உயிரைத் தொலைத்தேன் – 8
4955
0
அத்தியாயம் – 8
நீலவேணி நிலவை வெறித்தபடி மொட்டை மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவள் மனம் வெகுவாய்ப் புண்பட்டிருந்தது.
‘அந்த மனிதரை நல்ல மனிதன் என்று நினைத்துச் சந்திக்கச் சென்றது எவ்வளவு பெரிய தவறு… அவர் நம்மைப் பார்த்த பார்வையில் கொஞ்சம் கூட மரியாதையே இல்லையே… படிக்காத பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா…? படித்த திமிர்…!’ அவள் மனம் புகைந்து கொண்டிருந்தது. சைலன்ட்டில் போடப்பட்டிருந்த அவளுடைய கைப்பேசி கைப்பிடிச் சுவற்றில் அமர்ந்திருந்தபடி ஒளிர்ந்தது. அழைப்பது யார் என்று பார்த்தாள். கார்முகிலனின் பெயர் திரையில் வந்தது.
“ஹலோ…” என்றாள் கைப்பேசியை எடுத்துக் காதில் வைத்து. அவளுடைய குரலில் சோகம் இழையோடியது.
“நீலா…”
“ம்ம்ம்… சொல்லுங்க…”
“என்ன ஆச்சு…?”
“ஒண்ணும் இல்லையே…” அவள் அவசரமாக மறுத்தாள்.
“நீலா… சார் அப்படிப் பேசிட்டாருன்னு வருத்தப்படுறியா…?”
“ச்ச.. ச்ச… அவர் என்னோட நல்லதுக்குத் தானே சொன்னார். அதில் என்ன தவறு இருக்கு…?”
“பின்ன ஏன் நீ ஒருமாதிரிப் பேசுற…? உன்னோட குரல் எப்பவும் போல இல்லையே…!”
“முகிலன்… நீங்கல்லாம் ரொம்பப் படிச்சவங்க… என்ன மாதிரிப் படிக்காதவங்க கூடப் பழகுறது உங்களுக்கு அவமானமா இருக்குமா…?” அவள் பாவமாகக் கேட்டாள்.
“நீலா… என்ன பேசுற நீ…?” அவன் அவளை அதட்டினான். அவனுடைய அதட்டல் அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
“எனக்குப் படிப்பே வரல முகிலன்… ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது டீச்சர் அடிச்சிட்டாங்க… ஸ்கூலுக்குப் போக முடியாதுன்னு சொல்லி அடம்பிடிச்சு வீட்டிலேயே இருந்துட்டேன். அம்மாவும் பாட்டியும் கூட என்னைக் கட்டாயப்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பல…” அவள் வருத்தமாகச் சொன்னாள்.
“உன்னோட அப்பா கூட எதுவும் சொல்லலியா…?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“அ… அப்… அப்பா… அவர் அப்போவே இல்ல…” அவள் தட்டுத்தடுமாறிப் பதில் சொன்னாள்.
அவள் தந்தையைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அவள் தடுமாறுகிறாள் என்பதைக் கவனித்தவன் ‘அவர் ஒரு மோசமான ஆளாக இருந்திருக்க வேண்டும்… அதனால்தான் இவள் அவரைப் பற்றிப் பேசவே தயங்குகிறாள்’ என்று நினைத்துக் கொண்டான்.
“அப்பவே எனக்குப் படிக்க முடியல… இப்பப் போய்ப் படிக்கச் சொன்னால் என்னால் எப்படி முடியும்…?” என்று அவனிடமே கேட்டாள்.
“அவர் அவருடைய எண்ணத்தைச் சொன்னார். அதற்காக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று உனக்கு என்ன கட்டாயம் நீலா… ஃப்ரீயா விடு…” – அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“………………….” அவள் எதுவும் சொல்லவில்லை.
“ஆனா சார் சொன்னதுல ஒரு பாயிண்ட் இருக்கு நீலா… நீ வீட்டுல சும்மா இருக்கக் கூடாது… எதாவது செய்யணும்… அப்பதான் உன் மனசு நல்லா இருக்கும். உனக்கு மேக்கப் பண்ணுறது ரொம்பப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்… நீ வேணும்னா ஒரு பியூட்டிஷியன் கோர்ஸ் படியேன்…” என்று ஐடியா கொடுத்தான்.
வேறு வழியில்லாமல் அரைமனதாக “சரி…” என்று ஒப்புக் கொண்டாலும் மூன்றுமாத கோர்ஸில் அடுத்த நாளே சேர்ந்துவிட்டாள்.
# # #
சனிக்கிழமை பிற்பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் மாலை ஆறுமணி போல் வானம் இருட்டியிருந்தது, காற்றுப் பலமாக அடித்தது… மழைவரும் போலிருந்தது. கார்முகிலன் வகுப்பை முடித்துக் கொண்டான்.
“சரி… இன்னிக்குப் பாடம் போதும்… மீதியை நாளைக்குப் பார்க்கலாம்…”
“தேங்க் யு சார்…” மாணவர்கள் வகுப்பறையிலிருந்து வெளியேறினார்கள். சனிக்கிழமை என்பதால் அந்த வகுப்பு மாணவர்கள் மட்டும் தான் கல்லூரியில் இருந்தார்கள். பேருந்தில் செல்பவர்கள் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றுவிட்டார்கள். வண்டியில் வந்திருந்த இரண்டு, மூன்று மாணவிகளோடு சேர்ந்து மதுமதியும் அவளுடைய வண்டியை எடுக்கச் சென்றாள். ஒவ்வொருவராக வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள். கடைசியாக மதுமதி வந்தாள். இரண்டு மூன்று தூறல் போட்டது… அவள் ஆக்ஸிலேட்டரை முடுக்கினாள். வண்டி வேகமெடுத்தது… அதைவிட வேகமாகச் சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது. கூடவே கண்களைக் கூசச் செய்யும் மின்னலும்… பயங்கர இடியும் அவளை அதிரச் செய்தன…
அவளால் வண்டியைக் கையாள முடியவில்லை, பயத்தில் உடல் நடுங்கியது.. அவள் இன்னும் கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறவில்லை… வண்டியின் வேகத்தைக் குறைத்துவிட்டு, சுற்றிலும் பார்த்தாள். பக்கத்தில்தான் கேண்டீன் இருந்தது.
அவள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கேண்டீனுக்குள் நுழைந்தாள். கைக்குட்டையை வைத்து முகத்தையும் கையையும் துடைத்துக் கொண்டாள். அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் உதவியால் நனைந்திருந்த ஆடை கொஞ்சம் உலர்ந்தது. சூடாக ஒரு டீயை வாங்கிக் கொண்டு, ஓரமாகக் கிடந்த மேஜையைத் தேர்ந்தெடுத்து அங்குப் போய் அமர்ந்து கொண்டாள்.
குளிருக்கு… சூடான டீ இதமாக இருந்தது. தூரத்தில் கார்முகிலனின் உருவத்தைப் பார்த்தது, அதைவிட இதமாக இருந்தது. அவன் கேண்டீனை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான். அவளுக்குள் படபடப்பு உண்டானது. லேசாக ஈரமாக இருந்த தன் ஆடையை மீண்டும் ஒருமுறை சரி செய்து கொண்டாள்.
தனக்கு தேவையானதை வாங்கியப் பிறகு எங்கு அமரலாம் என்று அந்த ஹாலைக் பார்வையால் அளந்தவனின் கண்கள் பிரகாசமாயின. கடைக்கோடியில் சுவற்றோடு சுவராக ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவள் அவனைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப் பார்வையை விலக்கிக் கொண்டாள்.
இவ்வளவு நேரமும் அவளுக்குத்தான் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தான் என்றாலும்… எதிர்பாராமல் அவளை அங்குப் பார்த்ததில் அவனுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது. அவளை நெருங்கிச் சென்று அவளுக்கு எதிரில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
“குட் ஆப்டர்நூன் சார்…” என்றபடி அவள் எழுந்து நின்றாள்.
‘இது என்ன… ஸ்கூல் பிள்ளை மாதிரி… கேண்டீன்ல கூட எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்லுது…’ என்று நினைத்தாலும் “சிட்… சிட்… ” என்றான் அமர்த்தலாக.
அவள் தயக்கத்துடன் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு, அவனோடு ஒரே மேஜையில் அமர்ந்திருப்பது சங்கடமாக இருந்தது… சுகமாகவும் இருந்தது.
“என்ன இங்க உக்கார்ந்துட்ட… வீட்டுக்குக் கிளம்பலையா…?”
“இல்ல… மழை…” – பேச முடியாமல் நாவொட்டியது…
அவளுடைய படபடப்பை ரசித்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை உதையமானது.
“நீ மட்டும் தனியா உக்கார்ந்திருக்க…? உன் பிரெண்ட்ஸ் எல்லாம் எங்க…?”
“அவங்க எல்லோரும் பஸ்ல போய்ட்டாங்க… நான் வண்டில வந்தேன்…”
காப்பியைச் சுவைத்துக் கொண்டே அவளைக் காதல் தேங்கிய கண்களுடன் பார்த்தான். அவளுடைய தலை கவிழ்ந்து கொண்டது. ‘இவன் இங்கிருந்து நகர்ந்து போய்ப் பக்கத்து டேபிளில் அமர்ந்துகொள்ளக் கூடாதா…’ என்றிருந்தது அவளுக்கு.
அவனுக்கோ… மழை மேகத்தை ரசித்தபடி, தோட்டத்து மலர்களின் வாசனையைச் சுவாசித்தபடி, ஈரக் காற்றின் மெல்லிய தீண்டலை அனுபவித்தபடி… அவளோடு அமர்ந்திருப்பது சொர்கத்தை விட சுகம் என்று தோன்றியது.
“மதி…” கிசிகிசுப்பான குரலில் அழைத்தான். அந்த அழைப்பு அவள் உயிரைத் தொட்டது.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“வந்து…” அவன் ஏதோ சொல்ல வந்தான். பயங்கரமான இடியும் மின்னலும் அவனுடைய பேச்சைத் தடை செய்தது…
“ஈஸ்வரா…” அவள் காதில் கையை வைத்தபடி, தலையை மேஜை மீது கவிழ்த்துக் கொண்டு கத்திவிட்டாள். குனிந்திருந்த அவள் தலையை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்குப் பின், மருண்ட விழிகளுடன் அவள் தலையை மட்டும் லேசாக நிமிர்த்திப் பார்த்தாள். அவன் அவளையே ஒருவித சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததில் வெட்கமாக உணர்ந்தவள், தன் கையைச் சட்டென காதிலிருந்து எடுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவன் இப்போது சத்தமாகச் சிரித்தான். அவளுக்கு இன்னும் வெட்கமாகிவிட்டது…
“சா…ர்… கிண்டல் பண்ணாதிங்க சார்…” என்றாள் கொஞ்சும் குரலில். அவன் மீண்டும் ரசித்துச் சிரித்தான்… அவளுக்கும் சிரிப்பு வந்தது.
“இடிக்குப் பயமா…?”
“ம்ம்ம்…” அவள் தலையாட்டியபடி ‘ம்ம்ம்..’ போட்டாள்.
“மழைக்காக உக்கார்ந்திருக்கேன்னு சொன்ன… பொய் சொன்னியா…?” அவன் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“இல்ல… இடி மழை ரெண்டுமே… வந்தது… அதான்…” அவள் தயக்கத்துடன் கொஞ்சம் வழிந்தபடி சொன்னாள்.
அவனுடைய சிரிப்பு மேலும் அதிகமானது. “நல்லாச் சமாளிக்கிற…” என்றான். அவளும் சிரித்தாள்.
“சரி இப்போ எப்படி வீட்டுக்குப் போக போற…? மழை இன்னிக்கு முழுக்க இருக்கும்… கேண்டீன் இன்னும் அரை மணிநேரம் தான் இருக்கும்… இன்னிக்குச் சனிக்கிழமை… அரை நாள்தான்…” என்று இழுத்தான்.
“இன்னிக்கு முழுக்க மழை இருக்குமா…!” அவள் ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“ஏன்… நீ நியூஸ் பார்க்கலையா…? வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால்… அடுத்த இருபத்திநான்கு மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சொன்னாங்களே..” என்றான் செய்திகள் வாசிப்பவன் போல.
அவள் விழித்தாள். அவன் குறும்புடன் அவளைப் பார்த்தான்.
“சார்… சும்மா தானே சொல்றீங்க…?” என்றாள் கொஞ்சும் மொழியிலேயே.
“நெ…ஜ…ம்…மா…” என்றான் ஒவ்வொரு எழுத்தையும் அழுத்தமாக உச்சரித்து.
அவன் சொன்ன விதமே… அவன் பொய் சொல்கிறான் என்பதைச் சொல்லிவிட,
“சார்… நீங்க என்கிட்டே விளையாடறீங்க…”
“இவ்வளவு லேட்டாவாவது புரிஞ்சதே… ”
“சார்… நான் உங்களை வேறமாதிரி நெனச்சேன்…”
அவன் விழிகளில் ஒருநொடி குறும்புப் பார்வை வந்து போனது. பின் “என்ன நெனச்ச…?” என்றான்.
“இல்ல… உங்களைப் பார்த்தா…” அதற்குமேல் எப்படிச் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை…
“பார்த்தா…?” அவன் எடுத்துக் கொடுத்தான்.
“பார்த்தா… வந்து… பார்த்தா…” ஏன்டா இந்தப் பேச்சை ஆரம்பித்தோம் என்று அவள் தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
‘இவனைப் பார்த்தா முசுடு மாதிரி இருந்ததுன்னு… இவன்கிட்டயே எப்படிச் சொல்றது…! ஜாலியாப் பேசுறானேன்னு ஒரு ஆர்வக்கோளாறுல ஆரம்பிச்சுட்டேனே…’ என்று நினைத்தபடி அவள் கைகளைப் பிசைந்தாள்.
“என்ன… என்னைப் பார்த்தா முசுடு மாதிரி இருந்ததா உனக்கு…?” என்று வம்பிழுத்தான் அவள் மனதைத் திறந்து பார்த்தவன் போல…
அவள் அரண்டுவிட்டாள். “ஐயையோ… அப்படி இல்ல சார்… உங்களைப் பார்த்தா கொஞ்சம் ஸ்ட்ரிக்டா தெரிஞ்சுது…” என்று சொல்லிச் சமாளித்தாள்.
அந்த நேரம் கேண்டீனில் டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தவர் “இது யாரோட செல்போனுங்க…?” என்று சத்தம் கொடுத்தார். சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்த மதுமதி “ஐயோயோ… என்னோட ஃபோன்… டோக்கன் வாங்கும்போது மறந்துட்டேன் போலிருக்கே…!” என்றபடி எழுந்தவள், கார்முகிலனைப் பார்த்து “சார்… அது என்னோட ஃபோன்… நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்…” என்றாள்.
அவன் இதழ்களில் புன்னகையைத் தேக்கியபடி “ம்ம்ம்…” என்றான்.
அவசரமாகச் சென்று அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கைப்பேசியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு கார்முகிலன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தவள் “அம்ம்ம்…மாடி…” என்றபடிக் கீழே சரிந்தாள்.
Comments are closed here.