்துல போனாளா…? சார்… அவ இங்கிருந்து போகும்போது மணி ஆறரை தான். அவ சொல்றதை… அவ அப்பன் சொல்றதை எல்லாம் கேட்டுக்கொண்டு என்னைக் குற்றம் சொல்லாதீங்க…”

“நான் யார் சொல்வதையும் கேட்டுக்கொண்டு உன்னிடம் பேசவில்லை… இப்போது நான் சொல்வதை நீ கொஞ்சம் கேள்… நீ நினைப்பது போல் உன் மனைவி அவளுடைய அப்பா வீட்டிற்குச் செல்லவில்லை. இங்கு நம் வீட்டில்தான் இருக்கிறாள்…” என்று கோபமாகவே சொன்னார்.

அவனுக்கு அவள் வீரராகவனிடம் செல்லவில்லை என்பது உவப்பாக இருந்தது. ஆனாலும் அவள் மீதான கோபம் சிறிதும் குறையவில்லை. ஒருநொடி அமைதியாக இருந்தான். தர்மராஜ் தொடர்ந்தார்…

“முகிலா… அந்த நீலவேணி பொண்ணு எதுக்குத் தற்கொலை செய்து கொண்டாளோ… நமக்கு என்னடா தெரியும்…? நீ தேவையில்லாமல் மதுவைத் தண்டிக்கிறது நியாயமா சொல்லு… நீ கிளம்பி இங்கவாடா… நேரா பார்த்துப் பேசும்போது எல்லாம் தெளிவாகும்…” என்றார் தன்மையாக.

அவன் அவர் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக அவனுடைய கோபத்தை அவரிடம் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் இறுகினான்.

“என்னடா சத்தத்தையே காணோம்…?”

“சார்… என் மனசு உங்களுக்குப் புரியவே இல்லையா… இல்லை, புரியாத மாதிரி நடிக்கிறீங்களா…? எனக்கு அவ முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை… தெரியாத்தனமா அவ கழுத்துல தாலியைக் கட்டிவிட்டேன்… அதுசரி… அவ எதுக்கு அங்க வந்திருக்கா… அவளை முதல்ல வெளிய அனுப்புங்க… எங்கேயாவது போய்த் தொலையட்டும்…”

“தப்புப் பண்ணுறடா முகிலா… இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படுவ சொல்லிட்டேன்…”

“ஹா… மனசாட்சி இல்லாமல் எளியவங்களுக்குக் கொடுமை செய்து சாகடிப்பவர்களே சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும் போது, நான் எதற்கு வருத்தப்படப் போகிறேன் சார்…? எனக்கு எந்தக் குறையும் வராது… அவளை முதலில் வெளியே அனுப்புங்க. அவள் அங்கிருக்கும் வரை நாம் இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருக்க வேண்டியதுதான்…” என்று சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைத்துவிட்டான்.

அந்தப் பெரியவர் வருத்தத்துடன் மதுமதியைப் பார்த்தார். அவள் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள முயன்றாள்.

வாசலில் யாரோ வரும் ஆரவாரம் கேட்டது. தர்மராஜ் வெளிப்பக்கம் பார்வையைத் திருப்பினார். ஓர் ஆண் காவலரும் இரண்டு பெண் காவலர்களும் வந்து கொண்டிருந்தார்கள். அவர் நெற்றியைச் சுருக்கினார்…

“நீங்கதானே மிஸ்டர் தர்மராஜ்…?”

“ஆமாம்… என்ன விஷயம்…?”

“இவங்க யார்…?”

“எனக்குப் பேத்தி மாதிரி… பெயர் மதுமதி…”

“கார்முகிலனின் மனைவியா…?”

“ஆமாம்…”

“சரி வாம்மா…” இப்போது அந்தக் காவலர் மதுமதியிடம் நேரடியாகச் சொன்னார்.

தர்மராஜ் மதுமதி இருவருமே ஒருசேர அதிர்ந்தார்கள்.

“எங்கே…?” இருவருமே படபடப்புடன் கேட்டார்கள்.

“போலீஸ் ஸ்டேஷனுக்குத் தான்…” அமர்த்தலாக வந்தது பதில் காவலரிடமிருந்து.

“ஸ்டேஷனுக்கா…! எதுக்கு சார்…? என்ன விஷயம்…?” என்று தர்மராஜ் பதற, மதுமதி நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

“பெரியவரே… இந்தப் பொண்ணு… நீலவேணி என்கிற பெண்ணை டார்ச்சர் செய்து தற்கொலைக்குத் தூண்டியிருக்கா… அதை மறைக்க இவளுடைய கணவனான அந்த கார்முகிலன் இவளை இங்கு அனுப்பிவிட்டு… இவள் இவளுடைய தாய்வீட்டில் இருப்பதாகச் சொல்லி எங்களைத் திசைத் திருப்பிவிடப் பார்த்தார்… போதுமா இன்னும் சொல்லவா…?” காவலர் கோபமாகக் கேட்டார்.

“ஐயோ சார்… அவனுக்கு மது இங்க வந்ததே தெரியாது சார்… அதுவும் இல்லாமல் அந்த நீலவேணி எதுக்குச் செத்தாளோ… மதுவை எதுக்கு சார் இந்த விஷயத்துல சம்மந்தப்படுத்துறீங்க…?”

“நாங்க தேவையில்லாமல் சம்மந்தப்படுத்தல பெரியவரே… நேற்று இந்தப் பெண்ணின் கணவன் கொடுத்த வாக்குமூலம் முற்றிலும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் நேற்றிரவே நீலவேணியின் வீட்டைசச் சோதனை போட்டோம். முக்கியமான ஆதாரம் கிடைத்திருப்பதால் தான் இங்கு வந்திருக்கிறோம்… இப்போ அனுப்புறீங்களா…?”

மதுமதிக்குக் கண்கள் இருட்டியது… “தாத்தா… என்ன தாத்தா இதெல்லாம்…?” அவள் பயந்து நடுங்கியபடி தர்மராஜ்ஜின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“ஆதாரமா…! என்ன சார் அது…?” தர்மராஜ் பதைப்புடன் கேட்டார்.

“இறந்து போன நீலவேணி கார்முகிலனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அதில் மதுமதி தனக்குப் பலவிதத்தில் தொல்லை கொடுத்ததாகவும்… அதையெல்லாம், தான் கார்முகிலனுக்காகப் பொறுத்துக் கொண்டதாகவும்… ஒரு கட்டத்தில் மதுமதி கார்முகிலனையும் தன்னையும் இணைத்துப் பேசி அசிங்கப்படுத்தியதாகவும்… அதைத் தாங்கமுடியாமல் நீலவேணி தற்கொலை செய்துகொள்வதாகவும் விபரமா எழுதியிருக்காங்க…” காவலர் விலாவாரியாகச் சொன்னார்.

கார்முகிலனின் மனதிலிருந்து மதுமதியை முற்றிலுமாக அகற்றுவதுதான் நீலவேணியின் குறியாக இருந்தது. அதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தவள், தற்கொலை நாடகமாடி கார்முகிலனை மதுமதியிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்க நினைத்தாள். அதன் முதல்படியாக அவனுக்குக் கைப்பேசியில் அழைத்து… அழுகையுடன் மதுமதியை மறைமுகமாகக் குற்றம் சுமத்திப் பேசினாள். பிறகு, கர்முகிலனுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதை அவன் கண்ணில் படும்படி மேஜை மீது வைத்தாள்.

கார்முகிலன் அவளைத் தேடி வரும் நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு, பாட்டியின் தூக்க மாத்திரையிலிருந்து இரண்டை எடுத்து விழுங்கினாள். பாட்டி தூக்கத்திற்காக ஒரு மாத்திரை போடுவார்கள்… இவள் இரண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாள் அவ்வளவுதான். தனக்கு எதுவும் ஆகாது என்று அவள் நம்பிக்கையுடன் கார்முகிலனுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் அடுத்தச் சிலநிமிடங்களில் அவளுடைய பார்வை மங்கியது… கண்களில் இருட்டடித்தது. அவள் கலங்கினாள் ‘தவறு செய்துவிட்டோமோ…!’ என்று பயந்தாள். பயந்து கொண்டிருக்க நேரம் கொடுக்காமல், உள்ளே சென்ற மருந்து அவளுடைய நினைவை அழித்தது… அவள் மயங்கிச் சரிந்தாள்.

அன்று கார்முகிலனின் கவனம் நீலவேணியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்ததால் அவன் மேஜை மேலிருந்த கடிதத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டான். துரதிஷ்டவசமாக அந்தக் கடிதம் போலீஸ் கையில் சிக்கிவிட்டது.

தான் மரணமடையக் கூடும் என்று நீலவேணி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவள் நேரடியாக போலீசுக்கு எந்தக் கடிதமும் எழுதவில்லையென்றாலும்… அவள் கார்முகிலனுக்கு எழுதிய கடிதம் மதுமதிக்கு எமனாக மாறிவிட்டது. இந்த உள் விபரங்களை அறியாத போலீஸ்காரர்கள் மதுமதியைக் குற்றவாளியாக்கி விட்டார்கள்.

போலீஸ்காரர் சொன்னதைக் கேட்ட மதுமதியின் கைகள் நடுங்கின. அவள் தர்மராஜ்ஜின் கைகளை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவரும் பதட்டமானார்…

“சார்… என்ன சார்… சொல்றீங்க… மது ரொம்ப நல்ல பொண்ணு சார்… அது எந்தத் தப்பும் செய்ற பொண்ணு இல்ல… அவசரப்பட்டுடாதீங்க சார்…”

“சும்மா பேசிக்கிட்டே இருக்கறதுல அர்த்தமில்லை பெரியவரே… பிரச்சனைப் பண்ணாமல் இந்தப் பெண்ணை அனுப்பி வைங்க…”

“லாயர்கிட்டப் பேசிட்டு… மதுவை நானே ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வர்றேன் சார்…”

“இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்… நாளைக்குச் சனிக்கிழமை… ஜாமீன் எடுக்க முடியாதுன்னு சொல்லி ஆளைப் பதுக்கப் பார்க்கறீங்களா…?” என்று தர்மராஜ்ஜிடம் கடுப்படித்த போலீஸ்காரர், பெண் போலீஸிடம் திரும்பி…

“ம்ம்ம்… கூட்டிட்டுப் போங்க…” என்றார்.

ஒரு பெண் போலீஸ் மதுமதியின் கையைப் பிடித்து இழுத்தாள். மதுவின் இதயம் தொண்டைக்கு எகிறியது. சிறு வயதிலிருந்தே அவளுக்கு போலீஸ் என்றால் பயம். இப்போது பயத்தில் மாரடைப்பே வந்துவிடும் போலானது…

“தாத்தா…” பயத்தில் குரல் நடுங்க அழைத்தாள்.

“அம்மா… இருங்கம்மா… கர்ப்பமா இருக்கிற பொண்ணும்மா… கொஞ்சம் தயவு பண்ணுங்கம்மா… ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க. சார்… நான் லாயர்கிட்டப் பேசிடறேன் சார்… அப்புறம் கூட்டிட்டுப் போங்க… ப்ளீஸ் சார்…” அந்த முதியவர் தன்னுடைய படிப்பு, அந்தஸ்து, அனுபவம் அனைத்தையும் மறந்துவிட்டு வெளிப்படையாகக் கெஞ்சினார்.

வயிற்றில் குழந்தையோடு போலீஸ் ஸ்டேஷன் சென்று அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்ணால் பார்த்தாலே மதுமதியும் அவள் வயிற்றிலிருக்கும் குழந்தையும் சுருண்டு போய்விடுவார்கள் என்கிற தவிப்பு அவருக்கு.

அவருடைய தவிப்பெல்லாம் காக்கிச் சட்டைகாரர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை…

“நீங்க மெதுவாப் பேசிட்டு வாங்க பெரியவரே… நாங்க இப்போ இந்தப் பெண்ணைக் கூட்டிட்டுக் கிளம்புறோம்…” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, பெண் போலீசைப் பார்த்தார். அந்தப் பெண் மதுமதியின் கையை முரட்டுத்தனமாகப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். மதுமதிக்கு எதிர்ப்பைக் காட்டும் துணிவில்லை.

“தாத்தா… மாமா… மாமாவை நேர்ல போய்ப் பாருங்க தாத்தா…” போலீஸ்காரர்களுடன் நடந்துகொண்டே பேசினாள்.

“முகிலனையா…!” தர்மராஜ் வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் தாத்தா… மாமா என்மேல கோபமா இருக்காங்க தான். ஆனால் இந்தப் பிரச்சனைத் தெரிந்தால்… துடித்துப் போய்விடுவார் தாத்தா. உடனே என்னைக் காப்பாற்றப் பறந்து வந்துவிடுவார் தாத்தா. சீக்கிரம் போங்க… போய் மாமாகிட்டச் சொல்லுங்க…” மதுமதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே போலீஸ் வாகனம் கிளம்பிவிட்டது.

சிறு குழந்தையைப் பொறுத்தவரைத் தன் தந்தைக்கு மிஞ்சிய ‘ஆசகாயச் சூரன்’ யாரும் கிடையாது. தன் தந்தையைவிடப் பலசாலி… தைரியசாலி யாரும் இந்த உலகில் இல்லை என்று ஒவ்வொரு குழந்தையும் கண்மூடித்தனமாக நம்புவது போல்… மதுமதியும் கார்முகிலனுக்கு மிஞ்சிய சக்தி இல்லை என்று நம்பினாள். அவன் நினைத்தால் எதையும் நொடியில் சாதித்துவிடுவான் என்று காரணக் காரியமெல்லாம் யோசிக்காமல் கண்மூடித்தனமாக நம்பினாள். அந்த நம்பிக்கையில்தான் பெரியவரைக் கணவனிடம் அனுப்பிவிட்டு… தன்னை மீட்க அவன் வருவான் என்கிற எண்ணத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு காவல்நிலையத்திற்குச் சென்றாள்.




Comments are closed here.

You cannot copy content of this page