இதயத்தில் ஒரு யுத்தம் – 16
4164
0
அத்தியாயம் – 16
கைகள் பின்னால் கட்டப்பட்டு, நாக்கை அசைக்க முடியாதபடி வாயில் ஒரு கட்டுடன் குவாலிஸ் காரின் பின்பகுதியில் அலட்சியமாக தள்ளப்பட்டிருந்தாள் சூர்யா. கார் ஏதோ காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. மேடுபள்ளங்களில் கார் வேகமாக செல்லும் போது முன்னும் பின்னும் மோதி இடித்துக் கொண்டு வலியில் முனகினாள்.
“சுப்… திருட்டு நாயே… வாயை மூடுடி…” நாராசமான குரலில் அதட்டினான் ஒரு தடியன்.
அந்த குரல் குலையை நடுங்கவைக்க, மறு முறை காரில் இடித்துக் கொண்ட போது பல்லை கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள் சூர்யா.
கார் ஒரு மதில் சுவருக்குள் சென்றது. சுமார் பத்தடி உயரம் கொண்ட அந்த மதில் சுவர் ஆளை மிரட்டியது. உள்ளே ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அதுதான் பழைய பேப்பர் மில். அந்த கட்டிடத்தை சுற்றி மாமரங்களும் தென்னை மரங்களும் தோப்பாக வளர்க்கப்பட்டிருந்தன.
கார் தோட்டத்திற்குள் வந்து கொண்டிருக்கும் போதே சூர்யா, அதுவரை கண்டிராத ஒரு கொடூரமான கட்சியை கண்டு ஆடி போய்விட்டாள்.
ஆடைகள் முழுவதும் களையப்பட்டு உடலில் ஏதோ திரவம் தடவப்பட்ட, ஒரு மனிதன் மாமர கிளையில் தலை கீழாக கட்டி தொங்கவிடப்பட்டிருந்தான். அவனுக்கு கீழே சவுக்கு கட்டைகள் ‘தகதக’வென பற்றி எரிந்து கொண்டிருந்தன.
அவன் உடம்பில் தடவப்பட்டிருந்த திரவம் கீழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வெப்பத்தை கிரகித்துக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்த மனிதன் வளைந்து நெளிந்து புழுவாக துடித்துக் கொண்டிருந்தான்.
அவன் எழுப்பிய மரண ஓலம் சூர்யாவை அதிர வைத்தது. ஏற்கனவே பயத்தில் இருந்த சூர்யா இப்பொழுது கண்ட காட்சியில் உறைந்துவிட்டாள்.
நிறுத்தப்பட்டுவிட்ட காரிலிருந்து சூர்யா இறங்காமல் மாமரத்தடியை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட சர்புதீன் (அவளை இங்கு கொண்டு வந்த அந்த தடியன்)
“ஏய்… எறங்கு…” என அதட்டினான்.
அவனுடைய அதட்டலில் உடல் நடுங்கிய சூர்யா, அவசரமாக இறங்க முயன்று தடுமாறி காரிலிருந்து கீழே விழுந்தாள். அவள் சுதாரித்து எழுந்திருக்கும் முன் அவள் கையை பிடித்து முரட்டுத்தனமாக இழுத்து தூக்கி நிறத்தினான் அந்த தடியன். அவளுக்கு வலியில் கண்கள் கலங்கின. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யோசிக்க கூட முடியவில்லை.
சூர்யாவை தூக்கி நிறுத்தியவன் பிடித்த கையை விடாமல், அவளை இழுத்தபடி வேகமாக அந்த ராட்சச கட்டிடத்தின் உள்ளே நுழைந்தான். சூர்யாவின் கைகள் பின்னால் கட்டப் பட்டிருந்ததால் அவள் கிட்டத்தட்ட பின்னால் திரும்பியபடி ஓடினாள். ஒரு மிருகத்தை கூட இந்தளவு கீழ் தரமாக நடத்தி சூர்யா கண்டதில்லை. இன்று அவளையே இப்படி ஒருவன் நடத்துகிறான். அவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.
தேவையில்லாத பழைய பொருட்கள் நிரம்பியிருந்தன ஒரு அறையில் குப்பையோடு ஒரு குப்பையாக தள்ளப்பட்டாள் சூர்யா.
‘பிரபாவுக்கு என்ன ஆச்சு…? நம்மை ஏன் இங்கு கொண்டுவந்து அடைத்து வைத்தான் இந்த தடியன்…. என்ன நடந்தது…?’ அவளுக்கு குழப்பமாக இருந்தது. பிரசத்ஜியை சந்திக்க வந்ததை தவிர வேறெதுவும் விளங்கவில்லை. அதன்பிறகு நடப்பதெல்லாம் புதிராகத்தான் இருக்கிறது.
சூர்யா செயலிழந்துவிட்ட தன் மூளையை கசக்கிபிழிந்து எதையோ யோசிக்க முயன்று கொண்டிருக்கும் போது ‘தட்… தட்..’ என்ற சத்தத்துடன் கூடிய முனகல் சத்தம் அவள் சிந்தனையை கலைத்தது.
மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்தாள். பத்தடி தூரத்தில் ஒருவனை நான்கு பேர் சேர்ந்து மரக்கட்டையாலும் இரும்பு சங்கிலியாலும் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் சத்தம் போடக் கூட திராணியில்லாமல் ரத்த வெள்ளத்தில் தரையில் ஒரு எழும்பில்லாத ஜந்து போல் ஊர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய இரத்ததோடு சேர்ந்து தசை துகள்களும் சிதறின…
அந்த கொடூரமான காட்சியை சகிக்க முடியாத சூர்யா கண்களை மூடிகொண்டு வீறிட்டு அலறியபடி அறையின் மறுகோடிக்கு ஓடியபோது தரையில் தடுமாறி விழுந்தவள்… விழுந்த இடத்திலிருந்து எழக்கூட முடியாமல் விம்மி வெடித்து அழுதாள்.
மேலோட்டமாக ரௌடியிசத்தை ரசித்து அதை ஹீரோயிசமாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இன்றுதான் உண்மையான ரௌடியிசம்… அடிதடி என்றால் என்ன என்பது புரிந்தது. புரிந்து கொண்ட உண்மையின் வீரியம் தாங்காமல் கண்களை திறக்க கூட தைரியம் அற்றவளாக தரையில் சுருண்டு கிடந்தாள்.
‘எப்படி இவர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ள முடிகிறது…! மனிதர்களை ஒரு புழுவைவிட கேவலமாக நசுக்க இவர்களால் எப்படி முடிகிறது…! மனிதத்துவமே இல்லாத மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்களே…!’ என்ற எண்ணம் தோன்றும் போதுதான், தன்னை இங்கு அடைத்து வைத்திருப்பது பிரச்சத்ஜியின் ஆட்கள் என்பதும் அவர்கள்தான் மனிதத்துவம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உரைத்தது…
‘இங்கு நடக்கும் எல்லா கொடுமைகளுக்கும் ஒருவன்தான் காரணம்… பிரசாத்ஜி… மனிதாபிமானமே இல்லாத பிரசாத்ஜி…’
‘தான் என்ன தவறு செய்துவிட்டோம்…. அல்லது வெளியே துடித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள்தான் என்ன தவறு செய்திருக்க முடியும்…! இல்லை… இல்லை… இவ்வளவு மோசமான தண்டனையை அனுபவிக்கும் அளவு அவர்கள் எந்த தவறும் செய்திருக்க முடியாது… அப்படியே செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்க இவன் என்ன கடவுளின் அவதாரமா…!’ என்ற எண்ணங்கள் அலையலையாக மனதில் ஓட
‘அரக்கா… ராட்சசா… கொடூரா…’ அவள் உள்ளம் புலம்பியது. அந்த நிமிடம் மனதின் அடியாழத்திலிருந்து பிரசாத்ஜி என்பவனை முழுமையாக வெறுத்தாள் சூர்யா.
அவளுடைய கண்கள் மெல்ல திறந்தன…. தூரத்தில் ஒரு உருவம்… அவள் அங்கு சற்றும் எதிர்பாராத உருவம் கண்ணில் பட்டது… அவனுடைய கம்பீர நடையும், அவன் முகத்தில் இருந்த கடுமையும், அருகில் உள்ளவர்களின் பம்மலும் ‘இவன்தான் அவனோ…!’ என்கிற சந்தேகத்தை அவளுக்குள் முளைக்கச் செய்தது. ஆனால் அந்த சந்தேகம் உண்மையாகிவிடக் கூடாதே என்கிற தவிப்புடன் அவள் எழுந்து அமர்ந்தாள்.
Comments are closed here.