இதயத்தில் ஒரு யுத்தம் – 4
4624
0
அத்தியாயம் – 4
கோசிக்காலனிலேயே மிகப்பெரிய மதில் சுவர் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகளை தாங்கி நின்றது. கருப்பு நிற சீருடை அணிந்த காவலாளி கையில் நீண்ட துப்பாக்கியுடன் மதில் சுவரை ஒட்டியிருக்கும் தன்னுடைய சிறிய அறையில் நின்று தன் பணியை செய்து கொண்டிருந்தார். ஒரு நீண்ட கருப்பு நிற ‘ஜாகுவார் XJ’ கார் அந்த மதில் சுவரை நோக்கி வந்தது. அந்த காரை பார்த்ததும், தன் அறையிலிருந்து வெளியே வந்த காவலாளி மரியாதையுடன் கேட்டை திறந்துவிட்டு… காருக்குள் இருந்தவருக்கு அட்டேன்ஷனில் நின்று சல்யூட் வைத்தார்.
உள்ளே நுழைந்த அந்த கார் இருபுறமும் பசுமையாக வளர்க்கப்பட்டிருந்த தோட்டத்தின் நடுவே போடப்பட்டிருந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு பிரம்மாண்டமான மாளிகையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன்… தன்னோடு அதே காரிலிருந்து இறங்கிய நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணிடம் எதையோ சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றான். இரண்டாமவன் நீச்சல் குளத்தை நோக்கி சென்றான்.
அங்கே இரண்டு ஆஜானுபாகுவான மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கிய சலீம்,
“கியா ஹுவா..?” என்ன நடந்தது என்று இந்தியில் கேட்டான்.
“ஜி… தப்பு நடந்து போச்சு ஜி…” என்று நடுக்கத்துடன் சொன்னான் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவனான பவன்.
“குடிச்சிருந்தியா…?” அமைதியாக அழுத்தமாக கேட்டான் சலீம்.
பதில் பேசாமல் தலை குனிந்தான் மற்றவன்.
நிமிடத்தில் சலீமின் கை பவனின் கன்னத்தில் பதிய, அவன் நிலை தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்தான்.
அனல் கக்கும் முகத்துடன் சுஜித்திடம் திரும்பிய சலீம் “இன்று இரவு சரியாக பத்து மணிக்கு காரியம் நடந்தாகணும். இல்லன்னா இவனோட கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது ஜியின் உத்தரவு…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் விரைந்தான்.
நீச்சல் குளத்திலிருந்து நீந்தி மேலே வந்த பவன், தன்னுடைய வாயிலிருந்து இரண்டு பற்களை கையில் எடுத்தான்.
“என்ன பவன்…. சொத்த பல் இருந்ததா…?” என்று ஆதரவாக கேட்டான் சுஜித்.
அவனை பாவமாக பார்த்த பவன் “இங்க வரும்போதுதான் நல்ல நல்லி எலும்பா பார்த்து வாங்கி வீட்டுல கொடுத்து சமைக்க சொல்லிட்டு வந்தேன். போச்சு… எல்லாம் போச்சு…” என்று கையில் பற்களை வைத்துக் கொண்டு புலம்பினான்.
“வீட்டுல வாங்கிக்கொடுத்த நல்லி எலும்பு வீணாப் போச்சேன்னு கவலைப்பட்டுகிட்டே சும்மா புலம்பிகிட்டு இருந்தா, நைட் பத்து மணிக்கு உன்னோட நல்லி எலும்ப சலீம்ஜி உருவிடுவார். ஒழுங்கா போயி கொடுத்த அசைன்மென்ட முடிக்க பார்…” என்று எச்சரித்தான் சுஜித்.
‘செய்றது கொலை தொழில்… இதுல பேருக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல… அசைன்மென்ட்டாம்… அசைன்மென்ட்டு…’ மனதிற்குள் முனுமுனுத்துவிட்டு சென்றமுறை தன் கையிலிருந்து தப்பிய பில்டிங் கான்ட்ராக்டர் ஒருவனுடைய உயிருக்கு குறிவைத்தபடி அங்கிருந்து அகன்றான் பவன்.
# # #
சலீம் வீட்டிற்குள் வரும் பொழுது காரிலிருந்து முதலில் இறங்கிய அந்த இளைஞன் வேலைக்கார பெண்மணி பரிமாற்ற காலை உணவாக இரண்டு சப்பாத்தியை உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான். சந்தன நிறமும் ஆறடிக்கும் மேலான உயரமும் அவன் வடநாட்டுக்காரன் என்பதை உறுதி செய்தன.
‘இரும்பு கம்பியை போல் முறுக்கிக் கொண்டிருக்கும் இந்த உடலுக்கு இரண்டு சப்பாத்தி எப்படித்தான் போதுமானதாக இருக்கிறதோ…!’ என்று வியந்தபடி உணவு மேஜையை நெருங்கிய சலீம்….
“பவனை எச்சரிக்கை செய்துவிட்டு வந்துருக்கேன் ஜி…” என்றான்.
“இந்த முறையாவது சரியா முடிப்பானா…?” சுத்தமான இந்தியில் பதில் கேள்வி கேட்டான் தீரஜ்பிரசாத்.
“திறமையானவன்தான் ஜி… ஆனால் மூளை கொஞ்சம் கம்மி… யோசிக்கவே மாட்டான். அதான் பிரச்சனை…”
“இவனை நம்பி பெரிய வேலை எதுவும் கொடுத்துவிடாதே… சில்லறை வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள். வேலை இல்லாதபோது நம் வீட்டு ஏரியாவில் ரோந்து பணியில் போடு…”
“ஓகே ஜி…”
“சரி… உட்கார்… சாப்பிட்ட பிறகு மற்றதை பேசிக்கொள்ளலாம்…”
அவன் சொன்னால் அடுத்த நொடியே உயிரைகூட விடுவதற்கு சித்தமாக இருக்கும் சலீம் மறுபேச்சின்றி அமர்ந்து காலை உணவை முடித்தான். பிறகு சொன்னான்…
“ஜி… சரோஜ் வெயிட் பண்ணிட்டு இருக்கான்…. ”
தெரியும் என்பது போல் தலையசைப்பு செய்துவிட்டு மாடிக்கு தீரஜ்பிரசாத் செல்ல… அவனை சலீம் தொடர்ந்தான். அங்கே வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு சிறிய பாரில் சரோஜ் கையிலிருக்கும் மதுக்கொபபையை கூட மறந்துவிட்டு முக்கியமாக எதையோ சிந்தனை செய்து கொண்டிருந்தான்.
“என்ன பலமான யோசனை சரோஜ்…?” தீரஜ்பிரசாத் உள்ளே நுழைந்தபடி கேட்டான்.
“வாங்க ஜி… உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்…” என்றபடி எழுந்து நின்றான் சரோஜ்.
“உக்கார்…” என்று சொல்லிவிட்டு தீரஜ்பிரசாத் அமர, அதன்பிறகு மற்ற இருவரும் அமர்ந்தார்கள்.
“என்ன விஷயம் ஜி… வர சொன்னிங்கலாம்…” சரோஜ் கேட்டான்.
“நேற்று நேப்பால் டீக்கபூரிலிருந்து இந்தியா வந்த நமது சரக்கை துபா ஸ்டேட் ஹைவே செக் போஸ்ட்ல சீஸ் பண்ணிட்டாங்க…”
“ஜி…!” அதிர்ந்தான் சரோஜ்.
“அந்த எம்.பி பண்ட்டி லால் பத்து பர்சண்ட் கமிஷன் வாங்கிகிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்…?” கொதித்தான் சலீம்.
“பத்து பர்சண்ட் போதலையாம்… உயிரை பணயம் வச்சு நாம உள்ள கொண்டுவர்ற சரக்குல நோகாம முப்பது பர்சண்ட் சாப்பிட நினைக்கிறான்… அவன் எம்.பி ஆனதுக்கு பிரதானமே நாம கொடுத்த பணம்தான் என்பதை மறந்துவிட்டான் நன்றிகெட்டவன்…” தீரஜ்பிரசாத் இறுகிப்போன முகத்துடன் சொன்னான்.
“இப்போ என்ன செய்றது ஜி….?” சரோஜ் குழப்பத்துடன் கேட்க…
தீரஜ்பிரசாத் சரோஜின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன்…
“ஓகே ஜி…” என்று எழுந்துவிட்டான்.
தலைவனின் மனதில் இருப்பதை படித்த சலீமும் சரோஜுடன் துபாவிற்கு புறப்பட்டான்.
அன்றிலிருந்து ஐந்தாவது நாள், “உத்திர பிரதேசத்தை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த எம்.பி பண்ட்டி லால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய உடல் துபாவிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. கொலைக்கான காரணம் சரியாக தெரியாத நிலையில் குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்…” என்கிற செய்தி அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியாகி மக்களை கொந்தளிக்க வைத்தது.
Comments are closed here.