Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 4

அத்தியாயம் – 4

கார்முகிலனுக்கு எவ்வளவு முயன்றும் மதுமதியின் முகத்தை மறக்க முடியவில்லை. அதிர்ந்து அவமானத்தில் சிவந்த அவள் முகம் அவனைப் பழித்தது…

 

‘யார் மீதோ இருக்கின்ற கோபத்தை எதற்கு ஒரு அப்பாவி பெண் மீது காட்டினாய்… ஐந்து நிமிடம் தாமதமாக வகுப்பிற்கு வந்தது… அப்படி என்ன மன்னிக்க முடியாத குற்றமா…? அவள் தாமதமாக வந்ததற்காக அவளைத் தண்டித்தாயா… அல்லது அவள் பெயர் மதுமதி என்பதற்காக அவளைத் தண்டித்தாயா…?’

 

என்னதான் வெவ்வேறு சிந்தனைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும், இறுதியில் அவளிடமே வந்து நிற்கும் அவனுடைய சிந்தனைகள்.

 

‘இவளை இதற்கு முன் எங்குப் பார்த்திருக்கிறோம்…?’ என்ற குழப்பம் மேலிடும். விடைதான் கிடைக்கவில்லை. தன்னுடைய சிந்தனைகளை மாற்றுவதற்காகக் கல்லூரியிலிருந்து வரும் வழியிலேயே பொது நூலகத்திற்குள் நுழைந்து கொண்டான்.

 

அவன் அங்கு எந்தப் புத்தகத்தில் மூழ்க நினைத்தாலும், அவள் முகம் அவனை அனுமதிப்பதில்லை. எரிச்சலானவன் நூலகத்திலிருந்து கிளம்பிவிட்டான். போகிற வழியில் இன்னொரு ஆளைச் சந்தித்தான்…

 

கார்முகிலன் நூலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் தூரத்தில் அந்த அழகிய பெண் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கருகில் அவளுடைய வண்டியும் நின்று கொண்டிருந்தது. ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டான். அவன் மனம் அந்தப் பெண்ணுக்கு உதவச் சொல்லி அவனை உந்தியது. அவன் தன் இருசக்கர வாகனத்தை அவளுக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தினான்.

 

இன்று அடர்பச்சை நிறத்தில் சேலை உடுத்தியிருந்தாள். அன்று போலவே நீளமான கூந்தலை விரித்துவிட்டிருந்தாள்… மல்லிகைச்சரத்தை அதில் சூட்டியிருந்தாள். உதட்டில் லேசான சாயம், கண்களில் மை… வசீகரமான தோற்றம். இதையெல்லாம் தாண்டி அவள் முகம் சோகத்தில் மூழ்கியிருந்ததை அவன் உணர்ந்தான்.

 

‘இந்தச் சோகம் தற்போதைய பிரச்சனையினால் வந்ததா… அல்லது அன்று கோவிலில் அழுது கொண்டிருந்தாளே… அந்தப் பிரச்சனையே இன்னும் தீரவில்லையா…?’ அவன் மனம் அவளுடைய சோகமுகத்தின் காரணத்தை ஆராய்ந்தது. விடை கிடைக்காததால் நேரடியாக அவளிடமே கேட்டான்.

 

“நான் உங்களுக்கு ஏதாவது உதவ முடியுமா…?”

 

அவள், “உங்களால முடியுமா…?” என்று இனிமையான குரலில் கேட்டாள்.

 

“என்ன பிரச்சனைன்னு சொன்னால் முயற்சி செய்வேன்…”

 

“என்னன்னு எனக்கே தெரியல… வண்டி திடீர்ன்னு நின்னுடுச்சு…”

 

“ஓ… சரி கொஞ்சம் நகருங்க… நான் என்னன்னு பார்க்கிறேன்…” என்று சொல்லி அவளை நகரச் சொல்லிவிட்டு வண்டியை ஆராய்ந்தான். சுலபமாகச் சரி செய்யக்கூடிய பிரச்சனைதான். ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிட்டான்.

 

“இப்போ ஸ்டார்ட் பண்ணிப் பாருங்க…”

 

“சரி…” அவள் ஸ்டார்ட் செய்தாள். வண்டி உடனே ஸ்டார்ட் ஆனதில் அவள் முகம் மலர்ந்தது. ஆனால் கண்களில் இன்னும் அதே சோகம்.

 

“நன்றி…” என்று சொன்னவள், அவன் பக்கம் கையை நீட்டி “நான் நீலவேணி… நீலான்னு கூப்பிடுவாங்க…” என்றாள்.

 

அவனும் பதிலுக்குக் கைகொடுத்துவிட்டு “நான் கார்முகிலன்…” என்றான்.

 

“என் வீடு பக்கத்துலதான்… வாங்களேன்… ஒரு கப் காஃபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்…”

 

“நன்றிங்க… இன்னொரு நாள் வர்றேன்…” அவன் சம்பிரதாயமாகச் சொல்ல, அவள் “எப்போ வர்றீங்க… கண்டிப்பா வருவீங்கதானே…? இந்தாங்க என்னோட கார்ட்… இதுல என் வீட்டு அட்ரெஸ் இருக்கு…” என்றாள் பலநாள் பழகியவனிடம் பேசுபவள் போல…

 

“என்னை இதுக்கு முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா…?” அவன் அவளுடைய பேச்சில் கவரப்பட்டவனாகக் கேட்டான்.

 

அதைப் புரிந்துகொண்டவள் லேசாகச் சிரித்தாள். “இல்லங்க… இதுக்கு முன்னாடி உங்களை எனக்குத் தெரியாது. ஆனா உங்களைப் பார்த்தா நல்ல குணம் உள்ளவரா தெரியுது… அதனால் தான் நம்பி வீட்டுக்குக் கூப்பிட்டேன்…” என்றாள் சமாளிப்பாக.

 

“ஓ… ஆனா உங்களை நான் இதுக்கு முன்னாடியே ஒருமுறை பார்த்திருக்கிறேன். சித்தி விநாயகர் கோவில்ல… இரண்டு வாரத்துக்கு முன்னாடி… ”

 

“ஓ… நான் எப்பவும் அந்தக் கோவிலுக்குப் போறதுண்டு… நீங்களும் ரெகுலரா வருவீங்களா…?”

 

“இல்ல… இல்ல… அன்னிக்கு வேண்டியவர் ஒருத்தரக் கூட்டிட்டு வந்தேன். மற்றபடி சாமி… பூதம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை…”

 

“ஓ… ஆனா நான் என் கஷ்டத்தை எல்லாம் கடவுள்கிட்ட தான் ஒப்படைப்பேன்…”

 

“தெரியும்…”

 

“தெரியுமா… எப்படி…?” அவள் கண்களை அகல விரித்துக் கேட்டாள்.

 

“பார்த்தேனே…”

 

“என்ன… என்ன பார்த்தீங்க…?”

 

“அன்னிக்கு கோவில்ல… ஏதோ கடவுள்கிட்ட சொல்லி அழுதுட்டு இருந்தீங்களே… நம்ம பிரச்னையைத் தீர்க்க நாமதான் முயற்சி செய்யணும். அதை விட்டுட்டு கடவுள்கிட்ட போயி நின்னு அழுதா எல்லாம் சரியாகிவிடுமா…? சுத்த பைத்தியக்காரத்தனம்…” அவன் உரிமையுடன் அவளிடம் கோபம் காட்டினான்.

 

“என் பிரச்னையைக் கடவுளைத் தவிர வேறு யாராலும் சரி செய்ய முடியாது… அவரும் கூட இன்னும் எனக்குக் கருணை காட்டவில்லை…” அவள் கண்கள் கலங்கின.

 

பெண் என்றால் பேயும் இரங்கும்… அதுவும் அழகான பெண் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படியிருக்க கார்முகிலன் ஒரு சாதாரண ஆண்மகன். அவன் அந்தப் பெண்ணிற்கு இரக்கப்படுவது சகஜம் தானே…! அவனும் இரக்கப்பட்டான்.

 

அவனுக்கு அவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அவளுடைய பிரச்சனை என்ன என்று கேட்டு அவளுக்கு உதவவேண்டும் போல் தோன்றியது… அந்த நொடி சட்டென விழித்துக் கொண்டான்.

 

‘ச்ச… என்ன இது…! சற்று நேரத்திற்கு முன்பு பார்த்து, பேச ஆரம்பித்த பெண்ணுடன் இவ்வளவு இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்… உரிமையுடன் கோபமெல்லாம் படுகிறோம்… இவளுடைய பிரச்சனை என்னவாக இருந்தால் நமக்கென்ன…?’ தன்னைத் திடப்படுத்திக் கொண்டவனாய் எதுவும் பேசாமல் நின்றான்.

 

“சாரி முகிலன்… நான் உங்களைச் சங்கடப்படுத்திட்டேன். உங்களுக்கு நேரமாகப் போகுது, நீங்க கிளம்புங்க…” அவள் அவனுடைய சிரமத்தைக் கருத்தில் கொண்டு பேச… அவனுக்கு அவள் மீது ஒருவித அன்பு ஏற்பட்டது. இயல்பாகவே அவனுக்குள் இருக்கும் இரக்கக் குணம் மேலிட்டது…

 

விழித்துக் கொண்ட மூளையை, அந்த இரக்க மனம் அதட்டி அடக்கிவிட்டது. அதனால் அவன் அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வந்தான்.

 

“என்னால உங்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் உங்கள் பிரச்னையை என்னிடம் சொல்லுங்கள்… என்னால் முடிந்த உதவியை உங்களுக்குக் கட்டாயம் செய்கிறேன்…” என்றான் முழுமனதாக.

 

“நீங்க இப்படிச் சொன்னதே எனக்குப் போதும் முகிலன்… உங்க உதவி தேவைப்பட்டால் கட்டாயம் சொல்கிறேன்… கிளம்புறேன்… நீங்க இந்தபக்கம் மறுபடியும் வரும்போது என் வீட்டுக்குக் கண்டிப்பா வரணும்…” என்று சொல்லிவிட்டு அவள் விடைபெற்றுக் கொள்ள அவனும் தன் வண்டியைக் கிளப்பினான்.

 

# # #

 

ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கெல்லாம் மதுமதி வகுப்பறைக்குள் இருந்தாள். அவளோடு அவள் தோழி ஜீவிதாவையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள். நேற்று நடந்த பாடத்தை ஜீவிதா விளக்க… அவள் எடுத்திருந்த குறிப்புகளைத் தன்னுடைய புத்தகத்திலும் குறித்துக் கொண்டாள் மதுமதி. அவன் இரண்டு மணிநேரம் விளக்கமாக எடுத்த பாடத்தை, ஜீவிதா அரை மணிநேரத்தில் சுருக்கமாக அவளுக்குத் தெரிந்த அளவில் விளக்கிவிட்டாள்.

 

“ஏன்டி மது… அந்தக் கருவாப்பயலுக்கு என்ன கொழுப்புடி…?” பாடம் முடிந்ததும் கதையை ஆரம்பித்தாள் ஜீவிதா.

 

“யாரடி சொல்ற…?” மதுமதி புரியாமல் கேட்டாள்.

 

“அதான்டி… நெடுநெடுன்னு… கன்னங்கரேல்னு கருவாடு விக்கிறவன் மாதிரி இருந்துகிட்டு… நம்ம காலேஜ்ல, நம்ம கிளாஸ் ரூம்ல நின்னுகிட்டு… நம்மளையே உள்ள வரக் கூடாதுன்னு சொன்னானே…!”

 

“நம்மள யாருடி உள்ள வரக் கூடாதுன்னு சொன்னது… நாம உள்ள தானே இருக்கோம்…”

 

“ஆமா… உள்ள இருக்கோம்… வெள்ளச் சேலையும், ஒரு தட்டுல களியையும் கொண்டுவரச் சொல்லு… யாருடி இவ…? நம்மன்னா நாம இல்ல… நீதான்…! உன்னைத்தான்… புரியுதா…? உன்னைத்தானே அந்த ஆளு நேத்து உள்ள வரக் கூடாதுன்னு சொன்னாரு… அதனாலதானே நீ மட்டும் எட்டுமணிக்கு வந்ததோட இல்லாம, என்னையும் வரச்சொல்லிக் கழுத்தறுத்த…”

 

“ஹேய்… நீ நம்ம ‘தெர்மோ டைனமிக்ஸ்’ சாரையா சொல்ற…?”

 

“ஆமா நம்ம சாரு… நாம காசு குடுத்து வாங்கி வச்சிருக்கோம் பாரு… யாருடி இவ…! அந்த ஆளே… நம்ம தர்மராஜ் சாருக்குக் கால் உடஞ்சிடுச்சுன்னு அவருக்குப் பதிலா வந்து, சும்மா ‘தத்தக்கா பித்தக்கா’ன்னு உளறிக்கிட்டு இருக்கு… அதைப் போயி நம்ம சார்… கும்ம சாருன்னு… உன்னை நாலு கும்மு கும்முனாதான்டி நீ சரிவருவ…”

 

“ஏன்டி அவர் மேல உனக்கு இவ்வளவு கோவம்…?”

 

“பின்ன… இருக்காதா… ரெண்டு மணிநேரம் கிளாஸ் எடு, கையில காச (சம்பளம்) பிடின்னா… அதை மட்டும் செஞ்சுட்டுப் போக வேண்டியதுதானே… அதை விட்டுட்டு, ரெண்டு மணிநேரம் கிளாஸ் எடுத்துட்டு நாலு மணிநேரம் கேள்வி கேட்குதுடி…”

 

“கேட்குதா…! என்னடி அவரை அஃறிணை ரேஞ்சுக்கு பேசுற… பாவம்டி…”

 

“பாவம் புண்ணியமெல்லாம் பார்க்குற… நேத்து உன்னை அந்த ஆள் அவமானப்படுத்தினது மறந்து போச்சா…?”

 

“நான் பண்ணினதும் தப்புதானே ஜீவி…” என்று மதுமதி நியாயம் பேச, ஜீவிதா அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.

 

“என்னடி இப்படிப் பார்க்குற…?”

 

“என்னடி… கருவண்டுக்கு ரொம்பதான் சப்பக்கட்டு கட்டுறமாதிரித் தெரியுது…”

 

“ச்சீ… ச்சீ… அவர் என்ன அவ்வளவு கறுப்பாவா இருக்காரு? லைட்டா… டார்க்கா இருக்காரு… அதுக்குப் போயி…” – மதுமதி இழுக்க,

 

“ஐயோ… அம்மா… தாங்கலடா சாமி…” – ஜீவிதா சத்தம் போட்டதில் மதுமதி பயந்துவிட்டாள்.

 

“என்னடி… என்ன ஆச்சு…?”

 

“உன்னையெல்லாம் நம்பி… களத்துல இறங்குறவன் செத்தான்டி…” கண்களால் மதுமதியை ஏற இறங்கப் பார்த்து, உதட்டைச் சுழித்து… அவள் சொன்னவிதத்தில் மதுமதி வாய்விட்டுச் சிரித்தாள்.

 

அந்த நேரம் வருப்பறைக்குள் நுழைந்த கார்முகிலன் ‘தன்னை வைத்து அங்கு ஒரு காமெடி தர்பார் நடக்கிறது’ என்று தெரியாமல் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முகத்துடன் மதுமதியின் கபடமற்ற சிரிப்பைக் கவனித்தான்.

 

‘இந்த முகத்தைதான் நேற்று வருத்தப்பட வைத்துவிட்டோம்’ என்று நினைக்கையில் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.

 

சில கல்லூரி மாணவர்களைப் போல் ‘நேற்று தன்னை வருத்தியவன் இவன்…’ என்கிற கோபம் சிறிதும் இல்லாமல் மதுமதி அவன் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை முதல் வரிசையில் அமர்ந்து ஆர்வமாகக் கற்றுக் கொண்டதுடன், இடையிடையில் அவனிடம் சந்தேகம் கேட்டுத் தெளிவாகிக் கொண்டது இதமாக இருந்தது.

 

‘பரவாயில்லை… இந்தப் பெண் நன்றாகப் படிக்கக்கூடிய பெண் தான்… அதோடு நேற்று நடந்ததைப் பற்றி நினைவே இல்லாதவள் போல நடந்து கொள்கிறாளே…!’ என்று நினைத்து வியந்தவன் அவளிடம் கடுமை காட்டாமல் நடந்து கொண்டான். ஓரிரு முறை அவன் முகத்தில் புன்னகை கூட வந்தது…

 

அவனுடைய சிரித்த முகம் அவளை வசீகரித்தது. அதற்குமேல் அவளால் பாடத்தைக் கவனிக்க முடியவில்லை. அவள் அவன் முகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்தாள்.

 

‘இவனை இதற்கு முன் எங்கு… எப்போது பார்த்தோம்…’ அவளுக்குப் புலப்படவில்லை. ஆனால் அவனுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்தாள்.

 

அவன் முழுக்கை சட்டையைப் பாதிவரை அலட்சியமாக மடக்கிவிட்டுக் கொண்டு சாக்பீஸை கையில் எடுப்பது, ஒரு கையைப் பின்னால் மடக்கிக் கொண்டு மறு கையால் போர்டில் எழுதுவது, இரண்டு கையையும் அசைத்து அசைத்து விளக்கங்கள் சொல்வது, இடையிடையே தாடையைத் தடவுவது என்று அவனுடைய செயற்கை நடை அனைத்தையும் ரசித்தாள். அவளை அறியாமலேயே அவனுடைய ஒவ்வொரு செய்கையும் அவளுக்குள் பதிவாகிக் கொண்டிருந்தது. அவள் மனம் அவனிடம் விழுந்து கொண்டிருந்தது…

 




Comments are closed here.

You cannot copy content of this page