Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 10

அத்தியாயம் – 10

அடர்ந்த மரங்களின் சிலு சிலுப்பான காற்று உடலை வருடியது. அமைதியான சூழ்நிலை மனதிற்கும் அமைதியை தந்தது. காவி உடை அணிந்த துறவிகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

 

“என்ன கோவில்டா இது…? இங்க ஏன் என்னை கூட்டிகிட்டு வந்த?” கோவிலுக்குள் நுழையும் முன்பே சூர்யா தன் கேள்வியை ஆராம்பித்துவிட்டாள்.

 

“கோகிலவான் ஆலையம். சனிபகவானுக்கு பிரசித்தி பெற்ற கோவில். இங்கதான் கிருஷ்ணன் சனி பகவானுக்கு தரிசனம் கொடுத்ததா ஐதீகம்.”

 

“ஓ….”

 

“யாருக்கு சனி பிடிச்சிருக்கோ அவங்க இந்த கோவிலுக்கு வந்து, சனிபகவானை தரிசனம் பண்ணினா அவங்களை பிடிச்ச சனி உடனே விலகி அவங்களுக்கு நல்லது நடக்கும் என்பதும் ஐதீகம்…” அவன் சூர்யாவுடன் நடந்தபடி அவளுக்கு விளக்கம் சொன்னான்.
அவன் பேச்சில் சட்டென நின்றுவிட்ட சூர்யா, தீரஜ்பிரசாத்தின் பக்கம் பார்வையை திருப்பி,

 

“அது சரி… என்னை ஏன்டா இந்த கோவிலுக்கு கூட்டிகிட்டு வந்த?” என்றாள். அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது…

 

‘ஒருவேள எனக்கு சனி பிடிச்சிருக்குன்னு சொல்றானோ…!’

 

“என்னை பிடிச்ச சனி உன்னையும் பிடிச்சிருந்தா நம்ம ரெண்டு பேருக்குமே ஒண்ணா நல்லது நடக்கட்டுமேன்னுதான் உன்னையும் அழைச்சிகிட்டு வந்தேன்…”

 

“என்னது… உனக்கு சனி பிடிச்சிருக்கா…! ” அவள் நம்பமுடியாமல் கேட்டாள்

 

“ஆமா… பயங்கரமான சனி… ராத்திரியெல்லாம் தூங்கவிடாத சனி…” அவன் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

 

“லூசு… உன்னை சனி பிடிச்சா நீ மட்டும் வர வேண்டியது தானே… என்னை ஏன்டா இழுத்துகிட்டு வந்த…” அவள் முகத்தை சுளித்துக் கொண்டு சொல்ல… அவன் சிரித்தான்.

 

“ஹா… ஹா…”

 

“சிரிக்காதடா… பிரபாகிட்ட சொல்லாம கூட என்னை இப்படி இழுத்துகிட்டு வந்துட்ட… அவ அங்க தேடிகிட்டு இருக்க போறா…”

 

“கோவிலுக்கு வந்துட்டு புலம்பாதடி… உள்ள வா… சாமி தரிசனம் முடிச்சிட்டு வரலாம்…” என்று ஒரு அதட்டு போட்டு சூர்யாவை உள்ளே அழைத்து சென்றவன், சிறிது நேரத்திலேயே சுவாமி தரிசனம் முடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தான்.

 

“நைட் தூக்கம் வரலன்னு சொன்னியே… என்னடா ஆச்சு…?” அவள் அக்கறையுடன் கேட்டாள்.

 

“ஒரு குட்டி பிசாசோட முகம் கனவுல வந்து பயமுறுத்துது… ”

 

“யாருடா அந்த குட்டி பிசாசு… எதுக்கு அந்த பிசாசு முகம் உன்னோட கனவுல வந்து பயமுறுத்துது?”

 

“அத கேட்கத்தான் உன்ன இங்க கூட்டிகிட்டு வந்தேன்… எதுக்குடி நைட் என் கனவுல வந்து என்னை பயமுறுத்தின…?”

 

“அடப்பாவி… என்னை பார்த்தா குட்டி பிசாசு மாதிரி இருக்கா உனக்கு…? உன்னை என்ன செய்றேன் பாரு…?” என்று கேட்டுக் கொண்டே அவன் முதுகில் இரண்டு அடி கொடுத்தாள்.
அவளுடைய முகம் அவனுடைய கனவில் வருகிறது என்கிற முக்கியமான விஷயத்தை கவனிக்காமல், அவன் அவளுடைய முகத்தை குட்டி பிசாசின் முகம் என்று சொல்லியதை பெரிதாக எடுத்துக் கொண்டு அவனிடம் சண்டை போடும் வெகுளிப் பெண்ணிடம் எதை சொல்வது…!

 

எப்பொழுதும் குழந்தை தனமாக துருதுருப்புடன் இருக்கும் அந்த குமரியிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவித்து… தினம் தினம் உறக்கம் துறந்தான் தீரஜ்பிரசாத்.

 

# # #

 

கோவிலுக்கு சென்று திரும்பும் போது உயர்தர ஹோட்டலில் காரை நிறுத்தினான் தீரஜ்.
அவனை திட்டிக் கொண்டே இறங்கினாலும் தென்னிந்திய உணவை ஆர்டர் செய்து திருப்தியாக உண்டாள் சூர்யா.

 

“இந்த ஹோட்டல்ல சவுத் இண்டியன் ஃபுட் சுப்பரா இருக்குடா… எங்க ஹாஸ்ட்டல்ல மூணு நேரமும் தீஞ்சுபோன ரொட்டிதான்… அத சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு நாக்கே செத்து போச்சு… ”

 

“செத்து போன நாக்குதான் இந்த போடு போடுதா…” அவன் அவள் ஆர்வமாக சாப்பிடுவதை பார்த்து கிண்டலாக கேட்டான்.

 

அவன் கேட்ட விதத்தில் லேசாக வெட்கப்பட்டவள் “எனக்கு சவுத் இண்டியன் ஃபுட் ரொம்ப பிடிக்கும்… அதுவும் ஸ்வீட்ஸ்ன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்…” என்றாள் லேசாக அசடு வழிந்தபடி.

 

அவள் பேசிய விதத்தில் சத்தமாக சிரித்துவிட்டவன்… மெனு கார்டை எடுத்து அவள் தலையில் செல்லமாக தட்டி “சாப்பிடு….” என்றான் சிரித்துக் கொண்டே…
அன்று அவர்கள் இருவரும் தங்களுடைய கைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டார்கள்.

 

# # #

 

சூர்யாவிடமிருந்து கைபேசி எண்ணை வாங்கிவிட்ட தீரஜ் அன்று இரவே அவளிடம் தன் காதலை சொல்லிவிட எண்ணி அவளை அழைத்தான்.

 

“ஹலோ….”

 

“ஹேய்… தீரஜ்… சொல்லுடா… என்னடா இந்த நேரத்துல…” அவள் விகல்பம் இல்லாமல் கலகலப்பாக பேசினாள்.

 

“சூர்யா…” அவனுடைய குரல் கிசுகிசுப்பாக இருந்தது.

 

“ஹேய்… சத்தமா பேசுடா… எனக்கு எதுவும் புரியல…” அவள் அந்த இரவு நேரத்தில் எவ்வளவு சத்தமாக பேச முடியுமோ அவ்வளவு சத்தமாக கத்தினாள்.
அவனுக்கு காதல் சொல்லும் மூடே போய்விட்டது. இருந்தாலும் விடாமுயற்சியுடன்

 

“சூர்யா… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றான்.

 

“பேசேன்டா… என்னவோ எல்லாத்துக்கும் பர்மிஷன் வாங்கிட்டுதான் செய்ற மாதிரி பாவலா பண்றான் பாரு…” அவள் அவனை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை.

 

‘இந்த மண்டுக்கு போன்ல சொல்லியெல்லாம் புரிய வைக்க முடியாது போலிருக்கே… ஆண்டவா எண்ணை காப்பாற்று…’ அவன் கடவுளின் உதவியை நாடினான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக…
“சூர்யா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்… என்னன்னு கண்டுபிடி…”

 

“ஹேய் சர்ப்ரைஸா…! ம்ம்ம்… ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா பிடிக்கும்ன்னு சொன்னேனே… வாங்கி வச்சிருக்கியா…?” அவள் ஆவலுடன் கேட்டாள்.

 

“என்னது…?” அவன் அதிர்ச்சியடைந்தவனாக கேட்டான்…

 

“ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா…” அவள் இன்னும் சத்தமாக சொன்னாள்.

 

“இப்ச்… அது இல்லடி…”

 

“ம்ம்ம்… அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ்…?”

 

“ஹேய்… என்…னடி…?” அவன் வியப்புடன் கேட்டான். இருந்தாலும் முயற்சியை கைவிடாமல்

 

“அதெல்லாம் இல்லடி… வேற எதுவுமே உனக்கு தோணலையா… ?”

 

“கொஞ்சம் வெயிட் பண்ணுடா… நான் யோசிக்க வேண்டாமா…?”

 

அவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட்டது. குரலை பழயபடி குழைவாக்கிக் கொண்டு “ம்ம்… நல்ல யோசிச்சு சொல்லுடி…” என்றான் கெஞ்சலாக….
“ம்ம்ம்…” அவள் சத்தமாக யோசித்தாள்

 

“ம்ம்ம்…” அவனும் அவளுக்கு பின்பாட்டு பாடினான்.

 

“ம்ம்ம்… கண்டுபிடிச்சிட்டேன்… இன்று போன ஹோட்டல்க்கு நாளைக்கும் நாம போகப்போறோம்…” அவள் உற்ச்சாகமாக கத்தினாள்.

 

“ஏன்டி சாப்பிடறத விட்டா உனக்கு வேற எதுவுமே தெரியாதா…?” அவன் ஆற்றாமையுடன் கேட்டான்.

 

“நீதானடா சர்ப்ரைஸ்ன்னு சொன்ன…?”

 

“சர்ப்ரைஸ்ன்னா சாப்பாடு மட்டும்தானாடி…?” – பல்லைக் கடித்தான்.

 

“அப்புறம் என்னடா.. நீயே சொல்லு…” அவளும் அவன் கொடுக்கும் சர்ப்ரைஸ் அவளுக்கு பிடித்ததாக இருக்கபோவதில்லை என்கிற முடிவுக்கு வந்தவளாக அலுத்துக் கொண்டாள்.

 

“ஆமா சொல்லிட்டாலும்… அப்படியே சந்தோஷத்துல துள்ளி குதிச்சுட போற… போடி வேலைய பார்த்துகிட்டு…” அவன் வெறுத்துப் போய் பேசினான்.

 

“டேய்… என்னடா… கொழுப்பா…? நான்பாட்டுக்கு இந்நேரம் படுத்து தூங்கியிருப்பேன்…. நடுராத்திரில போன போட்டு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் அது இதுன்னு உளறிவிட்டு… இப்போ ‘போடி வேலைய பார்த்துகிட்டு’ன்னு சொல்லுற…? ங்கொய்யால… ”

 

“என்னது…. ங்கொய்யால-வா… என்னடி லாங்வேஞ் இது…?”

 

“எல்லாம் நம்ம சுந்தர தமிழ்தான்…”

 

“இதெல்லாம் நல்லா வாய் கிழிய பேசு… மற்றதுலயெல்லாம் மண்டாவே இரு…”

 

“ஹலோ யாரு… நா மண்டா… ”

 

“ஆமாடி நீதான் மண்டு… பின்ன என்ன நானா மண்டு…?”

 

“ஆமாடா நீதான் மண்டு… முட்டாள்… லூசு… பைத்தியம்… எல்லாம்…”

 

“நீதான்டி அதெல்லாம்…”

 

“நீதான்… நீதான்… நீதான்டா…” அவள் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

 

“முடிச்சிட்டியா….? போ.. போயி நிம்மதியா இழுத்து போர்த்திகிட்டு தூங்கு…”

 

அவன் அவளிடம் காதலை சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அவளோ அவனையும் அவளைப் போலவே குழந்தை தனமாக சண்டை போட வைத்ததோடு… வெற்றிகரமாக அந்த சண்டையிலிருந்து அவனை பின்வாங்கவும் வைத்துவிட்டாள். இவளிடம் எப்படி தன் காதலை சொல்லி புரியவைக்க போகிறோம் என்று குழம்பி அன்றைய தூக்கத்தை துறந்தான் தீரஜ்…

 

# # #

 

அன்று ஞாயிற்று கிழமை… மதுரா ஒரு புனித தளம் என்பதோடு சுற்றுல்லா தளமும் கூட என்பதால் பிரபாவும் சூர்யாவும் மதுராவிற்கு கிளம்பினார்கள். சூர்யா தீரஜ்ஜையும் தங்களுடன் வரும்படி அழைத்தாள். அவனோ பிரபாவும் கூட வரவிருப்பதை அறிந்து தனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லி தவிர்த்துவிட்டு, வேறு ஒரு காரையும் டிரைவரையும் ஏற்பாடு செய்திருந்தான்.
அவர்கள் முதலில் நேராக மதுராவில் உள்ள கேசவ தேவ் கோவிலுக்கு சென்றார்கள்.

 

“இதுதான் கேசவ தேவ் கோவில் சூர்யா. இந்த இடத்த கிருஷ்ண ஜென்ம பூமின்னு சொல்லுவாங்க. இங்க இருந்த பாதாள சிறையொன்றில் கிருஷ்ணன் பிறந்ததா சொல்லி இந்த இடத்தில் கேசவ தேவ் கோவில கட்டியிருக்காங்க.” என்று அந்த கோவில் பற்றிய விபரங்களை அவளுக்கு விலக்கிவிட்டு கோவிலை சுற்றிக் காண்பித்தாள் பிரபா. பிறகு தோழிகள் இருவரும் யமுனையாற்றங்கரைக்கு சென்று அதன் அழகில் லயித்தார்கள். பிறகு அங்கிருந்து கிருஷ்ணன் சிறு வயதில் வளர்ந்த ஊரான விருந்தாவனுக்கு சென்றார்கள்.

 

“இங்க சுமார் ஐயாயிரம் கோவில்கள் இருக்கு சூர்யா. இந்த ஊர்லதான் கிருஷ்ணன் வளர்ந்ததா சொல்லுவாங்க.” என்று அந்த ஊரை பற்றி விளக்கிய பிரபா அந்த ஊரின் முக்கிய கோவில்களான

 

“பாங்கி பிகாரி கோவில்”, “மதன் மோகன் கோவில்”, “கோவிந்தா தேவ் கோவில்”, “கிருஷ்ண பலராம் கோவில்” என்று பல கோவில்களுக்கும் தோழியை அழைத்து சென்றாள்.

 

அந்த கோவில்களின் பழமையும், அழகும் சூர்யாவை கவர்ந்தது. ஒவ்வொரு கோவிலின் கட்டிடங்களுக்கும் உள்ள வித்தியாசம் அவளை பிரம்மிக்க வைத்தது.

 

விருந்தாவனிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தவர்கள் கோசிகாலன் செல்லும் ரிங் ரோட்டில் ஏறும் பொழுது, லோக்கல் ‘எம்.எல்.ஏ’ ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும்… அவருடைய ஆதரவாளர்களால் மதுராவில் பயங்கர கலவரம் என்றும் டிரைவருக்கு செய்தி கிடைத்தது.

 

“நல்லவேளை நாம் முதலில் மதுராவிற்கு சென்றுவிட்டு பிறகு விருந்தவன் வந்தோம். இல்லை என்றால் இப்போது மதுராவில் வசமாக சிக்கியிருப்போம்…” டிரைவர் லேசான பதட்டத்துடன் சொன்னார்.

 

“என்ன ஆச்சு…?” பிரபா கேட்டாள். அவர் விபரம் சொன்னார்.

 

“யார் சுட்டது…? எதுக்கு அவர கொன்னாங்க…?” சூர்யா விளக்கம் கேட்டாள்.

 

“தெரியாதும்மா… அரசியல் கொலையாகத்தான் இருக்கும்…” டிரைவர் தனக்கு தோன்றியதை சொல்லிவிட்டு கார் ஓட்டுவதில் மும்மரமானார்.

 

“பிரபா… இவ்வளவு நல்லது செய்ற பிரசாத்ஜி இந்த மாதிரி குற்றத்தையெல்லாம் தடுக்கமாட்டாரா?” இன்று நடந்த கொலைக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் அரசியல் கொலைகள் செய்வதில் முக்கியமான ஆளே பிரசாத்ஜிதான் என்பது புரியாமல் கேள்வி எழுப்பினால் சூர்யா.

 

“தெரியிலடி… இன்னிக்கு மதுராவுக்கு வந்திருக்கவே கூடாது… பத்திரமா ஊர் போய் சேர்ந்தா போதும்…” பிரபா அவளுடைய கவலையில் ஆழ்ந்துவிட்டாள்.

 

‘பிரசாத்ஜி என்பவன்… கட்டப்பஞ்சாயத்து செய்யாத… கடத்தல் என்றால் என்னவென்றே தெரியாத… அரசியல் கொலைகள் பக்கமே போகாத… ஒரு நல்ல தாதா… அவன் கெட்டவர்களை மட்டும்தான் அடிப்பான்… அதுவும் நல்லவர்களுக்கு நல்லது செய்வதற்காக…’ என்று அசட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருந்த சூர்யா…

 

“என்றாவது ஒருநாள் பிரசத்ஜியை சந்தித்தால்… இந்த அரசியல் கொலைகளை பற்றி அவரிடம் பேசி அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க சொல்ல வேண்டும்… அவர்களும் மனிதர்கள்தானே…’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

# # #

 

அன்று அலைந்துவிட்டு வந்த களைப்பில் எட்டு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்துவிட்ட பிரபாவை உறங்கவிடாமல் அவளுக்கருகில் படுத்து கேள்விகேட்டு குடைந்து கொண்டிருந்தாள் சூர்யா. இன்று அவள் கேள்விப்பட்ட விஷயம் பிரசாத்ஜியை சந்திக்க வேண்டும் என்கிற அவளுடைய ஆர்வத்தை அதிகப் படுத்திவிட்டதுதான் காரணம்…

 

“பிரபா… பிரசாத்ஜி வீடு எங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா…?”

 

“எதுக்குடி கேக்குற?”

 

“அவர மீட் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். அதான் ஒரு முறை போய் பார்த்துட்டு வரலாமேன்னு கேட்டேன்…” சாதரணமாக சொன்னாள்.

 

“ஹேய்… என்னடி என்னவோ பக்கத்து வீட்டுக்காரனை பார்க்கபோறது மாதிரி பேசுற…! பிரசாத்ஜிடி… மதுரா’ஸ் கிங்… தி மோஸ்ட் பவர்ஃபுல் மேன் ஃஆப் யுபி… விளையாட்டு இல்ல…”

 

“அதெல்லாம் எனக்கும் தெரியும்டி… அவரோட வீட்டுக்கு போய்ட்டா அங்கு இருப்பவர்களை எப்படியாவது கரெக்ட் பண்ணி அவரை பார்த்துடலாம்டி… ”

 

“அது முடியாதுடி… அவர் வீடு இருக்க தெருக்குள்ள நுழையிரதுக்கே ஆயிரத்தெட்டு கட்டுப்பாடு இருக்கும்… இதுல அவர் வீட்டுக்கு எப்படி போறது…?”

 

“வேற வழியே இல்லையாடி…?” கவலையுடன் கேட்டாள் சூர்யா.

 

“ஒரே ஒரு வழி இருக்குடி…”

 

“என்னன்னு சொல்லுடி…”

 

“பிரசாத்ஜிதான் நம்ம கம்பெனியோட முதலாளி. அவர் நம்ம ஆபீஸ்க்கு மாதம் ஒரு தடவ வருவாராம். மேனேஜர் நவீன்கிட்ட பேசி பார்த்தால் அவர் ஏதாவது வழி சொல்லுவார்.”

 

“அப்படின்னா நாளைக்கே இதை பற்றி நவீன்கிட்ட பேசிடலாம்டி…” என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் கண்ணுறங்கினாள் சூர்யா.

 

 




Comments are closed here.

You cannot copy content of this page