உயிரைத் தொலைத்தேன் – 45
5474
0
அத்தியாயம் – 45
மதுமதிக்குக் குழந்தை பிறந்து ஒருவாரம் முடிந்துவிட்டதால் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். உடல்நிலை ஓரளவு தேறிவிட்டாலும் மனம் அமைதியடையவில்லை அவளுக்கு. குழந்தையின் பால்முகம் அவளுடைய மனக்காயத்தை இதமாக வருடுவதால், இரவும் பகலும் கண்விழித்து அதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். மருத்துவமனையிலிருந்த ஒரு வாரமும் அவள் உறக்கத்தைத் தொலைத்துவிட்டதால், அவளுடைய மனஅழுத்தம் அதிகமாகிவிட்டதை அறியாமல் உடல்நிலையை மட்டும் சோதித்துவிட்டு மருத்துவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவு, அவள் நடந்து கொண்ட விதம் அனைவரையும் நடுங்கச் செய்துவிட்டது. நாள்முழுக்க குழந்தையையும், மகளையும் கவனித்துக் கொண்டதோடு வீட்டு வேலைகளையும் செய்து களைத்துப் போயிருந்த கௌசல்யா கண்ணயர்ந்துவிட்டாள். வீரராகவன் எப்பொழுதும் போல் அவருடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். உறக்கமே வராமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்த மதுமதிக்கு, யாரோ தலையணையைக் கொண்டு முகத்தை அழுத்தி மூடுவது போல் மூச்சு முட்டியது… வியர்த்துக் கொட்டியது. பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் சிறு குறட்டை ஒலி விகாரமாகக் கேட்டு அவளைப் பயப்படுத்தியது. குழந்தையைத் தூர தூக்கி வீசிவிட வேண்டும் போல் ஒரு வெறி உண்டானது.
தன்னுடைய இயல்புக்கு மீறிய அளவு கோபமும், ஆக்ரோஷமும் தனக்குள் உண்டாவதை அவளால் உணரமுடிந்தது. இனி அந்த இடத்தில் இருந்தால்… தன்னால் தன் குழந்தைக்கே ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற பயத்தில், தலைதெறிக்க அந்த அறையிலிருந்து வெளியே ஓடி வந்தவள் நிற்காமல் வீட்டை விட்டு… வீட்டு வளாகத்தைவிட்டு ஓடிக் கொண்டே இருந்தாள்.
அவள் கட்டிலிலிருந்து இறங்கிய வேகத்தில் குழந்தையை இடித்துவிட்டதில், குழந்தை வீரிட்டு அழுதது. அழுகுரல் கேட்டு கௌசல்யா கண்விழித்த போது, மது வீட்டிவிட்டு வெளியே ஓடிக் கொண்டிருந்தாள்.
“ஏய்… மது… நில்லும்மா… எங்க போற…? மது… மது…!” குழந்தையைக் கையில் தூக்கியபடி கத்திய தாயின் குரல் அவள் காதில் விழவே இல்லை… அவள் மதில்சுவரைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தாள்.
பதட்டமடைந்த கௌசல்யா, ஓடிச் சென்று கணவனை எழுப்பினாள். அவரும் பதட்டமடைந்து எழுந்து கார் சாவியை எடுத்துக் கொண்டு விரைந்து வந்தார். கையில் குழந்தையுடன் கௌசல்யா காரில் ஏறிய அடுத்த நொடி, வீரராகவன் மதுமதி சென்ற திசையை நோக்கி காரைச் செலுத்தினார்.
கார் ‘ஹெட் லைட்’ வெளிச்சத்தில், தூரத்தில் ஓர் உருவம் விழுந்து கிடப்பது தெரிந்தது. கார் இன்னும் வேகமாக விரைந்து அந்த உருவத்திற்கு அருகே நின்றது.
“மது…” என்கிற கதறலுடன் கௌசல்யா இறங்கி மகளிடம் ஓட… பாட்டியின் சத்தத்தில் பயந்துவிட்ட குழந்தை மீண்டும் வீறிட்டது.
குழந்தைக்காகத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திய கௌசல்யாவிற்கு, குப்புற விழுந்துகிடந்த மகளைப் பார்க்கும்போது நெஞ்சையடைத்தது. வீரராகவன் மதுமதியைப் புரட்டிப் பார்த்தார். நெற்றியில் சாலையில் கிடந்த கல் குத்திக் காயம்பட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
கோர விபத்தில் அடிபட்டுக் குற்றுயிராக வருபவர்களுக்கு எந்தச் சலனமுமில்லாமல் வைத்தியம் பார்க்கும் மருத்துவர், மகளின் நெற்றியில் வடியும் இரத்தத்தைப் பார்த்து அழுதார்… கண்ணீர் சிந்தினார்.
# # #
மதுமதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். நெற்றியில் பட்டக் காயத்தைத் தவிர, உடலில் வேறு எந்தக் காயமும் படாததால் ஆபத்தில்லாமல் போனது. குறிப்பாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருந்த இடத்தில், காயம்பட்டிருந்தால் சிரமமாகியிருக்கும்… நல்லவேளை, அப்படி எதுவும் ஆகவில்லை.
அவளைத் தேற்றுவதில் மனநல மருத்துவரின் பங்கு அதிகமாக இருந்தது. அவர் அவளுக்கு மனநோய் என்றார். அதைக் குணப்படுத்த மருந்துகள் கொடுத்தார். தூக்கத்திற்கு மாத்திரைக் கொடுத்தார். அவள் விழித்திருக்கும் நேரங்களில், அவளோடு அதிகம் பேசிக் கொண்டிருக்கும்படி சொன்னார். அவள் விருப்பப்படி அவளை இருக்கவிடச் சொன்னார்.
“பெரிதாகப் பயப்பட எதுவும் இல்லை.. இது பேறுகாலத்தில் சில பெண்களுக்கு ஏற்படுவதுதான். இந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிகமான மனஅழுத்தம் ஏற்பட்டதால் அடுத்த நிலைக்குப் போய்விட்டது. உடனிருப்பவர்கள் அனுசரணையாக இருந்தால் விரைவாகவே சரியாகிவிடும். கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
அவர் கொடுத்த மாத்திரைகள் வேலை செய்தன. அவள் நன்றாக உறங்கினாள். மனமும் தைரியமாக இருந்தது. அவளால் சிந்திக்க முடிந்தது. நிதானமாகத் தந்தையிடம் பேச்சை ஆரம்பித்தாள்.
“அப்பா…”
“சொல்லும்மா…”
“அவர் விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.” முதல்முறை அந்த மனுவைப் பார்த்தபோது எழுந்த துக்கமோ, ஏமாற்றமோ, வருத்தமோ இப்போது இல்லை. மனம் துடைத்து வைத்த கண்ணாடிப் பாத்திரம் போல் கனமாக இருந்தாலும், எந்த உணர்வுகளும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.
“தெரியும்மா… அந்த பேப்பர் என்கிட்டதான் இருக்கு…”
“ஒ…”
சிறிதுநேரம் கனத்த அமைதி. பிறகு அவளே பேச்சை ஆரம்பித்தாள்…
“விவாகரத்துக்குச் சம்மதிக்கிறதா பதில் அனுப்பணும்பா…” சலனமில்லாமல் சொன்னாள்.
“சம்மதிக்கிறாயா…! ஏனம்மா…?”
“அவர் கேட்டுவிட்டாரே..ப்பா… எப்படிக் கொடுக்காமல் இருக்கமுடியும்…?”
“அவன் கேட்டால் எதை வேண்டுமானாலும் கொடுத்துவிட வேண்டுமா…? அவனை எதிர்த்துப் போராடும் அளவிற்கு உன்னிடம் முதுகெலும்பு இல்லாமல் போய்விட்டதா…?”
‘அன்புக்கும்… காதலுக்கும்… அடிமையானவர்களிடம் முதுகெலும்பு இருப்பதில்லைப்பா… அதோடு அவர் கேட்டிருப்பது என்னிடமிருந்து விடுதலை…! இதற்குமேலும் அவரை கட்டாயப்படுத்தி என்னோடு பிடித்து வைத்துக்கொள்ள என்னால் முடியாதுப்பா…”
அவர் எதுவும் பேசாமல் மகளை ஆழ்ந்து நோக்கினார். காதலுக்கு அடிமையானவர்களிடம் முதுகெலும்பு இருப்பதில்லையாம்…! உண்மை தானோ…? கௌசல்யா பன்னிரண்டு ஆண்டுகள் மௌனவிரதம் இருந்து அவரைச் சித்ரவதை செய்த போதும், அவர் பொறுமையாக வளைந்து கொடுத்தது… அவள் மீது கொண்ட காதலால் தானே…!
அவர் மகளுக்கு அறிவுரைக் கூறும் நிலையில் இல்லை… மகளின் விருப்பத்தைப் பதில் பேசாமல் ஏற்றுக் கொண்டார்.
“சரிம்மா… உடனே ஏற்பாடு செய்கிறேன்… நீ நிம்மதியா இரு…” என்று மகளுக்குத் தைரியம் சொன்னவர், சொன்னதைச் செய்து முடித்தார்.
# # #
கார்முகிலனின் கண்கள் கோபத்தில் ஜொலித்தன… அவனுடைய உஷ்ண பார்வையில் கையிலிருக்கும் காகிதத்தில் தீ பற்றிக் கொள்ளும் போலானது.
‘நான் ஒரு நோட்டீஸ் அனுப்பினால்… உடனே பதிலுக்கு நீயும் ஒன்று அனுப்பிவிடுவாயா…! என்னை நிரந்தரமாகப் பிரியும் துணிச்சல் வந்துவிட்டதா…! அப்படியானால் இத்தனை நாள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்ததெல்லாம் வெறும் வேஷமா…! ஆமாம் வேஷம் தான்… என்னைச் சமாதானம் செய்வதன் மூலம் உன் பெற்றோரைச் சேர்த்து வைப்பதற்காகப் போட்ட வேஷம்…! மோசக்காரி… ராட்சசி… துரோகி… என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டாயேடி…’ அவன் மனம் எரிந்தது. மதுமதி விவாகரத்துக்குச் சம்மதம் தெரிவிப்பதாகக் கையெழுத்திட்டு அனுப்பியிருந்த காகிதத்தைக் கசக்கித் தூக்கியெறிந்தான்.
கட்டுக்கடங்காத கோபத்தை வெளிப்படுத்தும் வழித் தெரியாமல் திணறினான். குருட்டுத்தனமான யோசனையில் பீரோவிலிருக்கும் அவளுடைய துணிமணிகள், பொருட்கள் அனைத்தையும் அவளிடம் தூக்கி எறிவதன் மூலம் அவனுடைய கோபத்தை வெளிப்படுத்த நினைத்தான்.
பீரோவை திறந்து அதிலிருந்த பொருட்களையும், துணிகளையும் ஒரு பெரிய சூட்கேசில் அள்ளித் திணித்துக் கொண்டிருந்தான். இரண்டாவது வரிசையில் உள்ள துணிகளை வாரும் போது, புடவைகளுக்கு இடையிலிருந்து ஒரு டைரி பிரிந்து விழுந்தது.
‘உன்னிரண்டு தோளத் தொட… உன் கழுத்தில் மாலையிட…
என்ன தவம் நானும் செய்தேன் மாமா…!’
டைரியின் விரிந்து கிடந்த பக்கத்தில் மதுமதியின் முத்தான கையெழுத்தில் மின்னிய வார்த்தைகள் அவன் கண்களைப் பணிக்கச் செய்தன…
‘இவ்வளவு உருகுறவ எதுக்குடி டைவோர்சுக்குச் சம்மதம் சொன்ன…?’ எரிச்சலும் காதலுமாக அந்த டைரியைக் கையில் எடுத்தான். டைரியின் தாள்களுக்கிடையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் நழுவி வெளியே வந்தது. அவனும் அவளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்… நெருக்கமான படம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு புகைப்படத்தில் அவள் முகத்தைப் பார்த்தவனின் மனம் அசைந்தது…
அனிச்சையாகக் கைகள் அடுத்தப் பக்கத்தைப் புரட்டின… அவர்களுடைய திருமணத்தன்று எழுதியிருந்தாள்.
‘இருபத்தியிரண்டு ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக்கொண்டிருந்த உடல் கூட்டிற்கு உயிர் கிடைத்துவிட்டது…’
இரண்டு பக்கங்களுக்குப் பிறகு…
‘சொர்க்கம் வேறெங்கும் இல்லை… மாமாவோடு நான் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்குச் சொர்க்கம்தான்…’ என்று குறிப்பிட்டிருந்தாள்.
பக்கங்களைப் புரட்டினான்…
‘அம்மா அப்பாவை… எனக்குப் பிடிக்கிறது… மாமாவிற்குப் பிடிக்கவில்லை… மாமாவிற்குப் பிடிக்காதவர்களை எனக்கும் பிடிக்கக்கூடாது… ஒதுக்கிவிட்டேன்…’
அவன்மீது அவள் வைத்திருந்த அபிமானம், முதல் இடியை அவன் தலையில் இறக்கியது…
‘அதிகாலை மூன்றுமணிக்கு எழுந்து சென்ற மாமா… இரவு பத்துமணியாகியும் வீட்டிற்கு வரவில்லை… ஜீவிதாவின் ஃபோன் தான் வந்தது. நான் என் வாழ்க்கையை நீலவேணி என்னும் பெண்ணிடம் தொலைக்கப் போகிறேனாம்… என் வாழ்க்கை மாமாவின் கையில் இருக்கிறது… அதை எப்படி அவர் தவறவிடுவார்…! பைத்தியக்காரி… சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறாள்…’
அவன்மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை அவனைக் குத்தியது…
‘இரவாகியும் கல்லூரியிலிருந்து மாமா வீடு திரும்பவில்லை… ஃபோன் செய்தால் ‘சுவிட்ச் ஆஃப்’ என்று பதிவு செய்யப்பட்ட குரல் சொன்னது. மனம் பதறியது… நீண்ட நேர யோசனைக்குப் பிறகு ஜீவிதாவை அழைத்து விபரம் கேட்டேன். மாமா நீலவேணியின் வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். மாமாவிற்கு ஆபத்து இல்லை என்று அமைதியடைந்தேன்… ஆனாலும் அடுத்தவர்களின் பார்வையில் மாமா தவறானவராகத் தெரியக்கூடாதே என்கிற கவலை ஏற்பட்டுவிட்டது…’
அவன்மீது அவள் வைத்திருந்த அக்கறை அவனை உறுத்தியது…
‘இன்று மாமாவிற்கு என்மீது கோபம்… நான் சமைத்த உணவைச் சாப்பிடாமல் சென்றுவிட்டார். எனக்குப் பசித்தது, ஆனால் சாப்பிடவில்லை… மாமா பசியோடு சென்றுவிட்ட பிறகு என்னால் எப்படிச் சாப்பிட முடியும்…?’
அவன் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது… அவள் அவனிடம் காட்டிய தாயன்பு அவனை உருக்கியது.
‘உலகப் பெண்கள் அனைவரை விடவும் நான் உயர்ந்து நிற்கிறேன்… இயற்கையே என்னைக் கண்டு அஞ்சுகிறது. காரணம்… என் மாமாவின் வாரிசு என் வயிற்றில் உதித்திருக்கிறது… என்னைவிட யார் உயர்ந்தவர்…! என்னைவிட யார் அதிர்ஷ்டசாலி…!’
அன்றைய அவளுடைய எழுத்தில் கர்வம் மின்னியது… தாய்மையடைந்துவிட்ட கர்வமா… அல்லது கார்முகிலனின் குழந்தைக்குத் தாயாகிவிட்டோம் என்கிற கர்வமா…!
அவன் மீது அவள் கொண்டிருந்த காதல் அவனைத் திகைக்க வைத்தது.
‘நீலவேணி என்னும் பெண்ணை மாமா வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வரப் போகிறாராம்… எனக்குப் பிடிக்கவில்லை… மாமாவுக்குப் பிடித்திருக்கிறது… மாமாவுக்காக மனப்பூர்வமாகச் சம்மதித்தேன்…’
அவன் மீது அவள் கொண்டிருந்த கரிசனம் அவனைக் கரைத்தது…
‘நீலவேணியின் வருகை என்னைப் பாதிக்கிறது… எனக்கும் மாமாவிற்குமான நெருக்கம் குறைகிறது… எங்களுக்கு இடையில் நீலவேணி நிற்கிறாள். மாமாவிற்குத் தெரிந்தால் சங்கடப்படுவார்… நான் தெரிவிக்கவில்லை. பொறுத்துக் கொண்டேன்… மாமாவிற்காக…’
அவன் மீது அவள் கொண்டிருத்த காதலும், கரிசனமும், பாசமும், நம்பிக்கையும், அக்கறையும், அபிமானமும் அவனை உருக்கிவிட்டது. அவன் மனம் ததும்பிக் கொண்டிருந்த போது அடுத்தப் பக்கத்தைப் புரட்டினான்… படித்தான்…
‘இன்று எங்களுடைய படுக்கையறையில் நீலவேணியைப் பார்த்தேன். மாமாவின் சட்டையை அவள் அணிந்திருந்தாள்… மாமாவின் படத்திற்கு முத்தமிட்டாள். எப்பொழுதும் போல், என்னால் அமைதியாக விலகிச் செல்ல முடியவில்லை… வாக்குவாதம் வந்துவிட்டது. அவள் மாமாவைக் காதலிப்பதாகச் சொன்னாள். அவரை நான் அவளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். நான் நீலவேணியை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னேன்… அவள் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றுவதாகச் சபதம் செய்தாள். மாமாவை எனக்கெதிராகத் திருப்பப் போவதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள். மாமாவிடம் தான் சென்றிருப்பாள்… என் மாமாவை எனக்குத் தெரியாதா…! கடவுளே இறங்கி வந்து என்னைக் குற்றம் சொன்னாலும் மாமாவால் என்னை விலக்க முடியாது… எங்களுடைய காதல் எங்களை விலகவிடாது…’
வானமே இடிந்து அவன் தலையில் விழுந்துவிட்டது போல் நொறுங்கிப் போனான். சரியாகத்தான் படித்தோமா என்கிற சந்தேகத்தில் மீண்டும் ஒருமுறை படித்தான்… அவன் படித்ததில் பிழையில்லை. டைரி கையிலிருந்து நழுவியது… உலகம் சுற்றுவதை நிறுத்திவிட்டது… இதயம் துடிக்க மறந்துவிட்டது… ‘கடவுளே…!’ என்று தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.
Comments are closed here.