இதயத்தில் ஒரு யுத்தம் – 7
4662
0
அத்தியாயம் – 7
இரண்டாம் நாள் சூர்யா அலுவலகத்திற்கு சென்றாள். அதே ஷேர் ஆட்டோ… அதே காட்டு வழி… நேற்று நின்ற அதே இடத்தில் இன்றும் ஆட்டோ நின்றது. ஆனால் இன்று ஆட்டோவை நிறுத்தியது சூர்யா.
“ஸ்டாப்… ஸ்டாப்… ஸ்டாப் தி ஆட்டோ… ”
ஆட்டோவை சடன் பிரேக் அடித்து நிறுத்திய டிரைவர் “கியா… கியா ஹுவா..?” என்ன… என்ன ஆச்சு…? என்று இந்தியில் வினவினான்.
அவனது கேள்வியை ஓரளவு புரிந்துகொண்ட சூர்யா “பர்ஸ்… மேரா… மேரா… பர்ஸ் மிஸ்ஸிங்…” என்று கைகளில் அபிநயத்துடன் ஆட்டோ ட்ரைவருக்கு விஷயத்தை விலக்கிவிட்டு, ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி பர்சை தேடினாள்.
தேடினாள்… தேடினாள்… தீரஜ்பிரசாத்தின் கார் அந்த பக்கம் வரும் வரை, பத்து நிமிடம் தேடிக் கொண்டே இருந்தாள்.
கார் அருகில் வந்ததும் தேடுதலை நிறுத்திவிட்டு காரை கைகாட்டி நிறுத்த முயன்றாள்.
சூர்யாவின் செயலை ஓரளவு எதிர்பார்த்த தீரஜ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே பிரேக்கை அழுத்தினான்.
“ஹலோ… சாரி சார்…. உங்களுக்கு தமிழ் தெரியும் என்று எனக்கு தெரியாது…” அவள் சங்கடமாக அவனிடம் பேசினாள்.
“தமிழ் தெரியலன்னா… உதவி செய்றவங்கள இப்படிதான் போலீஸ்கிட்ட மாட்டிவிடுவீங்களா?” அவன் கண்களில் குறும்புடன் குறுக்கு கேள்வி கேட்டான்.
“நா எங்க மாட்டிவிட்டேன்… நீங்க என்னை கடத்தினாதானே மாட்டிவிட சொன்னேன்…!?” அவள் அப்பாவியாக அவனுக்கு விளக்கம் சொன்னாள்.
“என்னை பார்த்தால் உங்களுக்கு கடத்தல்காரன் மாதிரி தெரியுதா?”
“இல்ல இல்ல… அப்படி இல்ல… அது… அதான் சாரி சொன்னேனே…” அவள் உளறி கொட்டினாள்.
“என்ன இல்ல…?”
“உங்களை பார்த்தால் கடத்தல்காரன் மாதிரி தெரியல…”
“எப்படி நம்புறது…?”
“என்ன சார் நீங்க…. உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா…?”
“எனக்கு நம்பிக்கை இருந்து என்னங்க செய்றது…? உங்கள மாதிரி ஆளுங்களுக்கு நம்பிக்கை வரலன்னா ஆபத்தாச்சே…”
அவன் அவளை பார்த்து பயப்படுகிரானாம். அவளுக்கு பெருமை தாங்க முடியவில்லை…
“நானும் உங்களை நம்புறேன் சார்… பயப்படாதிங்க…” அவள் சமாதானம் சொன்னாள்.
“அதைதான் கேட்குறேன்… நீங்க என்னை நம்புறீங்கன்னு நான் எப்படி நம்புறது…?”
“ஓ…” அவனுடைய கேள்வியை புரிந்து கொண்டாளாம்… நீட்டமாக ஒரு ‘ஓ’ போட்டுவிட்டு அவனுக்கு பதில் சொன்னாள்.
“நான்தான் சொல்றேனே… நீங்க நல்லவர்…” அவள் அழுத்தமாக சொன்னாள்.
“அப்போ ஏறுங்க…” என்று அவன் அவளுக்கு காரின் முன்பக்க கதவை திறந்துவிட்டான்.
முதலில் விழித்தவள் பின் “ஆட்டோ எனக்காக நிக்குதே…” என்றாள் தயக்கமாக.
அவன் ஆட்டோ டிரைவரை அழைத்து இந்தியில் ஏதோ சொன்னான். அடுத்த நொடி ஆட்டோ அங்கிருந்து பறந்துவிட்டது.
“இப்போ ஏறுங்க…” அவன் உதட்டில் லேசான புன்னகையுடன் சொன்னான்.
அவள் அவன் திறந்துவிட்ட முன்பக்க கதவை மூடிவிட்டு பின்பக்க கதவை திறக்க முயன்றாள். அது திறக்க மறுத்தது. இழுத்து இழுத்து பார்த்தவள், முடியாமல் அவனை பார்த்து பரிதாபமாக விழித்தாள்.
“முன்பக்கம் மட்டும்தான் உங்களுக்கு அனுமதி…” அவன் கண்களில் குறும்புடன் மீண்டும் முன்பக்க கதவையே திறந்துவிட்டான்.
ஆட்டோவும் சென்றுவிட்டது. நடுகாட்டில் தனியாகவும் நிற்க முடியாது. வேறுவழியின்றி முன் இருக்கையில் ஏறி அமர்ந்தாள் சூர்யா.
“நான் ஆட்டோவிலேயே போயிருப்பேனே…!”
“ம்ம்ம்…. நீங்க ஆட்டோல போவிங்க… வழில அது ரிப்பேர் ஆகும். அப்புரம் நீங்க வேர கார்ல லிஃப்ட் வாங்கி போவிங்க. அந்த கார்காரன் உங்கள கடத்திக்கிட்டு போவான்…. உங்க ஃப்ரன்ட் என்னோட கார் டீட்டெய்ல்ஸ போலிஸ்கிட்ட குடுத்து என்னை மாட்டிவிடுவாங்க. இதெல்லாம் எனக்கு தேவையா…?” அவன் பயந்தவன் போல பேசினான்.
“இப்போ சரி… சாய்ங்காலம் நான் தனியாதானே போவேன். அப்போ என்னை யாராவது கடத்தினா என்ன செய்வீங்க?” அவள் அவனை பேச்சில் மடக்கிவிட்டாளாம். ‘இப்ப என்ன செய்வ…? இப்ப என்ன செய்வ…?’ என்பது போல் அவனை பார்த்தாள்.
“இனி உங்களை தனியா விடவே முடியாது போலருக்கே… உங்களை கடத்தல்காரங்ககிட்ட இருந்து பாதுகாப்பதுதான் இனி என்னோட முதல் வேலை.” அவன் சளைக்காமல் பதில் சொன்னான்.
“கடத்தல்லகாரவங்களா…! அது யாரு…?” அவள் குழம்பிவிட்டாள்.
“நீங்கதானே யாரோ உங்களை கடத்த போவதா சொன்னீங்க… உங்களுக்குதானே தெரியும்… எனக்கு எப்படி தெரியும்?” அவன் தெளிவாக அவளை இன்னும் குழப்பினான்.
“அது நான் ஒரு சந்தேகத்துல சொன்னது…”
“ஓ… சந்தேகம்தானா… நான் நிஜமோன்னு நினைத்து பயந்தே போய்ட்டேன்….” அவன் நக்கலாக சொல்ல, அவனுடைய நக்கலை புரிந்து கொள்ளாமல்,
“என்ன சார் நீங்க… சரியான தொடைநடுங்கியா இருக்கீங்க….” என்று அவள் சீரியசாக பேசினாள்.
“யாரு… நானு…!”
“ஆமா… பின்ன நானா…?”
அவள் அவனிடம் வாய்க்கு வாய் பேசிக் கொண்டே வந்தாள். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்குமே இருபது நிமிட பயணம் இரண்டு நிமிட பயணமாக தோன்றியது.
நேற்று அலுவலக வளாகத்திற்கு வெளியில் சிறிது தூரத்திலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றவன், இன்று செக்யுரிட்டி அறைக்கு பக்கத்தில் காரை நிறுத்தினான்.
தீரஜ்பிரசாத்தின் காரை பார்த்ததும், வாயில் காவலன் தன் அறையிலிருந்து வெளியே வந்து சல்யூட் அடித்தான். அந்த சல்யூட் தனக்குதான் என்று நினைத்த சூர்யா, கண்களில் பெருமை மின்ன தீரஜ் பிரசாத்தை ஒரு பார்வை பார்த்து வைத்தாள். அவன் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான்.
“சரி… சரி… நீங்க கிளம்புங்க…” காரிலிருந்து கீழே இறங்கிய சூர்யா தீரஜ்பிரசாத்தை துரத்தினாள்.
அவளுடைய செய்கைகள் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அதை தொடர்ந்து ரசிக்க முடிவு செய்து அலுவலகத்திற்குள் வராமல் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.
சூர்யா, தீரஜ்பிரசாத்தின் காரில் வந்து இறங்கிய செய்தி அலுவலகத்தில் தீயாக பரவியது. ஐயாயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலையில் இந்த செய்தி பிரபாவின் காதுகளுக்கு எட்டாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை…
Comments are closed here.